ஈழத்தில் தாய் நாட்டுக்காகப் போராட்டக் களத்தில் போராடி மீண்டு வந்து தன்னுயிரைப் புற்றுநோய்க்கு இரையாக்கிய பெண் போராளி தமிழினி தமது போராட்டக் கால அனுபவங்களை, உள்ளக் கிடக்கையை, சமூகம் பார்க்கும் பார்வையை எனத் தான் சந்தித்த அவலங்களை “ஒரு கூர்வாளின் நிழலில்” எனும் இந்நூலில் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அதைப் படிக்கும் போது நமது இலேசான இதயமும் கனக்கத்தான் செய்கிறது. கனத்த எழுத்துக்களின் வழி தமது வாழ்வியல் போராட்டங்களைப் பதிவு செய் துள்ளதைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் ஈழத்து உணர்வுகளைப் பதிவு செய்த “அக்னி தேசம்” எனும் கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த் துரைக்காகக் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்தச் சூழலில்தான் ஒரு கூர்வாளின் நிழலில் நூலும் வாசித்தேன். அதன் வெளிப்பாடு தான் இந்த மதிப்புரை.
நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வாட்டார்லூ போர்க்களத்தைப் பார்வையிட்ட வெலிங்டன் பிரபு கூறியது “தோல்வியுற்ற ஒரு போர் தரும் துயரத்திற்கு அடுத்ததாகப் பெரும் துயரம் தருவது போரில் ஈட்டிய வெற்றியே” இந்த நிலைதான் இந்நூலில் உள்வாங்கப்பட்டிருக்கிறது.
பெண் போராளிகளின் மனநிலைகளை அழுத்த மாகப் பதிவு செய்திருக்கிற நூல்தான் தமிழினியின் : “ஒரு கூர்வாளின் நிழலில்”. போர்க்களத்தில் எதிரி களிடமிருந்து தன்னையும், தன் நாட்டையும் காத்துக் கொள்ள தனது உயிரைக் களமாக்கிப் போராடுவதால் இந்நூலுக்கு இப்படி ஒரு தலைப்போ என எண்ணத் தோன்றுகிறது. இல்லை, சமூகத்தில் பெண்கள் மீதான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் போக்கு நிலையை எண்ணியும் நூலின் பெயர் அமைந்திருக்கலாம்.
“”இதுகள் பதவிப் பொறுப்பு ஆசையில் கலியாணம் கட்டாமல் இருக்குதுகள்” “இதுகளை பார்த்தால் ஆரும் கலியாணம் கட்டுவாங்களே” “பொடியங்களை ஓவர் டேக் பண்ணி மோட்டார் சைக்கிள் ஓட்டுறது சரியில்லை” “இப்படி மேடையில ஏறி நிண்டு கையை ஆட்டி ஆட்டிப் பேசுறது சரியில்லை” எனப் பெண்கள் பேசும் நிலை. என்ன தான் பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என்று மேடைதோறும் முழங்கினாலும் பெண்களுக்கென சில கட்டுப்பாடுகளைச் சமூகம் விதித்திருக்கத் தான் செய்கிறது. அதையெல்லாம் தகர்த்தெறிந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு பெண்களிடம் கூட கிடையாது என்பது தான் கொடுமை.
நிர்பந்தத்திற்காக மனைவி என்ற பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, வீடுவாசல் பெருக்கி, விதவிதமாகச் சமைத்து, துணிமணிகள் துவைத்து, கோவிலுக்குப் போய் விரதம் பிடித்து, ஒரு பொம்மையாக என்னால் வாழ முடியுமா எனத் தெரியவில்லை. எடுத்ததற்கெல்லாம் ஈகோ போட்டி போட்டு எஞ்சியிருக்கிற மனநிம்மதியை இழந்துபோகிற சக்தியும் என்னிடம் கிடையாது, சீதனம் கொடுத்து ஒரு கணவனை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு எனது குடும்பத்தில் வசதியில்லை. ஆழமான புரிந்துணர்வு, நட்புள்ளத்துடன் அளவற்ற அன்பைப் பகிர்ந்து கொண்டு இறுதி வரை வாழ முடிந்தால்
அதுவே பெருத்த நிம்மதி எனும் மனநிலையானது திருமணத்திற்குப் பிறகு அன்பு, புரிதல் இவற்றைத் தான் பெண்கள் கணவனிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதுவே அவர்களுக்குப்
பெருத்த நிம்மதியும் மகிழ்வும்கூட. இதுவே அனைத்துப் பெண்களின் உளப்பாங்கும் ஆகும்.
