தமிழீழத்தின் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி!

2006 ஆகத்து முதற்கொண்டு, இலங்கையின் வடக்கு மாகாணத் தமிழர்களையும், கிழக்கு மாகாணத் தமிழர்களையும் அதிபர் மகிந்த இராசபக்சே, கோத்தபயா இராசபக்சே, பாசில் இராசபக்சே கொடூரர்களும்; படைத் தளபதி பொன்சேகாவும் உயிருக்கு அஞ்சும் நிலைக்கு ஆளாக்கினர். அவ்வளவு கொடுமைகளையும் எதிர்த்து அஞ்சா நெஞ்சுடன் வடக்கு - கிழக்கு இரண்டு மாகாணத் தமிழரும்; விடுதலைப்புலி மறவர்களும் உறுதியாக நின்று போராடினர். 2009 மே, 17,18,19 நாள்களில் இக்கொடுங் கோலர்கள் - 3 இலக்கம் தமிழ் மக்களை முள்வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு, 10ஆயிரம் விடுதலைப்புலி மறவர்களையும், 141 ஆயிரம் தமிழீழப் பொதுமக்களையும் வேதியல் கொத்துக் குண்டுகளை மழையாகப் பொழிந்து உயிரோடு கொன்று குவித்தனர்.

இந்திய அரசுப்படையே இலங்கைப் படையுடன் இணைந்து நின்று இக்கொடுமையைச் செய்தது. அய்.நா.அவை இந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தது. இலங்கை அரசின் ஆலோசகராக விளங்கிய ஒரு மலையாளியும், அய்.நா.அவையில் முதன்மைப் பொறுப்பிலிருந்த - இலங்கை அதிகாரி மலையாளியின் உடன்பிறந்தவரும் ஈழத் தமிழர், இனப்படுகொலைக்கு ஆளாகிட, எல்லாம் செய்தனர்.

இவ்வளவு கொடுமைகளையும இழைப்பதில் கூட்டாளியாக நின்று செயல்பட்ட இந்தியத் தேசிய காங்கிரசுத் தலைமையிலான டாக்டர் மன்மோகன் சிங் அரசு, சோனியா காந்தியின் விருப்பப்படிச் செயல்பட்டு, புரையோடிய புண்ணுக்குப் புனுகு பூசுவது போல - ‘இராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா 1987 ஒப்பந்தப்படி, இலங்கை அரசமைப்பில் 13ஆவது சட்டத்திருத் தத்தைச் செயல்படுத்துங்கள்’ என்று மட்டும் கோரியது.

‘தமிழீழத் தமிழருக்குத் தனிச் சுதந்தர உரிமையோ, தன்னாட்சி உரிமையோ வந்து சேரக்கூடாது - அதற்கு வழிகோல மாட்டோம்’ என்று வெளிப்படையாக இந்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, துலாம்பரமாக அறிவித்துவிட்டது.

இந்த இழிநிலைக்கு மூலகாரணம் - 1949 முதல் இன்று வரையில், தமிழகத் தமிழர்கள் புதுதில்லிக்கு, பார்ப்பன - பனியா - மார்வாரி ஆட்சிக்குக் கையாள்களாகவும் கங்காணி களாகவும் செயல்பட்டதேயாகும்.

காணப் பொறுக்காத தமிழினப் படுகொலையை நேரில் பார்த்த வடக்கு மாகாணத் தமிழர்கள் - எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தமிழீழத் தமிழ்மக்களின் சாம்பல் தேங்கிய மண்ணின் மேல் நின்று, தன்னம்பிக்கையுடன் வடக்கு மாகாணச் சட்டமன்றத்துக்கான தேர்தலில், 21.9.2013 அன்று பெருவாரியான எண்ணிக்கையில் வாக்களித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் - 36 பேருக்கு 28 பேர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களுள் முதலமைச்சராக வரப்போகும் வேட்பாளரான இலங்கை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேசுவரன் வடக்கு மாகாணத்தில் பிறந்தவர்; இன்று கொழும்பு நகரில் வாழ்பவர்; சிறந்த சட்டமேதை.

அவர், மாவீரன் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித் துறையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், “பிரபாகரன் ஒரு மாவீரன்; அவர் பயங்கரவாத இயக்கத் தலைவர் அன்று. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாணச் சட்டமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால் - தமிழீழத் தமிழர்க்குத் தன்னுரிமை வந்துசேரப் பாடுபடுவோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

‘விக்னேசுவரன் சுதந்தர ஈழத்துக்கு ஆதரவாகப் பேசுகிறார்’ என, உடனேயே ஒரு பொய்க் குற்றச்சாட்டை அவர்மீது சுமத்திவிட்டார், மகிந்த இராசபக்சே.

