supreme court 255உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூசன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம்தான் உண்மையில் ஏதோ இக்கட்டில் சிக்கிக் கொண்டது போல் நடந்து கொண்டது, பிரசாந்த் பூசன் தன் குற்றத்துக்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கட்டளையிட்ட நிலையிலிருந்து, ”ஒரு வருத்தமாவது தெரிவிக்க்க் கூடாதா?” என்று கெஞ்சும் நிலைக்கு உச்ச நீதிமன்ற நீதியர் வந்து விட்டனர், ஏன்? என்ற கேள்விக்கான விடை 02.08.2020 அன்று பிரசாந்த் பூஷன் கொடுத்த உறுதியாவணத்தில் காணக் கிடைக்கிறது. 175 பத்திகள் 134 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணம் நீதித் துறையின் மீதான நம்பிக்கைக்கே வேட்டு வைக்கும் படியானவை.

இந்த ஆவணத்தில் பூசன் எடுத்துக்காட்டிய முகன்மைக் கூறுகள் இவை:

  • பாரதிய சனதா, ஆர்எஸ்எஸ் தொடர்புடைய சிறுசிறு குழுக்களால் தலித்துகளும் சிற்பான்மை மக்களும் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளில் காவல்துறை நடவடிக்கை எடுப்பது அரிதாகவே உள்ளது.
  • 2019ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டங்களின் போது அவர்கள் மீது பாசக அரசு அடக்குமுறையை ஏவியது. ஜாமியா மிஸ்லியா கல்வி வளாகத்தில் மாணவர்கள் கொடிய முறையில் தாக்கப்பட்டனர்.
  • தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக என்எஸ்ஏ, ஊபா சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • பாசக தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறுகளும் பொய்ச்செய்திகளும் பரப்பியதோடு வன்முறையையும் தூண்டி விட்டனர்.
  • ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கியதற்குக் காணொலிச் சான்றுகள் உள்ளன.
  • சம்மு காசுமீர சட்டப் பேரவையின் ஒப்புதல் இல்லாமல் அம்மநிலம் மூன்றாக உடைக்கப்பட்டு முன்னாள் முதல்வர்கள் உட்படத் தலைவர்களும் மக்களும் சிறை வைக்கப்பட்டனர்.
  • கடந்த ஆறாண்டுக் காலத்தில் வேலையின்மையும் வேலையிழப்பும் உச்சங்கண்டன. கொரோனா காலத்தில் 10 கோடிக்கு மேற்பட்டோர் வேலையிழந்தனர்.
  • அரசமைப்புச் சட்ட நிறுவனங்களான தேர்தல் ஆணையமும் தலைமைக் கணக்காயரும் சிபிஐ மற்றும் நடுவண் விழிப்பு ஆணையமும் சேம வங்கியும் உள்ளிட்ட பொது அமைப்புகள் சீரழிக்கப்பட்டன.
  • ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டன. உண்மைகளை வெளிப்படுத்தியவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். ரஃபேல் குறித்துப் புலனாய்வு செய்ய முற்பட்ட சிபிஐ இயக்குநர் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார்.
  • தேசியப் புலனாய்வு முகமை மனிதவுரைமைப் போராளிகளையும் அரசுக் கொள்கைக்கு எதிரானவர்களையும் பழி வாங்குவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.
  • நாட்டின் வங்கிகளை மோசடி செய்த பெருமுதலாளிகள் வரி ஏய்ப்புக்குப் பொருத்தமான அயல்நாடுகளில் குடிபுகுந்தனர். அவர்களை இந்த நாட்டுக்குக் கொண்டுவர முயல்வது போல் நாடகம் நடக்கிறது.
  • பெரும்பாலான ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டு அரசின் ஊதுகுழல்கள் ஆக்கப்பட்டுள்ளன.
  • இந்த உண்மைகள் நீதிமன்றங்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த நான்கு தலைமை நீதியர்களின் பதவிக் காலத்தில் மக்கள் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் தவறி விட்டது.
  • காசுமீரில் இணைய வசதிகள் மறுக்கப்பட்டது, நீதிப்பேராணை வழக்குகள், ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நீதியர் லோயா மர்ம மரணம், ரஃபேல் ஊழல் ஆகிய வழக்குகளில் மூடி முத்திரையிட்ட உறையில் ஆவணங்கள் தரப்பட்டு எதிர்த்தரப்புக்கு ஆவணங்கள் தரப்படாமலே வழக்குகள் முடிக்கப்பட்டன.
  • உச்ச நீதிமன்ற நீதியர் ஊழல் செய்ததற்கான சான்றுகள் வெளிப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. (நீதியருக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்குமான நெருக்கத்துக்கு பூசன் தந்திருக்கும் சான்றுகள் அதிர்ச்சி தரும் படியானவை. இந்தப் பட்டியலைத் தனியாகவே வெளியிடலாம்.)

இந்த உண்மைகள் பொதுவெளியில் அலசப்படுவதைத் தவிர்க்கவே அரசும் உச்ச நீதிமன்றமும் விரும்பின. சட்டி சுட்டதடா கை விட்டதடா என்ற நிலைக்கு வந்து விட்டதால்தான் வழக்கை முடிக்க வழிதேடி, வருத்தமாவது தெரிவித்தால் போதும் என்று நீதியின் தலைமைப்பீடம் கெஞ்சியது, வருத்தம் தெரிவிக்க மறுத்த பிரசாந்த் பூசனின் நிலைப்பாட்டை வரவேற்போம். அவரது பணி தொடரட்டும்.

செங்காட்டான் குறிப்புகள்

Pin It