வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய்வாய்ப்பட்டு சாகுந் தருவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன்கட்டை ஏற வேண்டுமென்று கருதி மண்ணெண்ணையை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக அ.பி. செய்தி கூறுகின்றது.

இது எவ்வளவு பரிதாபகரமான விஷயம்? மத நம்பிக்கையினால் எவ்வளவு கொடுமைகளும், கேடுகளும் விளைகின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சாக்ஷியம் வேண்டும்.periyar with kid"இந் நிகழ்ச்சிக்கு மத நம்பிக்கை காரணமல்ல. காதலே காரணம், கற்பே காரணம்" என்று சிலர் தத்துவார்த்தம் சொல்லி மதத்தைக் காப்பாற்ற இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களை ஒன்று கேட்கின்றோம்.

காதல் என்றும் கற்பு என்றும் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டு பார்ப்போமானாலும் இன்று உலகில் புருஷனை சாகக் கொடுத்துவிட்டு விதவையாகவோ அல்லது வேறு ஒருவரை மணந்தோ, இரகசியமாகவோ இயற்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லோரும் அவரவர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல் கற்பு இல்லாமல் இருந்தவர்களா என்று கேட்கின்றோம். மற்றும் இன்று புருஷன் இறந்த உடனோ இறக்கப் போகும் தருவாயிலோ மண்ணெண்ணையை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு சாவதற்கு தயாராயில்லாத பெண்கள் எல்லோரும் காதலும் கற்பும் அற்றவர்களா? என்றும் கேட்கின்றோம். ஆகவே மதத்தின் பெயரால் கல்வி அறிவற்ற ஆண்களும் பெண்களும் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்பதை அறிந்தும் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது அறியாமையா, மூர்க்கத்தனமா அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத்தனமா என்பது நமக்கு விளங்கவில்லை.

(புரட்சி துணைத் தலையங்கம் 27.05.1934)

மரணம்

அநுதாபம்

நமது இயக்க அபிமானியான கோட்டையூர் தோழர் ராம. அள. சிதம்பரம் அவர்களின் புதல்வன் திடீரென்று இறந்த செய்திகேட்டு திடுக்கிட்டோம். இச்செய்தி கேட்ட சில நாட்களுக்குள் அவரது துணைவியாரும் உயிர் துறந்தார் என்ற செய்தி கேட்க பெரிதும் வருந்துகிறோம். "உலகில் தோன்றி மறைவது இயற்கை" என்றாலும், இத்தகைய கஷ்ட நஷ்டத்தைக் கேட்க மனம் வருந்தாமலிருக்க முடியவில்லை. உலக இயற்கையை யுணர்ந்த தோழர் ராம.அள. சிதம்பரம் அவர்கட்கு நாம் ஒன்றும் அதிகம் கூறத் தேவையில்லை. நமது அனுதாபம் மட்டும் அவருக்கு உரித்தாகுக!

(புரட்சி இரங்கல் செய்தி 27.05.1934)

Pin It