"அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என்று தமிழ்நாட்டை அடையாளப்படுத்தி அதன் விடுதலைக்குக் குரல் எழுப்பியவர்கள், பிறகு இந்திய அரசின் அடிமை மாநிலத்திற்குத் "தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டியதோடு அமைந்து போயினர். தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

இன்றைக்குத் தமிழ் வழிக் கல்விக்கான தமிழக அரசின் திட்டமும் ஏறத்தாழ அதே தன்மையைத்தான் கொண்டிருக்கிறது.

தமிழ் வழியில் படித்தோர்க்கு 20 விழுக்காடு வேலை ஒதுக்கீடு என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தது, தமிழறிஞர் சிலருக்கு மனம் குளிரலாம்; ஆனால் அதன் உண்மை நிலையை விளங்கிக் கொண்டால் சினம் கொப்பளிக்காமல் இருக்க முடியாது.

எனவே அதுபற்றிய விளக்கத்திற்காகவே இக் கட்டுரை எழுதப் பெறுகிறது.

இதில் இரண்டு செய்திகள் உள்ளன.

ஒன்று தமிழ் வழியில் கல்வி கற்பது குறித்தது...

இரண்டாவது தமிழ் வழியில் படித்தோர்க்கு 20 விழுக்காடு வேலை என்பது எத்தகையது என்பது...

இவ்விரண்டு செய்திகளையும் மேலோட்டமாகப் பார்க்கும்போது இவற்றில் என்ன பெரிதாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் அவற்றைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். பார்த்தால்தான் உண்மை விளங்கும், பார்ப்போம்.

தமிழ் வழியில் கல்வி

அந்த அந்த நாட்டினர் அவரவர் தாய்மொழி யிலேயே கல்வி கற்பது இயல்பானதாக இருக்கும்போது தமிழ்நாட்டவரும் தமிழில் கல்வி பயில்வே சரியானது. அதை மறுப்பவர்கள் பிற ஆளுமை வெறிகளுக்கு அடிமைப்பட்டவர்களே அல்லாமல் வேறு வகையினர் அல்லர்.

சீனர்களும், ரசியர்களும், சப்பானியரும், செர்மனி யரும், பிரஞ்சுக்காரர்களும், இசுபானியமும் இன்ன பிறரும் அவரவர் தாய் மொழியிலேயே படிப்பதை நாம் அறிவோம்.

பிரிட்டிசு ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்ட நாட்டினர் தாம் இன்னும் ஆங்கிலக் கல்விக்கு ஆட்பட்டிருக்கின்றனரே அல்லாமல் வேறு எவரும் இல்லை.

அவ்வகையில், தமிழக மக்களுள்ளும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆங்கில வழியிலேயே படிக்கின் றனர்.

ஓர் அறிதலுக்காக 2009 ஆம் ஆண்டில் தமிழ் வழி யில் கல்வி பயின்றோரின் எண்ணிக்கையைப் பார்ப்போம்.

ஒன்றாம் வகுப்பு:

தமிழ் வழியில் 6,93,951

ஆங்கில வழியில்:    3,84,844

ஆறாம் வகுப்பு:

தமிழ் வழியில்:       9,74,027

ஆங்கில வழியில்:    4,20,412

இந்நிலையில் வரும் காலங்களில் ஆங்கில வழி கல்வி பயில்வோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக லாம். அவ்வகையில் அதிகப்படுவதை ஊக்கப் படுத்தும் வகையில்,

இந்தக் கல்வியாண்டிலிருந்து (2010) அரசுப் பள்ளி களிலேயே ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டி ருக்கின்றன.

ஏழுவகைக் கல்வி முறை:

நிலை இவ்வாறிருக்க,

தமிழ் வழிக் கல்வியை எவ்வகைப் பள்ளிக் கூடங்கள் பயிற்றுவிக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டும் ஏழு வகைக் கல்வி முறைகள் உள்ளன.

1.     தமிழக அரசின் பள்ளிக் கூடங்களுக்குரிய கல்வி முறை.

2.     தமிழக அரசின் ஆட்சி அதிகாரங்களுக் குட்பட்ட பதின்மப் பள்ளி (மெட்ரிகுலேசன்) கல்வி முறை.

3.     கீழ்த்திசை பண்பியல் (ஓரியண்டல்) கல்வி முறை.