‘ஒரு நாயை அடித்துக் கொல்ல வேண்டுமானால் - அது வெறிநாய் என்று பெயர் சூட்டிக் கொன்றுவிடு’ என்று ஒரு பழமொழி உண்டு. எனவேதான், அவர் அப்படிக் குற்றஞ்சாட்டினார்.

1997 மார்ச்சு 27இல் நிறைவேற்றப்பட்ட இலங்கை அரசமைப்புச் சட்டத்தில், “மாகாணங்களுக்கு அதி காரங்களைப் பிரித்து அளித்தல்” என்கிற பகுதி - அச் சட்டத்தின் படியில் (நகலில்) வெளியிடப்படவில்லை.

புலிகளுடனான போர், 19.5.2009 அன்று முடிந்தது.

அதனை அடுத்து, பழைய இலங்கை அரசமைப்புச் சட்டம் முழுவதையும் கொஞ்சங் கொஞ்சமாக மகிந்த இராசபக்சே அரசு திருத்தியது. 9.9.2010 அன்று அச்சட்டத்துக்கு இறுதி வடிவம் அளித்தது.

அச்சட்டத்தில், மொத்தம் 24 பகுதிகளும்; 172 விதிகளும்; ஒன்பது அட்டவணைகளும் உள்ளன.

இவற்றுள், பகுதி 17-அ (Chapter XVII A) என்பது, ‘மாகாணச் சட்ட அவைகள் அமைப்பு’ப் பற்றிக் கூறுகிறது.

இதன் கீழ் உள்ள விதி 154 A முதல் 154 T வரையில் உள்ளவை, இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தப்படி அமைக்கப்பட்டுள்ளன.

அதில் 9 மாகாணங்களுக்கும் என்னென்ன அதிகாரங்கள் என்பது பற்றி, 9 ஆம் அட்டவணையில், அதிகாரப் பகிர்வுப் பட்டியல் I என்பதில்,

‘13ஆவது சட்டத் திருத்தப்படி’ என்று அடிக்குறிப்பிட்டு, சில திருத்தங்களைச் செய்து, 2010 அரசமைப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட பதிப்பை 2011இல் வெளியிட்டுள்ளது. அதில்,

“அதிகாரப்பூர்வமாக இல்லாமல் வெளியிடப் பட்டுள்ள இச்சட்டப் பதிப்பு - என்று தொடங்கி; This unofficial edition, edited by the Bills office of the Department of Legislative Services of Parliament of Sri Lanka reproduces the text of the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka as amended by Parliament from time to time upto the Eighteenth Amendment to the Constitution. The footnotes below the text indicate the particular Amendments to the Constitution by which such amendments have been made.” 

இத்திருத்தங்களிலேயே 13ஆவது சட்டத் திருத்தமும் அடக்கப்பட்டு விட்டது. இதுபற்றிப் பல அடிக்குறிப்புகள் இச்சட்டத்தில் உள்ளன. 

இந்த அரசமைப்புச் சட்டப்படியே, வடக்கு மாகாண அரசு அமைக்கப்படும்.

தேர்தல் வழியாக வெற்றி பெற்ற ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை’ச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் கள் 28 பேரும் - பிரதிநிதித்துவச் சட்டப்படி இதற்கு அன்பளிப்பாக (Bonus) அளிக்கப்படும் 2 பேரும் ஆக 30பேரும்; இராசபக்சேவின் ‘அய்க்கிய மக்கள் சுதந்தரக் கூட்டணி’ உறுப்பினர்கள் 7 பேரும்; ‘இலங்கை முஸ்லிம் சுதந்தரக் கட்சி’ உறுப்பினர் ஒருவரும் ஆக 38 உறுப்பினர்களைக் கொண்டதாக, ‘இலங்கை வடக்கு மாகாணச் சட்ட மன்றம்’ இயங்கும்.

இன்றைய ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், அக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந் தன் தலைமையில் கூடி, நீதிபதி சி.வி.விக்னேசுவரனை முதலமைச்சர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்துவிட்டனர்.

முதலமைச்சரை அன்னியில், நான்கு பேர்கள் மட்டும் அமைச்சர்களாக முதலமைச்சரால் அமர்த்தப்படுவர்.

வடக்கு மாகாணத்துக்கு இனிமேல் ஆளுநர் அமர்த்தப்படுவார். அவர் சிங்களராகவே இருப்பார்.

தேர்தலில் வெற்றி பெற்று அமைந்திடப் போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் எல்லாத் திட்டங்களையும் முடிவுகளையும் - மாகாண ஆளுநர் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அடுத்து அதிபர் இராசபக்சே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே இன்றுள்ள நிலை.

இது தன்னுரிமை பெற்ற தமிழர் அரசாக இயங்கிட, 2010 இலங்கை அரசமைப்புச் சட்டப்படி உரிமை இல்லை. எனவே, வடக்கு மாகாண அரசு உறுதியாக, தன்னுரிமை பெற்றதாக அமைக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட இலக்குத்தான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் குறிக்கோள் என்பதைத் தேர்தல் அறிக்கையில் அக்கட்சி உறுதிப்பட அறிவித்துள்ளது.

