சிந்துவெளிப் பண்பாட்டின் கண்டுபிடிப்பு நிகழ்ந்து நூறு ஆண்டுகள் கடந்துள்ள இத்தருணத்தில் சிந்துவெளிக் குறியீடுகள் குறித்த ஆய்வுகள் மேலும் கூர்மைபெறத் தொடங்கியுள்ளன. இருமொழிப் பொறிப்புகள் கிடைக்காத நிலையில் சிந்துவெளிக் குறியீடுகளை வாசித்துப் பொருள்கொள்வதில் சிக்கல்கள் நிலவுவது தொடர்கிறது. எனவே சிந்துவெளிக் குறியீடுகளைப் பண்பாட்டுச் சூழலிலும் வேறுபல முறையியல்களிலும் புரிந்துகொள்ளும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாசித்துப் பொருள் அறியும் வரை இவற்றைக் குறியீடுகள் என்றே அறிஞர்கள் அழைக்கின்றனர். வாசித்து அறியப்பட்டதையே எழுத்துகள் என்று அழைப்பர். குறியீடுகளை எழுத்துகளாக வாசிக்கும் முயற்சியாக ஒரு குறியீட்டுத் தொகுதியில் முதலில் மட்டுமே இடம்பெறும் குறியீடுகள் எவை, இறுதியில் மட்டுமே இடம்பெறும் குறியீடுகள் எவை, பரவலாக இடம்பெறும் குறியீடுகள் எவை என்பது போன்ற ஆய்வுகள் அடிப்படையான ஆய்வுகளாக அமைகின்றன. எனவே இக்குறியீடுகளுக்கான பட்டியல்கள் மற்றும் விரிவான அட்டவணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

thonmai tamil ezhuthiyalசிந்துவெளிக் குறியீடுகளைப் போன்றே வாசித்துப் பொருள் கொள்ளப்படாத பல்வேறு வகையான குறியீட்டுத் தொகுதிகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன. குறிப்பாக சிந்துவெளிப் பண்பாட்டின் மறைவுக்குப் பின்னரும் பிராமி எழுத்து வடிவத்திற்கு முன்னரும் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வந்த, எழுத்து முறையாகக் கொள்ளத்தக்க பற்பல குறியீடுகளை வாசித்து அறியும் ஆய்வுகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. இக்குறியீடுகள் சாதாரணக் கீறல்களா அல்லது பொருள் சார்ந்த குறியீடுகளா? சாதாரணக் கீறல்கள் எனில் பல்வேறு இடங்களில் எவ்வாறு ஒரேவிதமான குறியீடுகள் கிடைக்கின்றன? ஆக இக்குறியீடுகள் எதையோ உணர்த்த முற்படுகின்றன. வரலாற்றில் துலக்கப்பட வேண்டிய முக்கியப்பகுதிகள் இவை. ஆனால் இக்குறியீடுகளை முறையாக ஆவணப்படுத்தும் தன்மைகள் கூட முழுமையான கவனத்துடன் நடைபெறவில்லை என்பதே உண்மை.

இந்தியாவில் பொருள் அறியப்பட்ட தொன்மையான எழுத்து வடிவமாக பிராமி எழுத்து வடிவமே உள்ளது. இந்த எழுத்து வடிவத்தின் தோற்றம் மற்றும் பரவல் குறித்த ஆய்வுகளிலும் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. அசோகனுடைய ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள பிராமியைக் கொண்டு பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு அளவிலேயே பிராமியின் தொடக்க காலமாக இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் பரவலாகக் கொள்ளுகிறார்கள். அசோக பிராமிக்குப் பிற்பட்டு பொ. ஆ. மு. இரண்டாம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டிற்கும் இந்த எழுத்துமுறை அறிமுகமாகியது என்றே ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட முக்கியமான ஆய்வாளர்கள் பலரும் கருதினர். பாறைப்பொறிப்புகளை முதன்மைப்படுத்தியே இத்தகைய ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். ஆனால் அசோகனுடைய காலகட்டத்திற்கு முன்பே பிராமி வரிவடிவம் தமிழ்நாட்டில் நிலைபெற்றிருந்ததை அறிவியல் அடிப்படையில் நிறுவுவதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. எனில் பிராமியின் தோற்றம் மற்றும் பரவல் என்பது தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டதா என்னும் கேள்விகள் முதன்மையானவை.

