பெண்களின் எழுச்சிக்கும் விடுதலைக்கும் உழைப்பவர்களில் நான் தலைசிறந்தவன். பெண்களின் நிலையை உயர்த்துவதற்கு என்னாலான அனைத்தையும் நான் செய்திருக்கிறேன். அதை குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
ஒரு மராட்டியனின் கையில் காந்தி தனது முடிவை சந்தித்து இருக்கக் கூடாது என்ற உங்களின் கருத்தோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன். அதையும் விட மேலாக இத்தகைய கேவலமான செயலை யார் செய்திருந்தாலும் அது தவறுதான் என்றும் சொல்கிறேன். நான் காந்திக்கு எந்த விதத்திலும் கடமைப்பட்டவன் அல்ல. எனது அறிவு, உளத்திண்மை, மற்றும் சமூக வளர்ச்சியில் அவரது பங்கு எதுவும் இல்லை. எனது இருப்பிற்காக நான் கடமைப்பட்டிருக்கிற ஒரே மனிதர் கவுதம புத்தர் மட்டுமே. இருப்பினும் காந்தி கொல்லப்பட்டதை அறிந்த போது நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
அவர் என் மீது கொண்டிருந்த ஆழமான வெறுப்பையும் பொருட்படுத்தாமல் சனிக்கிழமை காலை பிர்லா இல்லத்திற்குச் சென்றேன். அவரது உடலை எனக்கு காட்டினார்கள். என்னால் காயங்களை காண முடிந்தது. அவை சரியாக அவரது இதயத்தின் மீது இருந்தன. அவரது உடலைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன். இறுதி ஊர்வலத்தில் சிறிது தூரம் உடன் சென்றேன். என்னால் தொடர்ந்து நடக்க இயலாத காரணத்தினால் வீடு திரும்பி விட்டு, பின்னர் நேரடியாக யமுனை ஆற்றங்கரையில் உள்ள ராஜ்காட்டிற்கு சென்றேன். ஆனால் கூடியிருந்த கூட்டத்தை தாண்டி, என்னால் தகனம் நடந்த இடத்திற்கு அருகில் செல்ல முடியவில்லை.
எனது சொந்தக் கருத்து என்னவெனில், சிறந்த மனிதர்கள் தங்கள் நாட்டிற்கு சிறந்த தொண்டு அளிப்பவர்கள் என்ற போது, சில நேரங்களில் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாகவும் திகழ்கின்றனர். இந்த சூழலில் எனக்கு ரோமானிய வரலாற்றில் நடைபெற்ற ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. சீசர் கொல்லப்பட்ட செய்தி சிசேரோவிற்கு சொல்லப்பட்ட போது, அச்செய்தியை கொண்டு வந்த தூதரிடம் சிசேரோ, “ரோமானியர்களிடம் சொல்லுங்கள், உங்கள் விடுதலைக்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறினார்.
காந்தியின் கொலைக்காக ஒருவர் வருத்தப்படும் அதே நேரத்தில், சீசர் கொல்லப்பட்ட போது சிசேரோ வெளிப்படுத்திய உணர்வுகள் தங்கள் மனதிலும் எதிரொலிப்பதைத் தவிர்க்க இயலாது. காந்தி இந்த நாட்டிற்கு ஒரு நல்ல ஆபத்தாக மாறிவிட்டிருந்தார். அனைத்துவிதமான சுதந்திர சிந்தனைகளையும் அவர் நெரித்து விட்டார்.
திரு.காந்தி அவர்களைப் புகழ்வதைத் தவிர வேறு எவ்வகையிலும் சமூகத்தை வழிநடத்தக்கூடிய சமூக, ஒழுக்க நெறிகளை ஏற்றுக்கொள்ளாது, சமூகத்தின் கேடுகெட்ட மற்றும் தன்னலம் கொண்டவர்களின் கலவை யாக இருக்கும் காங்கிரசை அவர் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருந்தார். அத்தகைய ஒரு மனிதருக்கு ஒரு நாட்டை வழிநடத்தும் தகுதி இல்லை. ‘தீமையிலும் சில நேரம் நன்மை விளையக் கூடும்’ என்று பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போல, திரு. காந்தி அவர்களின் மரணத்திலும் நன்மை விளையக் கூடும் என நான் நினைக்கிறேன். ஒரு கனவு மனிதரிடம் கொண்டிருந்த தளையிலிருந்து இது மக்களை விடுவிக்கும்; தங்களைப் பற்றி சிந்திக்க வைக்கும். தங்களின் தகுதிக்கேற்ற நிலையில் நிற்கும் நிலைக்கு அது அவர்களைத் தள்ளும்.
பிப்ரவரி 8, 1948
அலிப்பூர் சாலை
குறிப்பு : காந்தியாரின் மறைவையொட்டி தமது கருத்தை டாக்டர் அம்பேத்கர் பதிவு செய்துள்ள குறிப்பு