சாதி தேசியத்தைச் சிதைத்துக் கொண்டிருப்ப தால்தான் இந்தியாவின் பல்வேறு மாநில முதலாளிகளும் இந்தியப் பெரு முதலாளிகள் அணியில் இணைந்துள்ளனர். சாதியை ஆரியர்களே உருவாக்கினர் எனும் பார்வை ஏறத்தாழ 1 நூற்றாண்டாக சாதியின் தோற்றுவாயைக் கண்டறிந்து மக்களிடம் எடுத்துச் செல்லத் தடையாக உள்ளது. சாதியைக் குமுகாயமாகப் பார்க்காமல் பண்பாடாகக் காண்பது சாதிக்கெதிரான போராட்டத்தை வடிவமைப்பதிலும் அணி சேர்ப்பதிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

சமற்கிருதம் செயற்கை மொழி என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை ஆட்சியாளர்கள் அரசர் கால முதல் இன்று வரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கான விடை இன்னும் சரியாகச் சொல்லப்பட வில்லை. மனுவின் காலம் கி.பி.யைச் சார்ந்ததெனின் தொல்காப்பியத்தில் சாதி ஏன் வந்தது? யாரால் வந்தது? மனு கூறும் வருண நெறியும், பாண்டிய நெடுஞ் செழியன் கூறும் வருண நெறியும் ஒன்றா? அதை எப்படிப் புரிந்து கொள்வது? நம்முடைய திணைக் குமுகத்தில் சாதிக்கான மூலக்கூறு இல்லையா?

திணைக்குமுகம் வளர்ந்து சாதிக் குமுகமாக மாற வில்லையா? மாறவில்லை எனில் திணைக்குமுகம் ஒழிந்தபின்னால் சாதியற்ற தமிழன் வாழ்ந்திருந்தான் என்பதற்கான தடயம் உண்டா? சாதியை ஒழிப்பதற்கான இந்த நூற்றாண்டில் கையாளப்பட்ட நடவடிக்கைகள் பயனற்றவை என்பது இன்னும் தெளிவாகவில்லையா? நாம் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து விட்டோமா? கடந்த காலத்துப் பட்டறிவின் பின்புலத்தில் புதிய தடம் பதித்துள்ளோமா? இல்லை என்பதே எனது விடையாகும்.

ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் நுழைந்தபோது தந்தை வழிக் குடும்பத்தோடு வந்ததாகவே வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். ஆனால் குந்தி தன் மக்களைப் பெற்றெடுத்த வரலாறு நம்மை ஆழ்ந்து எண்ண வைக்கிறது. அவள் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுத்ததும் ஒருத்தனுக்கு மனைவியாக இருந்து கொண்டே இன்னொருத்தனுடன் இணை மண முறையில் இணைந்துதான் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. பழங்கதையில் இது, அவள் இறைவனை எண்ணிய மாத்திரத்தில் கருத்தரித்திருப்பதாகவும் பாண்டுவுடன் அவளது திருமணம் நிகழ்வதற்கு முன்பாக அவள் பெற்ற அருளை (வரத்தை) ஆய்ந்தறிய சூரியனை எண்ணிய மாத்திரத்திலேயே கருவுற்றுக் கர்ணனைப் பெற்றெடுத்தாள்' என்று கூறப்படுகிறது.

பாஞ்சாலி ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி எனப்பட்டது குழு மணத்திற்குட்பட்ட இணை மணத்தினை மேற்கொண்டதையே காட்டுகிறது. பாண்டவர் என்பது பாண்டியர் என்பதன் திரிபு என்பாரும் உளர். தொல்குடிக் குமுகத்தில் பெண்ணுரிமை எப்படி இருந்தது என்பதுணரலாம். குந்தி, பாஞ்சாலி, பாண்டு, பாண்டவர் இவரெல்லாம் ஆரியரா என்பதில் ஐயத்திற்கிடமற்ற விடை கண்டறியப்பட வேண்டும். இவர்கள் ஆரியராக இருந்திருக்க முடியாது என்பது என் கருத்து. நம்முடைய தொன்மங்கள் அனைத்தும் தெற்கிலிருந்தே உருவாக்கப்பட்டிருந்து இருக்க வேண்டும்.

நாவலந் தீவு 56 தேசங்களைக் கொண்டதாக இருந்தது என்பது தொன்மங்கள் தரும் செய்தியாகும். தன் தேர்வு மணம் (சுயம்வரம்) இந்த 56 தேச அரசர்களை மட்டுமே அழைத்து நடத்தப்பட்டது. அவற்றிற்கு வெளியே இருந்த அரசர்கள் அழைக்கப்பட வில்லை. ஏன்? சாதி இந்த 56 தேசங்களுக்கும் பொது. சாதிக்கும் சாதி இன்மைக்குமான போராட்டம் தன் தேர்வு மணத்தின் மூலம் சமனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆணாதிக்கக் குமுகம் பெண்ணுக்கு இறுதியாக வழங்கிய உரிமை இது. இவ்வாறு சாதி நம் நிலத்திற்கே உரியதாக உள்ளது. எனவேதான் வேறுபகுதிகளில் சாதி இல்லை.

வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்டுப் பின்னர் இந்தியக் கொள்ளைக்காரர்களாலும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்தியா, சாதியும் வகுப்பும் இருக்கும் வரை இருக்கும். சாதி எங்கே இற்று வீழ்கிறதோ அங்கே இந்தியா துண்டாகி விடும். ஆகவேதான் சாதியைத் தக்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது. இந்தியாவை ஓர் உறுப்பு ஆட்சியாக மாற்ற அத்துவைதம் பயன்படுகிறது. அதன்படி ஒரு மொழியே அவ்வாட்சிக்குத் தேவை. சோழன் வியத்துநாம் வரை சென்றாலும் அவனுக்குத் தேவையாய் இருந்தது. டாடாவும் கருணாநிதியும் ஐ.நா. மன்றம் வரை சென்றாலும் அவர்களுக்கு முதலில் இந்தியும் பிறகு சமற்கிருதமும் தேவைப்படுகிறது. கலைஞர் நடுவண் அரசில் பங்கேற்றுக் கொண்டே இந்தியையும் சமற்கிருதத்தையும் எதிர்த்ததாகச் சடுத்தம் பேசுவது பொருத்தம் அன்று. ஈழத்தைத் தூக்கி நிறுத்தியது போன்றதே!

அரசர்கள் காலத்தில் ஒற்றாடுவதிலிருந்து ஒடுக்குவது வரை சமற்கிருதத்தின் வாயிலாகவும், பிராமணர்கள் வாயிலாகவும் நடந்தேற அரசர்கள் முன் வந்தார்கள். எனவேதான் சமற்கிருதம் பிராமணன் கற்பதற்கான மொழியாயிற்று. உபநிடதங்களைச் சத்திரியர்கள் இயற்றிப் பிராமணர்களிடம் ஒப்படைத்தது ஆட்சியியலுக்கு ஏற்றவாறு பாட்டரங்கமும் (தத்துவமும்) பண்பாடும் உருவாக அவை துணை புரிந்தன. ஆட்சியாளனால் அதைச் செய்ய முடியும். பிராமணனால் அதைப் பரப்ப மட்டுமே முடியும். ஆனால் தொல்காப்பியமும் அதற்குப் பிற்பட்ட கழக இலக்கியங்களும் குறிப்பிடும் பார்ப்பான் பிராமணனா? அவன் ஓதியது வேதமா? மறையா? என்றெல்லாம் எண்ணிப் பார்த்தோமானால் பிராமணச் சூழ்ச்சியால் சமற்கிருதமும் வேதமும் முன்னிலைப்படவில்லை. அரசுகளின் தேவையால் முன்னிலைப்பட்டது என்பது புரியும்.

எனவே ஆட்சியாளனை எதிர்ப்பதென்பது அவன் யார் யாரையெல்லாம் புரந்து காக்கின்றானோ அவனையெல்லாம் அவனோடு சேர்த்து எதிர்க்க வேண்டும். அதேபோல் ஆட்சியாளன் கையாளும் வழிகளுக்கு நேர்மாறான வழிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். சுரண்டல், சொத்து, சாதி அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆகவே சாதியை எதிர்ப்பது என்பது சுரண்டலுக்கு எதிரானதாகவும் சாதிக்கு எதிரானதாகவும் இருக்க வேண்டும்.

அடுத்து மொழி என்பது கருவியே. கருவியில் லாமல் எந்த ஒரு குமுக மாற்றமும் நிகழ்ந்துவிட வில்லை. ஏருக்கு மாற்றாக உழவு எந்திரம் முதலாளியத்தை அழைத்து வந்தது அல்லவா? அவ்வாறே ஓர் இனத்தின் மொழியை முடமாக்கி னாலோ, அழித்தாலோ அம்மொழி பேசும் இனத்தை ஒழிப்பதற்கே ஒப்பாகும். எனவே சுரண்டல், சொத்து, சாதிக் கெதிரான போராட்டத்தோடு மொழியுரிமைக் கான போராட்டமும் இணைந்தே நடத்தப்பட வேண்டும். இந்தப் பொருளில்தான் "தேசிய யுத்தத்தை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும்' எனும் மூல மந்திரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பிர்லா, டாட்டா இவர்களின் நலன் இப்போது இந்தியாவிற் குள் மட்டுமில்லை, அதைத் தாண்டியும் உள்ளது. எனவே அவர்கள் பன்னாட்டு மூலதனத்தோடும் முதலாளிகளோடும் இணைகின்றனர். எனவே இந்திய அரசும் பன்னாட்டு முதலாளிகளையும் மூலதனத் தையும் நடைக் கம்பளம் விரித்து வரவேற்கின்றது. எனவே பன்னாட்டு முதலீட்டுக்கும் முதலாளிகளுக் கும் எதிராகவும் நாம் போராடியாக வேண்டியுள்ளது.

எனவே தொல்காப்பியத்திலும் கழக இலக்கியத் திலும் சாதி, வருணம் பற்றி வரும் அனைத்தையும் இடைச் செருகல் என்றும் ஆரிய பிராமணர்களின் வேலை என்றும் நாம் கூறுவோமானால் கடந்த காலச் சொல்லாடல்கள் வழி நாம் பெற்ற படிப்பினை எதுவுமில்லை என்றாகி விடும்.

இறுதியாக ஒன்று. திப்பு சுல்தானின் வாளில் நானோ பொருள்கள் பொதிந்துள்ளன என்பதை வெளிநாட்டு அறிவியலாளனால் அறிவிக்க முடிகிறது. நமது செய்தியை நம்மால் அறிய முடியவில்லை. நமது மொழி அறிவியல் வலிமையற்று உள்ளது. அதை உருவாக்க ஒவ்வொருவரும் உழைத்தாக வேண்டும்.

 

Pin It