இந்திய நிலவியலரசியல் (Geopolitics) எல்லைக்குட்பட்ட இவ்விரு பகுதிகளிலும் இரு மகத்தான போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று நேபாளத்தில் தேசிய சனநாயகத்திற்கான போராட்டம். மற்றொன்று ஈழத்தில் தேசிய விடுதலைக்கான போராட்டம். நம்மை சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற இப்போராட்டங்களில் நேபாளம் 250 ஆண்டுகளாக மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி வெற்றி கண்டது; ஈழம் சிங்கள இனவெறி அரச பயங்கரவாதத்திடம் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. இவ்விரண்டு வெற்றி தோல்விகளையும் நமது வெற்றி தோல்விகளாகக் கருதி படிப்பினைகளைப் பெறுவதே அவற்றின் விலைமதிப்பற்ற தியாகத்திற்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். இரண்டையும் ஒப்பிடுவதற்கான ஒரே காரணம் அவை இந்திய விரிவாதிக்க அரசின் ஆதிக்க பரப்புக்குள் உள்ளன என்பதும் இந்திய அரசின் தலையீட்டால் அவை வெவ்வேறு முடிவுகளை எட்டியுள்ளன என்பதும்தான்.

வல்லாதிக்க வல்லூறுகளும் விடுதலை இயக்கங்களும்

இந்திய அரசின் தலையீடு வியப்புக்குரிய வகையில் நேபாளத்திலும் ஈழத்திலும் எதிரெதிர் தன்மை கொண்டதாக இருந்தது. நேபாளத்தில் முடியாட்சி ஒழிப்புக்கு ஆதரவு அளிக்காவிட்டால் நேபாளம் சீனாவின் பக்கம் சென்றுவிடும் என்று சொல்லி மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு அளித்த இந்திய அரசு, இலங்கையில் தமிழின அழிப்புக்கு ஆதரவு அளிக்காவிட்டால் இலங்கை, சீனாவின் பக்கம் சென்று விடும் என்று சொல்லி ஆதரவு அளித்தது. நேபாளத்தில் தேசிய சனநாயகத்திற்கு ஆதரவு; ஈழத்தில் தேசிய விடுதலைக்கு எதிர்ப்பு; இப்படி முரண்பட்ட தலையீட்டுக்கு இந்தியா சொல்வது போல் சீனாதான் காரணமா? ‘சீனா நீதி அநீதி என்ற வரைமுறைகள் இன்றி ஏகாதிபத்திய செங்கோலை கையில் எடுத்தது, பதிலுக்கு இந்தியா தேசப் பாதுகாப்பு அஸ்திரத்தை கையில் எடுத்தது’ என்பது இந்திய அரசாதரவு ஊடக முழக்கம்.

சீனாவின் நோக்கம் என்ன? உலக சண்டியராவதன் பகுதியாக ஆசிய சண்டியராவது. இந்தியாவின் நோக்கம் என்ன? தெற்கு ஆசிய சண்டயராவது, இரண்டுக்கும் இடையிலான பிராந்திய வல்லாதிக்க போட்டியில் எதிரியை ஒவ்வொரு அரங்கிலும் தோற்கடிப்பது என்பதே இரண்டின் குறிக்கோளாகும். மியான்மரில் இராணுவ ஆட்சி நடந்தால் என்ன? நேபாளம், பூட்டானில் மன்னராட்சி நடந்தால் என்ன, அவற்றின் கவனம் எல்லாம் அவை தமது ஆதிக்க வரம்புக்குள் நடக்கிறதா? இல்லையா? என்பதுதான்.

அரசதிகாரப் போட்டியில் போராடும் இரு பிரிவில் எதன் கை மேலோங்குகிறதோ அதனை தற்காலிகமாக ஆதரிப்பது; நீண்டகால நோக்கில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தனது ஆதிக்க பரப்பை விரிவு செய்வது என்பதே இவற்றின் அணுகுமுறை. இந்தியா சீனா மட்டுமின்ற உலக வல்லாதிக்கங்களின் அணுகுமுறையும் இதுதான். நிலவுகிற அரசுகளுக்கு இடையே ஏற்கனவே இந்த சித்து வேலையை நீண்ட காலமாகவே செய்து வருகின்றன. ஆனால் அவை நிலவுகிற அரசுக்கு எதிரான விடுதலை இயக்கங்களின் கை ஓங்கினால் அவற்றை தயக்கமின்றி ஆதரிப்பது இல்லை. அவை தமது முதலாளிய வர்க்க நலன்களுக்கு எதிரானது என்பதால் தயக்கம் காட்டுகின்றன. ஆனால், அவை தம் வல்லாதிக்க நலனுக்கு உதவும் என்ற நிலை இருந்தால் மட்டுமே ஆதரிக்கின்றன.

