உலக மானிடத்தை முன்வைத்துப் பல கருத்துகளை வழங்கியுள்ள பெரியார் அவர்கள் ‘சாதி ஒழிய வேண்டும்' என்றும் - அதே நேரத்தில், ‘வகுப்புவாரியாக உரிமை வேண்டும்' என்றும் கோரியுள்ளார்.

‘பேதநிலை ஒழிய வேண்டும்' எனவும் - அதேசமயம், ‘பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்' என்ற கண்ணோட்டத்துடன் பிரச்சினைகளை அணுக வேண்டும் எனவும்; ‘தமிழ்நாடு தமிழருக்கே!' எனவும்- அதேபோன்று, ‘உலக மானிடம் ஒன்றாக வேண்டும்’ எனவும் முழக்கியுள்ளார். இவை ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டவை எனத் தோற்றமளிக்கலாம்.

periyar 391முதலாவதாக, சாதி ஒழிய வேண்டும் என்பது குறித்துக் காண்போம். இங்கு, சாதி அமைப்புக்கு இந்துமதம், சாஸ்திரம், ஆகமம் ஆகியவை அங்கீகாரம் அளித்துள்ளன; சாதி வழக்கம், பிரதேச வழக்கம் என்ற பேரால் இவை நிலைப்படுத்தப்பட்டுள்ளன. அம்மட்டோடு நில்லாமல், இந்த ஏற்பாட்டுக்கு இந்துச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் என்பவையும், இச்சட்டங்களை அமுல்படுத்தும் எல்லாக் கோர்ட்டுகளும் இன்றுவரை ஆதரவும் ஆக்கமும் அளித்து வருகின்றன. இந்துச் சட்டம், அரசியல் சட்டம் இவற்றில் ‘சூத்திரன்' என்ற சொல் இன்று இல்லையே எனச் சட்ட நிபுணர்கள் கூறுவர். உச்சநீதி மன்றம் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற வேறுபாடு உண்டு’ என 1972 மார்ச்சில் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, இதிலுள்ள தத்துவத்திற்கு இச்சட்டங்கள் இன்றும் பாதுகாப்பு அளிக்கின்றன என்பதை அன்னார் உணர்தல் நன்றாகும்.

இந்த இழிநிலை பிற மதத்தினருக்கோ, பிற நாட்டினருக்கோ இல்லை. அதாவது, பிற மதத்தினர் இடையே தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களை ‘இழி சாதி', ‘கீழ்ச் சாதி என்றும்; ‘உயர் சாதி', ‘மேல் சாதி' என்றும் பிறவி அடிப்படையில் பிரித்து வைக்கும் தன்மை இல்லை; அப்படிப்பட்ட தன்மைக்கு அவர்களின் மதநூல்களும், சாஸ்திரங்களும் வழிவகுக்கவும் இல்லை; ஆதலின், அங்கெல்லாம் அவ் அடிப்படையில் உரிமைகள் வழங்கப் பெறவும் இல்லை.

சான்றாக, நீக்ரோக்கள் வாழும் அமெரிக்க நாட்டிலும், ஆப்பிரிக்க நாட்டிலும் ‘சமூகப் பழக்கம்' என்ற பெயரால் நிலைத்திருந்த ‘இன ஒதுக்கல்' (Apartheid) கொள்கைக்கு கிறிஸ்துவ மதமோ, பைபிள் நூலோ அங்கீகாரம் அளிக்கவில்லை; அதனால், அங்குள்ள கோர்ட்டுகளும் ‘சமூகப் பழக்கம்' என்ற பேரால் அங்கிருந்த அந்த இழிவுக்குத் தொடர்ந்து ஆக்கம் தர இயலவில்லை. இக்காரணங்களால் அங்கு கறுப்பர்-வெள்ளையர் என்ற இன வேறுபாடு கடந்த
ஒரு நூற்றாண்டுக் காலத்திலேயே அடியற்றுப்போக வாய்ப்பு நேரிட்டது. இங்குள்ள சாதி அமைப்பு அத் தன்மையில் இல்லை.

மிகச் சிறுபான்மையினராக உள்ள (Microscopic Minority) பார்ப்பனர்-மிகப் பெரும்பான்மையினராக உள்ள திராவிடரை மத அங்கீகாரம் - சாஸ்திர அனுமதி கொண்டு இழிசாதியினராய் ஆக்கி வைத்திருப்பதே இங்குள்ள மனிதத் தன்மைக்கு எதிரான நிலையாகும்.

