மே முதல் நாளில் மேதினி எங்கும் தொழிலாளர் நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலாக 1923 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் நாளில் மே நாள் விழா கொண்டாடப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றம் அருகில் உள்ள கடற்கரைச் சாலையில் செங்கொடியினை உயர்த்தி வைத்து, மேநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து உரையாற்றினார். எட்டு மணி நேர வேலையையும் மேநாள் விழாவிற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அப்போது சிங்காரவேலர் முழக்கமிட்டார்.

புரட்சியாளர் அம்பேத்கர் இந்திய அரசின் சட்ட அமைச்சராக பணியாற்றிய போது தொழிலாளர்களின் வேலை நேரம் எட்டு மணி நேரம் என வரையறை செய்து ஆணை பிறப்பித்தார். அறிஞர் அண்ணா தலைமையிலான தமிழக அரசுதான் முதலில் மேநாளை விடுமுறை நாளாக அறிவித்தது. மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் இடையறாத வற்புறுத்தலால், சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, மேநாளுக்கு நாடு முழுவதும் விடுமுறை அளிக்க ஆணையிடப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் பொதுவுடைமை பூமியாய் இருந்த ரசியாவிற்குச் செல்லும் முன்பே மார்க்ஸ் – ஏங்கல்ஸ் தயாரித்த கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்துப் பரப்புரை செய்தார். திரு. திருவாளர் மாண்புமிகு என்றெல்லாம் அழைப்பதற்குப் பதிலாக தோழர் என்றே விளிக்குமாறு வற்புறுத்தினார். பொதுஉடைமைக் கருத்துகளை உள்ளடக்கிய சுயமரியாதை – சமதர்மத் திட்டத்தை அறிமுகம் செய்தார். ரசியாவுக்குச் சென்று அங்குள்ள சோசலிச ஆட்சிமுறையை நேரில்கண்டார் – பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மே நாள் பேரணியிலும் பங்கேற்றார். 1933 ஆம் ஆண்டு அக்டோபரில் குடிஅரசு இதழில் “இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்?” என்ற கட்டுரையில் தீவிரமான கம்யூனிச நடை காணப்படுகிறது என்று அன்றைய ஆங்கிலேயே அரசு குற்றம் சுமத்தித் தந்தை பெரியார் அவர்களையும் அவரதுத் தங்கை (வெளியீட்டாளர்) கண்ணம்மாளையும் கண்டித்து நடவடிக்கை எடுத்தது.

“சுயமரியாதை வீரர்களே! சமதர்மிகளே! தொழிலாளர்களே! தொழிலாளர்களின் தோழர்களே! இந்த ஆண்டு மேநாளை மே மாதம் முதல் தேதியில் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரங்கள் தோறும் ஆயிரக்கணக்கான தோழர்களை – தொழிலாளர்களைத் திரட்டி வெகுவிமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன். தேசம், மதம், சாதி என்கின்ற தேசிய உணர்ச்சிகளை மறந்து, உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லாத் தேச மத, சாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சமவாய்ப்பும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும்; தொழிலாளர் சமதர்ம ராஜ்யம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரச்சாரம் செய்யவும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்” என்றும் தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு (28.04.1935) இதழ் மூலம் அழைப்பு விடுத்தார்.

தந்தை பெரியார் தத்துவங்களைத் தேன் சுவைக் கவிதைகளால் மக்கள் நெஞ்சில் பதியவைத்துப் பரப்பிய சாதனைச்சிகரம் தான் நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்! கடவுள் மத மூட நம்பிக்கை குப்பைகளை பாடலாக்கி, பாராளும் மன்னர்களைப் புகழ்ந்து பரிசில் பெற்று வயிறு வளர்த்த புலவர் கூட்டத்தில், தன்மானக் கருத்துக்களை தமிழுணர்வுப் பாடல்களை, பொதுஉடைமைச் சிந்தனைகளை இசைத்த புதுவைக் குயில்தான் நம் புரட்சி கவிஞர் பாரதிதாசனார். திராவிடர் இயக்கம் மேநாள் விழாவைத் தமிழகத்தில் அறிமுகம் செய்த 1933 ஆம் ஆண்டில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில், “நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்” என்று எழுதிக் கையெழுத்திட்ட பகுத்தறிவு வேழம் தான் நம் புரட்சிக் கவிஞர்!

ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சியை வீழ்த்தி, பொது உடமை அரசை வென்றெடுத்த புரட்சித் தலைவர் லெனின் அவர்களைப் பாமாலையில் 1918 ஆம் ஆண்டிலேயே பாடிப் பெருமைப்படுத்தினார் நம் பாவேந்தர்.

யுகமாகி நின்ற லெனின்! உலகாகி நின்ற லெனின்!
 உறவாகி நின்ற லெனினே!
அகமாகி நின்ற லெனின்! அறிவாகி நின்ற லெனின்!
 அரசாள வந்த லெனினே!
சுகமாகி வந்த லெனின்! துணையாகிவந்த லெனின்
 சுதந்திரமான லெனினே!
நறவுஊறு கின்றமொழி பொருள்ஆர்க்கும் என்றவழி
 நடைகொண்டு வந்த லெனினே!
உறவாகி உலகுஎங்கும் உழைப்பாளர் ஆட்சிநெறி
 உரமாக்கிவைத்த லெனினே!  (ஜனவிநோதினி)

குடிஅரசை நிலைநாட்டி, அருள் உள்ளத்தோடு, அறவாழி ஆட்சி கண்ட சமதர்ம வீரர் லெனினை வாழ்த்திப் பாடியது மட்டுமல்ல, 1924 ஆம் ஆண்டில் லெனின் மறைந்த போதும் புரட்சிக் கவிஞர் இரங்கல் பா எழுதித் தன் இலட்சிய வேட்கையை உலகுக்கு உணர்த்தினார்.

 புத்துணர்வு பெறுவதெந்நாள்? புரட்சிக்குயிர் தருவதெந்நாள்  புயலாக எழுவதெந்நாள்? புரட்டுலகைத் தீர்ப்ப தெந்நாள்?
 புத்துலகப் பொதுஉடமை புதுக்குவதும் நாள் எந்நாள்?
 புரட்டு முதலாளியத்தைப் போக்கிடும் எந்நாளோ”

என்று பொது உடமைச் சமுதாயம் காண ஏக்கம் கொண்டார் நம் புரட்சிக் கவிஞர்.

 புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
 போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
 பொதுஉடமைக் கொள்கை, திசையெட்டும் சேர்ப்போம்
 புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம்!

என உயிர்க்கு நிகராக பொது உடமைக் கருத்துக்களைக் குறிப்பிட்ட புரட்சிக் கவிஞர்.

 இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
 இது எனது எனுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
 உணர்வெனும் கனலிடை அயர்வினை எதிர்ப்போம்
 "ஒருபொருள்தான் எனும் மனிதரைச் சிரிப்போம்

என்று தனி உடமைக்கு எதிராகவும் முரசு கொட்டினார் நம் கவிஞர்

 ஏழை – பணக்காரன், ஆண்டான் – அடிமை, முதலாளி – தொழிலாளி என்ற பேதநிலை நிலைத்து நிற்கத் தலைவிதி தத்துவமும், கடவுள் மத மூடநம்பிக்கைகளுமே காரணம் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார் நம் கவிஞர்

“நடவுசெய்த தோழர் கூலி
நாலாணாவை ஏற்பதும்
 உடலுழைப்பி லாத செல்வர்
உலகை ஆண்டு லாவலும்
 கடவுளாணை என்றுரைத்த
கயவர் கூட்ட மீதிலே
 கடவுள் என்ற கட்டறுத்துத்
தொழிலாளரை ஏவுவோம்” என்று மூடநம்பிக்கை விலங்கை அடித்து நொறுக்கி – சமத்துவத்திற்கான போருக்கு அறைகூவல் விடுகிறார் நம் கவிஞர்.

ஏழைகளைக் கொள்ளையடித்து மோசடியால் முதலாளிகளானார்களே தவிர பிறவிப் பயனால் அல்ல என்ற உண்மையையும் – சமத்துவத்திற்கான போர்க்குரலைத் தொழிலாளர் முழக்கமாகவும் நம் கவிஞர் பாரதி தாசன் பாடுகிறார்.

“மதத்தின் தலைவீர்! – இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே
குதர்க்கம் விளைத்தே – பெருங்
கொள்ளையடித்திட்ட கோடீசுரர்கள்,
வதக்கிப்பிழிந்தே – சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்கவிட்டீரே!
நிதியின் பெருக்கம் – விளை
நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணிவிட்டீர்,
செப்புதல் கேட்பீர், – இந்தச்
செகத் தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின்
சுப்பல்களாக – இனித்
தொழும்பர்களாக மதித்திட வேண்டாம்!
இப்பொழுதே நீர் – பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே – எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே” என்ற பொதுஉடைமைக்கான ஆவேச உரிமைக்குரலை எச்சரிக்கை தந்து ஓங்கி ஒலித்தார் நம் கவிஞர்!

“கõண்பதெலாம் தொழிலாளி செய்தான் – அவன்
காணத்தகுந்தது வறுமையாம் – அவன்
பூணத்தகுந்தது பொறுமையாம்”

என்று ஏளனம் செய்து

“கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ – புவி
வாழ்வது தான் எந்த தேதியோ?
சிற்சிலர் வாழ்ந்திட பற்பலர் உழைத்துத்
தீர்க எனும் இந்த லோகமே – உரு
அற்றொழிந் தாலும் நன் றாகுமே”! என்று அநீதிக்கெதிராக புயலெனச்சீறிப் போர்முழக்கமிடுகிறார் நம் கவிஞர்.

கூலித்தொழிலாளர்கள் எப்படித் தோன்றினார்கள். முன் ஜென்ம வினைப்பயனாலா? அல்ல. கொள்ளைக் கூட்டத்தின் கைவரிசையினால்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் உருவாக்கப்பட்டார்கள் என்ற உண்மை நிலையை,

“கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டபேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம்
கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே
கூலிமக்கள் அதிகரித்தார், என்ன செய்வேன்!
பொத்தல் இலைக் கலமானார் ஏழைமக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்
அதிகரித்த தொகை தொகையாய்ச் செல்வ மெல்லாம்
அடுக்கடுக்காய்ச் சிலரிடம் போய் ஏறிக்கொண்டு
சதிராடு தேவடியாள் போல் ஆடிற்று” என்று பாவேந்தர் அம்பலப்படுத்தினார். இந்தக் கொடுமைக்கு என்ன தீர்வு? கொடியவர்கள் மனம் திருந்துவார்களா? மயிலே மயிலே என்றால் இறகு போடுமா? போடாது! பிறகு என்ன செய்துவது? அதற்கும் வழி சொல்கிறார்.

“ஓடப்பராயருக்கும் ஏழையப்பர்
உதையப்பாராகிவிட்டால், ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!” என்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே இதற்குத் தீர்வு என்றும் வழிகாட்டுகிறார் நம் கவிஞர். 3

“அறிவை விரிவு செய்; அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கம மாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்
புகல்வேன்; உடைமை மக்களுக்குப் பொது
புவியை நடத்து பொதுவில் நடத்து!” என்று வீர உணர்ச்சியை ஊட்டி விடுதலை வீரர்களாக அடித்தட்டு மக்களை களம் இறக்கி – சமத்துவத்தை வென்றெடுக்க அணியமாக்கினார்.

