thamildesam june 14 600தேசத்தின் குரல்:

சூன் 12 & ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடும் நாள் என்பது கடந்த காலப் பழக்கம். கடந்த காலம் என்றால் 1925 முதல் 1975 வரை நிலவி வந்த பழக்கம். அதாவது தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பான ஐம்பதாண்டுக் கால ஒப்பந்தம் செயலில் இருந்த காலத்தில் அநேகமாய் ஒவ்வோராண்டும் இது முறையாக நடைபெற்று வந்தது.

1947 வரை வெள்ளையராட்சியிலும், பிறகு இந்தியராட்சியிலும் இந்த ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

1975உடன் காவிரி ஒப்பந்தம் முடிந்த பிறகு புதிய ஒப்பந்தம் செய்யப்படவில்லை, இதற்குத் தமிழகத்தின் காவிரி உரிமையை மறுத்த கர்நாடக அரசின் அழிச்சாட்டியமே காரணம்.

கடந்த கிட்டத்தட்ட நாற்பதாண்டுக் காலத்தில் ஓராண்டு கூட சூன் 12இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டிருக்குமா என்பது ஐயத்துக்குரியதே. இதனால் காவிரிப் பாசனப் பகுதியில் ஐந்து லட்சம் எக்டேருக்கு மேல் நடைபெற வேண்டிய குறுவை நெல் சாகுபடி பெரும்பாலும் அற்றுப் போய்விட்டது. தாளடி, சம்பா நெல் சாகுபடியும், கரும்பு, பிற வகைப் பயிர்ச் செலவும் குறுகிச் சிறுத்து விட்டன.

காவிரி உரிமைக்காக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழக அரசும் தில்லி அரசிடம் பேசிக்கொண்டே இருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் பெரும் இழுத்தடிப்புகளுக்குப் பிறகாவது தமிழகத் தரப்பு நியாயத்தை ஓரளவு நிறுவியுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக சட்டப்படி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு எல்லாம் வாங்கிவிட்டோம். இறுதித் தீர்ப்பினை அரசிதழில் வெளியிடச் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்றதையே தமிழக முதல்வர் தாம் பெற்ற பெருவெற்றியாகக் கொண்டாடினார்.

இறுதித் தீர்ப்பின்படி தண்ணீரைப் பகிர்ந்து கொடுப்பதற்கான காவிரி மேலாண்மை வாரியமும், அதன் கீழ் செயல்படுவதற்கான காவிரி ஒழுங்குமுறை ஆணையமும் அமைக்கப்படாத வரை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். ஆனால் சட்டப்படியான இந்த வாரியத்தையும் ஆணையத்தையும் அமைக்கக் கூடாது என்று கர்நாடகம் மல்லுக்கட்டுகிறது. ‘யாமிருக்க பயமேன்?’

என்று தில்லியும் அதற்கு ஆபத்பாந்தவனாக அடைக்கலம் கொடுக்கிறது. இதில் மன்மோகன் வழியிலேயே நரேந்திர மோதியும் செயல்படுகிறார். தமிழகத்தை வஞ்சிப்பதில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும்பாசக தலைமையிலான அரசுக்கும் நூலிழை வேறுபாடுமில்லை.

இந்த ஆண்டும் சூன் 12 காய்ந்து கிடக்கும் காவிரிப் படுகை ஈரம் காணாத நாளாகவே போய்விட்டது. அந்த நாளில் மேட்டூர் அணையைத் திறக்க இயலாது என்று தமிழக முதல்வர் அறிவித்து விட்டார். அணையில் வெறும் 44 அடி உயரத்துக்குத்தான் தண்ணீர் நிற்கிறது. எப்படித் திறக்க முடியும்? என்று நம்மவர்களே கேட்கிறார்கள். உண்மைதான்.

ஆனால் தண்ணீர் இவ்வளவு குறைவாக இருப்பதற்கு யார் காரணம்? சூன் 11ஆம் நாள் கர்நாடக அணைகளில் எவ்வளவு தண்ணீர் தேங்கியிருந்தது என்பது தமிழக முதல்வருக்குத் தெரியுமா? இந்தியத் தலைமையமைச்சருக்குத் தெரியுமா?

cauvey-dam 600இதோ நாம் திரட்டிய தகவல்கள்:

2014 சூன் 11ஆம் நாள் கிருஷ்ணராஜசாகர் எனப்படும் கண்ணம்பாடி அணையில் நீர் மட்டம்: 91 அடி. மேட்டூரில் வெறும் 44 அடி. கண்ணம்பாடியில் திறந்து விட்டால்தான் மேட்டூர் மட்டம் உயரும். கண்ணம்பாடிக்கு வந்து சேரும் நீரின் அளவு: 18,967 நொடிக் கன அடி. அங்கிருந்து வெளியேறும் நீரின் அளவு 324 நொடிக் கன அடி.

அதாவது கண்ணம்பாடிக்கு வருவது ஒரு நொடிக்குச் சுமார் 19,000 கன அடி, அங்கிருந்து வெளியே விடப்படுவது ஒரு நொடிக்கு வெறும் 324 கன அடி மட்டுமே. மேட்டூர் போதிய நீர் இல்லாமல் காய்வதற்குக் காரணம் புரிகிறது அல்லவா?

இது மட்டுமல்ல. 1975இல் ஒப்பந்தம் முடிந்த பிறகு கர்நாடகம் தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் சட்டப் புறம்பாகக் கட்டிய அணைகளிலும் நீர் அலையடித்துக் கிடக்கிறது. காட்டாக, ஏமாவதி அணையின் உயரம் 2922 அடி; சூன் 11ஆம் நாள் அந்த அணையில் நீர் மட்டம் 2882 அடி. நீர் வரத்து: 14,152 நொடிக் கன அடி; நீர்ப் போக்கு: 150 நொடிக் கன அடி.

குடகுப் பகுதியில் நல்ல மழை பெய்து ஆரங்கி அணையும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பெருமழை பொழிந்து கபினி அணையும் நிறைந்து வருகின்றன, கர்நாடகத்தில் ஏரிகள், குளங்களில் கொண்டுபோய்த் தேக்கப்படும் காவிரித் தண்ணீருக்கும் பஞ்சமில்லை.

மேட்டூரிலிருந்து இந்த ஆண்டும் சூன் 12ஆம் நாள் தண்ணீர் திறந்து விட முடியாமைக்குக் காரணம் கர்நாடகத்தின் வஞ்சகமும், அதற்குத் துணை போகும் தில்லியின் சூழ்ச்சியுமே தவிர வேறல்ல. நம்மூர்க் ‘காவிரி கொண்டான்’களும் ‘காவிரி தந்த கலைச் செல்வி’களும் தமிழர்களுக்கு இந்த உண்மைகளைச் சொல்வார்களா?

தமிழர்களே, தமிழர்களே, நாம் எல்லாருமே காவிரி மக்கள், காவேரி மைந்தர்கள்! சிறைப்பட்ட காவிரித் தாயை மீட்கக் களமாட எழுவோம்!

Pin It