4.     ஆங்கிலோ தமிழகக் கல்வி முறை.

5.     இந்திய அரசின் (நவோதயா) பாடத் திட்டங் களின் கீழ் நடத்தப் பெறும் சி.பி.எசு.இ. பள்ளிகளுக் கான கல்வி முறை.

6.     இந்திய அரசின் உயர் கல்வி முறை என அடை யாளம் கொண்டிருக்கும் "கேந்திரிய வித்யாலயா' பள்ளிக் கூடங்களுக்கான கல்வி முறை.

7.     தமிழகத்தில் இயங்குகிற வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிள்ளைகள் பயிலுவதற் கென நடத்தப் பெறும் வெளிநாட்டு நிறுவனப் பள்ளிகளுக்கான கல்விமுறை.

இந்த ஏழு கல்வி முறையின் பாடத் திட்டங்கள், உள்ளடக்கங்கள் குறித்தெல்லாம் ஆய்வு செய்தால் அவை மிகப் பெரிய நூலாகி விடும்.

ஆனால் இந்த ஏழு கல்வி முறையில் முதல் பிரிவாக உள்ள தமிழக அரசின் பள்ளிக் கூடங்களுக்குரிய கல்வி முறை மட்டுமே தமிழ் வழிக் கல்வியைக் கொண்டி ருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

மற்ற ஆறு கல்வி முறைகளுமே ஆங்கில வழிக் கல்வி முறைதான்.

மேலும், அந்த முறை பிரிவான தமிழக அரசின் பள்ளிகளுக்கான கல்விமுறையில் கூட இப்போது பகுதி அளவு ஆங்கில வழிக் கல்வி முறையை அரசு கொண்டு வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு தமிழக அரசு சமச்சீர்கல்வி முறை என்று வேடம் போட்டுக் காட்டியது கூட, அந்த ஏழில் முதல் நான்கு கல்வி முறைகளை மட்டும் இணைத் ததே அல்லாமல், ஏழு கல்வி முறையையும் இணைத்து அல்ல.

ஆக, மற்ற மூன்று கல்வி முறையிலும், தமிழக அரசு தலையிட முடியாதபடி அவை ஆங்கில வழியில் தமிழகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

மேலும், சமச்சீர்க் கல்வி முறை என இணைக்கப் பட்ட அந்த நான்கு கல்வி முறைகள் கூட தமிழில் படிக்க வேண்டுமென வழிமுறையைக் கொண்டிருக்க வில்லை.

அரசு வகுத்த சமச் சீர்ப்பாடத் திட்டங்களையே கூட அவை பின்பற்ற வேண்டுமென கட்டா யத்தையும் அரசு சொல்லவில்லை.

அப்பாடத் திட்டங்களுடன் தொடர்புடைய தனியார் பதிப்பக நூல்களையும் ஏற்றுக் கொள்ள லாம் எனத் தமிழக அரசு நெகிழ்வு காட்டியவுடன் பெரும்பான்மைப் பள்ளிக் கூடங்கள் அரசின் பாடத் திட்டங்களுக்கு மாறாகத் தங்கள் விருப்பம் மற்றும் நோக்க அடிப்படையிலேயே பாட நூல்களைத் தேர்வு செய்து கொண்டன.

தமிழ் வழிக் கல்வி பெறுவது யார்?

இந்நிலையில் தமிழக அரசு வகுத்திருக்கிற பாடத் திட்டங்களையே முற்றும்முழுமையாகப் பின்பற்று வன தமிழக அரசின் பள்ளிக் கூடங்கள் மட்டுமே.

அவற்றிலும் இப்போது ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டதால், தமிழ் வழி வகுப்புகள் படிப்படியாகக் குறைவாகிப் போய், இப்போது ஏழை எளிய அடித்தட்டு மக்கள் மட்டுமே தமிழ் வழியில் படிக்கிறபடியான சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரி, மற்றும் மேல்நிலைக் கல்விகள்:

பள்ளிக் கல்வி நிலையிலேயே தமிழ் வழிக் கல்வி என்பது இந்த அளவு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், கல்லூரி மற்றும் அதற்கும் மேலான கல்விகளில் தமிழ் வழிக் கல்வி என்பது சிந்தனை அளவில் கூட இல்லை என்பதை அறிய வேண்டும்.