“அந்த அறிவிப்பு பிரிவினையைத் தூண்டுவது” என்று, 21.9.2013 தேர்தலுக்கு முன்னரே, இராசபக்சே அறிவித்து விட்டார்.

அதே போன்ற அடாவடித்தனமான ஒரு பொய்க் கருத்தை, யாழ்ப்பாணப் பகுதியின் படைத் தலைவர் மேஜர் ஜெனரல் மகிந்த ஹதுரு சிங்கே, 15.9.2013 அன்றே அறிவித்து விட்டார்.

“அரசு மறுவாழ்வுப் பயிற்சியில் சேராமல் - வெளியில் தலைமறைவாக இன்னும் 4,000 விடுதலைப்புலிப் போர் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று திரண்டு மீண்டும் போராடவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வழிவகுக்கும்” என்றே அவர் அறிவித்து விட்டார்.

இவற்றையெல்லாம் மனங்கொண்டு, நீதிபதி விக்னேசுவரன், தேர்தல் முடிந்த உடன்காலில், பின் கண்ட செயல் திட்டங்களை அறிவித்துள்ளார்.

1.            தமிழ் மக்கள், இத்தேர்தலில் மக்கள் நாயக நோக்கில் செயல்பட்டிருக்கிறார்கள். மக்கள் தந்த இந்த வெற்றியி லிருந்து இலங்கை அரசு பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.

2. தங்களுக்குத் தன்னாட்சி உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்திப் பெருவாரியாக வாக்களித் திருக்கிறார்கள்.

3.            வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டிருக்கும் இராணு வத்தை உடனேயே இலங்கை அரசு முற்றாகத் திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும்.

4.            இலங்கையில், ஒரு கூட்டாட்சியின் கீழ், தன்னாட்சி அமைக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

இதுபற்றிக் குறிப்பிட்டு, இலங்கை அரசின் மூத்த அமைச்சரும் அரசு செய்தித் தொடர்பாளருமான கெகிலிய ரம்புவெல்லா என்பவர்,

“தற்போதைய (2011) அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்ட மாற்றங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்” என்று தெளிவுபடக் கூறிவிட்டார்.

எனவே, வரப்போகும் வடக்கு மாகாண அரசு, தன் னுரிமை - தன்னாட்சி உரிமை உடைய அரசாக அமைக் கப்பட உரிய திசையில், நீதிபதி சி.வி.விக்னேசுவரன் அரசு செயல்படுவதற்கு வலுச்சேர்க்கும் தன்மையில், தமிழகத் தமிழரெல்லோரும், உலக நாடுகளிலுள்ள தமிழரெல் லோரும் ஒருமுகமாக நின்று குரல் கொடுப்போம்! செயல்படுவோம்!

தமிழகத் தமிழர் தலைவர்களுக்கும், தமிழகத் தமிழ்மக்களுக்கும் இதில் நல்லதொரு புரிதல் வேண்டும். கல்லை நம்பிக் கடவுளை அடைய விரும்பும் ஒருவன், ‘பக்தி’யில் மருள் வந்து ஆடுவதுபோல், “தனித் தமிழீழத்தை வென்றடுப்போம்!” என்று உணர்ச்சிக் கொப்பளிக்கப் பேசி - உணர்ச்சியைக் குத்திக் கிளரி எழுதி, அதனால் தமிழீழத் தமிழர் பேரில் சிங்களக் காடையர் அரசு மேலும் மேலும் தொடர்ந்து கொடுமையை இழைத்திடத், தமிழகத் தமிழர், இனியும் இடந்தரக் கூடாது.

“தமிழகத்து 7கோடித் தமிழரும் - இந்தியாவில், யார்? யார்?” என்பதை, எல்லாத் தமிழரும் ஆர அமர எண்ணிப் பாருங்கள்.

இங்குக் களத்தில் நின்று போராடி, அடி கொடுத்து அடி வாங்கிச் செத்த தமிழ்மாவீரன் என்று ஒருவர் கூட இல்லை.

மண்ணெண்ணெய்க்கும், தீக்குச்சிக்கும் இன்னுயிரை ஈந்த கோழிக்குஞ்சு மனப்பான்மைத் தமிழரைத்தான் கட்டுக் கட்டாக நாம் உருவாக்குகிறோம்.

தன்னுரிமைத் தமிழீழத்தை அமைத்திட, தமிழீழத் தமிழரே வழிகாண விடுவோம்!

தமிழகத் தமிழரும், உலகத் தமிழரும் அக்கோரிக் கை வெற்றிபெற எல்லாம் செய்வோம்!

மலரட்டும் தன்னுரிமைத் தமிழீழம்!

- வே.ஆனைமுத்து

Pin It