ஏப்ரல் மாதம் வந்துவிட்டால் வங்கிகளுக்கு ஓடி படிவங்களைப் பூர்த்தி செய்துவிட்டு நமக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் வங்கி கணக்குகளை அரசாங்கத்தின் வருமான வரி PAN எண்ணுடன் இணைத்திருப்பதால் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் காட்டி நல்லதொரு இந்தியக் குடிமகனாக இருப்பதை ஒவ்வொரு வருடமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த வருமான வரிகள் எல்லாம் நம்மைப் போல மாத வருமானம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கானதாகவே இன்று இருக்கிறது. அடிக்கடி பத்திரிகைகளில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான அமெரிக்க டாலரில் லாபம் காணும் கார்ப்பரேட் முதலைகளும் வைத்திருக்கும் வரிபாக்கி பட்டியல் வரும், போகும், வருவதற்கும் போவதற்கும் நடுவில் என்ன நடக்கிறது? சரி, விட்டுத்தள்ளுங்கள். இப்போதைக்கு நம் நாட்டில் நாம் கட்டும் வரி நம் மூதாதையர்கள் கட்டிக் கொண்டிருந்த வரிகளுடன் ஒப்பிடும் போது.. எவ்வளவோ பரவாயில்லை என்று பெருமூச்சு விட்டு ஓரளவு நம்மை நாமே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளலாம்.

ஜப்பானில் 1590களில் தங்கள் விளைபொருள்கள் அனைத்தையும் பண்ணையாருக்கே உழைப்பவர்கள் கொடுத்துவிட வேண்டும் என்பது சட்டம். பண்ணையாரே பார்த்து, “பொழைச்சுப் போகட்டும்” என்று ஏதாவது தன் பண்ணைத் தொழிலாளிக்குக் கொடுத்தால் அதுவே அவனுக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதப்பட்டது.

சியாம் நாட்டில், அதாவது இன்றைய தாய்லாந்தில் 1899 வரை உழைக்கும் விவசாயிகள் ஓர் ஆண்டுக்குக் குறைந்தது 3 மாதமாவது தங்கள் அரசனுக்கு மட்டும் உழைக்க வேண்டும். இதில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி அதிகமானதால் இந்த முறையை மாற்றி விட்டுக் கடுமையான வருமான வரியை வசூலித்தார்களாம்.

யுஸ்பிக்கிஸ்தானில் 16 ஆம் நூற்றாண்டுவரை திருமணம் செய்து கொள்வதற்கே கடுமையான வரி விதித்தார்களாம். இது யாரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விதிக்கப்பட்ட வரி அல்ல. மனிதர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே முடியாது என்பதால் (விதிவிலக்குகளை விட்டுத்தள்ளுங்கள்!) இப்படி ஒரு வரிவிதித்து தங்கள் கஜானாவை நிரப்பிக்கொண்டதாம் அரசாங்கம். பிறகென்ன? 1543 இல் இச்சட்டத்தைத் தடை செய்துவிட்டார்கள், காரணம் அது இசுலாமிய விதிகளுக்கு முரண்பட்டது எனக் கருதியதால்.

1365 முதல் 1825 வரை ஓட்டமன் பேரரசில் 12 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்டவர்களையே வரியாக வசூலித்தார்கள் அரசு அதிகாரிகள். நல்லக் கட்டுமஸ்தான் ஆண்களை ஊர் ஊராக வந்து பிடித்துக் கொண்டு போய் சுல்தானின் சொத்தாக்கினார்கள். பெரும்பாலும் சுல்தானில் படைப்பிரிவில் சேர்த்தார்கள்.

