உலக வரலாற்றில் தாய்மொழிக்கு இயல்பாகவே அமைந்துள்ள ஆற்றல் அளவிடமுடியாதது. பெரும் வியப்புக்குரியது. தாய்மொழியாளரைக் கட்டுக் குலையாமல் ஒற்றுமைப்படுத்தும் பெருந்திறன் தாய்மொழிக்கு உண்டு என்பதைப் பலரும் உணரவில்லை. சமற்கிருதத்துக்குத் தனி நாடில்லை. சமற்கிருதம் பேசுவோர் உள்ள வீடும் இல்லை. இதைவிட வியப்பானது இன்றுவரை அதற்கெனத் தனித்த எழுத்தே இல்லை. “புற்றெடுப்பது கரையான், குடிபுகுவது பாம்பு” என்பதற்கேற்ப, தமிழுக்கென கி.மு. 1500 ஆண்டுக்கு முன்பு மரபுத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தமிழி எனும் பிராமி எழுத்தில் சில மாற்றங்களைச் செய்து பாலி மொழிக்கு எழுத்தமைத்து, அந்தப் பாலி மொழி எழுத்துக்குரிய  வடபிராமி எழுத்துகளையே தனக்கும் எழுத்தாக்கிக்கொண்டது. பின்னர் பாலி மொழியும் பிராகிருத மொழியும் பல்வேறு வட இந்திய நடுவண் இந்திய மொழிகளாகப் பிரிந்துவிட்டன. இன்றைய நிலையிலுள்ள இந்தி முதலிய பல்வேறு மொழிகள் பல்வேறு வரிவடிவ மாற்றங்களை ஏற்றுக்கொண்டன.

இதன் விளைவாக வங்காளப் பிராமணர் வங்காள எழுத்திலும், மராட்டிய பிராமணர் மராட்டியிலும் சமற்கிருத நூல்களை எழுதி வைத்துக்கொண்டனர். படிப்படியாக இந்திக்குரிய தேவநாகரி எழுத்தே சமற்கிருதத்துக்குரிய எழுத்தாக மாறிவிட்டாலும் ஆங்கில எழுத்தில் சமற்கிருத நூல்களை வெளியிடும் பாங்கும் வளர்ந்து வருகிறது. ஒரு வீட்டில்கூடப் பேசப்படாத மொழி எப்படி ஒரு நாட்டையே தன் கைக்குள் போட்டுக்கொண்டது? அன்றாட வழக்கில்  தன் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்வதற்காக  இந்து, பௌத்த சமயங்களிலும் பல்வேறு இந்திய மன்னர்களின் ஆட்சிப் பொறுப்புகளிலும் தொடர்ந்து ஊடாடிச் சமற்கிருதம் தன் தலைமையைத் தக்க வைத்துக்கொண்டது.  இந்தியாவில் சிதறிக்கிடக்கும் சிறுபான்மை இனமாகப் பிராமணர்கள் காணப்பட்டாலும், சமற்கிருத வளர்ச்சியைத் தன் உயிர் மூச்சாகக் கருதிக் காப்பாற்றினார்கள். அவர்கள் அனைவரும் சமற்கிருதத்தை மக்கள் பயன்பாட்டில் புகுத்துவதையும், கிடைக்கும் பிறமொழி  நூல்களை அழித்து விடுவதனையும்  தம் கடமையாகக் கொண்டு கமுக்கமான புரட்சியை அமைதியாகச் செய்து வருகின்றனர்.

தாய்மொழியைச் சிந்தாமல் சிதறாமல் மக்கள் மன்றத்தில் அன்றாட வழக்கில் அனைவர்க்கும் ஏதேனும் ஒரு வகையில் பயன்படும் பாங்கில் தொடர்ந்து வளர்த்து வந்தால் தாய் மொழியாளர்க்கு உலக அரங்கில் ஏற்றமும் தோற்றமும்  கிடைக்கும் என்னும் உண்மை இதனால் புலப்படுகிறது. தமிழைக் கோயில்களிலும் இல்லத்து நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துவதற்குத் தமிழர்களுக்கு  இன்னும் துணிவு வராமலிருப்பது வெட்கித் தலை குனியத்தக்கது. தமிழர்களும் தமிழ் வேந்தர்களும் தமிழ்ப் பயிருக்கு அமைக்கப்பட்டிருந்த வேலியை அகற்றித் தமிழ்நாட்டை சமற்கிருத வெள்ளாடுகளுக்கு மேய்ச்சலிடமாக்கி விட்டார்கள். இதன் தீமையைத் தஞ்சையில் பெரிய கோயில் கட்டிய இராசராசன் முதலாகச் செய்தான். இன்றைய படித்த தமிழன், படிக்காத தமிழன் உட்பட எவரும் இதை உணரவில்லை.