இவ்வகையால், ‘சமுதாய உயர்வு' பெற்ற பார்ப்பனர், இதே காரணத்தால் ‘அரசியல் ஆதிக்கம்' ‘பொருளுடைமை ஆதிக்கம்' பெற்றவர்களாகவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் திகழ்கின்றனர். ஆனால், மிகப்பெரும்பான்மையினரான திராவிட மக்கள் மேற்குறித்த எல்லாத் துறைகளிலும் கீழ்நிலையிலேயே நெடுங்காலமாக வைக்கப்பட்டு விட்டனர். ஆதலின், இங்கு சாதி ஒழிக்கப்படும் வரையில் மிகச்சிறுபான்மை மக்கள் மிகப்பெரும்பான்மையினர் பேரில் ஆதிக்கம் செலுத்துவது நிற்காது என, அதை அழிக்க வேண்டியே­ பெரியார் 55 ஆண்டு காலம் வகுப்புரிமைக்குப் போராடலானார்.

சமுதாயக் கொள்கைகளைப் பொறுத்துத் தீவிரவாதம் பேசுவதாகக் கருதுகின்ற சிலர், வகுப்புரிமை கோருவது என்பது, ‘சாதி எண்ணத்தை வளர்ப்பது ஆகும்' என உரத்துக் கூறுவர். இங்கு இந்துச் சட்டபூர்வமாகவும், இந்திய அரசியல் சட்ட பூர்வமாகவும், ‘சாதி அகற்றப்பட்டு விட்டது' என்ற நிலை இனித் தோன்றி விட்டாலுங்கூட, அதற்குப் பின்னரும் நீண்ட காலம் சிறுபான்மையினர் ஆதிக்கமே நீடிக்கக் கூடிய அந்த அளவுக்கு பெரும்பான்மையினர் என்போர் உரிமை அற்றவர்களாக நெடுங்காலம் வைக்கப்பட்டு விட்டனர் என்பதை அன்னார் அறிதல் வேண்டும்.

இங்கு சமூக அந்தஸ்து-உரிமை, வசதி-உடைமை, வசதி­அனுபவிப்பு வாய்ப்பு இவை அனைத்தும் 1974ஆம் ஆண்டிலும் சாதி அமைப்பின்படியே அமைந்துள்ளன என்பதையும் பிரத்தியட்ச உணர்வோடு நோக்கும் எவரும் அறிதல் கூடும்.

இங்கு, சமூகத்தில் பெரும்பான்மை கருதி நீதியும், உரிமையும் வழங்கப்படாமல் -சிறுபான்மையினரின் பாது காப்பையும், உயர்வையும் மையமாகவும் இலட்சியமாகவும் கொண்டு நீதியும் உரிமையும் அரண் செய்யப்பட்டிருப்ப தானது, ‘மானிட உரிமைகள்' (human rights) கோட்பாட்டுக்கு முற்றிலும் விரோதமானதாகும்; அதுவும், ‘ஜனநாயகக் குடிஅரசு' அமைப்பில் அது இரட்டிப்புக் கேடுள்ளதாகவே அமையும் என்பது உணரத்தக்கது.

இவற்றை நடுநிலையிலிருந்து காண்போர், பெரியாரின் வகுப்புரிமைக் கொள்கையிலுள்ள மானிட உரிமைக் கோட்பாட்டை நன்கு உணர இயலும்.

அடுத்து, ‘பேத நிலை ஒழிய வேண்டும்' எனக் கோரிய அவர், ‘பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்' எனப் பிரித்துக் காட்டியுள்ளது பற்றியும் காண்போம்.

இங்கு, பேதநிலை என்பது பிறவியோடு பிணைக்கப் பட்டுள்ளது; பிறந்தது முதல் சாகும் வரை ஒருவர் பிறக்க நேர்ந்த இடத்தை அல்லது பிறப்பு வழியை (Womb) ஆதாரமாக வைத்துப் பேதம் நிலைக்க எல்லா வகைகளிலும் வழி செய்யப்பட்டுள்ளது; அதாவது, பார்ப்பனத்தியின் வயிற்றில் பிறந்தாலன்றி-வேறு எக்காரணங்கொண்டும் எவரும் பார்ப்பனராக ஆக இயலாது என்பதே அதுவாகும்.