மேற்குறித்த பல்வேறு சிக்கல்களையும் விவாதங்களையும் உட்படுத்தித் தமிழ் எழுத்துமரபின் தொன்மை குறித்து அறிவியல் பூர்வமாக ஆராய்கிறது பேராசிரியர் கா. ராஜன் அவர்களின் தொன்மைத் தமிழ் எழுத்தியல் (குறியீடுகளிலிருந்து தமிழ் – பிராமியை (தமிழி) நோக்கிய பயணம்) என்னும் நூல்.

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கொடுமணல் சங்ககாலத்தில் புகழ் பெற்ற வணிக நகரமாக விளங்கியது. பரபரப்பான செய்திகளுக்காக அல்லாமல் ஆழமான பண்பாட்டுத் தரவுகளைத் தன்னகத்தே கொண்டது கொடுமணல் அகழாய்வு. 1985 இல் தொடங்கி 2012 வரையான ஏழு பருவகாலங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பண்பாட்டுத் தரவுகளை முதன்மைப்படுத்தி இந்தியா மற்றும் இலங்கையில் கிடைத்த தரவுகளோடு ஒப்பு நோக்கி தொல்லெழுத்தியல் (Palaeography), வரிவடிவவியல் (Orthography), காலப்பகுப்பாய்வு (Chronology) ஆகிய முறையியல்களில் பண்பாட்டுச் சூழலில் வைத்து ஆராய்கிறது இந்நூல். கொடுமணல் மற்றும் பொருந்தல் ஆகிய இடங்களில் மட்பாண்டங்களில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறிப்புகளின் காலத்தை அவற்றின் உடன்கிடைத்த பொருட்களைக் கதிரியக்கக் கார்பன் சோதனையின் வழி ஆராய்ந்து பிராமியின் காலத்தைப் பொ. ஆ. மு. ஆறாம் நூற்றாண்டு என்று முன்னகர்த்தியவர் பேராசிரியர் கா. ராஜன். இந்த ஆய்வு தமிழ்ச்சமூகம் குறித்த ஆய்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இந்நூலினை அதன் தொடர்ச்சியாகவே புரிந்துகொள்ள வேண்டும்.

