தற்போதைய ஈழம் தொடர்பான 'கருத்து' மோதல்கள் கருத்து என்ற எல்லையைத் தாண்டிப் பெரும்பாலும் உணர்ச்சிகளுக்குள் சென்று விடுகின்றன. அங்கு இரைச்சல்களும் எதிரொலிகளுமே அதிகம். எனவே மெய்மை என்பது குரல்களின் எதிரொலிகளில் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது. தற்போதைய ஈழம் தொடர்பான பல்வேறு விவாதங்களும் இந்த எல்லைக்குள்ளேயே அமைந்து விட்டது துயரமானது.

 இந்த சூழலில்தான் "ஈழம் மெய்ப்படும்" என்பதை முன்வைத்து தோழர் தியாகுவால் எழுதப்பட்ட தொடரானது அருமையானதொரு முயற்சியாகும். தலைப்பில் மட்டும் ஈழம் மெய்ப்படும் என்று கூறுவதோடு நில்லாமல் அதன் நோக்கங்களை நிறைவு செய்வதை நோக்கி அனைத்துக் கோணங்களிலும் அவரது தூரிகை பயணிக்கிறது.

தனது பயணத்திற்கு மெய்மைகளிலிருந்து உண்மைக்கு (From facts to the truth) என்பதை வழிமுறையாக முன்வைக்கிறார் இது பயணத்தை வழிநடத்தும் கருவியாக அவருக்குத் துணை செய்கிறது.

 ஈழம் தொடர்பாகப் பல்வேறு பிரிவினர் கருத்துக்கள் கூறினாலும், அவர்களில் தொடக்கம் முதலே ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றியவர்களும் தோழர் தியாகுவின் உற்ற தோழர்களுமான கொளத்தூர் மணி, பேராசிரியர் சுப.வீ, பெ.மணியரசன் ஆகியோரின் அறிக்கைகளை மட்டும் இங்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறார்.

 அவர்களின் கருத்துகளிலிருந்து குறிப்பாக நான்கு கேள்விகளை மட்டும் முன்வைத்து இத்தொடரின் மூலம் விடை தேட முயல்கிறார். (1) தமிழின அழிப்புப் போரில் இந்தியாவின் பங்கு என்ன? (2) திமுகவின் பங்கு என்ன? (3) ஈழப் போராட்டத்தின் இன்றைய நிலை என்ன? (4) இந்த அடிப்படையில் நாம் செய்ய வேண்டியது என்ன? ஆகிய இவையே முதன்மையான கேள்விகள்.

இந்தியாவின் பங்கு தமிழின அழிப்புப் போரில் அறுதியிடப்பட்ட உண்மை. இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு குறித்து நம்முன் பல்வேறு தரவுகளும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் ஈழ ஆதரவாளர்களாகிய நாம் எடுத்து பேசுகின்ற ஒரே காரணத்திற்காகவே பலரும் மறுக்கலாம். ஆனால் உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட அமைப்பான ஐநாவின் அறிக்கைகளை ஒருவர் மறுக்க இயலாது. எனவே ஐநா அறிக்கைகளையும் டப்ளின், பிரெமன் தீர்ப்பாயங்களின் அறிக்கைகளையும் நார்வே நாட்டின் அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கைகளையும் சான்று காட்டி இந்திய அரசு இனப்படுகொலைப் போரில் கூட்டுக் குற்றவாளி என்பதை நிறுவுகிறார்.

அவ்வாறு நிறுவும் போது இந்தியாவின் பங்கைக் கூட்டியோ குறைத்தோ அவர் மதிப்பிடவில்லை. சிலர் இந்தியாதான் போரை நடத்தியது என்பதன் மூலம் இந்தியாவின் பங்கை மிகைமதிப்பீடு செய்கின்றனர். மற்றும் சிலர் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் பலவும் இணைந்தே செய்தன என்று கூறுவதன் மூலம் இந்தியாவின் பங்கைக் குறைத்து மதிப்பிடுகின்றனர். இவ்வாறு பிழையான மதிப்பீடுகளின் நடுவில் தோழர் தியாகுவின் கருத்தானது குன்றிலிட்ட விளக்காய் ஒளிர்கிறது.