சோவியத் யூனியன் அதன் புரட்சிகர தன்மையை இழக்கும் வரை உலகில் ரீதியான போராட்டங்களுக்கு அரசியல், இராணுவ, பொருளாதார உதவிகளை செய்து வந்தது. அதற்கு பின்பும் சரி, முன்பும் சரி நீதிநெறிகள் அற்ற வல்லாதிக்க நெறி மட்டுமே கோலேச்சி வருகிறது. இன்று மக்களின் விடுதலைப் போராட்டங்கள் தீவிரவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம் போன்ற எளிமையான சட்டகங்களுக்குள் அடையாளப்படுத்தப்பட்டு நெரிக்கப்படுகின்றன. செப்டம்பர் 11, 2000க்கு பிறகு தீவிரவாதம் என்ற பதம் எல்லாம் ஓரங்கப்பட்டு பயங்கரவததம் என்ற ஒற்றைப்பதம் உலகமயமாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள், நேபாள மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் பயங்கரவாத இயக்கங்களாக அறிவிக்கப்பட்டன. இத்தகைய சூழலில்தான் விடுதலை இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்களும் வல்லாதிக்க முரண்பாட்டை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இது விடுதலையின் தவிர்க்கவியலாமை.

நேபாளம்

நேபாளத்தில் இந்தியா நேரடி அரசியல் பொருளாதார ஆதிக்கம் கொண்டுள்ளது. இந்திய நேபாள நட்புறவு ஒப்பந்தத்தை நேபாள மக்கள் அடிமைச் சாசனமாகவே கருதுகின்றனர். நேபாள மன்னர் பிரேந்திராவை அரண்மனை படுகொலை செய்து ஞானேந்திராவை பதவியில் அமர்த்தியது இந்திய உளவுத் துறை. தன் கைத்தடி அரசை வைத்து சீனாவோடு நேபாளத்தை நெருங்க விடாமல் செய்து வந்தது. சீனா அக்கறை காட்டிய விசயம் இதுதான். நேபாளத்தில் இந்தியாவையும் அதன் அடிவருடிகளையும் அகற்றுவதில் சீனாவின் நலன் அடங்கியிருக்கிறது.

உள்நாட்டில் மன்னன் மட்டுமின்றி காங்கிரசு உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளும் இந்திய அடிவருடிகளாகவே இருந்தன. இந்நிலைமையில் தான் ‘முடியாட்சியை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை வெளிப்படையாக முன்வைத்து மாவோயிஸ்டுகள் மக்களை திரட்டினர். 40 அம்ச திட்டம் ஒன்றை மக்கள் முன்வந்து அணிதிரட்டலைச் செய்தனர். நாடெங்கும் ஆதரவு அலை பெருகியது. முடியாட்சியின் கொடிய அடக்குமுறையும் இராணுவ ரீதியான “ரோமியோ நடவடிக்கையும்” மாவோயிஸ்டுகளை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளியது. ஆயுதம் தங்கிய இயக்கமும், வெற்றி மேல் வெற்றி குவித்து விடுதலை பிரதேசங்களை நிறுவியது. இந்நிலைமை முடியாட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இந்திய ஆலோசனைப்படி முடியாட்சியும் இருக்கும்; பாராளுமன்ற சனநாயகமும் இருக்கும் என்ற “இரட்டைத்தூண் கொள்கையை” மன்னன் முன்வைத்தான். மாவோயிஸ்டுகள் முடியாட்சி ஒழிப்பில் உறுதியாக இருந்தனர். இந்நிலை மாவோயிஸ்டுகளுக்கு மகத்தான அரசியல் சாதகத்தை அளித்தாலும் மிக முக்கியமான சிக்கல் ஒன்று இருந்தது. அது உள்நாட்டு எதிரியையும் வெளிநாட்டு எதிரியையும் தனிமைப்படுத்துவது என்பதாகும்.

