ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இந்தியாவில் வேதிய சனாதன அதர்மத்துக்கு எதிரான சிந்தனைப் போர் நடந்து கொண்டேயிருக்கிறது. இந்த மாபெரும் சிந்தனைப் போரின் உச்சமாய் முகிழ்த்தது திராவிட இயக்கம். இதுவரை தோன்றிய சனாதன எதிர்ப்பாளர்களின் சிந்தனைகள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு இது மேலெழுந்தது. பெரியாரும் புரட்சிப் பாவேந்தரும் அண்ணாவும் மட்டுமல்லர்; தமிழறி ஞர்கள் பலரும். இந்தியத் துணைக் கண்டத்தின் சமூகவியல் அறிஞர்கள் பலரும் இதன் வேர்களும் விழுது களுமாய் விளங்கினர். இந்த இயக்க மாகிய ஈட்டியின் கூர்முனையாக முகிழ்த்ததுதான் “தென்மொழி இயக்கம்”.

தென்மொழி என்பது ஓரிதழ் தான். ஆனால், அது ஆற்றல் மிக்க ஒரு பேரியக்கமாகத்தான் உலகத் தமிழர் உள்ளங்களில் கிளர்ந்தெழுந்தது.

திராவிட இயக்கச் சிந்தனைகளில் ஊறித் திளைத்த இளைஞர்களே தென்மொழியை நெஞ்சிலும் தோளிலும் தாங்கினர். அவர்களின் உள்ளங்களில் அது நெருப்பாய்க் கிளர்ந்தெழுந்து, தென்மொழியைப் பரப்புவதை இந்த இளை ஞர்கள் தம் உயிர்ப் பணியாய்க் கொண்டனர்.

ஏன் இது நிகழ்ந்தது?perunchithiranarவடமொழி முதலான எந்த மொழியின் உதவியுமின்றித் தனித்தியங்கவல்ல ஆற்றலுடையது தமிழ்மொழி என்பதை முனைவர் கால்டுவெல் ஆராய்ந்துரைத்தார். அவருடைய ஆய்வின் முடிவை முழுமையான மெய் என நிலைநாட்டியது தென்மொழி. தமிழைச் சிதைத்து. அது கலவை மொழிதான் எனக் காட்ட முயன்றனர் ஆரியப் பார்ப்பனரும் வடவரும். அவர்களை ஏறி மிதித்துத் தமிழ் சொல்வளமும் தனிப் பேராற்றலும் உடைய மொழி என்பதைப் பறைசாற்றியது தென்மொழி.

தமிழைச் சிதைப்பதையும், மனிதகுல நலத்தைப் போற்றக்கூடிய தமிழ்ப் பண்பாட்டைச் சிதைப்பதையும், தமிழரை ஆரிய மடமையில் ஆழ்த்துவதையும் தமிழ் இலக்கண, இலக்கியங்களுக்கு வடமொழி மூலம் எனக் காட்டுவதையும் தம் தலையாய கடமைகளாகக் கொண்டிருந்தோரின் பற்களை உடைத்து அவர்களை ஊரம்பலத்தில் உரித்து நிறுத்தியது தென்மொழி.

தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்னும் முந்நிலை உரிமைக்கும் நலத்திற்கும் உயர்விற்கும் இடையறாது தொண்டாற்றியது தென்மொழி.

தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் நிலத்திற்கும்உண்மையான தொண் டாற்றும் அறிஞர்களையும் தலைவர் களையும் தமிழினத்திற்கு அடை யாளம் காட்டியது தென்மொழி. பொய்யர்களின் முகமூடிகளைப் போட்டு உடைத்தது தென்மொழி.

தமிழின் நலத்திற்கான ஆக்க வழித்திட்டங்களைஅறிமுகம்செய்தது தென்மொழி. நல்ல தமிழ்ப் படைப் பாளிகளை அடையாளம் கண்டு ஊக்கமளித்தது தென்மொழி.

தமிழ்மொழியின் விடுதலை மண் விடுதலை மூலமே மெய்யாகும் என்றும், அதற்காக மாபெரும் மாநாடுகளைத் திருச்சி, மதுரை, சென்னை நகரங்களில் நடத்திக் காட்டியது தென்மொழி.

தென்மொழியின் அட்டைப்பாடல் ஒவ்வொன்றும் படிப்போரின் நாடி நரம்புகளை முறுக்கேற்றுவதாக இருக்கும்.

“ஊழி பெருகி உலகம் புரண்டாலும்

உளம்திருந்த மாட்டீர்கள் ஓ! ஓ! ஓ! பார்ப்பனரே!”

