ஒரு பொது நிகழ்ச்சி நடக்கும்போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும், எப்படியாவது அப்பொது நிகழ்ச்சி நடந்து முடிந்தால் போதும் என்று கருதிக் கொண்டு, சில கொள்கைகளைத் தளர்த்தி கொள்வதும் தவறல்ல.

குறிப்பாக, திருமண நிகழ்ச்சிகளில் இரு சாராரும் ஒரே கொள்கை, ஒரே குறிக்கோள் – கொண்டவர்களாக இருந்தாலொழிய ஒரே மாதிரியான முறையில் திருமண நிகழ்ச்சியையோ, முன்–பின் நிகழ்ச்சிகளையோ நடத்த முடிவதில்லை. அவரவர் வீட்டில் இம்மாதிரி சந்தர்ப்பங்கள் வந்தாலொழிய இதை உணர முடியாது.

திருமணத்தின் போதும், சாவு வீட்டிலும்தான் சுற்றத்தார் தங்கள் முழுத் “திறமை''யையும் அதிகாரத்தையும் காட்டுவது வழக்கம்! சடங்கிலேயே நம்பிக்கையில்லாத ஒரு பச்சை நாத்திகர் மரணமடைந்து விட்ட பிறகு, அவர் சவத்தின் நெற்றியில் குறி வைப்பதும், வைதீகச் சடங்குகளை நடத்துமாறு பிறரை வற்புறுத்துவதும் அடிக்கடி காணக்கூடிய காட்சிகள். நெருங்கிய சுற்றத்தார்கள் வேண்டுமென்றே இம்மாதிரி விஷமத்தனம் செய்யும்போது மற்றவர்கள் எப்படித் தலையிட முடியும்?

இதையெல்லாம் நோக்கும்போது “என் மரணத்துக்குப் பிறகு என் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காகவும், கண்களைக் கண் ஆஸ்பத்திரிக்கு நன்கொடையாகவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு இறுதி விருப்பக் குறிப்பை (will) எழுதி வைக்கிறேன்'' என்றுகூட முன் கூட்டியே எழுதி வைத்து விடுவது நல்லது என்று தோன்றுகிறது.

இப்படி எழுதி வைத்தாலுங்கூட சட்டப்படி இறந்தவரின் சவம் அவரது வாரிசுதாரர்களுக்கு உரியது. ஆதலால், மருத்துவ நிலையத்தார் வலுக்கட்டாயமாக அச்சவத்தைப் பெற முடியாது என்று சட்ட நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

வைதீகமும் பழமையும் எந்த நேரத்தில் எந்த விதத்தில், தன் குறும்புத்தனத்தைக் காட்டுவது என்று எந்நேரமும் காத்துக் கொண்டேயிருக்கிறது. தினசரி வாழ்க்கையில் பகுத்தறிவுவாதிகளுடன் வாதமிட்டு வெற்றிபெற முடியாது என்பதை வைதீகமும் பழமையும் உணர்வதனால்தான் மண வீட்டிலும் மரண வீட்டிலும் தன் கைவரிசையைக் காட்டி, இம்மாதிரி “பிக்பாக்கெட்'' தொழில் செய்து வருகிறது! இந்தக் கேவலத் தொழிலை நாம் பல இடங்களில் கண்டிருக்கிறோம். இதனால்தான் சிறிது விட்டுக் கொடுக்கும் தாராள மனப்பான்மை உடையவர்களுக்குக்கூடப் பழமை விரும்பிகள் மீது கடுங்கோபம் வந்து விடுகிறது.

“பழமை'' என்பதற்காகவே பழைய வழக்கங்களை அறவே வெறுத்து விடக் கூடாது. எடுத்துக்காட்டாக, திருமணத்தின்போது மேளம் இருப்பதோ, மாலை அணிவதோ, மணமக்கள் ஊர்வலம் செல்வதோ, பகுத்தறிவுக்கு முரண்பட்ட செயல்களல்ல என்பதே நம் கருத்து. இவற்றில் எதுவுமே தேவையில்லாமல் திருமணப் பதிவு நிலையத்தில் பதிவு செய்து கொள்கின்ற திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகவில்லையா? ஆனாலும் வாழ்க்கையிலேயே ஒரு இன்பமான நிகழ்ச்சி நடக்கும்போது அதைக் கொண்டாட நினைப்பது மனித இயற்கையல்லவா?

ஆனால் பழமையிலும் சில கண்மூடி வழக்கங்கள், தேவையற்ற நிகழ்ச்சிகள், சடங்குகள் முதலியன இருக்கின்றனவே! இவற்றில் சிலவற்றிற்கு விட்டுக் கொடுத்தாலும், அடிப்படையான கடமைகளை எப்படிக் சகித்துக் கொள்வான், பகுத்தறிவுவாதி?

