நியூயார்க் நகரத்தில் (அமெரிக்கா) உலகக் கண்காட்சி நடைபெறுகிறதல்லவா? அதிலுள்ள இந்தியப் பகுதியில், “இந்திய முறைப்படி பெண்கள் சேலை கட்டுவது எப்படி?”என்பதை டெலிவிஷனில் காட்டுகிறார்களாம்! இக்காட்சியைக் காண்பதற்கு லட்சக்கணக்கான அமெரிக்கப் பெண்கள் கூடுகிறார்களாம்!

அடிச் சக்கை! சேலை கட்டுகிற விதத்தையா? போதுமா, இது? அது பற்றிய சில்லறைச் சங்கதிகளையும், உள் உடை அணிவதையும் காட்டியிருக்க வேண்டாமா? ஆண்கள் வேட்டி கட்டுகிறதையும், தமிழ்நாட்டுக் கிராமத்து ஆண்கள் கோவணத்துடன் எண்ணெய் தேய்த்துக் கொண்டு குட்டைக்குச் சென்று குளிப்பதையும் காட்டியிருக்க வேண்டாமா?

என்னை முன் கூட்டிக் கேட்காதபடி, யார் இந்த டெலிவிஷன் காட்சிக்கு ஏற்பாடு செய்தது?

தமிழ்நாட்டுப் பெண்கள், வீட்டில் பிணம் விழுந்தவுடனே (பெரும்பாலும் அதற்கு முன்பே கூட!) ஒப்பாரிப் பாட்டுப்பாடிக் கொண்டு, மாரடித்து அழுவதைப் படம் பிடித்து டெலிவிஷனில் காட்டியிருக்கலாமே! கடவுளுக்கு மயிர்க் காணிக்கை கொடுப்பதற்கு முன்பு மஞ்சள் துணி கட்டிக் கொண்டு தெருவில் ரோடு ரோலர்களாக அவதாரமெடுப்பதையும், பிறகு திரும்பி வரும்போது தலையை உதை பந்து (புட்பால்) மாதிரி வைத்துக் கொண்டு காட்சியளிப்பதையும் படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டாமா?

நம்மிடம் வேறு என்னதான் இருக்கிறது. அமெரிக்காவிடம் காட்டி அதிசயிக்க வைப்பதற்கு? விஞ்ஞானத் துறையிலோ, மருத்துவத் துறையிலோ, படிப்புத் துறையிலோ, அவர்களிடம் எதைக் காட்டினாலும் புரோகிதன் வீட்டில் காய்கறி விற்பதுபோல் ஆகிவிடுமே!

நமக்குள்ள பெருமைகளைத்தானே நாம் பிறருக்குக் காட்ட முடியும்? மூன்றே மாதத்தில் முப்பது மாடிக் கட்டடம் கட்டி முடிப்பதைக் காட்ட முடியுமா? ராக்கெட்டில் மனிதனை வைத்து அனுப்பிச் சந்திரனில் கொடி நாட்டி வரச் செய்வதைக் காட்ட முடியுமா? சமுதாயத்திலுள்ள சில அருமை பெருமைகளைத்தான் நாம் பிற நாட்டாருக்குக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!

உதாரணமாக, பல்லக்கில் மனிதனை வைத்துத் தூக்கிச் செல்வதைக் காட்டலாம்! ஒரு சாண் பொம்மையை முப்பது டன் வாகனத்தில் வைத்துக் கட்டி இருபது பேர் சுமந்து செல்வதைக் காட்டலாம்! தெருக்களையே எப்படிக் கக்கூசாகப் பயன்படுத்துகிறோம் என்பதைக் காட்டலாம்! அரசாங்கப் பணிமனைகளில் படம் மாட்டி மணியடித்துக் கும்பிடுவதைக் காட்டலாம்! பாலையும், எண்ணெய்யையும் இளநீரையும், தேனையும் கல் தலையில் ஊற்றுகின்ற அதியத்தைக் காட்டலாம்! கண்ட இடத்தில் எச்சில் துப்புகின்ற ஜனநாயக உரிமையைக் காட்டலாம்!

எல்லாவற்றையும்விட அதிசயமாக, இந்த ராக்கெட் யுகத்திலுங்கூட கைராட்டினத்தில் நூல் நூற்றுக் கொண்டிருக்கும் அருமையான காந்தீய – கைவண்ணத்தைக் காட்டலாம்! வண்டி நிறையப் பெருஞ்சுமைகளை ஏற்றி மனிதர் இரண்டுபேர் இழுத்துச் செல்கின்ற பாரதமாதாவின் தனித் திறமையைக் காட்டலாம்! படிப்புக்கும் புத்திக்கும் சம்பந்தமே இல்லை என்பதை உணர்த்துவதற்காக, அக்கிரகாரப் பிறவிகளின் சட்டையைக் கழற்றச் சொல்லி அதற்குள்ளே, நெளிந்து கொண்டிருக்கும் முப்புரி நூலைக் காட்டி அதன் சிறப்பைப்பற்றி விளக்கம் செய்யலாம்! இப்படியாக, ஒவ்வொரு துறையிலும் எத்தனையோ அதிசயங்கள், கண்டுபிடிப்புகள், (நெற்றிக்கோடுகள் உட்பட) நம்மிடம் இருக்கும் போது, கேவலம், சேலை கட்டுவதை மட்டுந்தானா காட்டுவது? நம்மிடம் அதைத் தவிர வேறு சரக்கே இல்லையென்றல்லவா நினைத்துக் கொள்வார்கள்?

– "அறிவுப் பாதை', 23.7.1965

Pin It