நம் நாட்டில் சிறிதுகாலமாய்த் திராவிட மாணவர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டிருப்பதைக் காணலாம். அது பெரிதும் தங்கள் நாட்டைப் பற்றியும் தங்கள்இனத்தைப் பற்றியுமேயாகும்.

இதுவரை தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவது, தமிழ்நாட்டில் உள்ள கற்றோர்கள் என்பவர்களுக்காவது தமிழ்நாட்டைப் பற்றி –யோ தமிழர் இனத்தைப்பற்றியோ ஓர் உணர்ச்சியோ பற்றுதலோ இருந்ததாகக் கூறுவதற்குக் குறிப்பிடத்தகுந்த ஆதாரம் காட்ட முடியாது என்றே சொல்லலாம். ஏனெனில், ஆங்கிலம் படித்தவர்களுக்கு அர்த்தமற்றதும் உத்தியோகத்துக்கும் பதவிக்கும் ஏற்றதான அரசியலே அவர்கள் இலட்சியமாக இருந்துவந்திருக்கிறது. தமிழ் படித்தவர்களுக்குச் சமயமும் சமய ஆதாரங்களில் பண்டிதப் பெருமையுமே இலட்சியமாக இருந்து வந்திருக்கிறது. இதனால், எவருக்கும் நாட்டைப்பற்றியும் கவலை ஏற்பட இடம் இல்லாமல் போய்விட்டது. மாணவர்களுக்கு என்றாலோ மாணவர்களுக்கு அரசியல் கூப்பாடும் அரசியல் தனங்களும் அணியாக ஆக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் நான்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தவுடன் தேசியத்தைப் பேசிக்கொண்டிருப்பதே நாகரிகமாய்க் கருதிவந்தார்கள். இப்படிப்பட்ட கெட்ட காரியம் பொருந்திய நாட்டில் இன்று மாணவர்களிடைத் தோன்றியுள்ள நாட்டுணர்ச்சியும் இன உணர்ச்சியும் காண்பது மிகுதியும் மிகுதியும் மகிழ்ச்சி அடையத்தக்க வாய்ப்பேயாகும்.

இதைக்கண்ட எதிரிகளும் அறிவிலிகளும் பொறாமைக்காரர்களும், விபீஷணர்களும் குறைகூறுவதும் வீண் கூச்சல் கிளப்பிப் பொய் அழுகை அழுவதும் நமக்கு அதிசயமில்லை. பிள்ளைகளிடத்தில் மகா பற்றுள்ளவர்கள் போலக் காட்டிக்கொண்டு, “படிக்கிற காலத்தில் பிள்ளைகளுக்கு வேறு காரியத்தில் கவனம் செலுத்தச் செய்யலாமா?” என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

எதற்காகப் படிப்பது என்கின்ற இலட்சியம் இல்லாமல் படிப்பது அறிவுடைமையாகுமா? என்று சிந்திக்க விரும்புகிறோம்.

படிக்கிறவர்களிடம் மக்கள் காட்டும் அனுதாபமெல்லாம் படித்தால் தானே உத்தியோகம் பெறலாம் என்கின்ற ஒரு காரியத்திற்கல்லாமல் வேறு எதற்கு என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கிறோம்.

உத்தியோகம் எதற்கு ஆக என்றால் பணம் சம்பாதிப்பதற்கு ஆக என்பதல்லாமல், வேறு எதற்கு பயன்படுகிறது என்று யாராவது பெருவாரியான ஆதாரத்தோடு எடுத்துக்கூற முடியுமா என்று கேட்கின்றோம்.

உத்தியோகம் பெறுவதும் பணம் சம்பாதிப்பதுமே மனிதனின் இலட்சியமாக ஆகி, மக்களெல்லாலம் இதற்காகவே படிக்க வேண்டும் என்று ஆகிவிட்டால், தமிழ் மகனுக்கு இருக்கிற சூத்திரப் பட்டமும், இழி சாதிப் பட்டமும், தீண்டாமை நிலையும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் சாதி, மதம், கோவில், குளம், சாமி, சடங்கு ஆகியவைகள் ஒழிக்கப்பட வேறு எங்கிருந்து யார் வருவார்கள் என்று இந்த அறிவும், மானமும் பற்றிய கவலை இல்லாத அனுதாபக்காரர்கள் கருதுகிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

தமிழனுக்கு உத்தியோகம் வேண்டுமானால் படிப்புதான் இன்று தடையாய் இருக்கிறதா என்று கேட்கின்றோம்? முஸ்லீம்கள் 100க்கு 9 பேர்கள், 100 க்கு 10, 12 வீதம் உத்தியோகம் பெற்று இருக்கிறார்களே, எப்படிப் பெற்றார்கள்? கிறிஸ்தவர்கள் 100க்கு 3 பேர்கள், 100க்கு 6, 7 வீதம் உத்தியோகம் பெற்று இருக்கிறார்களே எப்படிப் பெற்றார்கள்? பார்ப்பனர்கள் 100க்கு 3 பேர் 100க்கு 40, 70 வீதம் உத்தியோகம் பெற்றார்களே எப்படிப் பெற்றார்கள்? இவற்றிற்குப் படிப்பு காரணமா? மான உணர்ச்சியும், இன உணர்ச்சியும் காரணமா? என்று கேட்கிறோம்.

அப்படித்தான் உத்தியோகம் பெறுவதானாலும் மனக் கவலையும், இனக்கவலையும் இல்லாமல் தன் தன் சுயநலக் கவலையும், இனக்கொலைக் கவலையும் உள்ள உத்தியோகத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் நன்மை என்ன என்று கேட்கிறோம். இன உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி ஒரு மாணவனுக்கு ஏற்படுத்தினாலேயே படிக்க முடியாமல் போய்விடும் என்று சொல்லிவிட முடியாது.

