வசவாலே பெண்ணடிமைத் தனமே கொண்டு
 வாழ்வாலே பல்லாண்டாய்ப் பழியே மொண்டு
இசைவேளா ளர்குடியில் பிறந்த போதும்
 எதிர்நீச்சல் ஒன்றேதன் வாழ்வென் றாக்கி
அசையாத மனஉறுதி யோடும் யார்க்கும்
 அஞ்சாத தன்மானக் கொள்கை யோடும்
திசைதோறும் தன்புகழை நிறுவச் செய்த
 சிறப்பாளர் மூவலூர் இராமா மிர்தம்

பேராயக் கட்சிதனில் இருந்தார்; பின்னர்ப்
 பெரியாரின் பெருந்தலைமை ஏற்றுக் கொண்டார்
போராட்ட மறத்தியென நின்றார்; தன்னின்
 போராட்டம் யாவலுமே வெற்றி கண்டார்
சீரார்ந்த தமிழும்வட மொழியும் கற்றார்
 திருமணங்கள் பலவினுக்கும் தலைமை ஏற்றார்
வீறார்ந்ததாம் சுயமரியாதைக் கொள்கை
 வேர்பாய்ச்சிப் பெண்ணினத்தை விழிக்க வைத்தார்

"தாசிகளின் மோசவலை' எனும்பேர் கொண்ட
 தலைசிறந்த தன் நாவல் தன்னில் அந்நாள்
மோசடிக் கருத்துகளாம் கடவுள், மோட்சம்,
 மூடச் சோதிடம், குறிசொல்லல், மந்திரம்
காசு – காலம் இரண்டும் பறித்துத் தின்னும்
 கண்மூடி வழக்கங்கள் தம்மை யெல்லாம்
கூசிநடுங்கச் செய்யத் தோலு ரித்தார்
 குருட்டுத் தனங்கள் தம்மின் வால றுத்தார்

ஈவேரா கண்டபெரும் இயக்கந் தன்னில்
 இணைந்திட்டே சாதனைகள் புரிந்தோர் பல்லோர்
பாவேந்தர், குருசாமி, அழகிரி என்ற
 பட்டியலில் மகளிர்க்காய் பாடுபட்ட
மூவாலூர் இராமாமி ருதம் போன்ற
 முனைமழுங்கா மறந்தியரும் பல்லோர் ஆவர்
சாவேது மக்களுக்காய் வாழ்ந்தோ ருக்கு?
 தலைவணக்கம் செய்வோம்நாம் இவர்க ளுக்கு!

- கவிஞர். தமிழேந்தி

Pin It