அடுத்து இங்கு எழுகின்ற துணைக் கேள்வி: இந்தியா நினைத்திருந்தால் போரை நிறுத்தி இருக்க முடியுமா? இல்லையா? என்பது. இது 'புலி புல்லைத் தின்னுமா?' என்ற பழமொழியை ஒத்தது. ஏனெனில் போரைத் திட்டமிட்டு வழிநடத்திய கூட்டாளியான இந்தியா எவ்வாறு போரை நிறுத்த விரும்பும்? இதைத்தான் "இந்த இறுதிக் கட்டத்தில் இந்தியாவே நினைத்திருந்தாலும் போரை நிறுத்தி இருக்க முடியாது என்பதைவிட இந்தியா அப்படி நினைத்திருக்கவே வாய்ப்பில்லை" என்று மதிப்பிடுகிறார்.

இந்தியா போரை நிறுத்த எப்போது முடிவெடுத்திருக்கும். அது விரும்பவில்லை என்றாலும் தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு உண்டாகி இருந்திருப்பின் அந்த நெருக்கடியில் அது பின்வாங்கி இருக்கலாம். இது ஒரு கணிப்பு மட்டுமே இதை "இந்தியாவுக்கு தமிழகம் போதிய அழுத்தம் தந்து, புலிகளும் ஓரளவு வலிமையோடு களத்தில் நின்றிருந்தால் இந்தியாவால் போரை நிறுத்தி இருக்க முடியும்" என்று கணிக்கிறார்.

விவாதத்தின் இரண்டாவது புள்ளி திமுகவின் பங்கு பற்றியது. திமுக இறுதிப் போர் நடந்த காலத்தில் இந்திய நடுவண் அரசின் அமைச்சரவைக் கூட்டாளியாக இருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக வீற்றிருந்தார். ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் என்ற முறையில் அவர்கள் மீது கேள்வி எழுவது ஞாயமானது.

 இங்கு ஒரு சிக்கல் குறித்துக் குறிப்பிட்டாக வேண்டும். அது நெடுங்காலமாகத் தமிழக அரசியலில் நிலவிவரும் குழப்பமும் கூட. அது குறித்து முடிவெடுக்கும் போது பல கட்சிகளும் இயக்கங்களும் கூட குழம்பி விடுகின்றன. என்னவெனில் ஒரு கட்சியை ஆட்சிப் பொறுப்பில் வைத்து மதிப்பிடுவதற்கும் தனித்து அந்த கட்சிக்கான கொள்கை மற்றும் செயல்பாட்டை வைத்து மதிப்பிடுவதற்கும் உள்ள இடைவெளியாகும். பலரும் இவ்விரு இடைவெளிகளையும் புரிந்து கொள்ளாமல் ஒன்றாக்கி விடுகின்றனர்.

அவ்வாறு ஒன்றாக்கும் போது திமுக போன்ற ஒரு கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது அதன் நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும் கட்சி என்ற வகையில் அதன் கொள்கைகள், நடவடிக்கைகளை வேறுபடுத்தி மதிப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடுகளை மறந்து விடுகின்றனர்.

சுருக்கமாகக் கூறினால் ஆட்சிப் பொறுப்புக்கும், கட்சிப் பொறுப்புக்கும்; ஆட்சித் தலைவருக்கும், கட்சித் தலைவருக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து குழப்புகின்றனர். இந்த வேறுபாட்டைப் பிரித்து வகைப்படுத்தி நுட்பமாகக் கையாள்கிறார் தோழர் தியாகு.