முன்பெல்லாம் கல்லூரிக் கல்வி என்பது இளங் கலை, இளம் அறிவியல், இளம் வணிகவியல் என்ற அளவிலேயும், அவற்றின் முதுநிலைக் கல்விகளாகவுமே பெருமளவில் இருந்தன.

ஆனால் இப்போது, குமுகத் தேவைக்கேற்ப பல வகைக் கல்விப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு விட்டன.

பொறியியல் துறையிலே கூட பொது (சிவில்), எந்திரவியல் (மெக்கானிக்கல்) என்ற பகுப்புகளைக் கடந்து இப்போது நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் தொடங்கப்பட்டு விட்டன.

குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கான தகவல் தொழில் நுட்பத் துறை பெருகியவுடன் அதற்கான கல்வியும் பெருகி விட்டது.

மருத்துவத் துறையிலும் பலவகை உட் பிரிவுகள் தோன்றி ஆங்கில மருத்துவக் கல்வி ஆழ வேரூன்றி விட்டது.

அவ்வகைக் கல்விக் கூடங்கள் பெரும்பாலானவை இன்றைக்குத் தனியார் கைகளிலே இருக்கின்றன.

தனியாரிடம் இருப்பவை மட்டு மல்லாது, அரசுச் சார்பு கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் அவ்வகைக் கல்விகள் ஆங்கில வழியிலேயே இருக் கின்றன. மருந்துக்குக் கூட பெரும்பாலான துறைகள் தமிழ் வழியில் இல்லை. என்பதை விட, தமிழ் வழியில் அவை இருக்க முடியாது என்ற அளவிலேயே கல்வித் துறையின ரும், அரசும் எண்ணுகிறபடி அடி மைப் போக்கு உருவாகியிருக்கிறது.

ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கில வழியில் கல்வி பயிலாவிட்டால் வெளிநாடுகளுக்குப் போக முடியாது என்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழ்நாட்டிலேயே இருக்கிற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களில் கூட பணி செய்ய முடியாது என்கிற கருத்து தமிழக இளைஞர்கள் மாணவர்களிடையே வேரூன்றியிருக்கிறது.

வேலைவாய்ப்புக்காகவே கல்வி

ஆக, இன்றைய கல்வி முறை என்பது வேலை வாய்ப்பை எதிர் நோக்கியே கல்வியாகவே இருப்ப தால், எந்தக் கல்வி தனக்கு விருப்பமான கல்வி, எந்தக் கல்வி இந்த மக்கள் குமுகத்திற்குத் தேவையான கல்வி என்பதெல்லாம் மாறி, எந்தக் கல்வி படித்தால் எளிதேவேலை வாய்ப்பு கிடைக்கும், நிறைய சம்பாதிக்க முடியும் என்கிற அடிப்படையில் கல்வி ஈடுபாடு மாணவர்கள் மற்றும் வெகு மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

எனவே, சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும், பன்னாட்டு மூலதனக் கூட்டு என்றும் பெருகி இருக்கிற வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதற்கென கல்வியையே மக்கள் நாட வேண்டி அமைகிறது.

தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வரவேண்டும் எனும் நோக்கத்தோடும்,

தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடும்,

வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டும் எனும் எண்ணத்தோடும்,

வங்கித் துறையில் இந்திய நடுவண் அரசுத் துறை களில், தொடர் வண்டித் துறைகளில், இன்னும் சொன் னால் இந்திய ஆட்சிப் பணித் துறையில் (ஐ.ஏ.எஸ்.) இந்தியக் காவல் பணித் துறையில் (ஐ.பி.எஸ்) சேர வேண்டும் எனும் கற்பனைகளோடுமே படிக்கின் றனரே அல்லாமல் தமிழக அரசுப் பணிகளில் இணைய விரும்பிப் படிப்பதை இறுதியான எண்ணமாகவே கொள்கின்றனர்.

எனவே, மேற்படி முதல் இலக்கு நோக்கிப் படிப்ப வர்கள் எவரும் ஆங்கில வழியிலேயே படிக்கின்றனர்.

அவ்வகை நோக்குடன் ஆங்கி வழியில் படிப்போரை எப்படி மாற்றுவது?

இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் சென்றோ, அல்லது தமிழ் நாட்டிலேயே உள்ள வெளிநாட்டு நிறுவனங்களிலோ, அல்லது இந்திய அரசுப் பணித் துறைகளிலோ பணியாற்றும் நோக்கத்தோடு ஆங்கில வழி பயில்வோரை எப்படி மாற்றப் போகிறோம்.

1.     அவற்றுக்கிணையான சம்பளத்தைத் தரக் கூடிய வேலை வாய்ப்புகளைத் தமிழக அரசுத் துறை தொழிலகங்களே உருவாக்கித்தர வேண்டும்.

2.     வெளிநாட்டுத் தொழிலகங்களைப் படிப்படி யாகத் தமிழக அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வெளிநாட்டுக் கொள்ளையர்களை வெளி யேற்றிடல் வேண்டும். தமிழக அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தொழிலகங்களில் தமிழ் வழியிலேயே கல்வி பயின்றவர்க்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

3.     இந்திய அரசுத் துறைத் தொழிலகங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தொழிக, அலுவலக மொழியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமெனக் கட்டாயப் படுத்திடல் வேண்டும். அவற்றுக்கு இந்திய அரசு ஒப்பவில்லை எனில், இந்திய அரசுக்கான அஞ்சல் துறை, தொலைத் தொடர்புத் துறை, தொடர் வண்டித் துறை, வருமான வரித்துறை, உளவுத் துறை, படைத்துறை என அனைத்துத் துறைகளையும் தமிழக அரசே ஏற்று நடத்தப் போராட வேண்டும்.

4.     தமிழக அரசுத் துறைத் தொழிலகங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள், வழக்கு மன்றங்கள் எனை அனைத்து நிலைகளிலும் தமிழக ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக இருந்திடல் வேண்டும்.

5.     தமிழகத்தில் இருக்கும் தனியார் துறை, பொதுத் துறை நிறுவனங்களில் தொழிலகங்களில் எல்லாம் அலுவல், தொழில் மொழியாகத் தமிழே இருக்கும் வகையில் சட்டமியற்றிடல் வேண்டும்.

6.     வணிக நிறுவனங்கள், வணிகப் பொருள்கள் அனைத்திலும் தமிழுக்கே முதலிடம் தந்து விளம் பரப்படுத்துவது, விளக்கக் குறிப்பு எழுதுவது என அனைத்து நிலைகளிலும், நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.

7.     தொலைக்காட்சிகள், வானொலிகள், திரைப் படங்கள், செய்தித்தாள் மற்றும் பருவ இதழ்கள் என அனைத்திலும் அரைகுறை தமிழ் பேசுவது எழுதுவது கண்டனத்துக்குரியதாக்கப்பட வேண்டும். தொடர்ந்து செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8.     கல்வித் துறை முழுக்க முழுக்கத் தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவன மற்றும் இந்திய அரசு சார்புடைய கல்விக் கூடங்கள் தமிழகத்தில் இயங்கத் தடை செய்ய வேண்டும். இந்தியா முழுமையும் ஒரே வகைத் தேர்வு, நுழைவுத் தேர்வு என்பவற்றைத் தமிழக அரசு ஏற்க மறுக்க வேண்டும்.

9.     அறிவியல் ஆய்வு நிறுவனங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர் நிலைக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்தும் தமிழ் மொழி வழியிலேயே இயங்குதல் வேண்டும்.

10.    கோயில்கள், பிற அனைத்து வகை மதவியல் முறைகள், சடங்குகள் என அனைத்தும் தமிழ் வழியிலேயே நடைபெறுதல் வேண்டும்.

ஆக இவற்றையெல்லாம் படிப்படியாகச் செய்ய முனைகிற போவதே தமிழ் வழிக் கல்வி பயில வேண்டுமான தேவையும், ஆர்வமும் மாணவர்களிட மும், மக்களிடமும் ஏற்படும்.

இவற்றையெல்லாம் இன்றைக்குத் தமிழக அரசு செய்யுமா?

படிப்படியாகத் தமிழக உரிமைகளையெல்லாம் இந்திய அரசிடம் பன்னாட்டு நிறுவனங்களிடமும் கொடுத்துத் தமிழகத்தை அடிமைப்படுத்திக் கொண்டி ருக்கிற தமிழக அரசு மேற்கூறிய நடைமுறைகளை எல்லாம் செய்யுமா?

