புழுக்களோடு நெளிந்திருந்தாய்; பூணூல் காற்றுப்
புழுதியிலே மூச்சிழுத்தாய்; சடங்குக் குப்பை
வழுக்களிலே பிழைத்திருந்தாய்; மயக்கச் சேற்றில்
வழுக்குவதை வழக்கமாக்கிக் கொண்டாய்; சாதிக்
குழுக்களிலே கீழ்மையென மிதிக்கப் பட்டாய்.
குனிவதையே முதுகெலும்பின் தொழிலாய்க் கொண்டாய்
அழுக்கெடுத்து. உனை உனக்கே ‘மனிதன்’ என்று
அறிமுகமே செய்து வைக்கப் பெரியார் வந்தார்.

ஈராயிரம் ஆண்டாய் ஆரிய மாயை
இருட்டுக்குள் சிறைக்கிடந்த அடிமைக்கேட்டை
ஓராயிரம் பேர் கண்டும் காணாரே!
ஓர் அரிமாப் பார்வையிங்குப் பட்டதாலே
தேராயிரம் ஓடும் திருக்கோவில்கள்,
திருவிழாக்கள், தலைப்பிறந்த பிராமணர்கள்
சீராயிரம் வழங்கும் என்ற வேள்வி
திறனாய்வுத் தாக்குண்டு மருளும் கண்டீர்.

கொண்டாடும் தீபாவளி நாளைப் பற்றிக்
கூத்தாடும் கதைக்கருவே வெட்கக்கேடு
திண்டாடும் வெடி வெடித்துத் தமிழ்ப் பண்பாடு
சிதறியோடக் களித்தாடும் தமிழீர்! பூமிப்
பெண்டாட்டி, திருமாலைப் புணர்ந்து பெற்ற
பிள்ளைக்காய் குடும்பமாகத் தலைகுளிப்பீர்
தொண்டாடும் உயிர்த்தொழிலாம் உழவுப்பொங்கல்
திருநாளைக் கொண்டாடப் பெரியார் ஆர்த்தார்.

ஈரோட்டார்; பகுத்தறிவுப் பண்ணை வீட்டார்.
ஏற்கமாட்டாப் பார்ப்பனிய எதிரி வீட்டார்.
நேர்(மை) ஓட்டார்; தன்மானம் சாய்க்க மாட்டார்.
தீயிடாமல் புராணங்கள் விடவே மாட்டார்.
ஏர்க் காட்டார்; இழிவுகளை ஏற்க மாட்டார்.
இடிய மாட்டார்; எவருக்கும் அஞ்ச மாட்டார்.
கார்க்(முகில்)காட்டார் வானத்தை வணங்க மாட்டார்.
கரையேற்றப் பெரியார்போல் வரவே மாட்டார்.

தலைமுறைகள் கோடியிலும் பெரியார் போன்று
தரணியெங்கும் கண்டிலேன் நான் என்றார் ‘அண்ணா’
இலைமறைவுக் காய்மறைவுக் குழப்பம் இல்லார்
இறைவனில்லை, இல்லவே இல்லை அதை இன்னும்
கலை முறையாய் நம்புகிறான் முட்டாள்; கண்டு
கழறியவன் முட்டாள் என்று இவர்போல்
மலை இடியாய் முழக்கியவர் யாருமில்லர்
மாத்தலைவர் இவரென்றே வையகம் சுட்டும்.

- பேராசிரியர் இரா. சோதிவாணன்

Pin It