உள்நாட்டில் மன்னனுக்கு காங்கிரசு, யூஎம்எல் உள்ளிட்ட 7 கட்சிகளின் ஆதரவு இருந்தது. இருந்தாலும் இக்கட்சிகள் முடியாட்சிக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியை கண்டு அஞ்சி “சனநாயகக் குடியரசு” என்ற முழக்கத்தை எழுப்பத் தொடங்கின. இம்முரண்பாட்டை மாவோயிஸ்டுகள் அடையாளம் கண்டனர். இதனை மேலும் விரிசல் ஆக்குவதன் மூலம் மன்னனை தனிமைப்படுத்த முடியும் என தீர்மானித்தனர். ஆனால் 7 கட்சிகளும் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கவில்லை.

சர்வதேச ரீதியில் மன்னனுக்கு முழு ஆதரவு அளித்தது இந்தியாவும் அமெரிக்காவும்தான். இந்த கூட்டணியை தனிமைப்படுத்த வேண்டி இருந்தது. சீனாவும் ரஷ்யாவும் இந்த கூட்டுக்கு எதிரான நடவடிக்கையை ஆதரித்தது. ஆனால் மாவோயிஸ்டுகளை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இதனை தீவிரமாக பரிசீலித்த மாவோயிஸ்டுகள் 7 கட்சி மற்றும் சர்வதேச நாடுகளோடு வெளிப்படையான அணிசேர்க்கைக்கு மடை திறக்க முடிவு செய்தனர். அதுவரை மாவோயிஸ்டுகள் பாட்டாளி வர்க்க தலைமையிலான மக்கள் சனநாயக குடியரசு என்ற முழக்கத்தை முன்வைத்து வந்தனர். இதனை உள்நாட்டு முதலாளித்துவ கட்சிகளான 7 கட்சிகளும் சர்வதேச அளவிலான எல்லா முதலாளித்துவ அரசுகளும் கடுமையான எதிர்த்தன. இதுவே மாவோயிஸ்டுகளின் முதன்மை கவனத்திற்குரிய அம்சமானது.

நேபாள சனநாயக புரட்சியின் மூலவுத்தி இலட்சியமான மக்கள் சனநாயக குடியரசு என்ற முழக்கத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர். அதற்கு பதிலாக நேபாளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்த (முதலாளித்துவ) ‘சனநாயக குடியரசு’ அமைப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்தனர். அதனை வெற்று முழக்கமாக மட்டுமின்றி நடைமுறைப்படுத்தவும் செய்தனர். உள்நாட்டு தரகு வர்த்தகம் மற்றும் அதன் அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களைத் திரும்ப அளித்தமை போன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர்களின் அவநம்பிக்கையை போக்கினர். அதன்பின் அணிசேர்க்கை தலைகீழாக மாறியது. நேபாள காங்கிரசு உள்ளிட்ட 7 கட்சிகளும் மன்னனை அதோகதியில் விட்டுவிட்டு மாவோயிஸ்டுகளுடன் இணைந்து 8 கட்சி கூட்டணியாயின.

சர்வதேச அளவில் சீனா, ரசியா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தயக்கமின்றி ஆதரித்தன. இந்தியாவிற்கு பெருத்த ஏமாற்றம். தனது எடுபிடியான நேபாள காங்கிரஸ் கட்சி மன்னனை கைவிட்டு மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் தான் வைத்த “இரட்டைத் தூண்” கொள்கையையும் கைவிட்டது என்பதால் விரக்தி அடைந்தது. கடைசியில் இரட்டைத்தூண் கொள்கை மன்னனோடு சேர்ந்து அநாதையாகி தனிமைப்பட்டது. மாவோயிஸ்டுகளின் முழு செயலுத்தித் திட்டமும் வெற்றியடைந்தது. மன்னர் அதிகாரம் பறிக்கப்பட்டு அரசியல் நடைபிணமானார். இறுதியில் இந்தியா வேறு வழியின்றி சனநாயக குடியரசை ஆதரித்தது. இந்த ஒட்டுமொத்த அரசியல் அணிசேர்க்கையில் ஏற்பட்ட மாற்றம் மாவோயிஸ்டுகளின் தெளிவான அரசியல் பார்வை மற்றும் செயல் உத்தித் திட்டத்தால் வெற்றி பெற்றது.

நேபாளத்தில் சனநாயக குடியரசை ஆதரிக்க வேண்டும்; இல்லாவிட்டால் அது சீனாவின் பக்கம் சென்று விடும் என்று முடிவு எடுத்து மாவோயிஸ்டுகளை ஆதரித்த இந்தியா, இலங்கையை ஈழத்தை ஆதரிக்க வேண்டும்; இல்லாவிட்டால் அது தனக்கு பாதகமாக முடியும் என்று ஏன் முடிவு எடுக்கவில்லை?