எடுத்துக்காட்டாக தாலி கட்டுவதைக் கவனிப்போம், இதைப் போன்ற மடமை வேறெதுவுமேயில்லை. இதற்காக ஒரு திருமணத்தில் மணப்பெண்ணிடம் தாலியைக் கொடுத்து மாப்பிள்ளைக்குக் கட்டச் செய்தாராம், ஒரு தலைவர்! இது, குளிக்கச் சென்றவன் சேற்றை யள்ளிப் பூசிக் கொண்டு வந்ததைவிட அறிவற்ற செய்கையாகும்! இது நிற்க. திருமணம் ஆனவர் என்ற அடையாளத்துக்காக பெண்ணுக்குத் தாலி தேவை என்றால், ஆணுக்கு மட்டும் அத்’தேவை’ இல்லையா? ‘தாலி' என்பது பெண் அடிமையின் ஒரு சின்னம் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் மணப்பெண்ணும், பெண் வீட்டாரும் ‘தாலி' என்பதைப் புனிதமாகக் கருதிக் கொண்டும், அதனிடம் ஒரு நடுக்கம் கொண்டும் இருப்பதனால், பத்து லட்சத்துக்கு ஒரு திருமணம்கூடத் தாலி இல்லாமல் நடக்க முடியாமலிருக்கிறது. நமக்குத் தெரிந்து, இதுவரையில் இரண்டே திருமணங்கள்தாம் இப்படி நடந்துள்ளன. இவை இரண்டும் கலப்புத் திருமணங்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, இம்மாதிரிச் சடங்குகள், அல்லது பழமைக்கேடுகள் இரண்டொன்றுக்கு எந்தப் பகுத்தறிவுவாதியும் விட்டுக் கொடுத்து (அல்லது அடிபணிந்து) தோல்வியை அணைக்க வேண்டியே ஏற்பட்டு விடுகிறது.

ஆனால், ஓமப்புகை, குத்துவிளக்கு, வடமொழி "மந்திரம்' அம்மி மிதில், “அருந்ததி பார்த்தல் – போன்ற மடமைகளைக் கூட அனுமதிப்பதென்றால் இது பழமைக்கு அளிக்கின்ற மரியாதையல்ல; பழமையை எதிர்த்து நிற்க முடியாத கோழைத்தனமேயாகும்.

“நமக்குப் பழமையில் வெறுப்புமில்லை, புதுமையில் வெறியும் இல்லை. நாம் பழமைக்கும் மதிப்பளிக்கிறோம்; அதற்குச் சான்று இங்கு வைத்துள்ள குத்து விளக்குகள்.''

என்றுதிரு. அண்ணாத்துரையவர்கள் ஒரு திருமணத்தில் பேசியுள்ளதாகப் படித்தோம். இது பழமைக்கு மதிப்பளிப்பதல்ல; பழமை நம்மைக் கண்டு கேலி செய்வது! பட்டப்பகலில் விளக்குத் தேவைதானா? அப்படித் தேவையென்றே ஒப்புக்கொண்டாலும், மின்சார விளக்கு ஒன்று போதாதா?

“குத்து விளக்கு'' வெறும் பழமை மட்டுமல்ல, வைதீகத்தின் குருட்டுச் சின்னம்.

வடமொழி மந்திரத்தையும் அனுமதித்துவிட்டு, “பழமைக்கும் மதிப்பளிக்கிறோம்'' என்று கூறலாமா?

திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் மட்டுமே ஒத்துப்போனால் கூட முடியாது. அவர்களின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்– இத்தனை பேரும் ஒத்துப் போக வேண்டும். இல்லையேல் கலவரமும் பூசலும்தான்! குத்துவிளக்குக்காக இரண்டொரு பழமை விரும்பிகள் பிடிவாதமாக ஒற்றைக்காலில் நிற்பதுண்டு! இம்மாதிரி சமயங்களில் மணமக்கள் மன உறுதியுடன் எதிர்த்தõலொழியப் பழமை இணங்காது.

இன்றைய “மதச்சார்பற்ற'' (சுத்தப்பொய்!) அரசாங்கமும் கூட எந்தத் திறப்பு விழாவுக்கும் குத்துவிளக்கு ஏற்றிக் கொண்டிருக்கிறது. இது “பழமைக்கும் மதிப்பளிப்பது'' அல்ல; வைதீகத்தின் குட்டுக்குக் குனிந்து கொடுப்பது; இந்து மதத்தின் உதைக்கு முதுகைக் காட்டுவது; ஆரியத்தின் காலில் விழுந்து கிடப்பது.

“சுயமரியாதைத் திருமணம்'' என்றால் குறைந்த அளவு இன்னின்ன மூடச்சடங்குகளாகவது விலக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

மேலும், நாற்பதாண்டுகட்கு முன்பு நடைபெற்ற அதே பழைய “மாடல்'' திருமணம்தான் இன்றும் “சுயமரியாதைத் திருமணம்'' என்ற பெயரால் நடந்து வருகிறது.

“முகூர்த்த மாதம், முகூர்த்த நாள், நல்ல நேரம்'' – முதலிய பழமைகளில் சிறிதுகூட மாற்றமில்லையே! தாலியும்கூட இருக்கிறதே! பார்ப்பனரும், வடமொழியும், ஓமப் புகையும் நீங்கியிருப்பது மட்டும் போதுமா? ஆனால் இவற்றைக்கூட விலக்க முடியாத பழமை விரும்பிகள் ஏராளமாயிருக்கின்றனரே, என்ன செய்வது?

(‘அறிவுப்பாதை’ – 14.5.1965)

Pin It