இது, 2000 ஆண்டு காலத்திற்கு முற்பட்ட மனுநீதியில் விதிக்கப்பட்டவாறு, ‘பிராமண சாதி ஸ்திரீயினிடத்தில் பிறந்தவனே பிராமணன் ஆவான்' (மனுநீதி, அத்தியாயம் 10, சுலோகம் 74) என்ற தத்துவம் இன்றும் சட்டங்களின் படியும், கோர்ட்டு நீதிப்படியும் நிலைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், நமக்கு வாழ்க்கை நியதியாகவே அது ஆக்கப்பட்டு விட்டது என்பதையும் உணர்த்தும். இத்தன்மை உலகின் வேறு எப்பகுதியிலும் என்றும் இருந்திராத இழி தன்மையதாகும்.

இவ்வாறு உள்ள இப்போதைய நிலையினை இங்குக் கற்பித்தவர் பார்ப்பனர்; இதனை இன்றும் காத்து நிலைக்கச் செய்ய இமாலய முயற்சி செய்பவரும் பார்ப்பனர். இத்தன் மையுடைய இவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு பேதம் பாராட்டாத மனிதராகக் கூடி வாழ விரும்பினால்-அதை என்றும் வெறுத்தவரல்லர் பெரியார்; அத்தன்மையை விருப்புடன் வரவேற்றுள்ளவரே அவர் என்பது அறியத்தகும்.

ஆயினும், வரலாற்றுக்குட்பட்ட கடந்த 2000 ஆண்டு களில் அவ்வாறு முன்வந்த பார்ப்பனர் ஒருவருமிலர்.

எனவே, பார்ப்பனரின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டுப் பேதநிலை யைச் சுமந்து வாழும் திராவிடர் அச்சூழ்ச்சிப் பிடியினின்றும் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதால் பார்ப்பனரை ஒதுக்கி, பேத நிலையை அகற்றிக் கொள்ள விரும்புகின்றனர்.

எத்துறையிலும் பேதநிலை இல்லாத இடமே மனித சமூகம் இன்பமாக வாழ ஏற்ற இடமாகும் என்பதே பெரியார்தம் உறுதியான கொள்கையாகும்.

எனவேதான், இங்கு பிறவி காரணமாக உள்ள பேதநிலையை அகற்ற அருந்தொண்டாற்றி, அதற்கெனவே இறுதி மூச்சுவரை உழைத்த அவர், பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்ற உணர்வை வளர்த்து, பேதநிலை ஒழிய வழிவகுத்தார்.

பார்ப்பனருக்கு உள்ள இனஉணர்வு திராவிடர்க்கும் உண்டாவதற்குத் தடையாக நிற்பது அவரிடையே உள்ள உட்சாதிப் பிரிவுகளாகும்; 1946க்குப் பின்னர், சட்டத்தின் முன்னால் இவை இல்லை எனினும், கொள்வினை கொடுப்பினையில் இன்றும் நிலைபெற்றுள்ளவை யாம். அன்றியும், திராவிடர், தம் சொந்த வாழ்வின் முன்னேற் றங்கருதி மட்டும் தத்தம் உட்சாதி உணர்வுள்ளவராக விளங்குகின்றனர்; பார்ப்பனரைப்போல் சமூக முன்னேற்றங் கருதி உட்சாதி உணர்வை உதறிவிட்டு, இன உணர்வு கொள்ள முன் வந்தாரிலர். இதனை (A Non-brahmin is individually communal and a Brahmin is communally communal) என இன்னொரு வகையிலும், ஆங்கிலத்தில் எடுத்துக் கூறுவார், பெரியார். மேலும், அரசியல் காரணம் கொண்டும் பிரிந்து கிடப்பவராவர், திராவிடர்.

இத்தன்மைகளை மறந்து திராவிடர் ஒன்றுபட வேண்டு மென அய்யா அவர்கள் அயராது பணியாற்றினார். அரசியல் தலைவர்களும், மக்கள் தலைவர்களும் இவற்றுக்கு ஆவன செய்யக் கடமைப்பட்டவராவர்.

