இந்தியாவிலுள்ள மாநிலங்களில் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்திரப் பிரதேசம். உத்திரப் பிரதேசத்திலிருந்து உத்திராஞ்சல் பிரிந்து தனி மாநிலம் ஆன பிறகும் உத்திரப் பிரதேசம்தான் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

இந்த மாநிலத்தைத்தான் தேசிய கட்சிகள் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகின்றன. மாநிலத்தைக் கைப்பற்றும் வெறியில் கூட்டணி தர்மங்கள், கொள்கைகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்படுகின்றன உ.பி.யில்!

மொத்தம் 403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்திரப் பிரதேச மாநிலத்தில் 2012ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் மற்றும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் எதிர்வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலுக்கு ஆதாரமாக அண்மையில் முலாயம் பேசிய பேச்சை மேற்கோள் காட்டுகின்றன வடநாட்டு செய்தி ஏடுகள்.

“கடந்த கால காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டால் பாரதீய ஜனதா ஆட்சியின்போது மாநிலத்தில் வன்முறைகள் சற்று குறைந்து இருந்தது...'' என திருவாய் மலர்ந்துள்ளார் முலாயம்.

அவரது இந்த கருத்து சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முதல் அஸ்திரம் என அரசியல் நோக்கர்கள் மட்டுமல்லாது அரசியலை உற்று நோக்கும் சாமானியனும் புரிந்து கொள்வான்.

யாருடன் கூட்டணி வைப்பது என்று முடிவு செய்வது முலாயம் சிங்கின் கட்சியின் பொதுக் குழுவின் முடிவாக கூட இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்வது உ.பி. மக்களின் முடிவு என்பதை முலாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே உ.பி. மக்கள் வன்முறை கட்சியான பாஜகவை வெறுப்பார்கள். அதிலும் உ.பி.யில் கணிசமாக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அதனால் உ.பி.யில் உள்ள பிராந்தியக் கட்சிகள் முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதில் ஆர்வம் காட்டியே வந்திருக்கின்றனர். தற்போதைய மாயாவதி அரசில் கூட முஸ்லிம்களுக்கு நிறைய இடங்களை ஒதுக்கியுள்ளார் மாயாவதி.

இதே முலாயம் சிங் முன்பு பாஜகவோடு கூட்டணி வைத்து தேர்தலில் தோற்றுப்போனபோது முஸ்லிம் வாக்குகளை இழந்ததால்தான் சமாஜ்வாதி கட்சி தோல்வியைத் தழுவியது. இனியும் இந்த தவறைச் செய்ய மாட்டேன் என்று முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டார்.

மீண்டும் இப்போது பாஜகவோடு நெருங்கும் சமிஞ்ஞைகளை முலாயம் சிங் கொடுத்திருப்பது உ.பி. முஸ்லிம்களிடையே அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது.

உத்திரப் பிரதேச தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம்கள்தான். அதை நன்கு தெரிந்து கொண்டே இரண்டாவது முறையும் தவறிழைக்க முலாயம் நினைத்தால் சமாஜ்வாதி கட்சி அரசியலிலிருந்தே காணாமல் போகும்.

- ஹிதாயா

Pin It