இந்த எல்லா வரிகளையும் விட கொடுமையான வரிகள் விதிக்கப்பட்ட ராஜ்யம் கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட திருவாங்கூர் சமஸ்தானம் தான். தலைவரி என்று 16 வயது முதல் 60 வயது வரை ஆட்களின் தலைகளை எண்ணி ஈழவர்களிமிருந்தும் சாணார்களிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட ஓராண்டு வரித்தொகை சற்றொப்ப ரூபாய் 88, 044/

தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள்மீது திணிக்கப் பட்ட உடை பற்றிய கட்டுப்பாடுகள் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறலாகயிருந்தது. கடுமையான ஆணாதிக்க மரபானது அவர்ண சாதிப்பெண்களை ஆபாசப்படுத்தி அவர்களை இடுப்பிலிருந்து முழங்கால்வரை மறைக்கும் "முண்டு” என்ற முரட்டுத் துணியைத்தான் சுற்றியிருக்க வேண்டும் எனக் கட்டுப்படுத்தியிருந்தது. அவர்களை அரை நிர்வாணிகளாக்கியது.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்மக்களை, ஆதிக்கச் சாதிப்பெண்களிடமிருந்து பிரித்து, உடனடியாக அடையாளம் தெரியும் வகையில் அவர்கள் மார்பகங்களைக் காட்டிய வண்ணமே நடமாட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அவர்ண சாதிப்பெண்ணுக்கு அவளது அவர்ண சாதி எஜமானன் ஆண்டுக்கொருமுறை ஒன்று அல்லது இரண்டு முண்டுகள் கொடுப்பான். காலையிலிருந்து அந்தி சாயும்வரை வெயிலிலும், மழையிலும், குளிரிலும், நீரிலும் நின்றுகொண்டு களை பறிப்பதாலும், நாற்று நடுவதாலும், ஒரே துண்டுத் துணியை நாள்தோறும் ஒரு அறுவடையிலிருந்து மறு அறுவடை வரை உடுத்துவதாலும் இந்தப் பெண்கள் அழுக்கடைந்தவர்களாக செயற்கையாகவே ஆக்கப்பட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள் தாங்கள் அடிமைப் பெண்கள் என்று அடையாளப்படுத்த கல், கண்ணாடி, இரும்பு, தகரத்திலான அணிகலன்களையே அணிய நேரிட்டது. (அடிமைகளின் தலைவர் அய்யன்காளி, பக்கம்:96)

"திருவிதாங்கூரில் வரிவிதிப்பு முறைமைக்கணங்கள், உலக நடப்பில் வேறெங்கும் கேள்விப்படாத, நடந்திராத வகையில் கேவலங்களை உள்வாங்கிக் கொண்டு உறைந்து கிடந்தது. சட்ட ஒப்பனைகளோடு அம்பலம் ஏறிய வரிவிதிப்புப் பட்டியலில் நிமிர்ந்த தலைகளும் வளர்ந்த முலைகளும் கூட இடம் பெற்றிருந்தது. கேவலங்களின் வெட்கம் அறியாமல் வெளிப்பட்ட, கண்மூடித்தனமாக சுரண்டும் கைங்கரியமாகிப் போன வரிகளின் பொருளடக்கத்தில் மிதமிஞ்சிய வல்லடித்தனமும் வக்கிரமும் சாதி ஆதிக்க குறியாட்டத்தின் இலக்கணமாகியிருந்தது. தங்கள் உறுப்புகளுக்கும் வரிகொடுக்கும் நிலைமைக்கு ஊழியச்சாதிஅடிமைச்சாதி பெண்களும், ஆண்களும் ஆளாக்கப்பட்டார்கள்." என்று பதிவு செய்திருக்கிறார் ஏ.பி. வள்ளிநாயகம்.

 வரிவசூல் வேட்டையும் மூர்க்கங்களின் உச்சமான சாட்சியங்களாக இருந்தது. வரிவசூல் வேட்டை நாய்களின் தொல்லை தாங்கமுடியாதநிலை ஏற்பட்டதில்”,” சேர்த்தலையைச் சேர்ந்த ஒரு ஈழவப்பெண் போராளியானாள்.

