நீ எங்களை
அடிமைப்படுத்தினாய்
ஆனால்
கொடுமைப்படுத்தவில்லை

எங்களையும்
எங்கள் மண்ணையும்
செல்வத்தையும் சுரண்டினாய்
துயரப்படுத்தவில்லை

உங்கள் வசதிக்காக
அமைத்துக்கொண்ட வாழக்கையில்
எங்கள் நாடு
வசதியும் வடிவமும் பெற்றது
வேதனைப்படுத்தவில்லை

நீங்கள் ஏற்படுத்திய அடையாளங்கள்
இன்னும் எங்களோடு
பெருமிதத்தோடு

எங்கள் மண்ணில்
எங்கள் வியர்வையில்
விளைந்ததைக் கேட்டபோது
யார் நீ
என்ற கேள்வி பிறந்தது

பூலித்தேவன் போன்ற
தூயவீரர்களால்
பொறுத்துக்கொள்ள முடியவில்லை

வ.உ.சி போன்ற
கவரிமான்களால்
காலம்கழிக்க முடியவில்லை

பகத்சிங்போன்ற
இளன்சூரியன்களை
இழந்தோம்

எங்கள் சுயம்
சுதந்திரம் கேள்விக்குறியானது

தன்மானம்
தலைமைதாங்கியது

சுகத்தைக்காட்டிலும்
சுதந்திரம்தான் அடையாளம்

உணவைக்காட்டிலும்
உணர்வுதான் உயிர்

அடிமையாய்
முகவரி
ஆயிரமிருந்துமென்ன?

உதிரத்தில் சூடும்
உள்ளத்தில் கொதிப்பும் கூடியது

ஒத்த உணர்வுடையோர்
ஒருங்கிணைந்தனர்
உரத்தகுரல் எழுப்பினர்
உடமை இழந்தனர்
உயிர்துறந்தனர்

இந்தியா என்பது
முகவரியானது

எங்களைப்போல்தான்
முகவரி தேடி ஈழத்தில் போர்

உங்கள் இடத்தில்
ராஜபக்சே

நாங்கள் இப்போது
ராஜபக்சே பக்கம்

நீங்கள் இப்போது
ஈழத்துப்பக்கம்

கொடுத்தவர்
கேட்பவர் பக்கம்
கேட்டவர்கள்
கொடுப்பவர் பக்கம்

கொடுக்காதவரின் அட்டூழியங்களை
அமல்படுத்த
குரல்கொடுக்கிறீர்கள்

கொடுக்காத கொடியவர்க்கு
கொன்றொழித்த கயவனுக்கு
நாங்கள்
கொடிபிடிக்கின்றோம்

கம்பளம் விரித்து
காலில் விழுகிறோம்

இதன் பெயர்
அரசியல் முரண்தொடையா?
ஈன முடிவெடுப்பா?
வஞ்சகக் கூட்டணியா?

எங்கள் நிலையை
எப்படிச் சொல்லுவது

எங்களை
எப்படியும்
சொல்லிவிட்டுப் போங்கள்

கொடுங்கோலனை
குற்றவாளியென
நிலைநிறுத்த நிற்கும்
இங்கிலாந்தே
உனக்கு வணக்கம்.

Pin It