வரலாற்றுப்பாடம் நடத்தும் ஆசிரியர்கள் முகமதிய அன்பர்களும்  புத்தமத அசோகனும் ஆங்கில நாட்டுக்குச் செய்த பணிகளைப் பெரிதாகப் பேசுகிறார்கள். இந்திய மண்ணை ஆண்ட அரசர்கள் பார்ப்பனியச் சகுனி சூதாட்டத்தில் தோற்று, உள்நாட்டிலேயே வறுமைக்கோட்டுக்குள் ஒளிந்துவாழும் தன்மானம் இழந்த ஏழைகளாகத் தாய்நாட்டு மக்களை மாற்றியிருப்பதைப் பற்றிப் பாடம் நடத்துவதில்லை. பல்லவர் காலத்தில் தாய்நாட்டு மக்களை மாற்றியிருப்பதைப் பற்றிப் பாடம் நடத்துவதில்லை. பல்லவர் காலத்தில் தாய்மொழிக் கல்வியை அறவே ஒழித்து எங்குப் பார்த்தாலும் சமற்கிருதக் கல்வியைப் பரப்பிய ஆதிசங்கரரின் அழிவு வேலை பற்றிப் பேச எந்த வரலாற்று ஆசிரியர்க்கும் துணிவு வரவில்லை. தாய்மொழி அழிந்தால் இயல்பாகவே புதிதாகப்புகும் அயல்மொழிக்கு மக்கள் அடிமையாகிவிடுகின்றனர். வேற்றுமொழிக்கு அடிமையாகும்போது அயல்மொழி நாகரிகமும், பண்பாடும் உட்புகுந்து உயர்ந்து விடுகின்றன. தாய்மொழியும் சொந்தப்பண்பாடும் ஒதுக்கப்பட்டு விடுகின்றன.

ஈழத்துத் தமிழர்களை முள்வேலியில் ஆடு மாடுகளைப்போல் அடைத்து வைத்தார்கள். இந்திய நாட்டில் பல்வேறு மொழியினரும் தாமாகவே சமற்கிருத முள்வேலிக்குள்  புகுந்து தமக்குப் பாதுகாப்பு கிடைத்து விட்டதாகத் தம்மைத் தாமே விற்று, அயல்மொழிக்கு அடிமையாகிவிட்டார்கள். தன்மானத்தைப்பற்றித் தந்தை பெரியார் இட்ட முழக்கம் இந்திய மண்ணில் எல்லா மொழிகளிலும் எதிரொலிக்க வேண்டாமா? சமற்கிருதம் குப்தர் காலத்தில் வடநாட்டிலும், பல்லவர் காலத்தில் தென்னாட்டிலும் வேரூன்றத் தொடங்கி உள்நாட்டு மொழிகளின் பயன்பாடுகளைக்  குலைத்துவிட்டது.

சமற்கிருதச் சொற்களில்லாமல் எழுதப்படிக்க முடியாமல் செய்து விட்டது. இந்திய மொழிகளுக்கு முற்றிலும் தேவைப்படாத கூட்டெழுத்துகளையும், வல்லொலி அழுத்த எழுத்துகளையும் இலக்கணமாகவே புகுத்தி உருக்குலைத்து விட்டது. இந்திய மொழிகளின் இயற்கையான வளர்ச்சியைச் சமற்கிருதம் கெடுத்துவிட்டது. இந்திய மொழிகள் சவலைக் குழந்தைகள் ஆகி விட்டன. இன்றளவும் பேசப்படும் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்குச் செலவிடும் தொகை மிகவும் குறைவு. ஆனால், பேசப்படாத சமற்கிருத மொழி நிலையான தேக்கமடைந்து விட்டது என்று தெரிந்தும் - அதற்கு இனி வளர்ச்சி தேவையில்லை  என்று தெரிந்தும் ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேலான தொகையைச் செலவிட்டு வருகின்றது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கும் நடுவணரசின் பார்வைக்கும் மாநில அரசுகளின் பார்வைக்கும் இது எட்டவில்லை.