போன்ற வரிகள் குதிரை வீரனின் சாட்டை அடிகள் போல் செவிகளை உசுப்பும்.

அட்டையைத் திறந்தால், தென்மொழி ஒரு மா மத வேழம் என்பதைக் காட்டும் படம்! தென்மொழியின் கொள்கை முழக்கப் பாடல் :

“கெஞ்சுவ தில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்

அஞ்சுவ தில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்

துஞ்சுவ தில்லை! எனவே தமிழர் தோலெழுந்தால்

எஞ்சுவ தில்லை உலகில் எவரும் எதிர்நின்றே”

தென்மொழியின் கொள்கைப் பேரறிவிப்பாக இப்பாடல் வரிகள் முழங்கி நிற்கும்.

அதனை அடுத்து, தென்மொழியின் இலக்கைச் சொல்லும் வரிகள் : “இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும்.....” எதிரிகளைக் குலை நடுங்கச் செய்யும் இந்த வரிகளை அடுத்து, குகையிலிருந்து பாய்ந்து வரும் அரிமாவின் முழக்கமாய் ஆசிரிய உரை திறவாக் கண்களையும் திறந்துவிடும் சொற்கள். தென்மொழியின் தனிச்சிறப்பே ஆசிரிய உரைகள்தாம்.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்காலம் தமிழ் நிலத்தில் தென்மொழி என்னும் இதழாக உலவிய அரிமா பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

“ஈராயிரம் ஆண்டு வரலாற்றில் தமிழ் இனத்திற்கு வாய்த்த உண்மைத் தலைவர்கள் இருவர். ஒருவர் திருவள்ளுவர்; மற்றொருவர் பெரியார்.”

“தமிழுக்குத் தலைவர்கள் என்றால் மறைமலை யடிகளும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரும்தாம்!” “தமிழ் உரிமைக்கு முழங்கிய பாவலர் என்றால், அவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனே!” என்று வரையறை செய்தவர் பெருஞ்சித்திரனார். தமிழ்மொழியின் முழு வலிமையையும் காட்டும் இதழாக அவர் தென்மொழியை நடத்தினார்.

அவருடைய மொழித்திறம், மொழி ஆளுமை கம்பரோடும், இளங்கோவோடும், சங்கப் புலவர்க ளோடும் ஒப்பிடக் கூடியது. பெருஞ்சித்திரனாரின் பாடல்களாயினும் உரைநடையாயினும் தினவெடுத்த சொற்களை ஏந்திவரும் இரணியன் வதைப்படலத்தில் இரணியன் கூற்றாகக் கம்பர் பாடுவார்.

“ஆரடா சிரித்தாய்? சொன்ன

அரிகொலோ? அஞ்சிப் புக்க

நீரடா போதா தென்று

நெடுந்தறி நேடி னாயோ?

போரடா பொருதி யாயின்

புறப்படு புறப்ப டென்றான்”

கம்பரின் இந்த வீச்சைப் பாவலரேறு அவர்களிடம் தான் காணமுடியும்.

மதுரையில் தமிழக விடுதலை மாநாடு! விடுதலை முழக்கமிட்டபடி ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது. அதனைக் காட்சிப்படுத்துகிறார் பாவலரேறு.

“சென்றுகொண் டிருந்தது விடுதலை மாப்படை!

செவ்வரி படர்ந்தது நெடுங்கூர் விழிகளில்!

தின்றுகொண் டிருந்தனர் பகையினை வாயினால்!

தினவுநீர் ஊறித் தெறித்தது பேச்சிலே!

என்றுகண் டிருக்கும்அப் பாண்டியன் மாநகர்?

எதிர்த்தவர் யாவரும் யாவரும் வியந்தனர்!

நின்றுகொண் டிருந்தனர் பகைவர்கள் விதிர்ப்புற

நெட்டுயிர்ப் பெய்தினர் நீடுற நடுங்கியே!”

உணர்ச்சி கொப்பளிக்க விடுதலை மாநாட்டு ஊர்வலத்தைக் காட்சிப்படுத்தும் பாவலரின் தமிழ், கம்பனை நினைவூட்டுகிறது.

“என்றெழுவும் தமிழர்படை?

என்றெமது தோள்புடைக்கும்?

இளைஞர்களும் பெண்டிர்களும் எழுந்துவந்தே

ஒன்றிணைவ தெந்தநன்னாள்?

உயர்நிலத்தை மீட்பதெந்நாள்?”

என்று ஏங்கித் தவித்தவர் பெருஞ்சித்திரனார்.

