"தேவதாசி'' என்பவர்கள் கோயில்களில் நடனமாடுவதற்காகச் சிறு வயதிலேயே நேர்ந்துவிடப்படும் பெண்களாவர். இவர்கள் இசைவேளாளர் என்று அழைக்கப்படும் சாதியைச் சேர்ந்தவர்கள். "தேவதாசி' முறை நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினாலும் உண்மையில் இந்தப் பெண்களை கோயில்களை நிர்வகிக்கும் மேல் சாதியினரும், செல்வந்தர் மற்றும் அரசர்களும் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளவே இருந்து வந்தது.

இந்தப் பெண்கள் தேவரடியார் என்று அழைக்கப்பட்டனர். அதாவது தேவர் (கடவுள்) + அடியாள். பின்னர் "தேவடியாள்'' என்ற கொச்சைச் சொல்லால் அழைக்கப்பட்டனர்.

தேவதாசி முறையில் ஒரு பெண்ணுக்குப் பொட்டுக் கட்டி விடுதல் என்பது பல்வேறு சடங்குகளைக் கொண்டு நிகழ்ந்தது.இவர்களுக்கு நடத்தப்படும் சடங்குகள் பெரும்பாலும் பிராமணர்களின் திருமணச் சடங்குகளை ஒத்திருந்தன. இளம்  தேவதாசிப் பெண் பருவம் அடையும் முன்பே, கடவுளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். அப்பெண்ணுக்கும் கடவுளுக்கும் திருமணம் முடித்து வைக்கும் சடங்குகளைக் கோயில் குருக்கள் (பிராமணர்) நடத்தி வைப்பார். அப்போது கடவுளின் சார்பில் அவரே தேவதாசி கழுத்தில் தாலி கட்டுவார். இதுவே பொட்டுக்கட்டுதல் என்று அழைக்கப்பட்டது.

அடுத்ததாக அப்பெண் பருவம் அடைந்த உடன் அப்பெண்ணுக்குச் சடங்கு செய்தல் என்ற நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படும். உள்ளூர் நிலப்பிரபுக்களும்,கோயில் அறங்காவலர்களும் இந்த நிழ்ச்சிக்கான அனைத்துப் பொருளுதவியும் வழங்குவர். இந்த முக்கிய சடங்கின் மூலம் அந்தப்பெண் கடவுளுக்கு அடிமையானவள் ஆகிறாள். அதாவது "தேவரடியாள்'' ஆகிவிட்டார். அப்பெண் சுதந்திரமானவளாகிவிட்டாள் என்று பொருள். அதாவதுதிருமணம் செய்துகொள்ளாமலேயே தாம் விரும்பும் பாலியல் துணைவர் ஒருவரைத் தேர்வு செய்யும் உரிமை அப்பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. அதாவது இத்தகைய பாலியல் துணைவர்கள் பெரும்பாலும் பொருள் வசதி படைத்த நிலப்பிரபுக்களும், ஜமீன்தார்களும் கோயில் அறங்காவலர்களும் ஆவர். இவர்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவும் உயர்சாதி இந்துக்களாகவும் இருப்பர். இப்போது புரியும் இவர்களெல்லாம் ஏன் கோயிலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர் என்று. தேவதாசிகள் கடவுளுக்கு மனைவி, இவர்களுக்கு ஆசை நாயகிகள்.

இத்தகைய தேவதாசிப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வேறு எந்தத்தொழிலும் ஈடுபடக்கூடாது. பெண் குழந்தைகளை மீண்டும் தேவதாசியாக்குவதன் மூலமே அப்பெண்கோயில் வருமானத்தைப் பெற முடியும். தேவதாசி முறை அழிந்துவிடாமல் பாதுகாக்க இப்படி ஒரு சட்டம். தேவதாசிகளுக்குப் பிறக்கும் ஆண்கள் மேளக்காரர்களாகவும், நாயனக்காரர்களாகவும், நட்டுவனர்களாகவும் செயல்படுவர்.

தமிழ்நாட்டில் தஞ்சை, திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை பகுதிகளில் தேவதாசி முறை அதிகமாகப் பின்பற்றப்பட்டு வந்தது.இதில் தஞ்சை மாவட்டம் முன்னணியில் நின்றது.

முதலாம் இராசராசன் (கி.பி.985 – 1014) பல ஊர்களிலிருந்து 400 நடனப் பெண்களை அழைத்துவந்து தஞ்சை பெரிய கோயிலில் நியமித்தான். தஞ்சை பெரிய கோயிலைச்சுற்றி தனி வீதிகளே இவர்களுக்காக இருந்தன என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

தமிழர்களின் பாரம்பரிய இசையையும், நடனத்தையும் பேணிகாத்து வந்த இசைவேளாளர்கள், ஆண்களின் பாலியல் இச்சைகளுக்காகவே உருவாக்கப்பட்ட தளைகளிலிருந்து விடுபட முடியாமல் திணறிவந்தனர். இந்த அடிமை முறையிலிருந்து எவரும் விடுபடாமல் தடுத்திட தஞ்சை மாவட்ட சனாதனிகளும் நிலப்பிரபுக்களும், மடாதிபதிகளும் தேவதாசி முறையைப் பேணிப் பாதுகாத்து வந்தனர்.

