உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

வரும் 23 முதல் 27 ஆம் தேதி வரை கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு இருபெரும் தனிச்சிறப்புகள் உண்டு. தமிழ் செம்மொழிதான் என்னும் கலப்படமற்ற உண்மையை மத்திய அரசு அறிவித்ததற்குப் பிறகு, உலக அளவில் தமிழுக்காக நடைபெறும் முதல் மாநாடு இது என்பது முதல் சிறப்பு. கணிப்பொறி யுகத்தில் வாழும் நம் இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் இணையத்தள மாநாடும் இணைந்து நடப்பது இன்னொரு சிறப்பு.

தமிழின் செம்மையை முதலில் தமிழனுக்கு அறிவித்தவர் கால்டுவெல் என்னும் அயர்லாந்து பாதிரியார். 1856 ஆவது ஆண்டு அவர் வெளியிட்ட திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பங்களின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில்தான் தமிழ் ஒரு செம்மொழி என்னும் செய்தியும், சமற்கிருதத்திற்கும் தமிழுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்பதோடு, தனித்து இயங்கக் கூடிய உயர்தனிச் செம்மொழி என்னும் செய்தியும் அழுத்தமாக வெளிப்பட்டன.

அதன்பின் 1898 இல் பரிதிமாற்கலைஞர், தமிழைச் செம்மொழி என அறிவிக்குமாறு சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதுதான் முதல் கோரிக்கை. 1918 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகாஜன சபை, இக்கோரிக்கையை ஒரு தீர்மானமாகவே நிறைவேற்றியது. பல்கலைக் கழகத்திற்குக் கோரிக்கை வைத்த காலம் மாறி, பல்கலைக்கழகங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து அரசுக்குக் கோரிக்கை வைத்தன. பல்வேறு தமிழ் அமைப்புகள் அதற்கான போராட்டங்களைக் கூட முன்எடுத்தன. தில்லியில் நடைபெற்ற ஒரு பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொள்ளுவதற்காகச் சென்றபோது தான், பேராசிரியர் சாலினி இளந்திரையன் ஒரு விபத்தில் உயிர்துறந்தார். இப்படி உயிர் இழப்பு உட்பட்ட பல தியாகங்களையும் செய்த பின்பே நம் கோரிக்கை நிறைவேறி உள்ளது.

பரிதிமாற்கலைஞர் முன்வைத்த கோரிக்கை, ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு தமிழக முதலமைச்சர் கலைஞரின் முயற்சியால் நிறைவேறியுள்ளது. இரண்டு கலைஞர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில், இக்கோரிக்கைக்காகப் பாடுபட்ட அனைவரும் பாராட்டிற்குரியவர்கள்.

செம்மொழிக்கான இலக்கணம் பல்வேறு வகைகளில் கூறப்படுகின்றது. கில்பர்ட் சிலேட்டர், தாமஸ் பரோ, வின்சுலோ, கமில் சுவெலபில் உள்ளிட்ட வெளிநாட்டு மொழியியல் அறிஞர்களும், தேவநேயப் பாவாணர், சுனித் குமார் சாட்டர்ஜி, ஏ.எல்.பா­ம் உள்ளிட்ட இந்திய மொழியியல் அறிஞர்களும் சுருக்கமாக நான்கு தகுதிகளைக் குறிப்பிட்டுள்ளார்கள். தொன்மை, வளமை, சீர்மை, பொதுமை ஆகிய நான்கினையும் கொண்ட மொழிகள் செம்மையான மொழிகள் என்பது அவர்தம் கருத்து.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலைப் பெற்றுள்ள தமிழின் தொன்மைக்கு நாம் சான்று பகர வேண்டியதில்லை. தொல்காப்பியத்திலும் கூட, பல நூற்பாக்கள், என்ப, என்பர், என்மனார் புலவர் போன்ற சொற்களோடு நிறைகின்றன. எனவே தொல்காப்பியர் காலத்திற்கும் முன்பே பல இலக்கண அறிஞர்கள் இருந்துள்ளனர் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

எண்ணிலடங்கா இலக்கண இலக்கியங்கள் தமிழின் வளமை கூறுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சி விடுபடாமல் இலக்கியங்களைக் கொண்டுள்ள மொழி - ஒரே மொழி - தமிழ்தான்.

