ஒருமொழி பேசும் மக்கள் ‘இனம்’ என அழைக்கப் பெற்றனர். ஓர் இனமக்கள் பேசுவது ஒரேமொழி என்பதும் இதனால் உணரப்படும். அதனால்தான் ஓர் இனத்தை அழிக்க விரும்பினால், அவ்வினம் பேசும் மொழியை அழித்தால் போதும் என்ற உலகமொழியும் எழுந்தது. மொழிப்பேரறிஞர் தேவநேயப்பாவாணரும்,

“தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் - அவனே

தமிழுயரத் தானுயர்வான் தான்’’

என்று தெளிவாய்க் கூறினார். “தமிழின் விடுதலை தமிழின விடுதலையே!’’ என்றும்அறுதியிட்டுரைத்தார்.

ஆயின், சிலர் சொல்வது போல், “மொழியால் தமிழன்; இனத்தால் திராவிடன்’’ என்பது ஏற்கவியலாக் கூற்றேயாம். மொழியால் தமிழன் என்பது சரி. மொழி வழியே இனம் என்னும் போது, இனத்தாலும் தமிழன் ஆதலே சரி. அவ்வாறு இல்லையெனில்,

“தமிழன்’’ என்றோர் இனமுண்டு

தனியே அவற்கொரு குணமுண்டு” என்று நாமக்கல் பாவலரும்,

“தமிழி னமொரு தனியினம்

தனக்குத் தானே நிகழினம்.

அமிழ்தெ னுமவ ரதுமொழி

அதுபோ லிலைவே றொருமொழி’’ என்று பாவேந்தரும் பாடியிருப்பார்களா?

“இனத்தால் திராவிடன்’’ எனில், திராவிடன் மொழி என்பது யாது? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய பன்மொழிகளா? பன்மொழி பேசும் பல்லினத்தார் எவ்வாறு ஓரினமாகல் கூடும்? நீதிக்கட்சிக்குத் தமிழறிஞர்களோடு கூடியெடுத்த முடிவின்படி ‘தமிழர் கழகம்’ எனப் பெயர் சூட்டியிருப்பின் பல சிக்கல்கள் தீர்க்கப் பட்டிருக்கும். திராவிடர் கழகம் எனப் பெயர் சூட்டிவிட்ட கேட்டால், அதன்வழி பல கட்சிகளும் உருவாகி நாம் மட்டும் திராவிடத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கும் நிலையும், அச் சொல்லால் வளர்ந்து ஆட்சியையும் பிடித்து விட்ட நிலையில், உண்மை உணரும் நிலையிலும் அதிலிருந்து மீண்டு வெளிவர முடியா இழிநிலையும் ஏற்பட்டுவிட்டன.

எண்ணிப் பாருங்கள். நாம் எந்தப் பதிவிலாவது தமிழன் என்று சொல்லிக் கொண்டதுண்டா? ஒரு தமிழச்சி வயிற்றில் பிறந்த நம்மால் ‘தமிழன்’ என்று எந்த ஆவணத்திலாவது பதிய முடிகிறதா? தமிழன் என்று... மேடையில் முழங்கலாம்; பாட்டுப் பாடி நெஞ்சம் நிமிர்த்தலாம்; ஏட்டில் எழுதி இன்புறலாம்; நமக்குள் பேசிப் பெருமை கொள்ளலாம். ஆனால், பதிவாக - ஆவணமாக நம்மைத் ‘தமிழன்’ என்று வெளிப்படுத்த முடியுமா?

1966இல் நான் ஒரு நடுவணரசு ஊழியன். எனக்கு விழா முன்பணம் ஆண்டிற்கொருமுறை கிடைக்கும். கூடுதல் வட்டி இல்லாக் கடன் என்பதால், அதனை ஆண்டுதோறும் பெறுவேன். அதற்கான படிவத்தில் இனம், சாதி என்ற இடத்தில் ‘தமிழன்’ என்றே எப்போதும் குறிப்பேன். அப்போது, அலுவலகத் தலைவர், “நீ ஒருவன் குறிப்பதால் என்ன பயன்?’’ என்று கேட்டார். இவ்வாறு தமிழுணர்வுள்ள  சிலரும் குறித்திருப்பர். எல்லாரும் ‘தமிழன்’ என்று உரிமையோடு குறிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவ்வளவு ஆண்டுகளாகியும் ஈடேறச் செய்யாமல் மாய்ந் தொழியப் போகிறோம்!

நாமக்கல்லார் அதே பாடலில்,

அமுதமூறும் அன்பு கொண்டிங்

கரசு செய்த நாட்டில்

அடிமை யென்று பிறர்ந கைக்க

முடிவ ணங்கி நிற்பதோ!

என்றும் ஏங்குகிறார். இவ்வாறு அடிமையாய் இருப்பதால் தான், ஈழத்தில், நம் தமிழினம் அழியும் நிலையைத் தெரிந் தும் காக்க வக்கற்றுக் கை பிசைந்து கொண்டிருந்தோம்.

இனியும் விழிக்கவில்லை யென்றால், தாய்த் தமிழ்நாட்டிலும் தமிழினம் அழியும் பேரழிவு ஏற்படுவதை யாராலும் தடுக்க இயலாது.

அதற்கு முதற்படியாக-

2011ஆம் ஆண்டிற்கான குடிமக்கள் கணக்கெடுப்பு சூன் திங்களில் தமிழ்நாட்டில் வீடு வீடாக வந்து எடுக்கவுள்ள னர். முதன்முறையாகப் பன்னோக்கு அட்டையும் மக்களுக்கு அளிக்க விருக்கின்றனர். அதில் தேசிய இனம், மதம், சாதி முதலிய அனைத்திலும் “தமிழன்’’ என்றே சொல்வோம்; சொல்வதோடு நம் கண் முன்னே எழுதவும் செய்வோம்.

“இந்தியர் அல்லர்; திராவிடர் அல்லர்; இந்துவும் அல்லர்; நாம், நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்! என உலகப்பர் காதில் உரக்க முழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது’’ என்று எரிமலை வாயின்மேல் நின்று அலறிய அறிஞர் குணாவின் கூற்றை நெஞ்சில் நிறுத்தி, நிலைப்படுத்த வழிகாண்போம்!

நாம் உணர்வுபொங்கப் பேசுவோம்; நரம்புகள் புடைக்க உணர்வூட்டப் பேசுவோம்; உணர்வுகள் கொப்புளிக்க உரக்கப் பாடுவோம்; உணர்ச்சிப் பெருக்கில் உயிரையும் விடத் துடித்தெழ எழுதுவோம்.

ஆனால்... ஆனால்... ஆனால்...

உருப்படியாய் என்ன செய்தோம்?

எண்ணிப் பாருங்கள், தமிழர்களே!

உருப்படியாய் என்ன செய்தோம்?

‘தமிழன்’ என்று சொல்வோம். அல்ல - பதிவோம். தலைநிமிர்ந்து நிற்போம். அல்ல - என்ன விலை கொடுத்தேனும், தலைநிமிர வழிகாண்போம்!

Pin It