இறுதிப் போர் நடைபெற்ற ஆண்டுகளில் திமுக இந்திய நடுவண் அரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அது மட்டுமன்றி அதன் நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் அது பங்கெடுத்தது. அந்த வகையில் ஈழத்தின் மீதான இந்திய அரசின் முடிவுகளில் இலங்கையுடன் இணைந்து போர் நடத்தியதில் திமுகவுக்கு பங்குண்டு.

 இரண்டாவதாக திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு ஈழ ஆதரவுப் போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கியது. பலர் மீது கருப்புச் சட்டங்களைப் போட்டு வழக்குப் பதிந்தது. இது அனைவரும் அறிந்ததும் அனுபவித்ததுமான உண்மை ஆகும்.

 எனவே திமுகவும் அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியும் போரை நிறுத்தியிருக்க முடியுமா? இல்லையா? என்பது முகன்மையானதல்ல. போரில் அவர்களின் பங்கு என்ன என்பதே முகன்மையானது. அது சிறுமப் பங்காக இருக்கலாம் பெரியதாக இருக்கலாம். ஆனால் பங்கு உண்டு என்பதே தெள்ளத் தெளிந்த உண்மை. இது சிலருக்குக் கசப்பாகவும் இருக்கலாம். கசப்பான மருந்துதான் நோயைத் தீர்க்க வல்லது.

 திமுகவின் இந்தக் குற்றம் விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அதேவேளை அதைத் தாண்டி ஒரு கட்சியின் தலைவராக கலைஞர் கருணாநிதி அன்று ஈழ ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுத்தார் என்பதும் மற்றொரு மறுக்க முடியாத உண்மை.

 திமுக என்ற கட்சியையும் அதன் தலைவரையும் ஈழப் போரின் இறுதி நாட்களில் 2008-2009 காலத்தில் இருந்து மட்டும் மதிப்பிடாமல் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்கக் காலத்தில் இருந்தும் அதன் பின்பு இனவழிப்பு போர் நடைபெற்றதற்கு பின்பான தற்போதைய நாட்கள் வரையிலும் சேர்த்து இணைந்த ஒரு மொத்த மதிப்பீடே நமக்குத் தேவை. அப்படிப்பட்ட ஒரு மதிப்பீட்டை வந்தடைகிறார் தோழர் தியாகு. அதற்கு அவர் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளையும் முன்வைத்துள்ளார்.

 ஒருவேளை இப்படி ஒரு மதிப்பீட்டிற்கு வரவில்லை எனில் என்ன நடக்கும். திமுக என்ற கட்சியின் பின் திரட்டப்பட்டுள்ள பல லட்சக்கணக்கான தொண்டர்களையும், கோடிக்கணக்கான பற்றாளர்கள்களையும் ஈழச் சிக்கலின்பால் கவனம் குவிக்கும்படி செய்ய முடியாது. அது ஈழப் போராட்ட நலன்களுக்கு எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

அடுத்து விவாதத்தின் மூன்றாவது நடுவம் ஈழப் போராட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பது குறித்தது. அதில் இரண்டு கருத்துக்கள் அலசப்படுகின்றன

முதல் கருத்து ஈழத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தது. அரசியல் கைதிகள் விடுதலைப் போராட்டம், காணாமல் போனோருக்காக நடத்தப்படும் போராட்டம், சிங்களப் படையை தமிழீழத்தில் இருந்து வெளியேற்றக் கோரி நடக்கும் போராட்டம், சிங்களப் படையால் கைப்பற்றப்பட்ட நிலங்களை (காணிகளை) ஒப்படைக்கக் கோரும் போராட்டம் எனப் பலவும் ஈழத்தில் நடைபெற்று வருகின்றன. பத்தாண்டுகளுக்கு முன் நடைபெற்றதையே தற்போதும் பேசுவதா? என்று கூறும் தோழர் கொளத்தூர் மணியே கூட இப் போராட்டங்கள் குறித்து பல கூட்டங்களில் வியந்து பேசியுள்ளார்.

