காஷ்மீரைப் பாருங்கள் - நம்மால் அறியப்பட்ட காஷ்மீர்! நாம் அறிய வேண்டிய காஷ்மீர்! - 3

ஜம்மு-காஷ்மீர் நாடு அரிசிங்கின் முப்பாட்டன் குலாப் சிங் என்பவரால் வெள்ளையர்களிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட ஒரு சொத்து. அது பரம்பரை யாகத் தன் குடும்பத்துக்கே சொந்தமாக இருக்கும் என அரிசிங் நம்பினார். அதனால் அரிசிங் காஷ்மீர் மக்களின் நலனைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத வராகவும், எப்போதும் தூக்கத்திலும், பெண் விழைச்சிலும் (womanising) திளைப்பவராகவும் இருந்தார்.

இந்நிலையில், தன்னிடம் சட்ட அதிகாரியாக இருந்த முகமது இப்ராஹீம்கான், உள்நாட்டிலேயே அரசனுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கிவிட்டது, ஒருபக்கம்.

இன்னொரு பக்கம் காஷ்மீரின் வடக்குத் திசையி லிருந்து, மலைவாழ் பழங்குடி முரட்டுக் கூட்டம் ஒன்று ஆயுதங்களுடன் பாக்கித்தான் எல்லையைக் கடந்து காஷ்மீருக்குள் நுழைந்தது. பாக்கித்தானின் மறைமுக ஆதரவோடு அது நடந்தது. அந்த நடவடிக்கைக்கு “இருட்டறை நடவடிக்கை” - “ஆபரேஷன் குல்மார்க்” (Operation Gulmark) என்று பெயர், அந்த முரட்டுக் கூட்டத்துக்கு அக்பர்கான் என்பவர் தலைவராக இருந் தார். அப்போது அவர் பாக்கித்தான் இராணுவத்தின் “மேஜர் ஜெனரல்” என்ற பொறுப்பில் இருந்தார்.

அவரே எழுதி வைத்திருந்த குறிப்பின்படி - மொத்தப் படை வீரர்கள் 20,000 பேர். அப்படை 20 குழுக்களாகப் பிரிக்கப்பட்டது; ஒரு குழுவில் 1,000 வீரர்கள், ஒவ்வொரு குழுவுக்கும் மேஜர், கேப்டன், ஜே.சி.ஓ. (J.C.O.) என்கிறவர்கள் பொறுப்பு.

முதலாவதாக அக்பர்கான் தலைமையில் 5,000 வீரர்கள் 200 முதல் 300 இராணுவ உந்துகளில் (Lorry) வந்து, 22-10-1947 அன்று காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்தனர்.

“பாக்கித்தான் எல்லையைத் தாண்டிவிட்டோம். காஷ்மீருக்குள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்” என்று செய்திகளை அவர்களே பரப்பினார்கள். அவர் களைத் தடுப்பார் இல்லை. எனவே அப்படை கொலை, கொள்ளை, தீ வைப்பு, தடையின்றிப் பெண்களைக் கற்பழிப்பது - சூறையாடுவது நடந்தது.

முதன்முதலில் அவர்கள் எதிர்ப்பைக் கண்டது முசாபராபாத் நகரத்தில்தான்.

அப்போது அரிசிங்கின் தலைமைப் படைத் தளபதியாக இருந்தவர் ஸ்காட் (Scott) என்கிற வெள்ளையர். “முரட்டுப் படையின் கலவரத்தை இப்போது உள்ள நம் படையைக் கொண்டு அடக்க முடியாது என்றும், தான் பதவியை விட்டு விலகுவதாகவும்”அரசனுக்கு அவர் அறிவித்தார்.

இது, அரசனுக்கும், காஷ்மீர் படைவீரர்களுக்கும், அதிர்ச்சியாக இருந்தது. பழங்குடிப் படை, 23-10-1947 அன்று முசாபராபாத் நகரைக் கைப்பற்றியது.

அரிசிங்கின் மூத்த இராணுவப்படை அதிகாரி பிரிகேடியர் ராஜேந்திர சிங். அவர் 2 நாள்கள் அங்கே வீரத்துடன் போராடினார். இறுதியில் ‘குல்மார்க்’ படை யினரால் அவர் கொல்லப்பட்டார்.

இன்னொருபுறம் அரிசிங்கின் படையில் எஞ்சியிருந்த முஸ்லீம்களும், பழங்குடிகள் படையுடன் சேர்ந்து கொண்டனர். எல்லா இராணுவ இரகசியங்களும் இவர் களுக்குத் தெரியும்; இவர்களில் பலர் எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்துவிட்டுப் பரிசுகள் பெற்றனர். முரட்டுப்படை ஒவ்வொரு பகுதியாகக் கைப்பற்றியது.