பார்ப்பனர்களுக்கு இனஉணர்ச்சியும், மற்ற இனங்களைத் தலைஎடுக்க ஒட்டாமல் அழுத்தும் முயற்சியும், பூணூல் கல்யாண காலத்திலிருந்தே ஊட்டப்பட்டுவருகிறதை யார் மறுக்க முடியும்? அப்படியிருந்தும் பார்ப்பன மாணவன் படிக்கவில்லையா? அதுபோல் பிள்ளைகளுக்குக் கவலை இருந்தால் – கவலை ஏற்படும்படியான உணர்ச்சி ஊட்டப்பட்டால் படிப்பு இல்லாமல் போய்விடாது.

இந்தச் சமயத்தில் தேசியவாதிகள் என்பவர்களும் மாணவர்களுக்குப் புத்திசொல்ல வந்துவிட்டார்கள். “மாணவர்கள் படிக்கும் போது வேறு காரியங்களில் புத்தி செலுத்தக்கூடாது” என்கிறார்கள். தோழர்கள் டாக்டர் டி.எஸ்.எஸ். ராசன், சரோஜினி அம்மையார், காந்தியார், டாக்டர் ஆச்சாரியார் ஆகியவர்கள் கூற வந்துவிட்டார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் மாணவர்களைப் பள்ளியைவிட்டு வெளியில் வரும்படியாக அழைத்தவர்கள் என்பது யாருக்குத் தெரியாது?

இன்றும் மாணவர்களைப் பயன்படுத்தித் தங்கள் நலனைப் பெருக்கிக்கொள்ளுகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாது? இப்போது இவர்களுக்கு இந்த ஞானோதயம் எதற்கு ஆக வந்தது என்பது நமக்குப் புரியவில்லை. ஆதலால், மாணவர்கள் தன் நாடு, தன் இனம் பற்றிய நலனில் கவலை செலுத்துவது எப்படியும் குற்றமாக ஆகிவிடாது. இதுவரை மாணவர்கள் செலுத்தி வந்த நாட்டுணர்ச்சியும் இன உணர்ச்சியும் ஆரிய நாட்டிற்கு ஆரிய இனத்திற்குமே பயன்பட்டு வந்தது. அதைத்தான் இப்போது தமிழ்நாட்டிற்கும் தமிழர் இனத்திற்கும் பயன்படத் திருப்பவேண்டுமென்கின்றோமே ஒழிய, புதிய துவக்கம் ஒன்றும் இல்லை.

அன்றியும் மாணவர்கள் ஓய்வில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கின்றோம். ஏனெனில், ஆரியர்கள் நலனுக்கு ஆரியர்களுக்கு இருப்பது போல் தமிழர்களுக்குப் பிரச்சாரத்திற்கு மக்களோ, பத்திரிகையோ, உணர்ச்சியோ சரியானபடி இல்லை.

ஆரியர்கள் உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், பத்திராதிபர்கள், ஓட்டல்காரர்கள், ஆசிரியர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் முதலிய யாவரும் ஆரியப் பிரச்சாரகர்களேயாவார்கள், அப்படிப்போல் தமிழர்களில் யார் இருக்கிறார்கள்? பத்திரிகைக்காரர்கள் பெரிதும் கூழுக்குப் பாடுபடுகிறவர்கள். ஆசிரியர்கள் முக்காலும் கஞ்சிக்குப் பாடுபடுகிறவர்கள், வக்கீல்கள் கவலையே அற்றவர்கள், இயக்கப் பிரமுகர்கள் கூலி கொடுத்து இயக்கத்தை ஒழிக்க முயன்று முன்னேறப் பார்ப்பவர்கள். இப்படிப்பட்ட மக்களைக் கொண்ட சமுதாயத்திற்கு மாணவர்கள் தங்களாலான உதவி செய்யவந்தால் அதில் பொறாமையோ, ஆத்திரமோ காட்டுவது எவ்வளவு கேவலமான காரியமாகும் என்பதைப் பொதுமக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்?

ஆகவே, இன்றைய தமிழ் (திராவிட) மாணவர்கள் தங்கள் படிப்பைக் காட்டிலும் தங்கள் நாட்டினுடையவும், இனத்தினுடையவும் விடுதலையும் மேன்மையும் சிறந்தது என்பதைச் சிந்தனையில் வைத்துத் தற்காலம் அவர்களுக்குள் எழுந்திருக்கும் உணர்ச்சியைப் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறோம்.

வேறு ஒருவர் தங்களுக்கு ஆகத் தங்கள் பிற்கால வாழ்வுக்கு ஆகப் பாடுபடுவார்கள் என்று எண்ணி ஏமாறவேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்கின்றோம். ஏனெனில், வேறு யார் இருக்கிறார்கள் என்று கருதித் தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவருடைய யோக்கியதையும் அவர்களது முன்பின் நடத்தையையும் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.

அடுத்தாற்போல் வரும் கோடைகால விடுமுறையில் மாணவர்கள் சிறந்ததொரு பிரச்சாரம் செய்யத் தயாராய் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, பலர் பலவிதமாகச் சொல்லுவதற்குக் காதுகொடுத்து மனம் மாறிவிடக்கூடாது என்றும், உங்களுக்குப் புத்தி சொல்லுகின்றவர்கள் தன்மையையும் அவர்கள் நிலைமையையும் நடுநிலையில் இருந்து சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றும் வேண்டிக்கொள்ளுகிறோம்.

– குடிஅரசு, தலையங்கம், 24.2.1945

Pin It