அத்தகைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் திருவாரூரில் வறுமையில் வாழ்ந்த வந்த இசைவேளாளர் குடும்பம் ஒன்றில் கிருஷ்ணசாமி சின்னம்மாள் இணையருக்கு 1883 ஆம் ஆண்டு பிறந்தார் இராமாமிர்தம்.

வறுமையின் காரணமாக, கிருஷ்ணசாமி மனைவியையும் நான்கு வயது மகள் இராமாமிர்தத்தையும் தனியே விட்டுப் பிரிந்தார். அடுத்த ஆண்டு தாயார் சின்னம்மாள் குழந்தை இராமாமிர்தம் தூங்கும்போது ரூ.10/– க்கும் ஒரு பழைய புடவைக்கும் ஒரு தேவதாசியிடம் விற்று கணவனைத் தேடிச் சென்னைக்குப் புறப்பட்டார்.

இராமாமிர்தம் தாசியிடம் வளர்ந்தார். நன்கு படித்து தமிழ் தெலுங்கு மற்றும் சமசுகிருதம் மொழிகளில் தேர்ச்சி பெற்றார். நடனத்திலும் சிறந்து விளங்கினார்.

7ஆவது வயதில் தாசி குல வழக்கப்படி இராமாமிர்தத்துக்குத் தாசித் தொழிலுக்கு முன்னோட்டமாக "சலங்கை பூசை'' செய்யப்பட்டது. பருவமடைந்தப்பின் பொட்டுக்கட்டி தேவதாசி யாக்கப்படுவாள். அவள் யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. 13 ஆவது வயதில் பருவமடைந்தார். 17 ஆவது வயதில் இராமாமிர்தத்துக்குக் கோயிலில் பொட்டுகட்ட வளர்ப்புத்தாய் ஆச்சிக்கண்ணு அம்மாள் முடிவு செய்து, அதற்கு அனுமதிக் கேட்டுக் கோயில் பஞ்சாயத்திடம் மனு செய்தார்.

இராமாமிர்தம் தாசி வளர்த்த பெண்ணாக இருந்ததாலும் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால் கோயிலில் பொட்டுக்கட்ட அனுமதிக்க கூடாது என ஏற்கனவே கோயிலில் உள்ள தாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உள்ளூர் தாசிகளின் உரிமைப் பிரச்சனை எழுப்பியதால் ஆச்சிக்கண்ணு அம்மாளின் கனவு தகர்ந்த போயிற்று. இராமாமிர்தத்துக்கோ அளவு கடந்த மகிழ்ச்சி.

ஆனால் ஆச்சிக்கண்ணு அம்மாள் இராமாமிர்தத்துக்கு  65 வயது தனவந்தர் ஒருவரைத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார். இராமாமிர்தம் மறுக்கவே, அன்றிலிருந்து அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் சலங்கை பூஜை செய்துகொண்ட இராமாமிர்தம் துணிந்து தடையை மீறித் தனக்கு இசை கற்றுத் தந்த ஆசிரியர் சுயம்புப்பிள்ளையை திருமணம் செய்து வாழ முடிவு செய்தார்.

தேவதாசி முறை கட்டுப்பாட்டை உடைத்து வெளியே வந்த முதல் பெண் என்பதோடல்லாமல், இவரின் திருமணம் சீர்திருத்தத் திருமணமாக எந்தச் சடங்குகளும் இல்லாமல். ஒரு கோயிலில் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதில்லை என்று உறுதிமொழி எடுத்து வாழத் தொடங்கினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.

கடவுளின் பெயரால் ஒரு சமூகம் மட்டும் இழிவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்ற நியதியைத் தகர்ப்பதே தனது வாழ்நாள் இலட்சியம் என முடிவெடுத்து வாழத் தொடங்கினார் இராமாமிர்தம். அவரை அவரின் உறவினர்கள் மட்டுமின்றி தேவதாசிகளில் பலரும் எதிர்த்தனர். இருப்பினும் மனம் தளராது இக்கொடுமைக்கு எதிராகப் போராடினார்.

1919 ஆம் ஆண்டு காந்தி காங்கிரசுக் கட்சிக்கு தலைமை ஏற்றபோது, பெண்கள் பலர் அக்கட்சியில் சேர்ந்து பணியாற்றினர். இராமாமிர்தம் தன்னைக் காங்கிரசுக் கட்சியில் இணைத்துக் கொண்டார். அதற்கு முக்கிய காரணம் காந்தி தேவதாசி முறைக்கு எதிராகப் பேசியதோடு தேவதாசிகளை "வழுக்கி விழுந்த சகோதரிகள்' என்று அன்புடன் அழைத்தார்.

அந்தக் காலத்தில் காங்கிரசுக் கட்சியில் பெண் பேச்சாளர்கள் கிடையாது. இராமாமிர்தம் காங்கிரசுக் கட்சியின் முதல் பெண் பேச்சாளராகத் திகழ்ந்தார். அதனால் பொது மக்களிடமும், காங்கிரசுப் பிரமுகர்களிடமும் மிகுந்த மரியாதையும் பெற்று விளங்கினார்.

