கேரளக் கடலில் மீனவர்கள் இருவரை இத்தாலியக் கப்பலில் வந்தவர்கள் சுட்டுக் கொன்றுவிட்டனர். அதனைக் கண்டித்து கேரளத் தலைவர்கள் கட்சிப் பாகுபாடின்றிப் போராடினர். கேரள அரசும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது.

விளைவு இத்தாலியக் கப்பல் பல நாட்கள் சிறைவைப்பட்டது. காரணமானவர்கள் கைது செய்து சிறை வைக்கப்பட்டனர். வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன் காரணமாக இத்தாலிக் கப்பல் கோடிக்கணக்கான ரூபாய்களை இழப்பீடாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கினர்.

ஆனால் சுண்டைக்காய் நாடான இலங்கை நாட்டின் கடற்படையினர் நமது தமிழக மீனவர்களை அவ்வப்போது காக்கை குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொல்கின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதுவரை ஒரு ரூபாயாவது இழப்பீடாக நாம் பெற்றுள்ளோமா? இல்லையே ஏன்? தமிழகத்தில் கட்சிகள் இல்லையா? அவ்வாறு கட்சிகளில் தலைவர்கள் இல்லையா? கட்சிகளும் உண்டு. தலைவர்களும் உண்டு. ஆனால், ஒன்றிணைந்து போராட மனம் உள்ள தலைவர்கள் இங்கு இல்லை. காரணம் தமிழர்கள் தமிழர்களாகத் தமிழகத்தில் வாழவில்லை. தமிழர்கள் கட்சித் தமிழனாய், சாதித் தமிழனாய் வாழ்கிறார்கள். இவர்கள் கட்சிக்காக உயிரை தியாகம் செய்வர்.

சாதியைக் காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்வர். ஒருபோதும் தமிழனின் உயிரைக் காப்பாற்ற முன்வர மாட்டார்கள். எனவேதான், மீனவத் தமிழன் தமிழகத்தில் ஆதரவற்ற தமிழனாக வாழ்கிறான், தினந்தோறும் செத்து மடிகிறான்.

நமது மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். "இந்திய மீனவர்கள்'' என்று மத்திய அரசு ஒருபோதும் இவர்களை நினைப்பதில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

Pin It