இதன்பிறகு ஜம்மு பகுதியில் இருந்த சீக்கியர்களும், இந்துக்களும் ஒன்றுசேர்ந்து, அப்பகுதியிலிருந்த முஸ்லீம் களைத் தாக்கினர். உயிருக்குப் பயந்து 5 இலட்சம் முஸ்லீம்கள் ஜம்முவை விட்டு ஓடிவிட்டதாகக் கருதப் பட்டது.

ஆனாலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் மன நிலை பாக்கித்தானின் முரட்டுப் படைக்கு எதிராகத்தான் இருந்தது. இவர்கள் பாக்கித்தானின் அடாவடிப் போரைக் கண்டித்தார்கள்.

இதையும் தாண்டி, பாக்கித்தான் முரட்டுப் படை காஷ்மீரின் தலைநகரான சிறீநகரை நோக்கிப் போவ தாகச் செய்தி பரவியது.

இந்த நெருக்கடியான சூழலில், ஷேக் அப்துல்லா தன் கட்சித் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் நம்பிக்கையை ஊட்டி, அவர்களைக் கொண்டே தேசிய இராணுவம் (National Militia) என்ற புதிய அமைப்பை உருவாக்கினார். இப்படையின் தொண்டர்கள் அனை வருக்கும் அரசனின் இராணுவக் கிடங்கிலிருந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. சீக்கிய மற்றும் டோக்ரா இனப் பொது மக்களுக்கும் ஆயுதங்கள் கிடைத்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ‘குல்மார்க்’ படையுடன் போரிட்டனர்.

சிலல் ஷேக் அப்துல்லாவின் அரசியல் எதிரிகளை யும் பழிதீர்த்தனர். நிற்க.

ஜம்மு பகுதியிலிருந்த அரசின் அலுவலர்கள், ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு, ஓடிவிட்டனர்.

இவ்வளவையும் மீறி, பாக்கித்தானின் முரட்டுப் படையினர் ஜீலம் ஆற்றங்கரையிலிருந்த பாரமுல்லா அருகில் இயங்கிய பெரிய மின் உற்பத்தி நிலையத்தை அழித்தனர். சிறீநகர் இருளில் மூழ்கியது.

சிக்கல் அதிகமாவதைக் கண்ட ஷேக் அப்துல்லா, தன் நண்பர்கள் மூலம் இந்தியாவின் உதவியை நாடினார்.

அதேபோல், நிலைமை கைமீறிப் போய்விட்டதை அறிந்த அரிசிங், 24-10-1947இல், “உடனடியாக இந்திய இராணுவ உதவி வேண்டும்” என இந்திய அரசிடம் கோரினார்.

பாக்கித்தானின் முரட்டுப் படைகள் காஷ்மீரில் முன்னேறி முக்கிய இடங்களைப் பிடித்துவிட்டார்கள் என்கிற செய்திகள் இந்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்தன.

25-10-1947 அன்று தில்லியில் நடந்த பாதுகாப்புக் குறித்த உயர்மட்டக் கூட்டத்தில், காஷ்மீருக்குப் படை அனுப்புவது பற்றிப் பேசப்பட்டது.

அரசப் பிரதிநிதி (Viceroy) மௌண்ட்பேட்டன் பிரபு, “மூன்றாவது நாடு ஒன்றுக்கு இந்தியா படை அனுப்புவது சட்டப்படி சரியற்றது” என்று சொல்லித் தடுத்துவிட்டார்.

மௌண்ட்பேட்டன் இன்னொரு கருத்தையும் முன் வைத்தார். அது என்ன?

“தற்போதைக்குத் தற்காலிகமாகக் காஷ்மீரை இந்தியாவுடன் சேரச் சொல்லுங்கள். நிரந்தரமாக எந்த நாட்டுடன் சேர்ப்பது என்பதை, பின்னர், மக்களிடம் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்து கொள்ளலாம்” என்பதே அக்கருத்து.

இதுதான், 2015ஆம் ஆண்டு வரையில் காஷ்மீர் சிக்கலில் அவிழ்க்க முடியாத படுமுடிச்சாக இருக் கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் வைத் துக் கொள்ள வேண்டும். இதைப் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் - அரசியல்.

இப்படிப்பட்ட ஓர் ஒப்பந்தத்தை இந்திய அரசுடன் செய்தாலன்றி, இந்தியாவின் இராணுவ உதவி கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது அரிசிங்கிடம் தெளிவாகக் கூறப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள அரிசிங் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டார்.

(தொடரும்)

Pin It