தோழர் தியாகு இக்கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் எவ்வாறு ஈழவிடுதலை போராட்டத்துடன் இணைந்தவை என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் இணைத்து நிறுவுகிறார். அவர் இந்தக் கோரிக்கைகளில் இருந்து ஈழவிடுதலை என்னும் இலக்குக்கு (கோட்பாட்டுக்கு) செல்லும் வழிமுறையின் மெய்மையை விளக்கப்படுத்துகிறார். வேறொரு வகையிலும் இதை ஒப்பிட்டு பார்க்க முடியும். சிங்கள தேசமும் சிங்கள அரசும் இன ஒடுக்குமுறைக் கொள்கைகளைக் கைவிடாத வரை ஈழவிடுதலை என்பதற்கான வரலாற்று தேவைகள் இருந்து கொண்டேதான் இருக்கும். அதாவது தமிழீழ மக்களின் முதன்மை முரண்பாடு என்பது தமிழீழத்தின் மீதான சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கும் அதை எதிர்த்த தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்துக்குமானதாக இருக்கும் இக்கோட்பாட்டிலிருந்தும் நாம் இன்றைய தமிழீழ மக்களின் போராட்டங்களை அணுகலாம்.

 இரண்டாவது கருத்து என்பது சிங்களவர்கள் என்பவர்கள் ஆரியர்களே என தோழர் பெ.ம. அடையாளப்படுத்துவது குறித்து. சிங்களர்கள் தங்களது வரலாற்றுப் பெருமிதங்களுக்காகப் புனைந்து கொண்ட ஒரு புனைவை அவர்கள் கூறி விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித ஆய்வு நோக்கமும் இன்றி ஏற்றுக் கொண்டு வாதிடுவது. இது எவ்வாறு தமிழீழ விடுதலைக்கு ஊறு செய்யும் என்பது குறித்துத் தரவுகளுடன் விளக்குகிறார் தோழர் தியாகு. தமிழகத்திலும் சாதிச் சங்கங்களைச் சேர்ந்த சிலர் ஆண்ட பரம்பரைப் பெருமிதங்களைக் கூறி வருகிறார்கள் அல்லவா, அவற்றுக்கும் இது பொருந்தும்.

ஈழம் தொடர்பான இந்த விவாதங்களின் ஊடாக எழுந்த மற்றொரு துணை விவாதமும் குறிப்பிடத்தகுந்தது. அது தமிழகத்தையும் தமிழீழத்தையும் ஒன்றாக வைத்து அணுகுவது குறித்தது. அவ்வாறு அணுகும் சிலர் தமிழகத்தையும் தமிழீழத்தையும் ஒரே சமூகம் போலவும் அதில் நிலவும் சிக்கல்களும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும், தாக்குதல் இலக்குகளும் ஒன்று போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

தோழர் பெ.ம வும் இவ்வரிசையில் இணைந்து கொள்கிறார். தமிழகத்திற்கும் தமிழீழத்திற்கும் ஒரே எதிரி இந்திய அரசுதான் என்று கூறுகிறார். இது கேட்க இனிமையான கருத்தே தவிர கடுகளவும் உண்மை இல்லை. இது தாக்குதல் இலக்கை திசைதிருப்பி தமிழீழ விடுதலைக்கு ஊறு செய்வதாகும்.

இது போலவே தந்தை பெரியார் ஈழத்திற்கு உதவ மறுத்தார் என்ற கருத்தையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு அல்லது பிரபாகரன் என்ற தனியொரு தலைவர் என்ற அடையாளத்துக்குள் அடைக்க முயலும் தவறான போக்குகளையும் பார்க்க முடிகிறது. அவற்றையும் இந்த விவாதத்தில் பகுப்பாய்வு செய்கிறார்.

 இறுதியாக நாம் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தமிழீழ விடுதலையில் அக்கறை கொண்ட தோழர்கள் அனைவரும் தமிழீழம் என்ற கோரிக்கைக்காக ஒன்றிணைய வேண்டும் அதை எவ்வாறு செய்வது?