ஈழம்

நேபாள மாவோயிஸ்டுகளைவிட பன்மடங்கு வலிமையான நீண்ட போராட்ட அனுபவம் வாய்ந்த தரைப்படை, கடற்படை, வான்படை என வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு மாபெரும் விடுதலை இயக்கம், உலகில் தன்னிகரில்லா போர் உத்திக்காரர் என்று சிங்களத் தளபதி ஒருவரால் போற்றப்பட்ட தலைவரால் வழி நடத்தப்பட்ட இயக்கம் எப்படித் தோற்றது? உள்நாட்டு எதிரியை தனிமைப்படுத்துவது, வெளிநாட்டு எதிரியை தனிமைப்படுத்துவது என்ற உத்தியில் ஈழத்தின் அனுபவம் என்ன?

உள்நாட்டைப் பொறுத்தவரை சந்திரிகா ஆட்சி காலத்தில் 2002-2004 வரையிலான அமைதிப் பேச்சுவார்த்தை காலம் முன்னெப்போதும் இல்லாத அளவில் விடுதலைப்புலிகளுக்கு அரசியல் களத்தை திறந்துவிட்ட காலம். சனாதிபதியாக இருந்த சந்திரிகாவும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் எதிரெதிராக முரண்பட்டிருந்த காலம். அமைதிப் பேச்சின் மூலம் தீர்வு என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவு - எதிர்ப்பு என்ற அடிப்படையில் சிங்கள அரசியல் கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டிருந்த காலம். அமைதி பேச்சுவார்த்தை என்பதும் அரசியல் யுத்தம் என்கிற வகையில் மோதிக் கொள்ளும் இருவரில் யார், யாரை தனிமைப்படுத்தி நம்மை பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் எதிர்கால வெற்றி அமையும்.

ரணில் ஒரு புறம் “இலங்கையில் அமைதியை ஏற்படுத்தி விட்டேன்; பொருளாதாரத்தை சீரமைக்கப் போகிறேன் உதவுங்கள்” என்று கூறி பல மில்லியன் டாலர்களையும் நெருக்கத்தையும் மேற்குலகிடமிருந்து சம்பாதித்துக் கொண்டார். இராணுவத்தை பலப்படுத்தினார். மறுபுறம் புலித்தலைவர்களிடையிலான முரண்பாட்டை பயன்படுத்தி கருணாவை வைத்து புலிகளின் கிழக்கு மாகாண பலத்தை வீழ்த்தினார். பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகா முடிவுக்கு கொண்டு வந்தபோது தோல்வியுள்ள ரணில், சிங்கள அரசுக்கு பல வெற்றிகரமான அடித்தளங்களை விட்டுச் சென்றிருந்தார். ரணில் அரசு வடகிழக்கில் சுய அதிகாரமுடைய இடைக்கால நிர்வாகம் என்ற புலிகளின் கோரிக்கையை இறுதிவரை கொள்கை அளவில் கூட அங்கீகரிக்கவில்லை.

ரணிலால் தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த புலிகள் மற்றுமோர் அரசியல் தவற்றைச் செய்தனர். தமிழரோடு நடந்த குறைந்தபட்ச சமாதான முயற்சிகளையும் எதிர்த்து நின்ற ராசபக்சே, ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய என்ற இனவெறிக் கூட்டணி வெற்றிபெறும் வகையில் தேர்தலை புறக்கணித்து ரணிலைத் தோற்கடித்தனர். மொத்தத்தில் சமாதானகாலம் சர்வதேச அளவிலும் உள்நாட்டு அளவிலும் விடுதலைப்புலிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியது. தான் போட்ட அடித்தளத்தில் நின்று தான் ராசபக்சே வெற்றி பெற்றார் என்ற ரணிலின் கூற்று கவனிக்கத்தக்கது.