ஆழைப்புழை மாவட்டத்தில் சேர்த்தளை கிராமத்தில் வாழ்ந்த நன்செல்லி என்ற ஈழவப்பெண் மார்பைத் துணியால் மறைத்துக் கொண்டாள். இதைக் கேள்விப்பட்ட முலைவரி வசூலிக்கும் அரசு அதிகாரிச் அவளிருப்பிடம் தேடி வந்து வரி கேட்டார். அவளும் முலைவரி கொடுக்க முன்வந்தாள். முலை வரி கொடுக்கும் முன் அவர்கள் வழக்கப்படி விளக்கேற்றி அதன் பின் வாழை இலையில் வைத்து முலைவரியைக் கொடுக்க வேண்டும்.

நன்செல்லி விளக்கேற்றினாள். முலைவரி எடுத்து வருகிறேன் என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்தவள் வாழை இலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அப்போது தான் அறுத்தெடுக்கப்பட்ட தன் இரு முலைகளையும் ஏந்தி வந்தாள். முலைவரி கொடுப்பதாக உள்ளே போனவள் தன் முலைகளையே வரியாகக் கொண்டுவந்தக் காட்சியைப் பார்த்த அதிகாரி அதிர்ச்சியில் நின்றார். அவளோ இரத்த வெள்ளத்தில்...பிணமாக.. வெளியில் போயிருந்த அவள் கணவன் கந்தப்பன் அவள் சிதையில் விழுந்தே தானும் மரித்து போனதாய் சொல்கிறார்கள்.

முலைவரிக்காக அந்தப் பெண் செய்த உயிர்த்தியாகம். உலக வரலாற்றில் பெண்ணியம் பேசுபவர்கள் கூட மறந்துப்போன மிக அண்மைக்கால வரலாறு.

அப்போது திருவாங்கூர் அரசராக இருந்தவர் மூலம் திருநாள் (1885 1924) நன்செல்லியின் செயலைக் கேள்விப்பட்டவுடன் அச்செயலே தன் நாட்டில் ஒரு கிளர்ச்சியே உருவாக்கிவிடலாம் என்று அச்சப்பட்டு அதுவரை அமலில் இருந்த முலைவரியை ரத்து செய்தார்.

ஒரு பெண்ணின் செயல் ஓர் அரசாங்கத்தின் மிகக் கொடுமையான ஒரு செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. முலைப் பிடுங்கி எறிந்து பாண்டியனின் மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கிய கண்ணகியின் கதை காப்பியக் கற்பனையோ? வரலாறோ? ஆனால் நன்செல்லி இன்றைக்கு மூன்று தலை முறைக்கு முந்திய வாழ்ந்தவள். அவள் வாழ்ந்த இடம் இன்று முலைச்சிப்பறம்பு என்றழைக்கப்படுகிறது.

கேரளத்திலாகட்டும், அண்டை மாநிலமான தமிழகத் திலாகட்டும், நன்செல்லி வாழ்ந்தக்கதை வரலாறாக எழுதப்படவில்லை. அவள் இலக்கியத்தில் இடம்பெறவில்லை. பாடப்புத்தகங்களில் அவளுக்கான பக்கங்களே இல்லை. மார்க்சியமும் பெண்ணியமும் உரக்க ஒலிக்கும் கேரள மண்ணில் அவள் ஊமையாக்கப்பட்டிருக்கிறாள்.

ஊடகங்கள் முலைச்சிப்பறம்பை மனோரமா கவலா என்றே அழைக்கின்றன. அந்த இடத்தில் இன்று வாழும் எவருக்கும் முலைச்சிப்பறம்பு வரலாறு தெரியவில்லை. நன்செல்லியும் முலைச்சிப்பறம்பு வரலாறும் இருட்டடிக்கப்பட்டதில் சாதியம் புதிய முகத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் உணரலாம்.

இந்த வரிகளும் சேர்ந்து தான் பத்மநாப சுவாமிக்கோவிலின் கருவறையில் – பொற்காசுகளாகவும் தங்கம் வெள்ளி நகைகளாகவும் ரத்த வாடையுடன்.

Pin It