குறைந்த அளவேனும் செய்ய முனையுமா?

என்றால் இன்றைய நிலையில் அவற்றையெல்லாம் தமிழக அரசு செய்ய முனையாது என்பதையே தமிழக மக்கள் உணர்தல் வேண்டும்.

தமிழகத்தின் ஆட்சியை நடத்த வருகிறவர்கள், இந்திய அரசுடனும், பன்னாட்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கவும், ஆளுமை செய்யவுமானவர்களாக இருக்கிறபோது அவர்கள் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள்.

ஆனாலும் தமிழைப் பேசி ஆட்சியைப் பிடித்த வர்கள் என்பதற்காக, தமிழக மக்களின் வாக்குரிமை யைப் பெற வேண்டும் என்பதற்காகத் தாங்கள் தமிழுக்காகச் செய்வது போல் புனைந்துரைக்கிறார்கள்.

வணிக நிறுவனங்களுக்குள் வெளிநாட்டுப் பொருள்களும், தமிழக மக்களுக்குக் கேடு தரும் பண்டங்களும் விற்கப்படுவது குறித்தும், பன்னாட்டு கொள்ளையால் தமிழக வணிகமே சிதையத் தொடங்கியிருப்பது குறித்தும் கவலைப்படாத தமிழக அரசு எப்படித் தமிழில் பெயர்ப்பலகை எழுதச் சொல்லி, செம்மொழி மாநாட்டின் போது வேடமிட்டு நாடகமாடியதோ அந்த அளவில்தான் அதற்குத் தமிழ் உணர்வு பயன்படுகிறது.

அவர்களின் கொள்ளையை, அயோக்கியத் தனங்களை மூடி மறைத்துக் கொள்ள அவர்களுக்குத் தமிழ் தேவைப்படுகிறது.

திரைத்துறை வழிய கழிகாமக் கூத்துகளைப் பரப்புவதோடு, முந்நூறு கோடி மூலதனம் போட்டு பல்லாயிரம் கோடிகளை உழைப்பில்லாமல் அறுவடை செய்யும் அவர்களின் கொள்ளையடிப்புகள் வெளியே தெரியாதபடி திரைப்படங்களுக் குத் தமிழில் பெயரிட்டால் வரிச் சலுகை என மக்களை ஏமாற்று கிறவர்களே தமிழக ஆட்சியாளர் களாயிருக்கின்றனர்.

அதைப் போன்றதொரு இன் னொரு ஏமாற்றும் அறிவிப்பே தமிழில் படித்தவர்க்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு வேலை வாய்ப்பு என்பது.

தமிழில் படித்தவர்க்கு 20 விழுக்காடு வேலை என்பது எப்படி?

தமிழில் படித்தவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டும் என்பது தமிழக மக்க ளின் இருபது, முப்பதாண்டுகள் காலக் கோரிக்கை.

தமிழிலேயே முதுகலை படித்த பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் வேலை வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் நஞ்சருந்தி செத்துப் போகப் போவதாகக் கூட அறிவித்தார்கள்.

ஆனால், அதற்கெல்லாம் தமிழக அரசு தலை சாய்க்கவில்லை.

இறுதியாக, செம்மொழி மாநாட்டினையொட்டி தமிழில் படித்தோர்க்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை உண்டு என அறிவித்தது தமிழக அரசு.

அதன் பொருள் விளங்காமல் தாளம் தட்டிகள் சிலர் உச்சி குளிரப் பாராட்டினர்.

தமிழில் வேலை வாய்ப்பை எந்த எந்த இடங் களுக்கு அரசு தரப் போகிறது? என்ற விளக்கங்கள் அரசு அறிவிப்பில் இல்லை.

*      வங்கிகளிலா? தொடர் வண்டித் துறையிலா? அஞ்சல் துறையிலா? வணிக வரித் துறையிலா? படைத் துறையிலா? துறைமுகத் துறையிலா? வானூர்தி துறையிலா?

*      பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகமெங்கும் தொழில்கள் தொடங்கியிருக்கின்றனவே அங்கெல் லாமா?

*      தகவல் தொழில் நுட்பத் துறையில் இலக்கக் கணக்கானோருக்கு நேரடி வேலைவாய்ப்பும், பல இலக்கம் பேர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் அளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்களே, அங்கெல் லாமா?