எழுத்தோடு அவர் நின்று விட்டவர் அல்லர். தம் இலக்கை எட்டுவதற்காக இயக்கங்களை உருவாக்கியவர் அவர். மொழிக்காக உலகத் தமிழ்க் கழகம், இன மீட்சிப் போருக்காக உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், அரசியல் மீட்சிக்காகப் பல்வேறு இயக்கங்களுடன் ஒத்துழைப்பு என இயங்கிக் கொண்டே இருந்தவர்.

தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்ற வேளையில், போராளிகளுக்கும் இயக்கங்களுக்கும் மாபெரும் உந்து விசையாகத் திகழ்ந்தவர் பாவலரேறு. தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர் வாழும் அயல் நிலங்களிலும் தமிழருக்குப் போர்க் குணத்தை ஊட்டியவை பாவலரேறு அவர்களின் கட்டுரைகளும் பாடல்களும் ஆகும். மாதத்தின் முதற்கிழமையில் தென்மொழி வந்துவிட்டால், அடுத்த தென்மொழி இதழ் எப்போது வரும் வரும் என்று தவித்துக் கொண்டிருந்தனர் தென்மொழி நேயர்கள்.

சத்தியமங்கலம் நாகராசன், தோழர் வே.ஆனைமுத்து, எஸ்.வி. இராசதுரை, சாலை. இளந்திரையன், புலவர் கலியபெருமாள் முதலான அரசியல் அறிஞர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் பாவலரேறு. தேவநேயர் என்னும் மாபெரும் மொழிஞாயிற்றை உலகிற்கு அடையாளம் காட்டியதும் தென்மொழியே.

பகை ஆற்றல்களுடன் எந்த நிலையிலும் நட்பு பாராட்டாத புகழ் வாழ்வு பாவலரேறுக்குரியது. ஆரிய சனாதனிகளுக்கு எப்போதும் அச்சம் தரும் சொற்களென்றால், அவை தென்மொழி என்பதும், பெருஞ் சித்திரனார் என்பதும்தான்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொள்கை உரவோர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் பாவலரேறு மட்டுமே.

மொழி உரிமை, நாட்டு விடுதலை, பிராமணிய எதிர்ப்பு எனப் பல நிலைகளில் இயங்கி வந்தாலும், அவர் மாபெரும் மனிதநேயர். மனித வாழ்வியலின் நுட்பங்களை அவர்போல் நுட்பமாக விளம்பிய பாவலர்கள் மிகவும் குறைவு.

“புடவிபல! ஒன்றுகடல்

புன்மணல்இந் ஞாலம்!

அடவிஎன மீன்செறிவாம்!

அண்டம்பல் கோடி!

இடவரைகள் எண்திசைகள்

இவ்வுலக ஆக்கம்!

கடவிடைகள் நேர்ச்சிக்

கணிப்பு!”

இயற்கையின் இயங்கலையும், சார்பு உண்மைகளையும் மிக நுட்பமாகக் கூறிச் செல்கிறார்.

“சென்ற தடத்திலே சென்றுகொண் டிராதே!

சேற்றில் சகதியில் நடந்துபார்! - முள்

சிரிக்கும் கடும்புதரில் நுழைந்துபார்! - பெருங்

குன்றுண்டு! மலையுண்டு! காடுண்டு! கடலுண்டு!

குனிந்து நிமிர்ந்துநடந் தோடுவாய்! - உயிர்க்

குலங்கள் வாழ்கஎனப் பாடுவாய்!”

நமது மக்கட்குலத்தின் ஏற்றத்திற்குப் புதிய பட்டறிவுகளின் தேவையை எவ்வளவு நுண்ணோக்குடன் கூறுகிறார் பாவலரேறு.

மனிதகுல ஏற்றத்திற்காகச் செயல்படுவோருக்குப் பாவலரேறு கூறும் சிந்தனை நுட்பங்கள் நேர்த்தி மிக்கவை.

“இன்றைய நாள்நினை!

இனிவரும் நாள்நினை!

என்றும் புதியன் நீ!

யாவும் புதியன!

அன்றன்றும் புதுநாள்!

அனைத்தும் இனியன!

ஒன்று கை போகின்

ஒன்றுஉன் கைவரும்!”

“முழுவதும் அறிந்துகொள்!

முடிவு செய்யாதே!

தொழுவது நன்று! எனின்

அடிமை ஆகாதே!

விழுவதும் இயல்பு! உடன்

விசும்பென நின்றுகொள்!

அழுவது கோழைமை!

அயர்வு கொள்ளாதே!”

அநீதி கொய்யவும், நீதியை நெய்யவும் விட்டுக் கொடுக்காத தன்மானப் புலவர் ஒருவர் வாழ்ந்திருந்தார் என்பது ஒரு வரலாற்று விந்தைதான்!

- இரணியன்

Pin It