 அதைப் புரிந்து கொள்ள இங்கு மற்றொரு சிக்கலை நுணுகிப் பார்க்க விரும்புகிறேன். தேர்தலில் பங்கேற்காத அமைப்புகள் மற்றும் இயக்கங்களில் நிலவுகின்ற குழப்பம் என்பது திமுக போன்ற தேர்தல் கட்சிகளை ஒருசில அமைப்புகள் ஆதரிக்க நேர்கிற போது அதை வைத்து மக்கள் நலன்சார்ந்த கொள்கை முடிவுகளோடு அவற்றை போட்டு குழப்பிக் கொள்வது.

 இதனால் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டிய சிக்கல்களில் கூட உடன் இணைந்து நிற்காமல் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வது. எடுத்துக்காட்டாக தோழர்கள் கொளத்தூர் மணி, சுப.வீ இருவரும் தற்போது திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். தோழர் பெ.ம திராவிட இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இம்மூவரும் இந்த அணுகுமுறையை ஈழம் குறித்த கொள்கை அணுகுமுறையிலும் பிரதிபலிக்கின்றனர். விளைவு ஈழச் சிக்கலில் தற்போது தமிழக இயக்கங்களின் ஒற்றுமைக்கு இது ஊறு விளைவிப்பதாக மாறி விட்டது.

ஈழ விடுதலை மட்டுமல்ல, வேறு எந்தத் தமிழக உரிமைக் கோரிக்கைக்கும் இந்த நிலை ஏற்படலாம் எனவே இது கவலையோடு, அக்கறையோடு அணுகி தீர்க்கப்படவேண்டிய சிக்கலாகும்.

தோழர் தியாகு ஈழத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று இறுதியாகத் தொகுத்து முன்வைப்பதில் இந்த சிக்கலை களையவேண்டும் என்ற அக்கறை வெளிப்படுகிறது.

 தலைவர்கள் தமது அமைப்புகள், கொள்கைகள், வழிமுறைகள் குறித்து தோழமைவழி விவாதங்களை மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால் அவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழீழக் கோரிக்கை என்ற ஒற்றைக் கருத்தியலை சிதைவடைய விடக்கூடாது. தேர்தல் நிலைப்பாடுகள் அல்லது ஒரு கட்சியை ஆதரிப்பது / எதிர்ப்பது ஆகியவை அந்தந்த இயக்கங்கள் சார்ந்த முடிவுகளே தவிர அவற்றையும் ஈழத்தையும் இணைத்துக் குழப்பிக் கொள்ளவும் அதன் வழியில் ஈழக் கோரிக்கையை சிதைவடையும் விடக்கூடாது. 

 ஈழத்தை ஆதரிக்கும் போது கவனம் கொள்ள வேண்டிய மற்றொன்று தமிழீழத்தின் ஈழத்தமிழர்களின் வரலாற்று பூர்வமான கோரிக்கைக்கு நமது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்க வேண்டுமே தவிர, நமது கருத்துகள், முடிவுகளை ஈழத்தின் மீது ஏற்றி ஈழப் போராட்டத்திற்கான இலக்குகளை பாதிக்கும் படி செயல்பட கூடாது.

இங்ஙனம் விவாத இறுதியில் தோழர் தியாகு முன்வைத்துள்ள இந்த ஆணித்தரமான கருத்து அனைவரும் ஏற்று செயல்படுத்த முன்வர வேண்டிய கருத்தாகும். அது நம்மைப் போன்றவர்களை மெய்மையின் பக்கம் நிற்கச் செய்வதாக மாற்றுகிறது. நமது கடமையானது இத்துடன் நின்று விடாமல் இந்த மெய்மையை அனைவரும் ஏற்கும்படி செய்ய வேண்டும்.

சிலம்புச்செல்வன்

Pin It