 இவற்றிற்கெல்லாம் என்று எண்ணிக் கொண்டால் நீங்கள் ஏமாற வேண்டியதுதான்.

அவையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் கைகளிலும், இந்திய அரசின் மடிகளிலும், இருக்கும் போது, அவற்றின் அடிநிலை வேலை வாய்ப்புகளைக் கூடத் தமிழக அரசால் நிறைவு செய்ய முடியாது.

அவற்றில் எல்லாம் ஆங்கில வழியில், படித்தவர்களுக்கு மட்டுமே இன்னும் சொன்னால் தமிழே சரியாகத் தெரியாதவர்களுக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு உண்டு என அந்நிறுவனங்கள் சொல்கின்றன.

தமிழில் பேசினால் தண்டம் விதிக்கிற பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?

ஆக, தமிழக அரசுத் துறை களில் அதுவும் எடுபிடி வேலை களில் மட்டும்தான், தமிழக ஆட்சியாளர்கள் தமிழில் படித் தோர்க்கு வேலை கொடுக்கப் போகிறார்கள்.

தமிழையே ஆட்சி மொழி யாக்காதவர்கள், தமிழில் படித்தோர்க்கு வேறு எங்கே ஐ.ஏ.எஸ். பதவியிலா, 20 விழுக்காடு கொடுக்க முயற்சி எடுக்கப் போகிறார்கள்.

வழக்கு மன்றங்களில் நீதிபதிகளாவதற்கு அல்ல, அங்கு தட்டச்சு செய்வதற்கும், படப்படி (ஜெராக்ஸ்) எடுப்பதற்குமான வேலைகளைத் தருவதற்குத்தான் இத்தனை விளம்பரங்கள்.

தமிழில் படித்தோர்க்கு வேலை வாய்ப்பு என்பதுதான் எப்படி?

ஆக, தமிழில் படித்தோர்க்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை என்பது உண்மையிலேயே நடை முறைப்படுத்தப்பட வேண்டுமானால், முன் பக்கத்தில் சொல்லப் பெற்ற பத்து வழி முறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி அவற்றை நடைமுறைப் படுத்திட வேண்டும்.

அவற்றை நடைமுறைப்படுத்தாத வரை தமிழ் வழிப் படித்தோர்க்கான வேலை வாய்ப்பு என்பது அரசு கூறுவது ஏமாற்றுவதே ஆகும்.

தமிழக ஆட்சியினரைப் பொறுத்த அளவில், அவர்கள் தானாக அவற்றை நடைமுறைப்படுத்த மாட்டார்கள்.

அப்படி நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. பன்னாட்டு நிறுவனங்களிடம் கொள்ளையில் பங்கும், இந்திய அரசிடம் ஆட்சியில் பங்கும் பெற்றுக் கொழுத்துத் திரிபவர்கள் அவற்றை எப்படி இழக்க விரும்புவார்கள்.

ஏற்கனவே திராவிட நாட்டுரிமைக் கோரிக்கையை விட்டுவிட்டு இந்திய மடியேறிக் குந்தியவர்களை, தமிழ் வழிக் கல்விக்காக எப்படி இறங்கி வருவார்கள்?

எனவே, தானாக நடந்து விடாதவற்றைப் போராடித்தான் பெற்றாக வேண்டும்.

தமிழ் வழியில் படித்தோர்க்கு அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டுமெனப் போர்க்குரல் எழுப்ப வேண்டும்.

அப்படிக் கொடுக்காத நிறுவனங்கள், தொழில கங்கள், அலுவலகங்களை, அவை தமிழக அரசுடையதாக இருந்தாலும் அல்லது இந்திய அரசுடையதாக இருந்தாலும் இன்னும் சொன்னால் பன்னாட்டு நிறுவனங்களுடையதாக இருந்தாலும் அவற்றையெல்லாம் இழுத்துப் பூட்டி முடக்க வேண்டும்.

அவ்வகை எழுச்சிப் போராட்டங்கள் நடைபெறும் பொழுதே தமிழ் வழிப் படித்தோர்க்கு வேலைவாய்ப்பு என்பது நடைமுறைக்கு வரும்.

சரி, தமிழ் வழிக் கல்வி...?

