திருவல்லிக் கேணியிலே வாழ்ந்தி ருந்தார்
 சேரிகளே என்கோயில் என்றார்! மக்கள்
அருநெல்லிக் கனிஅவரே என்றார்! நோயால்
 அழுதவர்க்கு நடேசனார் மருந்து தந்தார்
ஒருசல்லிக் காசுக்கும் வழியற் றோர்க்கே
 உவந்தளித்தார் தம்பணத்தை மருந்து வாங்க!
மருத்துவரில் இவர்போல ஒருவர் இல்லை
 மாநிலத்தில் இவர்புகழும் மறைவ தில்லை!
நகராட்சித் தேர்தலிலே எதிர்த்து நிற்க
 நாட்டினிலே ஆள்எவரும் கிடைக்க வில்லை!
நிகழ்காலம் நிகரற்ற தலைவர் என்று
 நெஞ்சினிக்கப் பேசியது! தீண்டாமைக்குப்
பகையானார்! ஏழைகளின் நலனுக்காகப்
 பாடுபட்டார்! பசிவயிறு வாழ்த்துக் கண்டார்!
வகையாகத் திராவிடமன் றத்தை நாட்டு
 வரலாற்றில் முதன்முதலாய்த் தொடங்கி வைத்தார்!
சென்னைப் பல்கலைக் கழக ஆட்சி மன்றச்
 செயற்குழுவில் உறுப்பினராய் ஆனார்! ஏழ்மைப்
பின்னணியில் இருப்போர்க்கும் பேச்சிழந்த
 பிற்பட்டோர் அனைவருக்கும் கல்வி என்ற
அன்னத்தை ஊட்டுங்கள் என்றார்! நாட்டில்
 அறியாமை இருள்நீங்க வேண்டும் என்ற
எண்ணத்தை மன்றத்தில் முழக்க மிட்டார்!
 எங்கெங்கும் தமிழ்வளர்ப்பீர் என்று நின்றார்!
சட்டமன்ற உறுப்பினராய்த் தேர்வு பெற்றார்!
 சந்தனத்தைச் சாணமென்பார் நடுங்க லானார்!
தட்டுகிற வேலிமுள்ளைத் தைக்கு முன்னால்
 வெட்டுங்கள் எனமுழங்கிச் சாதித் தீயில்
கொட்டுகிற அன்புமழை ஆனார்! பொத்தல்
 குடிசைகளில் வாழ்ந்தவர்கள் கும்பிட்டாரே!

– ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

Pin It