ராசபக்சே பதவி ஏற்ற 7ம் நாள் தனது வெளியுறவு அமைச்சரை இந்தியாவிற்கு அனுப்பி உறவை பலப்படுத்தினார். இந்திய-சீன முரண்பாட்டை புரிந்து கொண்ட ராசபக்சே ஏற்கனவே சந்திரிகாவின் காலத்தில் சீனாவுடன் இருந்த உறவை பலப்படுத்தி நெருக்கமடைந்தார். அதைக் காட்டியே இந்தியாவிடம் இலங்கைக்கு உதவுவதில் இருந்த துளியளவு தயக்கத்தையும் துடைத்தழித்து போர்க்களத்திற்கே இழுத்து வந்தார். தவிர பாகிஸ்தான், இசுரேல் மற்றும் பல சர்வதேச நாடுகளையும் அணி சேர்த்துக் கொண்டார். இது சர்வதேச அரங்கில் புலிகளுக்கு மிகப் பாதகமாக அமைந்தது.

இந்திய அமைதிப்படையின் நேரடியான ஆக்கிரமிப்பும் அமைதிப் படையின் ஜெனரலாக இருந்து சதீஷ் நம்பியார் சந்திரிகா காலந்தொட்டு இலங்கை இராணுவ ஆலோசகராக இருந்து வருவதும் யாழ்ப்பாணத்தை புலிகள் முற்றுகைவிட்டபோது இந்தியா “போர்க் கப்பலை அனுப்பத் தயார்” எனச் சொன்னதும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இலங்கையுடன் போட்டுள்ளதும் 15 ஆண்டுகளுக்கு மேல் புலிகளை தடை செய்து வைத்திருப்பதும் ஆணித்தரமாக ஒன்றைப் பறைசாற்றி வந்தது. அது இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்க ஒன்றுமில்லை என்பதைத்தான்.

ராசபக்சே ஹிட்லர் பாணி இன அழிப்பை தொடங்கியபோது புலிகளின் தலைமை உள்நாட்டு நிலைமையில் இருந்து போர் உத்தியை வகுக்காமல் அயல்நாடுகளின் தலையீடுகளை எதிர்பார்த்து போர் உத்தியை வகுத்தது. ஈழத்தின் ஆயுதப் போராட்டமும் துவக்கம் முதற்கொண்டு அதன் அச்சாக விளங்கிய கெரில்லாப் போர் முறையை பயன்படுத்தி செயல் உத்தி ரீதியான வலிந்த தாக்குதலை (Tactical offensive) மேற்கொண்டு தம்மை தற்காத்துக் கொள்ளவில்லை.

மாறாக இந்திய பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்தால் சாதகமான தலையீடு நடக்கும்; அமெரிக்கா தலையிடும் என்றெல்லாம் நம்பி முழுத்தற்காப்பு போர் உத்தியை வகுத்தது என்பது எதிரிக்கு சாதகமாகிப் போனது. ராசபக்சே, தான் பிரபாகரனாக இருந்தால் கெரில்லா போர் உத்தியை பயன்படுத்தி இருப்பேன் என்று பகடி செய்ததில் வெற்றித் திமிரும் விசயத்தில் உண்மையும் இருந்தது. எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனது சொந்த நிலைமைகளின் பலாபலன்களின் அடிப்படையில் திட்டமிட வேண்டுமே ஒழிய புற ஆதரவை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடக் கூடாது. அது தோல்வியை தரும். வடக்கில் புலிகளால் அமைக்கப்பட்ட மிகச்சிறந்த நிர்வாக கட்டமைப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதை பாதுகாக்க அவர்கள் தலையிடுவார்கள் என்று புலிகளின் தலைமை மிகைமதிப்பீடு செய்தது. அது முதலாளித்துவ அரசுகள் மீதான குட்டி முதலாளிய நல்லெண்ண மதிப்பீட்டின் ஈடுசெய்ய முடியாத தவறாக அமைந்துவிட்டது.

புலிகள் தம்மளவில் சிங்கள ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் ஆகியோரோடு வலுவாக ஒன்றுபட்டு சிங்கள ஆளும் வர்க்கத்திற்குள் சந்தர்ப்பவாதமாக ஜனநாயகம் பேசும் பிரிவுக்கும் சிங்கள பேரினவாத பிரிவுக்கும் இடையிலான முரண்பாட்டை தீவிரப்படுத்தி, பிளவுபடுத்தி பேரினவாதிகளை தனிமைப்படுத்த அரசியல் தந்திரத்தை தொடக்கத்திலிருந்து மேற்கொள்ளவில்லை. முஸ்லிம் தமிழர்களை எவ்வித பண்பாட்டு தொடர்போ உறவோ இல்லாத சிங்கள தரப்பிற்கு தள்ளியது புலிகளின் கடும் தவறாகும். சுமார் 70 ஆயிரம் முஸ்லிம் தமிழர்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற சொன்ன பிறகு புலிகளின் மாவீரர் பட்டியலில் முஸ்லிம்கள் இடம் பெறவில்லை. மத அடிப்படைவாத குழுக்கள் தோன்றுவதற்கும் அதுவே அடிப்படையானது.

மலையகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை ஈழப் போராட்டத்தின் பகுதியாக இல்லை. சமாதான காலத்தில்கூட இதற்கான கொள்கை ரீதியான அணுகுமுறையோ முயற்சியோ இல்லை. போராளி இயக்கத் தலைவர்களின் அரசியல் துரோகங்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தும் அணுகுமுறையைவிட அவ்வியக்கங்களை அழித்தொழிக்கும் முறையையே இறுதி வரை கடைப்பிடித்து வந்தது. இதில் அவ்வியக்கங்களின் செயல் வீரர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இது தமிழர் ஒற்றுமையை குலைத்து போராட்ட வலிமையை குறைத்தது. மொத்தத்தில் புலிகள் ஐக்கிய முன்னணி தந்திரத்தை தொடக்கத்திலிருந்தே கோட்பாட்டுப் புரிதலிலிருந்து அணுகவில்லை. நடைமுறை ரீதியாகக் கூட பயன்பாட்டுவாத அணுகுமுறையில் சில நேரங்களில் ஐக்கியத்தை கடைபிடித்திருந்தாலும் அடிப்படையில் மாற்றம் இல்லை.

விடுதலைப்புலிகளின் வீரம் செரிந்த மகத்தான போராட்டம் ஆரம்பம் முதலே சில அடிப்படையான அரசியல் மற்றும் அமைப்புரீதியான பலவீனங்களைக் கொண்டிருந்தது. தொடக்கத்திலிருந்தே நிலக்கிழாரிய பிளவுவாத மோதலில் சிக்கிக் கொண்டமை, அமைத்துறையில் சனநாயகக் கட்டமைப்பு இல்லாமை, அரசியல் பலவீனம், இராணுவவாதம், எல்லாவற்றிற்கும் மேலாக அரசு, ஏகாதிபத்தியங்கள் குறித்த தெளிவான பாட்டாளி வர்க்க நிலைப்பாடு இல்லாமை, அரசுகளின் முதலாளித்துவ காரியவாத காய்நகர்த்தல்களுக்கு எதிராக பலவீனமான குட்டி முதலாளிய காரியவாத அணுகுமுறையை கைக்கொண்டமை ஆகியனவாகும். முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான குட்டி முதலாளிய பார்வை உண்மையில் ஊசலாட்டமான தெளிவற்ற நிலைப்பாட்டையே எடுக்க நிர்ப்பந்திக்கிறது. அதுதான் இந்திய அரசின் விரிவாதிக்கபண்பை அதன் ஆளும் வர்க்க நலனை அறுதியிட்டு எல்லைக் கோடை வரையறுத்து அணுகாமல் இந்திய நாடாளுமன்ற தேர்தல் மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருந்த தவறின் நிலைக்களன். அதுதான் அமெரிக்க-இந்திய கூட்டணியின் ஏகபோக நலனை அறியாமல் ஒபாமாவின் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தமைக்கும் நிலைக்களன் ஆகும்.

விடுதலைப்புலிகளின் அன்னியோன்யமான தமிழக ஆதரவு தலைமைகளில் அனைவரும் இந்திய அரசு குறித்த முதலாளித்துவ தப்பெண்ணங்களிலும் நல்ல எண்ணங்களிலும் மூழ்கி கிடப்பவர்கள். அவர்களின் பயன்பாட்டு வரம்பை தீர்மானிக்காமல் அவர்களையே மலைபோல் நம்பினர். இவையெல்லாம் வீரம்செரிந்த விடுதலைப்படை தோற்றதன் அரசியல் பலவீனங்கள் என்பதே நமது மதிப்பீடு.