காந்தி தேவதாசி முறை ஒழிப்பை ஆதரித்து இராமாமிர்தம் அம்மையாருக்குக் கடிதம் எழுதினார். அம்மையார் நீண்ட காலம் அக்கடிதத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தார்.

1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சி மாநாட்டில் "வகுப்புரிமை' தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததால், பெரியார் பலருடன் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார். இராமமாமிர்தம் அம்மையாரும் பெரியாருடன் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சுயமரியாதை திருமணம், விதவை மறுமணம், பால்ய விவாகம் எதிர்ப்பு, சாதி மறுப்புத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, பெண்ணுரிமை என சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யப் பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் பயன்படுத்திக்கொண்டார்.

1925 ஆம் ஆண்டு மாயவரத்தில் தேவதாசி முறைக்கு எதிராக மாநாடு ஒன்றினை அம்மையார் அவர்கள் நடத்தினார். அம்மாநாட்டில் தந்தை பெரியார் திரு.வி.க., எஸ். இராமநாதன் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தேவதாசி முறை ஒழிப்புக்குச் சி.பி. இராமசாமி அய்யர், சத்திய மூர்த்தி போன்ற பிரமுகர்கள் எதிராக செயல்பட்டனர். தந்தை பெரியார் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கத்தைச் சாடினார். கோயில்களில் விபச்சாரத்துக்குத் துணை போகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் சேலம் மாநாட்டில் "தென் இந்திய நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் இருந்த நீதிக்கட்சிக்குத் "திராவிடர் கழகம்'' என்று பெயர் சூட்டப்பட்டது. அம்மையார் திராவிடக் கழகத்தில் தந்தை பெரியாரோடு இணைந்து செயல்பட்டார்.

1949 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க.வைத் தோற்றுவித்தபோது அம்மையார் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.

பெரியாரோடு திராவிடர் கழகத்தில் பணியாற்றும்போது, பெரியார் அவர்கள் "தனக்குப்பிறகு இயக்கத்தை கட்டிக் காத்து நடத்த மணியம்மையாரை விட்டால் வேறு யாருமில்லை'' என்று கூறியபோது "ஏன்? எனக்குக் கூடவா அந்த தகுதி இல்லை'' என்று அவரிடமே நேரிடையாக கேட்டவர் அம்மையார் அவர்கள்.

இராமாமிர்தம் அம்மையார் 1962 ஆம் ஆண்டு சூன் திங்கள் 27 ஆம் நாள் தனது 79 ஆவது வயதில் மாயவரத்தில் முடிவெய்தினார். தி.க. சார்பில் சித்தகாடு இராமையாவும், தி.மு.க. சார்பில் நாவலர் நெடுஞ்செழியனும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இளமை முதல் இறக்கும் வரை பொதுவாழ்விற்காக தன்னை அர்பணித்துக் கொண்ட அந்த அம்மையாருக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் இரண்டு.

1. 1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற தி.மு.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டில் அம்மையார் அவர்களின் பணிகளைப் பாராட்டி அறிஞர் அண்ணா அவர்கள் விருது வழங்கினார்.

2. 1989 ஆம் ஆண்டு முதலமைச்சர்  கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்குத் திருமண உதவித் தொகை வழங்க முடிவு செய்து அந்தத் திட்டத்திற்கு "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணநிதியுதவித் திட்டம்'' என்று பெயர் சூட்டினார். இன்று இத்திட்டத்தில் ரூ.25,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

பொதுவாழ்வில் பெண்கள் ஈடுபடத் தயங்கிய காலகட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு சூறாவளிப்பிரச்சாரம் செய்து சாதிமதக் கொடுமைகளைச் சாடியவர். சிறை பல கண்டவர் தேவதாசி முறை ஒழிய பாடுபட்டவர். திராவிட இயக்கக் கொள்கைகளுக்காகவே வாழ்ந்து மடிந்தவர்.

அம்மையர் வாழ்ந்த வீட்டைத் தமிழக அரசு ஏற்று நினைவு இல்லமாக அமைக்கவில்லையே என்ற வருத்தம் பலருக்கும் உண்டு.  வாழ்க அம்மையாரின் புகழ்!

****

"எங்களால் மறக்க முடியாதவர்!'

"தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்காக மகத்தான வேலை செய்திருக்கும் திரு. நாயக்கர் அவர்களை, எங்கள் சமூகத்தார் என்றும் மறக்கவே முடியாது. வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை,அளவிடற்பாலது அன்று. அவர் ஒரு காலத்தில் தேசியப்போராட்டத்தில் அமிதவாதக் கொள்கையுடையவராக இருந்தார். சமூகச் சீர்த்திருத்தமின்றி அரசியல் சுதந்திரம் கொடுக்கப்படுமாயின், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படாது. சீர்திருத்தக்காரர்கள் பின்பற்றத் தகுந்த தலைவர் நாயக்கர் ஒருவரேயாவார்.'' 

– ராவ்சாகிப் என். சிவராஜ், பி.ஏ., பி.எல்,. எம்.எல்.சி.

Pin It