"புதிய குரல்'' அமைப்பின் சார்பில் குற்றாலத்தில் மூன்று நாள் பயிலரங்கம் "BWDA''அரங்கில் நடைபெற்றது. 2012 அக்டோபர் 12 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கிய பயிலரங்கம். அக்டோபர் 14 ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை நடைபெற்றது.

பயிலரங்கில் பகுத்தறிவாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பயிலரங்கின் மூன்று நாட்களும் பல்வேறு தலைப்புகளில் உரைவீச்சு நடைபெற்றது. நிகழ்வு முழுவதும், ஆண் ஆதிக்கத்திற்கு எதிரான பெண்ணுரிமைக்குரல் பலமாக ஒலித்தது. குறிப்பாக,  

1. இல்லற வாழ்க்கையில் கணவன்களால் கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் மண முறிவு பெறத் தயங்கக் கூடாது?

2. கல்வி கற்று நல்ல பணியில் சேர்ந்து போதுமான அளவு பொருள் ஈட்டும் பெண்கள். திருமணம் செய்தால் ஆண்களுக்கு அடிமையாக வாழ வேண்டிய நிலை வரும் என்று நினைப்பவர்கள் திருமணத்தைத் தவிர்க்கலாம்.

3. பெண்களுக்கான உரிமையை ஒருபோதும் ஒரு ஆண் தர விரும்பமாட்டான். எனவே, பெண்கள் தங்கள் உரிமையை நிலை நாட்டிடச் சிறிதளவும் தயங்கக்கூடாது.

4. பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்கும்வரை பெண்கள் ஆண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.

ஆகிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.

நிகழ்வில் பெண்ணுரிமை  போராளிகள் ஓவியா, பேரா. சரசுவதி, அற்புதம் அம்மாள், ரமணிதேவி, நர்மதா தேவி, விஜி, ஜெனிபர், மற்றும் உமா ஆகியோர் உரையாற்றினர்.

ஆண்கள் சார்பில் தோழர் தியாகு அவர்களும், மருத்துவர் ஜெயராமன் அவர்களும் உரையாற்றினர்.

"புதிய குரல்' அமைப்பினர் தொடக்கத்தில் 6 திங்களுக்கு ஒரு முறை சந்திப்பது எனவும், அடுத்த சந்திப்பு 2013 மே திங்கள் எனவும் முடிவெடுத்தனர்.

மீண்டும் எப்போது சந்திப்போம் என்ற ஆவலுடன் ஒருவருக்கு ஒருவர் அன்பை வெளிப்படுத்தி விடைபெற்றனர்.

வாழ்க புதிய குரல்! தொடரட்டும் அதன் பணி!

Pin It