தாய்மொழியை வளர்த்த மேட்டுக்குடியினர் பல்லாயிரம் ஆண்டுகளாக மேலோங்கி வாழ்கிறார்கள். இந்தியாவில் மற்ற தாய் மொழிகள் வளர்ந்தால் ஆரியரின் மேன்மைக்குத் தாழ்வு வந்து விடும் எனக் கருதுகிறார்கள் போலும். அவரவர் தாய் மொழிக்கு அரியணை கிடைக்கும்வரை மற்ற தாய்மொழியினர் இந்தியாவில் இரண்டாந்தரக் குடி மக்களாகவே நீடிக்க வேண்டிவரும். பார்ப்பனர்கள் முழு மூச்சாக அழிந்துபோன வேத மொழியைச் சமற்கிருதமாக உருவமாற்றம் செய்து, மலடியானவள் வளர்ப்புப் பிள்ளை வளர்த்ததுபோல் வளர்த்தார்கள். அதே வளர்ப்புப் பிள்ளை இப்பொழுது தன்னை வளர்த்த பார்ப்பன இனத்தைக் காத்து வளர்த்து வருகிறது.

மெக்காலே இங்கிலாந்துப் பேரரசின் முகவாண்மை மேலதிகாரியாக மட்டும் செயற்படவில்லை. தாய்மொழியான ஆங்கிலத்தை உலக மொழியாக மாற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்ள நினைத்தான். இந்தியாவில் கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இந்திய மொழிகள் இடம் பெறக் கூடாது என முடிவெடுத்தான். இந்திய மொழிகளை அகற்றி ஆங்கிலம் மட்டும் ஒரே ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் அமைக்க ஒத்துழைக்காவிட்டால் பதவி விலக்கி விடுவேன் என ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஏனையோரையும் மிரட்டினான். அரசின் கடிவாளம் தன் கையில் இருந்ததால் ஆங்கிலத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் மற்றும் கல்விமொழியாகவும் ஆக்கி விட்டுப் போய்விட்டான். ஆங்கில மொழிக்கு உலக மொழி என முடிச்சூட்டித் தன்குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டான்.

ஆங்கிலேயர்கள் தாம் வென்ற நாடுகளை இழந்தாலும் ஆங்கிலத்தை ஆலமரமாக வளர்த்துக் காப்பாற்றுகிறார்கள். ஆங்கிலம் உலக மொழியாகி ஆங்கிலேயர் அனைவர்க்கும் பாதுகாப்பும் எவரும் இயல்பாகவே மதிக்கும் பெரு மதிப்பும் தேடித் தந்துள்ளது. ஆரிய வந்தேறிகள் சமற்கிருதத்தைக் காப்பாற்றி னார்கள். இன்றளவும் சமற்கிருதம் ஆரியக் கூட்டத்தைக் காப்பாற்றி வருகிறது. ஏமாளியான இராசராசசோழன் திருக்கோயிலில் சமற்கிருதத்துக்கு இடம் கொடுத்தான். ஆரியம் பாடுவார், தமிழ் பாடுவார் என இருவகை பூசகர்களையும் கோயில்களில் அமர்த்தினான். சோழர் ஆட்சி நலிவடைந்த பின் தெலுங்க மராட்டியர் காலத்தில் கோயில் வழிபாடு முற்றிலும் சமற்கிருதமாகி விட்டது. தமிழ் ஓதுவார்கள் தெருவுக்குத் துரத்தப்பட்டார்கள். மெக்காலேவுக்கு இருந்த ஆங்கிலம் காக்கும் துணிச்சல் தமிழைக் காப்பாற்றுவதற்கு இராசராசன் மனத்தில் வேர் கொள்ளவில்லை. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தும் கதை உண்மையாகிவிட்டது.