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த குறியீடுகள் தாங்கிய 1456 ஓடுகளில் இருந்து முழுமையானவையாக அடையாளப்படுத்தப்பட்ட 596 குறியீடுகளையும் 551 பிராமி எழுத்துப் பொறிப்புகளையும் கவனத்துடன் ஆவணப்படுத்தி அவற்றைச் சூழல் சார்ந்த பொருள்கோடலுக்கான சாத்தியத்தை உருவாக்குகிறார். குறியீடுகளில் சில சிந்துவெளிக் குறியீடுகளுடன் முழுமையாக ஒத்துப் போகின்றன. சில குறியீடுகள் பகுதியளவில் ஒத்துப் போகின்றன. கொடுமணலில் கிடைத்த குறியீடுகளைப் போலவே தமிழகத்தில் பல பகுதிகளிலும் நிகழ்ந்த அகழாய்வுகளில் கிடைக்கும் குறியீடுகளுடன் ஒப்புமையுடையனவாக உள்ளன. மீன், மயில் போன்ற குறியீடுகள் சங்க இலக்கியங்களோடும் உறவு கொண்டுள்ளன. பாறை ஓவியங்களில் காணப்படும் குறியீடுகளோடு கொடுமணல் குறியீடுகள் ஒத்துப்போகின்றன. நேரடியாக வாசித்து அறிய முடியாவிட்டாலும் பண்பாட்டு அடிப்படையில் சிலவற்றுக்கு விளக்கம் அளிக்கும் முறையையும் பேராசிரியர் இந்நூலில் முன்வைக்கிறார். வலமிருந்து இடப்பக்கமாக எழுதப்பட்ட சிந்துவெளி முறைக்கு மாற்றாக இடமிருந்து வலப்பக்கமாக எழுதும் முறையை இக்குறியீடுகள் கொண்டுள்ளன என்பதை எழுதுவதற்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டும் பிராமி எழுத்துகளோடு உள்ள உறவினை அடிப்படையாகக் கொண்டும் விளக்குகிறார். பாறை ஓவியங்களில் கிடைத்துள்ள ஏணி வடிவில் அமைந்த குறியீட்டுக்குக் கேரளப் பேராசிரியர் அஜீத் குமார் அளிக்கும் விளக்கமான இவ்வேணிச் சின்னம் மரணத்தோடு தொடர்புடையது எனவும், ஆன்மா சொர்க்கத்தை நோக்கி மேல் செல்வதற்கு உதவும் அடையாளச் சின்னமாக இக்குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் பயன்படுத்துகிறார். ஒரு குறியீட்டுத் தொகுப்பில் எப்பொழுதும் முதலில் மட்டுமே வரும் குறியீடுகள், இறுதியில் மட்டுமே வரும் குறியீடுகள், வெவ்வேறு ஊடகங்களில் இடம் பெற்றுள்ள குறியீடுகள், பல்வேறு பண்பாட்டுக் காலங்களில் தொடர்ச்சியாகப் பயணப்படும் குறியீடுகள் எனக் குவியல்களாகக் கிடைக்கும் குறியீடுகளை வகைதொகைப்படுத்தி அறிவுத் தோற்றவியல் ஆய்வுக்கு வழிகாட்டிச் செல்கிறார். உண்மையான பொருளை அறியும் வரையில் ஒரு கலைப்படைப்புக்கு நிகரான கருத்தியல் பரிமாற்றத்தை இக்குறியீடுகள் வழங்குகின்றன.

இந்நூலில் உள்ள மற்றொரு முதன்மையான பகுதி தமிழ்-பிராமி குறித்த ஆய்வு. கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள குறியீடுகள் மற்றும் தமிழ்-பிராமி குறித்த எண்ணிக்கை அட்டவணை துல்லியமாக இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் கொடுமணல் அகழாய்வின் மட்பாண்டங்களில் கிடைத்த தமிழ்- பிராமி எழுத்துப் பொறிப்புகளே மிகுதி. இந்நூலில் 551 பானையோடுகளில் இடம்பெற்றுள்ள தமிழ்- பிராமியின் தன்மையை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறார் பேராசிரியர். இந்தியாவில் எந்தப்பகுதியில் இருந்தும் இதுவரை இத்தகைய எண்ணிக்கையிலான பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்கள் கிடைக்கவில்லை என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும் (ப. 307) என்று கூறுகிறார். இது பண்டைய தமிழ்ச் சமூகத்தின் கல்வி நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. பானை ஓடுகளில் கிடைத்த எழுத்துப் பொறிப்புகள் அனைத்தும் ஆட்பெயர்களாகவே உள்ளன. குகைக் கல்வெட்டுகளில் உள்ள தமிழ்- பிராமியிலிருந்து சில வேறுபாடுகளையும் இப்பானை ஓடுகளில் உள்ள தமிழ் – பிராமி கொண்டுள்ளன. குறிப்பாகக் குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் சமய அடையாளங்கள் எவையும் இப்பானை ஓடுகளில் இல்லை. குகைக் கல்வெட்டுகளில் தமிழல்லாத இரண்டே பிராகிருத எழுத்துகள் மட்டும் இடம்பெற்றிருக்க பானை ஓடுகளில் பதினோரு பிராகிருத எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இவையும் பிராகிருதப் பெயர்கள் வரும் இடங்களிலேயே அமைந்துள்ளன. வினைச்சொற்கள் மற்றும் இடப்பெயர்களில் பிராகிருதத் தாக்கம் இருப்பதற்கான சான்றுகள் இல்லை என்பதும் நமது கவனத்தை ஈர்க்கக்கூடிய முதன்மையான தகவலாகும். பழந்தமிழ் இலக்கியங்களான பாட்டும் தொகையிலும் 2% வினைச்சொற்கள் மட்டுமே பிற மொழிச் சொற்களாக அமைந்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உயிர் எழுத்துகளில் ஐ, ஔ ஆகிய இரண்டு வடிவங்களும் இப்பானை ஓடுகளில் காணப்படவில்லை. ஆனால் இவை கூட்டொலிகளாக (அய், அவ்) இடம் பெற்றுள்ளன. உயிர் எழுத்துகளில் நெடில் எழுத்துகளுக்கும் குறில் எழுத்துகளுக்குமான வேறுபட்ட வடிவங்கள் காணப்படாமல் உள்ளன. மெய்யெழுத்தின் அனைத்து வடிவங்களும் காணப்பட உயிர் எழுத்தின் அடிப்படை வடிவங்கள் மட்டுமே இடம்பெற காரணம் என்ன? குறில் நெடிலை இடம் நோக்கி அமைத்துக் கொண்டாலும் அடிப்படை உயிர் எழுத்துகள் பத்து என்பதாகவே அமைந்துள்ளன. தமிழ் எழுத்தியலின் கால வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இந்த ஆவணங்கள் முதன்மையாகின்றன.