பசி
போராட்டக் காலங்களில் உணவு கிடைக்காத சந்தர்ப்பங்களிலும், உணவிருந்தும் உண்பதற்கு நேரம் கிடைக்காத காரணத்தாலும் பசியை நிரந்தரமாக ஏற்றுக்கொள்ளும் நிலையே இருந்திருக்கிறது. பசி என்னும் உணர்வை இழந்த நிலை.
கொட்டுவை
சராசரி எட்டு அடி அகலம் தான் கொட்டுவையின் அளவு. அதில் ஆறு பெண்கள் படுத்துக்கொள்ள வேண்டும். சிறிது உயரமானவர்கள் கால்நீட்டிக் கொண்டு படுக்க முடியாது. நிமிர்ந்து படுப்பதற்கும் இடம் போதாது. எப்படியோ சமாளித்துப் படுத்துக் கொண்டாலும் பக்கத்தில் படுத்திருப்பவருடன் தட்டாமல் முட்டாமல் படுக்கவே முடியாது. திரும்பிப்படுக்கவே முடியாது. நுளம்பு கடித்து விட்டால் தட்டிவிட முடியாது. இரவைப் பகலாக்கும் சக்தி வாய்ந்த மின்விளக்குகள் விடியும் வரை ஒளிர்ந்து கொண்டே யிருக்கும். கண்ணைக் கூசவைக்கும் வெளிச்சத்திலிருந்து விடுபட சிறிது துணியைக் கொண்டு முகத்தை மூடி தன்னையறியாமலே கண்ணயர்ந்தால் எவராவது மெதுவாகச் சுரண்டுவார்கள்.
“சரிந்து படு, இடம் போதாது” “சரியாதே சரியாதே நிமிர்ந்து படு” என்று, பதற்றத்துடன் பெரும்பாலும் உறங்காமல் உட்கார்ந்து கொள்வது, எத்தனையோ இரவுகள் விடியும் வரை உறக்கம் கொள்ளாது விழித்த படியே கழித்திருப்பது. இதுதான் தமிழர்களையும், தவறு செய்தவர்களையும், சந்தேகத்தின் பிடியில் பிடித்தவர் களையும் அடைத்து வைக்கும் கொட்டுவையின் நிலை.
கொட்டுவையில் உறக்கம் வராத இரவுகள் மிகவும் பயங்கரமானவையாக இருந்திருக்கிறது. சரியான உறக்கமின்மையால் இவற்றால் இடைவிடாத தலைவலி, மன பாரம் கொஞ்சம் கொஞ்சமாக மனநேயாளி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’- சிறை வாசகம். ஒரு மனிதனை மகா ஞானியாக்கவும், மகா கெட்ட வனாக்கவும் சிறைச்சாலையினால் முடியும். வெறுப் படையச் செய்யும் சிறையின் கொடுமைகளில் ஒன்றானது உடற்பரிசோதனை. ஒரு பெண் சிறை சென்று மீள்வது என்பது சமூகத்தில் மிகவும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாகப் பார்க்கப்படுகிறது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டால் அவர்களை மானமிழந்து போனவர்களாகக் கருதி சமுதாயம் ஒதுக்கி வைக்கும் மோசமான பாங்கு. பெண்கள் ஆயுதமேந்திப் போராடுவதையும் ஆயிரக் கணக்கில் களமுனைகளில் உயிரிழந்த போது வீராங் கனைகள் எனப் போற்றிய சமூகம், அதே பெண்கள் சிறைகளுக்கும், புனர்வாழ்வு முகாம்களுக்கும் சென்று வரும்போது அவர்களைத் தரம் தாழ்ந்தவர்களாகப் பார்ப்பது கொடுமையானது
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது. அதிலும் மங்கையராய்ப் பிறப்பது அதனினும் அரிது. கூன், குருடு, செவிடு நீங்கி மானிடராய்ப் பிறப்பது அரிதினும் அரிது என்றாலும் பெண்களுக்கு எனும் போது சிறிது மனம் கலக்கமடையத் தான் செய்கிறது. அங்க ஈனத்துடன் வாழ்வதைவிடச் சாவது மேல் எனும் உணர்வு தான் மேலிடுகிறது. தன் வலியைவிட மாற்றான் ஏற்படுத்தும் வலிதான் சமூகத்தில் பெரியதாக இருந்திருக்கிறது எப்பொழுதும்.
‘கடவுளே உடலுறுப்புகளை இழந்து, காயப் படாமல் உடனே செத்துப் போகணும்’ எனும் வேண்டுதல், ஒருநிமிட சாவை விடப் பல மடங்கு வேதனையை வாழ்நாள் முழுவதும் தரக்கூடியதாக இருந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஒரு பெண் யுத்தக் களத்தில் வயிற்றில் காய மடைந்திருக்கிறாள். அவளுக்காக ஒரு வெளிநாட்டு மணமகனைப் பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். அந்தப் பெண் வயிற்றில் காயமடைந்திருந்த காரணத்தால் அவளது மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்த பின்பே அவளை மணப்பதா இல்லையா என்ற முடிவை மணமகன் எடுக்கிறான். அவளால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாவிடில் அவள் ஒரு வாழ்க்கைத் துணையாகவும் ஆகமுடியாது. எந்தக் குறை குற்றங் களோடும் ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள அணியமாயில்லாத சராசரியான சமூக மனப்பாங்கு தான் நிலவுகிறது. எல்லாப் பரிசோதனை களும் பெண்களுக்கு மட்டுமே. என் மகள் யுத்த களத்துக்குப் போனதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அயல் நாட்டுக்குச் சென்று டாக்டராகவோ, எஞ்சினிய ராகவோ படித்துவிட்டு வந்த பிள்ளைகள் என் மகளைக் கல்யாணம் கட்டுவாங்களா. என் மகள் படிக்காத வளாயிற்றே. இது பெண்ணைப் பெற்ற தந்தையின் பரிதவிப்பாகவே இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட இடர்பாடுகளைப் போக்கப் போராளிகளுக்குள் திருமணம் செய்தல் வேண்டும் எனும் நிலையும் உருவாயிற்று.
பெண்ணின் உறுப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத் துவம் அவளை உயிராகவோ, மனுசியாகவோ பார்ப்பதில் கொடுப்பதில்லை.
களமுனையில் பலத்த காயங்களை அடைந்த போராளிப் பெண்களுக்குக் குடும்ப வாழ்வு என்பது பெரும் தடையாகவே இருந்திருக்கிறது. பெண்கள் போராடப் போனது தவறல்ல. அவர்கள் உயிருடன் மீண்டு வந்ததுதான் தவறு எனும் மனப்போக்கே நிலவுகிறது. தமிழ்ப் பெண்களுக்கென இயல்பாகவே இருக்கும் சகிப்புத் தன்மையும், துன்பங்களை எதிர்த்துப் போராடும் மனநிலை, போர்க்களங்களில் கற்றுக் கொண்ட துணிச்சலுமே இன்று அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறது.
சாதாரணமாகவே பெண்களுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது. அதிலும் போர்க் களத்தில் நின்ற பெண்களுக்கு வாழ்க்கை என்பது பெரும் சவால்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அவர் களுக்கு உற்றதுணையாக இருப்பது அவர்கள் போர்க் களத்தில் கண்ட பாடம்தான்.
பல பெண் போராளிகள் பதுங்கு குழிகளுக்குள் நஞ்சுக் குப்பியை அருந்தி மரணித்திருப்பதும், முள்ளிவாய்க் காலின் இறுதி நாட்களிலும் பெண் போராளிகளின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்திருக்கிறது.
இயக்கத்தின் இடைவிடாத வேலைப் பளுவில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த காரணத்தால் தங்களுக்கு வயது போய்க்கொண்டிருக்கிறது என்றோ, ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்வது பற்றியோ சிந்திக்காமலிருந்துள்ளனர். இயக்கம் அவர்களுக்குப் பாதுகாப்பையும் போராளி எனும் ஏற்பிசைவையும் கொடுத்திருந்ததால் மற்றதைப் பற்றி எண்ணுவதற்கு நேரம் இல்லாமல் இனவுணர்வுடன் செயல்பட்டனர்.
“கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளில் பெண்கள் மேம்படுவதும் ஆண், பெண் பாலியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அவர்களுடைய மனிதம், பரஸ்பரம் மதிக்கப்படுவதும் தான் பெண் விடுதலையைச் சாத்தியமாக்கும்” என்பது தான் உண்மை.
எப்படி ஒரு கட்டுக்கோப்பான குடும்பப் பெண்ணாக வீட்டில் வளர்க்கப்படுகிறார்களோ அதே போலக் கடினமான இராணுவப் பயிற்சிகளைப் பெற்ற கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளி
யாகவே இயக்கத்திலும் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு போராளியாக இருந்த போது ஊருக்குள் இருந்த மதிப்பு வேறு. அதை விட்டு வெளியே வரும் போது அவர்கள் கேட்க நேரிடும் இழி பேச்சுகள் வேறு...