உலக நாடுகளில் ஏழை – பணக்காரன் என்ற வர்க்க பேதம் மட்டும் தான் நிலவுகிறது. அங்கு ஏழை பணக்காரனாகலாம், பணக்காரன் ஏழையாகலாம், தொழிலாளி பொருளீட்டி இலாபம் கண்டால் முதலாளியாகலாம். முதலாளி நட்டத்தில் மூழ்கினால் பஞ்சை பராரியாய் மீண்டும் தொழிலாளியாகும் நிலை தோன்றலாம். ஆனால், நம் புண்ணிய(?) தேசத்தில் வர்க்க பேதத்தை விட கொடிய வர்ணபேதம் என்ற நச்சுப்பாம்பு ஆலகால நஞ்சைக் கக்கிக் கொண்டு படம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது. பிறக்கும் போது சுமத்தப்படும் இழிவு அவன் செத்தப்பிறகும் தொடர்கிறது. பொருளாதார பேதத்தை விட கொடிய வர்ணாசிரம முறை காலம் காலமாக இங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த முள்ளிச் செடிகளை வெட்டிச் சாய்த்து சமதளப்படுத்தாமல், பொதுஉடமைப் பூங்காவை எழுப்ப முடியாது.” கையளவு சிலையைக் கடவுளாக வணங்கும் நிலை உள்ளவரை இங்கே கம்யூனிசம் வர முடியாது” என்று ராஜாஜி கூறியதன் பின்னணியை உற்று நோக்க வேண்டும்.

இந்த இடத்தில்தான் நம் நாட்டு பொது உடைமைக் கட்சியினர் மாறுபாடு கொண்டு, திராவிடர் இயக்கத்தோடு வேறுபட்டு நிற்கின்றார்கள். தேசிய இயக்கத்தோடு கொஞ்சிக் குலாவிடும் அவர்களுக்குத் திராவிடர் இயக்கம் என்றாலே ஒருவித அலட்சியம் படம் எடுத்து ஆடுவதைக் காண்கிறோம். மாகாளி கடைக்கண் வைத்ததால், யுகப்புரட்சி எழுந்ததாகப் பாடிய பாரதியாரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிற “காம்ரேடுகள்' பாரதி தாசன் பக்கம் ஏறெடுத்துக் கூடப் பார்க்க மறுப்பார்கள். அவர்களிடம் புரட்சிக் கவிஞரே மனம்திறந்து பாடினார்.

“பொது உடமைக்குப் பகைவனா நான்?
பொது உடமைக்காரர் எனக்குப் பகைவரா?
இல்லவே இல்லை! இரண்டும் சரியில்லை?
பாரதி பாட்டில் பற்றிய பொது உடமைத் தீ
என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்து
கொழுந்து விட்டெரிந்து தொழிலாளரிடத்தும்
உழைப்பாளரிடத்தும் உணர்வில் உணர்ச்சியில்
மலர்ந்து படர்ந்ததை மறுப்பவர் யாரே” என்று பொது உடமைக் கொள்கை மீதும் பொது உடமை இயக்கத்தின் மீதும் தான் கொண்ட தோழமை உணர்வை வெளிப்படுத்தினார் பாரதிதாசனார்!

“இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால்
அண்டைவீட் டானுக்கு ஒன்று அளித்தால் சோசலிசம்
கறவைகள் இரண்டில் கடிது ஒன்றை விற்றுக்
காளை வாங்குவது காப்பிடலிசமாம்
அவ்விரண் டினையும் ஆள்வார்க்கு விற்று
தேவைக்குப் பால் பெறச் செப்பல் கம்யூனிசம்” என்று பொது உடமைக்கொள்கைகளை எடுத்துக்காட்டுடன் தெளிவுப்படுத்தி நம் நெஞ்சில் பதிய வைத்தார் புரட்சிக் கவிஞர்!

ஏழ்மை, பசி, பஞ்சம், இல்லாமை முதலியன கொடிய முறையில் தாண்டவமாடும் நம்நாட்டில், புரட்சி வெடிக்கவும் சமதர்மம் தழைக்கவும் தடைக்கற்களாக இருப்பவை, வர்ணாசிரம தர்மநெறிகளே மூடநம்பிக்கைக் கொள்கைகளே! என்பதைக் கண்டறிந்து அவை அழித்து ஒழிக்கும் அடிப்படைப் பணியில் முழுவீச்சில் ஈடுபடுவோம்! தொடர்ந்து சமதர்மம் காண்போம்! என மே நாளில் சூளுரைப்போம்!.

Pin It