குறியீடுகளையும் தமிழ்-பிராமி எழுத்துகளையும் இணைத்து ஆராயும் பேராசிரியர் கா. ராஜன், குறியீடுகள் தமிழ்-பிராமி எழுத்துகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பும், தமிழ்-பிராமி பயன்பாட்டிற்கு வந்த பின்பும், ஆகிய இரு பண்பாட்டு நிலைகளிலும் கிடைத்துள்ளன. சுவாரசியமாகத், தமிழ்- பிராமி எழுத்துகள் பயன்பாட்டிற்கு வந்த பின் குறியீடுகள் கிடைக்கும் எண்ணிக்கையின் அளவு குறைந்துகொண்டே போகின்றன. இந்நிலை அக்காலச் சமூகம் குறியீடுகளின் பயன்பாட்டிலிருந்து தமிழ்-பிராமிக்கு நகர்ந்து சென்றிருக்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது (ப. 109) என்று குறிப்பிடுவதையும் நோக்கும் பொழுது இக்குறியீடுகள் வாசிக்கப்பட்டு பொருள் அறியும் பொழுது தமிழ்-பிராமியின் காலத்தை பொ. ஆ. மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னகர்த்தியதை விடவும் கூடுதலாக முன்னகர்த்த வேண்டிய சூழல் இயல்பாக வாய்க்கும்.

கொடுமணலில் கிடைத்த இப்பொறிப்புகளை ஆவணப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தியது போலவே பிற இடங்களில் நடைபெறும் அகழாய்வுப் பணிகளில் கிடைக்கும் குறியீடுகளையும் எழுத்துப் பொறிப்புகளையும் கவனத்துடன் ஆவணப்படுத்தி ஆராய வேண்டும். இவ்வாய்வுகள் தொடர்ச்சியாக நிகழும் பொழுது சிந்துவெளி குறியீடுகளின் வாசிப்புக்கான திறப்புகள் தமிழ்நாட்டிலிருந்தே கிடைக்கும். அதற்கான முதல் பணியைப் பேராசிரியர் கா. ராஜன் நிகழ்த்தியுள்ளார். கடினமான இப்பணியைச் செம்மையாகத் தொடங்கி வைத்ததுடன் தமிழ்ச் சமூகம் செய்ய வேண்டிய பணிகளின் திசைவழிகளையும் இந்நூலில் காட்டிச் செல்கிறார் பேராசிரியர்.

பி.கு: தமிழ்நாட்டில் இதுவரை நிகழ்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ள மட்பாண்டத்தில் பொறிப்புப் பெற்றுள்ள குறியீடுகள் மற்றும் தமிழ்-பிராமி ஆவணங்களை முழுமையாகத் தொகுத்து ஆவணமாக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. இவைகள் நூல்களாக வெளிவரும் பொழுது இக்குறியீடுகள் குறித்த ஆய்வு முடிவுகள் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

- அ.சதீஷ், இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை