ஒரு தேவதாசியை விபச்சாரி என்று சொன்னதற்காக அவள் கோபித்துக் கொள்ளுவது போலவும், ஒரு வக்கீலை அவர் காசுக்குப் பேசுகிறவரே ஒழிய நேர்மைக்காகப் பேசுகிறவர் அல்லர் என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வது போலவும், ஒரு வியாபாரியைப் பொய் பேசுகிறவர் என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வது போலவும், கடவுள் நம்பிக்கைக்காரர்களை முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி என்று சொன்னால் அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

இதற்குக் காரணம் பெருவாரியான மக்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருப்பதுதானாகும். இன்றைக்கு நான் கடவுள் நம்பிக்கைக்காரர்களைக் கேட்கிறேன் – ரூபாய் பதினாயிரம் பந்தயம் கட்டி கேட்கிறேன்; அதாவது

“சர்வ வல்லமையுள்ள கடவுள் என்பதாக ஒன்று இருக்கிறது; அது சர்வசக்தி, சர்வ வல்லமையுடையது என்பதை நான் என் மனம், மொழி, செய்கையால் நம்புகிறேன்; அதற்கேற்பவே நடந்து கொள்கிறேன்.'' என்று யாராவது ஒருவர் சொல்லட்டும்; சொல்ல முன்வந்து தன் நடத்தையைக் கொண்டு மெய்ப்பிக்கட்டுமே பார்க்கிறேன்; யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்து வைக்கிறேன் என்று கூறுகிறேன். யார் வருகிறீர்கள்? யார் வருகிறார்கள்? எந்தப் பத்திரிக்கைக்காரர் பக்கத்தில் வரத் தயாராயிருக்கிறார்? எந்தப் பார்ப்பனர் வரத் தயாராயிருக்கிறார்? எந்த ம.பொ.சி.யோ வேறு எந்த சியோ வரத் தயாராய் இருக்கிறார்களா? வேறு யோக்கியமானவர்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும் என்று சவால் விடுகிறேன்.

இவ்விஷயத்தில் மக்கள் பெருவாரியாக முட்டாள்கள் என்கின்ற காரணத்தால், நினைத்த அனாமதேயமெல்லாம் இவ்விஷயத்தில் வாயை வைத்துக் கண்டபடி உளறினால், கண்டபடி எழுதினால் கடவுள் நம்பிக்கைக் காரர்கள் என்பவர்கள் யோக்கியர்களாக, அறிவாளிகளாக ஆகிவிடுவார்களா?

சில காரியங்களில் மக்கள் பொய்ச் சொல்லியாக வேண்டும், சில காரியங்களில் மக்கள் அயோக்கியவர்களாக ஆகித் தீர வேண்டும். சில காரியங்களில் மக்கள் முட்டாள்களாக ஆகித் தீர வேண்டும். இது எனது 70, 75 வருஷத்திய அனுபவம், கொள்கை, பேசியும் எழுதியும் வருவதுமான விஷயமாகும். இது மாத்திரமா?

உலகில் கடவுள் சம்பந்தமான சர்ச்சைகள் 2, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருகின்றன. கடவுளைப் பற்றி பிரச்சாரம் செய்ய பார்ப்பனர், இவர்களால் நடத்தப்படும் பத்திரிகைகள், கிருஸ்துவர், முஸ்லீம் ஆகியவர்கள் ஸ்தாபனம் வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். கோயில், சர்ச், மசூதிகள் மூலமும் பண்டிகைள் மூலமும் செய்கையில், பரப்பி வருகின்றார்கள், பார்ப்பனர் முதல் பலர் கடவுளாலேயே, கடவுள் பிரச்சாரத்தாலேயே வாழ்ந்து வருகின்றார்கள்; வயிறு வளர்க்கின்றார்கள். இதற்காகப் பல கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள், வரும்படிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல செல்வர்கள், உதவி வருகின்றார்கள். பாதிரி, முல்லா, சங்கராச்சாரி, குருமார், பண்டார சன்னதி முதலிய பலர் பிரச்சாரம் செய்கிறார்கள். ஏராளமான புத்தகங்கள் – வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், இலக்கியம் என்பதாக அநேக புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றின் பலனால் முட்டாள்கள், அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள் இருப்பது மாத்திரமல்லாமல் உற்பத்தியாகிக் கொண்டும் வருகின்றார்கள்.

அறிவாளிகளாக, யோக்கியர்களாக இருப்பவர்கள் தங்கள் சுயநல காரியத்தைப் பார்த்துக் கொண்டு இந்த முட்டாள் தனங்களைப் பற்றிச் சிந்திக்காமல் கவலையற்றிருக்கின்றார்கள். கடவுள் பிரச்சாரகர்கள் அயோக்கியர்களும், மடையர்களுமானதால் காலித்தனமான – பலாத்காரமான காரியங்களிலும் ஈடுபட்டு பல கொடுமையான – கொலை பாதகமான காரியங்களிலும் ஈடுபட்டு மக்களைக் கொன்று குவித்து இருக்கின்றார்கள்.

இதற்கு உதாரணம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்கின்ற பல அயோக்கியர்களும், இவர்களால் சமணர்கள், பவுத்தர்களை கழுவேற்றியும் கொன்று குவித்ததுமான அயோக்கிய கொலை பாதகச் செயல்களும், தேவாரம், பிரபந்தம் முதலாகிய நூல்களுமே போதிய சான்றாகும்.

தொண்டரடிப் பொடியாழ்வார் என்கின்ற ஒரு வைணவப் பார்ப்பன அயோக்கியன், சமணர்களும், பவுத்தர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆனதால் அவர்களது தலையை அறுப்பதே (வெட்டுவதே) அவசியமாகும் என்று பாடியிருக்கிறான்.

அந்தப்படி ஏராளமான பவுத்தர்களின் தலையை வெட்டியும் இருக்கிறார்கள். இவை இன்று காஞ்சி, செய்யாறு முதலிய இடங்களில் கற்சிலையாகவுமிருக்கின்றன.

இதுபோலவே சம்பந்தன் என்னும் ஒரு அயோக்கிய சைவ பார்ப்பான் “சமணர் – பவுத்தர்களின் பெண்களைக் கற்பழிக்க வேண்டும்'' என்றும், பல அயோக்கியத்தனமாகவும் கொலை பாதகமாகவும் பாடியிருக்கிறான். இன்றும் சீர்காழி, மதுரை முதலிய இடங்களில் சமணரைக் கழுவேற்றும் நிகழ்ச்சி பண்டிகையாக, உற்சவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்பாடல்கள் இன்றும் வைணவர்களாலும் சைவர்களாலும் பக்திப் பாடல்களாகப் பாடப்பட்டு வருகின்றன. மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை மிக இழிவுப்படுத்திக் பாடப்பட்ட பாடல்கள் அநேகம் பாடப்பட்டு வருகின்றன; நூல்களும் விற்கப்படுகின்றன.

இந்த நிலையில் கடவுள் நம்பிக்கைக்காரர்களைப் பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் எப்படித் தவறானவைகளாகக் கருதப்பட முடியும் என்று கேட்கின்றேன்.

(11.10.1969 “விடுதலை'' நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

Pin It