அடுத்தது ‘நாட்டுப் பிரிவினை’ பற்றிய அவர்தம் கருத்தாகும்.

பெரியாரவர்களின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை, எவரையும் அடிமை கொண்டு ஆளவேண்டும் என்ற கருத்தைக் கொண்டதன்று.

இங்கு வாழும் நான்கு கோடித் திராவிடர்களும் தங்களுக்கு எத்துறையிலும் சிறிதும் உரிமை அளிக்காத நிலையில், நெடுந்தொலைவிலுள்ள மக்களுக்கு ஆட்பட்டு, ‘ஒருமைப்பாடு காப்பதற்காக' உரிமைகளை இழந்து வாழ்வது, மனித சுதந்தரத்துக்கு நேர்மாறானது என்பதனாலேயே பெரியார் தனிநாடு கோரினார்.

சமுதாய உரிமையிலும், அரசியல் உரிமையிலும், அனுபவிப்பு வாய்ப்பிலும் சம சந்தர்ப்பம் பெற்றவர்களாக இருந்து பல்வேறு மொழியினரும், நாட்டினரும் ஓர் குடைக்கீழ் வாழ வகையில்லாதபோது-உரிமை வேட்கை யுடையோர் நாட்டுப் பிரிவினை கோருவது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

ஒற்றுமை அல்லது ஒருமைப்பாடு என்பது எல்லா வகையிலும் சம நிலையிலுள்ள - தன்னாதிபதியம் கொண்ட இரண்டு அல்லது பல அமைப்புக்களிடையேதான் அமைய முடியும்; சமநிலை பெற்றிராத- தன்னாதிபதியம் (sovereignity) இழந்த அமைப்புக்களிடையே ஒருமைப்பாடு தோன்றாது, வளராது; அதற்கு மாறாக வேறுபாடும் பகையுமே வளரும்.

‘மானிட உரிமை நாள்' (Human Rights Day), ‘உலக ஒருமைப்பாடு' இவை பற்றி நாள்தோறும் முயற்சி மேற்கொண்டு செயல்பட்டுவரும் அய்க்கிய நாடுகள் பெரு மன்றம் (United Nations Organisation) -சில இலட்சக்கணக்கான மக்கள் தொகை உள்ள சின்னஞ்சிறு நாடுகளை, நூற்றுக்கணக்கில் உள்ளவற்றை -தன்னாதிபதிய தனிச்சுதந்தர நாடுகளாக (Sovereign Independent Countries) ஏற்று மதித்து வருவது அனைவரும் உன்னற்பாலது.

ஏதேனும் ஒருவகையில் சுதந்தரம் பறிக்கப்படுவதை ஒருப்படாத நிலையில்தான் தத்தம் சுதந்தரத்தைக் காத்துக் கொள்ள வேண்டி, அத்துணைச் சின்னஞ்சிறு நாடுகளும் சுதந்தரம் கோரிப் பெற்றனவேயன்றி, இன்னொரு சாராரின் சுதந்தரத்தைப் பறிப்பதற்கன்று. இது உலகம் அறிந்த உண்மை.

சின்னஞ்சிறு நாடுகளாயினும் சுதந்தர நாடுகளாக நின்று நிலவுவதனால்தான் நெடுங்காலத்துக்கு முன்னரே மூன்றாம் உலகப் பெரும் போர் தோன்றி உலகம் அழிக்கப் படுவதினின்றும் தடுத்து நிறுத்த-சம நிலையுள்ளவராக உலக நாட்டினர் ஒன்றுகூடி உலக அமைதியைக் காத்திட இயன்றது. இது உலக ஒருமைப்பாட்டுக்கு ஒரு படிக்கட்டாக அமைந் துள்ளது காணத்தக்கது.

எனவே, பெரியார் அவர்கள் கிளத்திய தனி நாடு கோரிக்கை திராவிடரின் சுதந்தரத்தைக் காப்பதை - இங்கு மனித சுதந்தரம் காக்கப்பட வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டதேயன்றி, உலக மானிட ஒருமைப்பாட்டுக்கு எதிரானதன்று.

(01.07.1974இல் வெளியிடப்பட்ட “பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்” நூலுக்கான முன்னுரைப் பகுதியில் பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து அவர்களின் பதிவு)

Pin It