அதே போல், தமிழ் வழிக் கல்வியைக் கொண்டு வருவதிலும் தமிழக அரசு எந்த அளவு மெத்தனமாக இருக்கிறது என்பதையும் நாம் விளங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஏழு வகைக் கல்வி முறையில், நான்கு வகைக் கல்வி முறையை மட்டும் இணைத்து சமச்சீர்க் கல்வி என்றதும், எஞ்சிய இந்திய பன்னாட்டு அரசுகளின் மூன்று வகை ஆங்கில வழிக் கல்வி முறைகளுக்கு முழு பாதுகாப்பு அளித்து நடத்த இசைவதும், அந்த நான்கு வகைகளை இணைத்த சமச்சீர்க் கல்வியிலேயே பெரும் பகுதி ஆங்கில வழியில் நடத்த இசைந்திருப்பதுமான அடிமைத் தமிழக அரசின் போக்கை நன்கு நாம் உணர்ந்திருக்கிறோம்.

இதற்கிடையில், தமிழ் வழிக் கல்வி கொண்டு வருவதற்கான வகையில் பாடப் புத்தகங்களைத் தமிழில் அரசு உருவாக்காதது; மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளைஉடனடியாகத் தமிழில் தர முடியாது எனும் பல குறைபாடுகளையும் நீக்க மிகப் பெரும் அழுத்தங்களை நாம் தமிழக அரசுக்குக் கொடுத்தாக வேண்டும்.

ஆக, தமிழ் வழியில் படித்தோர்க்கான வேலை வாய்ப்புக்குப் போராடுவதுபோலவே, தமிழ் வழிக் கல்வி முறைக்கான அடிப்படைகளை உருவாக்கவும், பெருமளவில் போராட வேண்டியிருக்கிறது.

தமிழ் வழிக் கல்வியா? தமிழியக் கல்வியா?

இறுதியாக இன்னொரு செய்தியும் முகாமை யானது. அதாவது நம் கோரிக்கைகளெல்லாம் தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழிக் கல்வி படித்தோர்க்கு வேலை வாய்ப்பு என்பனவாகவே உள்ளன.

இன்றைக்குள்ள பன்னாட்டுத் தொழில் கொள்ளைக்குச் சாதகமான, கல்வியையும், இந்திய அரசின் ஆளுமைக்கு இசைவான கல்வியும், தமிழ்த் தேச வரலாற்றை, அரசியலை, பொருளியலை, வாழ்வியலையே நசுக்கும் கல்வியும் தமிழ் வழியில் கொடுப்பதினால் மட்டும் தமிழக மக்களுக்கு என்ன பயன் வரப் போகிறது?

மாறாக அடிமைப் போக்கே கூடுதலாகிப் போகும்.

தமிழக வரலாற்றை மறைத்து விட்டு, இந்திய ஆளுமை வரலாற்றைத் தமிழர்கள் தமிழில் படிப்பதினால் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது?

பொய்யான இந்தியத்தை ஏற்றிப் போற்றவும், பன்னாட்டு கொள்ளையை ஏற்றுக் கொள்ள வுமான கல்வி தமிழிலேயே தரப்படுகிறது என்பதற்காக அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதையும் தமிழக மக்கள் எதிர்த்தேயாக வேண்டும்.

தமிழக மக்களுக்கு தேவை யானது தமிழ் வழிக் கல்வி மட்டுமல்ல, தமிழியக் கல்வியுமே தேவை.

எனவே, தமிழ்த் தேச வரலாற்றை, அரசியலை, பொருளியலை, குமுகத்தை வளர்க்கிற வாழ்விக்கிற செழுமையான தமிழ் வழிக் கல்விக்கே தமிழக மக்கள் போராடியாக வேண்டும். அக் கல்வியைக் கற்று, தமிழ்த் தேசப் பொருளியலை உயர்த்தவும், அவற்றைத் தமிழகத்திற்கே உரிமையாக்கவும் போராட வேண்டும்.

அப்படியல்லாத...

இந்தியக் கல்வியை எதிர்த்தழிக்க வேண்டும்!

பன்னாட்டுக் கல்விக்குப் பாடை கட்டியாக வேண்டும்!

அதன்வழி,

தமிழ் வழிக் கல்விக்குப் போராடுவோம்!

தமிழியக் கல்வியை உயர்த்திப் பிடிப்போம்!

தமிழில் படித்தோர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனப் போர் தொடுப்போம்!

Pin It