தொழிலாளர் தினமாகிய மேதினத்தன்று சென்னைத் தொழிலாளர்கள் மே தின நிகழ்ச்சிகளை நடத்தினர். பல்வேறு தொழிற் சங்கங்களும் மேதின நிகழ்ச்சிகளை சென்னையின் பல்வேறு இடங்களிலும் கூட்டங்களையும், ஆர்பாட்டங்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள்.

தொழிலாளி வர்க்கத்தை கட்சி, சங்க, நிறுவன வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஒன்றுபடுத்த வேண்டும், காரல் மார்க்சின் அறைகூவலான "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" என்ற அறைகூவலை செயலளவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென பல்வேறு முற்போக்கான தொழிற் சங்கங்களும் அமைப்புக்களும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் கீழ் ஒன்று கூடி இதற்கான முயற்சிகளை மேற் கொண்டனர். இந்த மேதினத்தைத் திட்டமிடுவதற்காக அவர்கள் பல கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்தினார்கள். தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் இந்த முயற்சிக்கும், மேதின நிகழ்ச்சிக்கும் வி.எச்.எஸ் மருத்துவமனைத் தொழிலாளர் சங்கம், ஏர் இந்தியா ஐக்கியத் தொழிலாளர் சங்கம், புரட்சிகர மக்கள் பாசறை, தமிழ்நாடு புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, மக்களாட்சி இயக்கம், தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன், தக்ஷண் இரயில்வே எப்பிளாயிஸ் யூனியன், இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற் சங்கம் மற்றும் பல தொழிற் சங்கங்கள் ஆதரவு அளித்தனர். மேலும் பல தொழிற் சங்கங்களை ஒன்றுகூட்ட தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் செயல்வீரர்கள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டனர். மேதின பாரம்பரியத்தையும், தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், தொழிலாளி வர்க்கம் பரந்துபட்ட அளவில் ஒன்றுபட வேண்டிய உடனடித் தேவையை வலியுறுத்தியும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் மேதின அறிக்கையை வெளியிட்டு அதை தொழிற்சாலைகளிலும், தொழிற் பேட்டைகளிலும், மருத்துவமனை வளாகங்களிலும் தொழிலாளர்களிடையே வினியோகித்தனர்.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கமாக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களும், அமைப்புக்களும், மே தினத்தன்று காலையில் சென்னை கிண்டி தொழிற் பேட்டை வளாகத்தில் ஆர்பாட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் பல்வேறு தொழிற் சங்கத் தலைவர்களும், செயல்வீரர்களும் உரையாற்றினர். முக்கியமாக தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பாஸ்கர், வி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் மணிதாசன், புரட்சிகர மக்கள் பாசறையின் தோழர் காலன்துரை, தமிழ்நாடு புரட்சிகர தொழிலாளர்கள் சங்கத்தின் தோழர் பி.டி.சண்முகசுந்தரம், தோழர் ராஜ்குமார், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தோழர் கே.வேலாயுதம், யுடியுசி-யின் தோழர் சுப்பிரமணி, வழக்கறிஞர் வெங்கடேசன், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் அமீது ஆகியோர் உரையாற்றினர்.

உரையாற்றிய தோழர்கள் மேதினத்தின் போராட்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் எடுத்துரைத்தனர். தொழிலாளர்கள் சுரண்டப்படும் ஒடுக்கப்பட்டும் இருக்கும் சூழ்நிலையில், மே தினமானது கொண்டாட்ட நாளல்ல, மே தினம் சுரண்டலுக்கு முடிவு கட்டவும், உரிமைகளை வென்றெடுக்கவும் தொழிலாளிகள் உறுதி மேற்கொள்ளும் நாள், போராட்டங்களைத் திட்டமிடும் நாள் என்பதை நினைவு படுத்தினர்.

இன்று பெரிய தொழிற்சாலைகளில் கூட தொழிலாளர்களுக்குத் தொழிற் சங்க உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பி.எப், இ.எஸ்.ஐ, ஓய்வூதியம், மற்றும் பிற பயன்கள் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. அரும்பெரும் போராட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்காக நல வாரியங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை செயல்படாமல், வெறும் பெயரளவில் உள்ளன.

தொழில் நுட்பம் வளர்ந்து, உற்பத்தித்திறன் அதிகரித்துள்ள நிலையில் இன்று, தொழிலாளர்களுடைய வேலை நேரம் குறைந்தும், அவர்களுடைய வாழ்கை தரம் உயர்ந்தும் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, தொழிலாளர்கள் மிகக் கடுமையாக சுரண்டப்படுகின்றனர். போராடி குருதி சிந்திப் பெற்ற 8 மணி நேர வேலை என்ற உரிமை கூட முதலாளிகளாலும், அவர்களுடைய அரசாங்கத்தாலும் காலில் போட்டு நசுக்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர்கள் நீக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் எவ்வித பணி பாதுகாப்பும், பிற உரிமைகளும் இன்றி, அவர்கள் தற்காலிகத் தொழிலாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் மாற்றப்பட்டு வருகிறார்கள். ஏர் இந்தியாவில் கடந்த 20-25 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு, தற்காலிகத் தொழிலாளர்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தொழிலாளர்களுடைய அனைத்து உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர்கள் பரந்துபட்ட அளவில் ஒன்றுபடுவதும், அவர்களுடைய உரிமைப் போராட்டங்களை தீவிரப்படுத்துவதும் இன்றைய உடனடித் தேவை என்பதை வலியுறுத்தினர். நம்முடைய உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் போராடுகின்ற அதே நேரத்தில், நாம் இந்த சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்ட வேண்டிய தேவையைச் சுட்டிக் காட்டினார். தொழிலாளர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றாலும், சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டப்பட வேண்டுமென்றாலும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆட்சி அதிகாரம் தேவைப்படுகிறது. எனவே முதலாளி வர்க்கத்திடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதற்கான அடித்தளத்தை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் அமைத்து வருகிறது என்றனர். எல்லா தொழிலாளர்களும் ஒன்றிணைவதும், நம்முடைய ஒற்றுமையை உடைக்க மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளையும் முறியடிப்பதும் மிகவும் அவசியமாகும் என்றனர்.

அதற்கான வழிமுறைகளில் ஈடுபடுவதாக வந்திருந்த அனைவரும் உறுதி பூண்டு, உற்சாகத்தோடு முழக்கங்களை எழுப்பியவாறு கூட்டம் முடிவுற்றது.

Pin It