“இருபது வருசமா இயக்கத்தில் இருந்தன். எத்தனையோ சண்டையில் காயப்பட்டன். தாக்குதல் படையணிகளை வழிநடத்தவும் துவக்கி தூக்கிச் சுடவும் தான் எனக்குத் தெரியும். இனி வீட்டுக்குப் போய்
என்ன செய்யப் போறன். நான் ஊருக்குள்ள போகும் போது சீருடையில்லை. துவக்கில்லை. சாதாரணமாக உடுத்துறதுக்கு நல்ல உடுப்பு இல்லை. ஏனென்றால் இயக்கத்துக்காகவே உழைத்ததால் தனக்கென எதுவும் இல்லாத நிலை. இப்போது என்னைப் பார்க்கும் மக்கள், முகம் திருப்பிக் கொள்வதும் ஏளனமாகச் சிரித்துக் கொள்வதும் பார்க்க முடிகிறது. இப்ப நான் ஒரு செல்லாக்காசு” எனும் போராளியின் உள்ளக் கிடக்கையில் எத்தனை மனப்போராட்டங்கள் அடங்கியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
ஒரு பெண் போராளி யுத்தத்தில் கொல்லப்பட்ட போது அந்தப் பெண்ணிடம் நீ யாரை நினைப்பாய்? என்று கேட்டால், அவளின் சோக விழிகள் ஒரு தடவை மின்னும். காய்ந்து போயிருந்த உதடுகளில் மெல்லப் புன்னகை நெளியும். “நான் விரும்பியிருந்தவரைத் தான் நினைப்பேன்” என்று சொல்லுவாள். இது அவளின் அவளுக்குள் ஆழப்புதைந்து கிடக்கும் காதலின் இரகசியக் காயம். ஏதோ ஒரு யுத்தத்தில் அவளுடைய போராளிக் காதலன் ஏற்கனவே உயிரிழந்திருக்கிறான் என்பதன் தவிப்புணர்வு, ஒருவித ஏக்கத்தின் வெளிப்பாடு தான் இது.
ஆயுதத்தை விட்டு பெண் போராளிகள் ஊருக்குள் போகும் போது அவர்கள் அனுபவிக்கும் துயரமானது போர்க்களத்தை விட அதிக வலியைத் தரக்கூடியது.
இப்படிப் பல ஆயிரமாயிரம் உள்ளக் கிடக்கைகள், ஏக்கப் பெருமூச்சுகள், ஆண்டுக்கணக்காக நடந்த போரில் அந்தக் காடுகளுக்குள்ளேயே வாழ்ந்து காட்டு மரங்களில் தமக்குப் பிடித்தமானவர்களின் பெயரெழுதிப் பார்ப்பது, கண்களுக்குள் கனிந்த அன்பை மௌனக் காதலாக தமது நெஞ்சுக்குள்ளேயே புதைத்துக் கொள்வது, வன்னிக் காட்டு மரங்களின் வேர்களுக்குள் வாழ்க்கை முடிந்து போனவர்களின் கதைகளும் கனவு களும் ஏராளம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர் களிடம் அதிகாரம் போய்ச் சேரும் போது அவர்கள் நடத்தும் மோசமான அத்துமீறல்கள், உடற்பரிசோதனை எனும் பேரில் உள்ளமும் உடலும் நடுங்கிப் போகும் வகையிலான தொடுதல்கள் இப்படியான எண்ணற்ற உள்ளக் குமுறல்களை, எண்ணக் கிடக்கைகளை, பெண்ணிற்கே உரித்தான காதல், அன்பு, பாசம், இரக்கம், கருணை போன்றவற்றிற்கு ஏங்கும் மனநிலை, போன்றவற்றை வெளிப்படுத்துகிறது, தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழலில்Ó எனும் நூல்.
சாதாரணமாகச் சமூகச் சூழலில் பெண் வாழ்க்கை கட்டமைக்கப்படும் விதமே சமூக அவலத்திற்குரியது தான். ஒரு பெண் போராளி என்றால் எண்ணிக்கூடப் பார்க்க முடியாத நிலை. பெண் போராளிகளின் ஒட்டு மொத்த உளப்பாங்கையும் கண்முன் நிறுத்துகிறது இந்நூல்.
பெண்கள் பிறப்பதில்லை. பெண்கள் குடும்பத் தாலும் சமூகத்தாலும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள். சாதாரணப் படிப்பறிவு இல்லாதப் பாமரப் பெண்ணும் குடும்பத்தில் உச்சகட்டச் சகிப்புத்தன்மையோடும், பொருளாதாரச் சிக்கலைத் தீர்த்து வைக்கும் வல்லமையோடும் திகழ்கிறாள். இந்த வலிமையும், சமூக அமைப்பு முறைகளுமே பெண் களையும் போராட்ட களத்தில் நிறுத்துகிறது என்பது இந்நூலின் வழி விளங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு கூர்வாளின் நிழலில்
தமிழினி
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001
தொடர்புக்கு : 91-4652-278525
விலை : ` 125/-