மக்கள் நலந்தான் மக்கள் நலந்தான்
 என்றே உழைப்பவர் பேரை
  மாண்புகள் சேர்த்த மருத்துவமேதை
   மாமணி நடேச னாரை
ஒக்கச் சிறந்தவர் இவர்என் றேநீ
 ஒப்புக் காட்டுவை யாரை?
  ஒருவரும் இல்லை உயர்த்திப் பாடு
   நடே னார்தம் சீரை!
 வகுப்புரிமைக்கிவர் ஒளியானார்!
 வாழ்கநம் சி. நடேசனார்

"திராவிடர் சங்கம்' கண்ட தொ ன்றேஇவர்
 திருப்பெயர் தன்னைப் பேசும்
  செந்தமிழ் நாடு முற்றும் இவரின்
   செழித்த புகழ்மணம் வீசும்
"திராவிடர் இல்லமும்' கண்டார் மாணவச்
 செல்வர்க்(கு) இலவச வாசம்
  செத்தமொழி என வடமொழி இகழ்ந்திவர்
   தமிழ்மேல் வைத்த பாசம்

வகுப்புரி மைக்காய்ச் சட்ட சபைதனில்
 வாதத் தீப்பொறி பறக்க
  வலிவுடன் இடஒதுக் கீட்டிற்காக
   வழிகள் அமைத்தார் சிறக்க
வெகுமக்கள்தம் கோயில் உடமை
 சொத்துகள் தம்மைப் பறிக்க
  வீணர் முயன்றனர் எழுந்தார் இவர், அவர்
   விலாஎ லும்புகள் முறிக்க!

- கவிஞர். தமிழேந்தி

Pin It