ஆங்கிலத்தில் எழுத்துகளுக்கான ஒலிப்பு முறை இடத்துக்கு இடம் மாறுவதை நாம் பார்க்கிறோம். ஒரே எழுத்து பல்வேறு ஒலிப்புகளுக்கும் இடம் தருகிறது. எடுத்துக்காட்டாக, ஓ என்னும் ஆங்கில எழுத்து, வுமன் என்ற சொல்லில் ஒருவிதமாகவும், விமன் என்ற சொல்லில் வேறுவிதமாகவும் ஒலிப்பதைப் பார்க்கிறோம். இதுபோன்ற நிலை தமிழ் எழுத்துகளுக்கு எப்போதும் ஏற்படுவதில்லை. இதனையே சீர்மை என்று மொழியியலாளர் குறிக்கின்றனர்.

தமிழுக்குப் பொதுமை இயல்பாகவே பொருந்திவரும் ஒரு கூறாக உள்ளது. உலகின் பல மொழிகளிலும் இத்தகைய பொதுமைக் கூறு இருக்கவே செய்கிறது. தமிழிலோ கணக்கற்ற பொதுமைச் சிந்தனைகளைக் காண முடிகிறது. யாகாவராயினும் நாகாக்க என்பது தமிழர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா என்ன ? இவ்வாறு தமிழில் உள்ள உலகப் பொதுவான செய்திகளையும், உலகம் போற்றும் செய்திகளையும் இலக்கியங்களில் ஏராளமாகக் காண முடியும்.

ஆதலால், தொன்மை - வளமை - சீர்மை- பொதுமை ஆகிய நான்கு தகைமைகளையும் கொண்டிலங்கும் செம்மொழியான தமிழுக்கு எடுக்கப்படும் மாநாடு, உலகெலாம் வாழும் தமிழ் மக்கள் உயர்த்திப் போற்றவேண்டிய மாநாடு.

இணையத்தளத்தில் தமிழ் மொழி பெற்றுள்ள ஏற்றங்களை நாம் அறிவோம். ஆங்கிலத்துக்கும், இட்டிஷ் மொழிக்கும் அடுத்ததாக தமிழே அங்கு ஆட்சி செய்கிறது. இந்தப் பெருமையைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தவர்கள் ஈழத்தமிழர்களே என்பதை நாம் மறுக்கமுடியாது. அந்தப் பெருமிதத்தோடு நின்றுவிடாமல், இணையத் தளங்களில் மென்மேலும் தமிழின் இடத்தை உறுதிசெய்ய இம்மாநாடு கண்டிப்பாய் உதவும்.

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு சிறப்புகளையும் தாண்டி, மூன்றாவது சிறப்பும் இம்மாநாட்டுக்கு உள்ளது. துக்ளக் போன்ற தமிழினத்திற்கு எதிரான ஏடுகள் இம்மாநாட்டை கண்டித்தும் கேலிசெய்தும் ஏராளமாக எழுதிக் கொண்டிருக்கின்றன. துக்ளக் ( 23.06.2010 ) இதழில் இரண்டு மூன்று கட்டுரைகள், கேலிப்படங்கள், கேள்வி பதில்கள் துணுக்குச் செய்திகள் எல்லாவற்றிலும் செம்மொழி மாநாடு பற்றிய வயிற்றெரிச்சல்தான் காணக்கிடக்கிறது. அடடா, செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு முன்பே வெற்றி பெற்றுவிட்டது.

- சுப.வீரபாண்டியன் 

Pin It