இந்த ஒப்பீட்டு படிப்பினை என்பது கம்யூனிச இயக்கங்கள் எல்லாம் சரி; மற்ற விடுதலை இயக்கங்கள் அனைத்தும் தவறு என்று நிறுவ முயலும் முயற்சியும் அல்ல. இது பகுதிகளிலும் வேறுபட்ட சூழ்நிலையை பொருட்படுத்தாமல் நமது எதிர்பார்ப்பை சுமத்தும் முயற்சியும் அல்ல. அடிப்படையில் எதிரிகளையும் நண்பர்களையும் சரியாக வரையறுத்து தெளிவான அரசியல் யுத்தத்தை தொடுக்காத எந்தவகை இயக்கமும் தோல்வியை தழுவும் என்ற படிப்பினையையும் அதற்கு உதவும் அனைத்து கோட்பாடுகளையும் உள்வாங்கிச் செயல்படுதல் வெற்றிக்கு உதவும் என்ற படிப்பினையையும் பெறுவதே இதன் நோக்கம். அதிலும் அரசை எதிர்த்த எந்த ஒரு விடுதலை இயக்கமும் அரசு ஒழிப்புக் கோட்பாடான மார்க்சிய கோட்பாட்டை புறந்தள்ளுவதும் மிகப்பெரிய பலவீனமாகும். மார்க்சிய கோட்பாடு என்பது வேறு; மார்க்சியத்தின் பெயரால் மகுடி வித்தை காட்டுவோர் என்போர் வேறு என்ற தெளிவு இருந்தால் நலம்.

இப்பின்னணியில் இந்தியப் போக்கு ஒன்றைப் பரிசீலிப்போம். இந்தியாவில் குறிப்பிடத்தக்க சக்தியாக கருதப்படும் மாவோயிஸ்ட் கட்சி “ஆயுதப் போராட்டம் நடத்தும் இயக்கங்களோடு மட்டுமே ஐக்கிய முன்னணி அமைப்போம்” என்று பிரகடனப்படுத்தி உள்ளது. சனநாயகப் புரட்சி என்பது பாட்டாளிகள், உழவர்கள், சிறுமுதலாளிகள், தேசிய முதலாளிகள் ஆகிய வர்க்கங்களின் கூட்டுப் புரட்சி என்று கூறும் இக்கட்சி ஆயுதப் போராட்டத்தை ஐக்கிய முன்னணிக்கு நிபந்தனையாக்குவதன் மூலம் இந்திய அளவிலான எதார்த்தத்தை முற்றிலுமாக புறந்தள்ளுகிறது.

உண்மையில் ஐக்கிய முன்னணிக் கொள்கை என்பது ஏகாதிபத்திய - நிலஉடைமை எதிர்ப்பில் உடன்படும் மேற்கூறிய வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் அனைத்தையும் ஒன்றுபடுத்துவதாகவே இருக்க முடியும். மாவோயிஸ்ட் கட்சியோ ஆயுதப் போராட்டத்தை நிபந்தனையாக்குகிறது. பிறகு வடகிழக்கு மற்றும் காஷ்மீரின் ஆயுதப் போராட்ட அமைப்புகளை தவிர்த்து ஒன்றுபட அதற்கு வேறு இயக்கங்கள் இல்லை. உண்மையில் இவை தவிர்த்த இந்தியப் பகுதியே மிகப்பெரும் பொருண்மையைக் கொண்டது. இது அப்பட்டமான குறுங்குழுவாத கொள்கையாகும். ஆயுதம் தாங்கிய புரட்சியானது ஆயுதம் தாங்கிய எதிர் புரட்சியை தொடக்கத்திலிருந்தே எதிர்கொள்கிறது என்று சீன நிலமையில் இருந்து மாவோ வரையறுத்த ஐக்கிய முன்னணி உத்தியை அப்படியே நகல் எடுப்பதன் விளைவு இது.

ஆயுதமே தன்னியல்பில் புரட்சிகரமானது இல்லை. நிறுவனமயமான அரசுக்கெதிராக பாட்டாளி மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அவர்களின் எண்ணிக்கை பலம் மட்டுமே என்ற மார்க்சின் கூற்றுக்கும் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட வடிவ வழிபாட்டுக்கும் எந்த உறவும் இல்லை. ஒட்டுமொத்த மக்களையும் கிளர்ந்தெழ வைக்காமல் நிலவுகிற அமைப்பை மாற்றி அமைப்பது சாத்தியமில்லை. நேபாளமும் ஈழமும் நம் கண் திறக்கட்டும்.

“எதிரியை புரிந்து கொள், உன்னையும் புரிந்து கொள், உன்னால் தோல்வியின் பயமின்றி நூறுமுறை சண்டையிட முடியும்”. - சன் ஷு வு 

- தங்கப் பாண்டியன்

Pin It