சோழர் அரண்மனைகளில் தமிழர்கள் பெரிய அதிகாரங்களில் இருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. சோழன்  அவையில் ஒரே  ஒரு தமிழ்ப்புலவர் கூட இடம் பெறவில்லை. பார்ப்பனர்களிடமே சோழ இளவரசர்கள் கல்வி கற்க வேண்டியிருந்தது. ஆரியப் பண்பாடும் சமற்கிருதமும் ஏற்றமுடையன என்னும் எண்ணம் வளர்க்கப்பட்டது. தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்றவற்றிற்குப் பார்ப்பனர்களே சோழர் காலத்தில் உரை எழுதினார்கள். தமிழர் வரலாறு. தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு ஆகியவற்றைத் திரித்தும் பழித்தும் எழுதுபவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது.

தவறாக எழுதியவற்றைப் பாவாணர் போன்ற உண்மைத் தமிழாசிரியர்கள் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டினார்கள். ஆனால் பல்கலைக் கழகம் பேராசிரியர்கள் பலர்க்கும் பாவாணரின் துணிச்சல் வரவில்லை. மூலநூலில் “பெருநற்கிள்ளி” என்றுள்ள சோழன் பெயரை, “இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி” எனப் பார்ப்பன உரையாசிரியர்கள் மாற்றினர். மூலநூலில் உள்ளபடியே பெருநற்கிள்ளி என்று தான் எழுத வேண்டும். “இராச சூயம் வேட்ட” என்பது நீக்கப்பட வேண்டும் என எந்தத் தமிழாசியர்க்கும் தோன்றவில்லை; தமிழக வரலாற்றுப் பேரவையினர்க்கும் தோன்றவில்லை. இனப்பற்றும் மொழிப்பற்றும் உண்மை நாட்டமும் இல்லாத வரலாற்று ஆசிரியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மாநாடு நடத்தித் தமிழனின் தனித்தன்மையை நிலைநாட்ட மறந்துவிட்டார்கள். இனி, கல்வெட்டு ஆய்வாளர்களும் இதைச் செய்யப்போவதில்லை.

“பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவமுதி”யின் பெயரிலும், பார்ப்பன உரையாசிரியர்கள், சோழர் காலத்தில் ‘பல்யாக’ எனும் அடைமொழியை வேண்டுமென்றே சேர்த்திருக்கிறார்கள். தமிழர் வரலாற்றை நடுநிலையில் எழுதுவோர்க்கும் இதுபற்றிக் கூறிட இன்று வரை துணிச்சல் வரவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பல நாடுகளில் தஞ்சம் புகுந்து, தம் தொழில் திறனால் நற்பெயர் பெற்றிருந்தாலும், தாய்மொழியும் தாய்நாடும் இழந்த அவமானம் யூதர்களின் மனத்தை உறுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இங்கிலாந்து அரசின் உதவியால் இசுரேல் தனி நாடு ஆக்கப்பட்டது. அதுவே போதும் என யூதர்கள் நினைக்கவில்லை. பேச மறந்துவிட்ட யூத மொழிக்குப் புத்துயிர் ஊட்டினார். இலக்கியத்தில் நோபல் பரிசு பெறும் அளவுக்கு அதனை வளர்த்து விட்டனர். உலகமொழி அரங்கில் யூதர் மொழியான எபிரேய (ழநசெநற) மொழிக்கு ஏற்றம் தந்தனர். எபிரேய மொழி யூதர்களை ஒற்றுமை வாய்ந்த இனமாக மாற்றிவிட்டது.

தாய்மொழியைக் காப்பாற்றினால் தாய்மொழி தங்களைக் காப்பாற்றும் என்பதற்கு யூதரும், ஆங்கிலேயரும் பார்ப்பனரும் தக்க எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர். சாதி, மத, கட்சி வேறுபாடுகளால் சிதறிக் காணப்படும் தமிழர்களை ஒரே கட்டுக் கோப்பான ஒற்றுமை உள்ள இனமாக மாற்றும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழால் தான் தமிழரை முன்னேற்ற முடியும். உலக அரங்கில் அனைத்து அறிவியல் தொழில் நுட்பப் புலங்களிலும் தமிழை முன்னிறுத்த முயற்சி பெருக வேண்டும். தமிழைக் காப்பாற்றினால் தமிழே தமிழர்களைக் காப்பாற்றும். இது உண்மை; வெறும் புகழ்ச்சியன்று.

Pin It