கடந்த ஆகத்து மாதம் நடந்த இரண்டு நிகழ்வுகள் இந்தியா முழுவதும் பெரிதும் பேசப்பட்ட செய்திகளாக அமைந்தன. ஒன்று, மகாராட்டிர மாநிலம் புனேவில் 64 அகவையினரான பகுத்தறிவுப் போராளி நரேந்திர தபோல்கர் இந்துமத வெறி கொண்ட இரண்டு இளை ஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொன்று, 72 அகவையினரான அசாராம் பாபு என்னும் கார்ப்பரேட் சாமியார் மத்தியப்பிரதேசத்தில் தன் குருகுலத்தில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த 16 அகவை மாணவி யை, இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தன்னு டைய ஆசிரமத்திற்கு வரச் செய்து பாலியல் வல்லுறவு கொண்டதாகும்.

இவ்விரண்டு செய்திகளும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் போல் தோன்றினாலும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல் நெருங்கிய தொடர்பு உடையவை களாகும். மக்களை அறியாமையில் ஆழ்த்தி, மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கச் செய்து, அடிமைப்படுத்திச் சுரண்டுகின்ற மதத்தின் பெயரிலான பழைமைக்கும் மக்கள் சுய அறிவும், சுயமரியாதை உணர்ச்சியும், ஆராய்ச்சி மனப்பான்மையும், அறிவியல் கண்ணோட்ட மும் பெற்று மனித மாண்புகளையும் விழுமியங்க ளையும் உணர்ந்து சுதந்தரமான - விடுதலை பெற்ற மனிதர்களாக மலர்ச்சியுறச் செய்யும் புதுமைக்குமான போராட்டத்தின் இரு எதிரெதிர் நிகழ்ச்சிகளேயாகும்.

நரேந்திர தபோல்கர் மகாராட்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பிறந்தவர். மருத்துவர் பட்டம் பெற்றவர். இவரது துணைவியாரும் மருத்துவர். 12 ஆண்டுகள் மருத்துவத் தொழில் செய்தார். ஏழை, எளிய மக்கள் நோய்களைப் பற்றியும் அவற்றுக்கான காரணிகள் பற்றியும் அறியாதவர்களாக இருப்பதுடன், பல்வேறு பட்ட மூடநம்பிக்கைகள் காரணமாக, பில்லி சூன்யம், ஏவல், மாந்திரீகம் போன்றவற்றால் தங்கள் பணத்தைப் பறிகொடுப்பதுடன், பல வகையான துன்பங்களுக்கும் ஆளாவதைக் கண்டு மனம் கொதித்தார். அதனால் மக் களிடையே மூடநம்பிக்கைகளை ஒழித்துப் பகுத்தறி வுச் சிந்தனையைப் பரப்புவதையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டார். மூடநம்பிக்கைகளை வளர்த்து மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் மாந்திரீ கர்கள், போலிச் சாமியார்கள், அற்புத சக்தி படைத்தவர் கள் என்று சொல்லிக் கொண்ட பாபாக்கள், மந்திரவாதிகள் முதலானவர்களின் பொய்களைத் தோலுரித்துக் காட்டும் பகுத்தறிவுப் போர் தொடுத்தார். இதற்காகத் தன் மருத்துவத் தொழிலைத் துறந்தார்.

1989ஆம் ஆண்டு ‘தபோல்கர் மூடநம்பிக்கை ஒழிப்புச் சங்கம்’ என்பதைத் தொடங்கினார். இரண்டாயிரம் ஆண்டுகளாக இழிசாதி மக்களாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த சூத்திரர், ஆதிசூத்திர மக்களின் விடுதலைக்கு முதன்மையான தீர்வு, பார்ப்பன ஆதிக்கத்தையும் அவர்களின் ஆதிக்கத்திற்கு ஆதாரமாக உள்ள இந்து மத சாத்திரங்களையும், இதிகாச புராணங்களையும் ஒழிப்பதேயாகும் என்று, புனேயில் பிறந்து வளர்ந்து மராட்டியம் முழுவதும் மாபெரும் இயக்கம் நடத்திய மகாத்மா சோதிராவ் புலேவை (1827-1890) நரேந்திர தபோல்கர் தன் வழிகாட்டியாகக் கொண்டார். அதனால் தபோல்கர் கடவுள் நம்பிக்கை என்கிற ஒன்றைத் தவிர்த்து, மற்ற எல்லா வகையான மூடநம்பிக்கை களையும் எதிர்த்தார். குறிப்பாக இளைஞர்களிடம் அறிவியல் நோக்கும் ஆராய்ச்சி மனப்பான்மையும் வளர்வதற்கு மாறாக, குருட்டு நம்பிக்கைகள் பெருகு வதைக் கண்டு மனம் வெதும்பினார்.

பேய்-பிசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலான மூடநம்பிக்கைகள் பல்கிக் கிடக்கும் சிற்றூர்ப் பகுதி களைப் பகுத்தறிவுப் பரப்புரைக்கான முதன்மையான செயற்களமாகக் கொண்டார். மராத்தி மொழியில் 66 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும், ‘சாதனா’ கிழமை ஏட்டின் ஆசிரியராக 15 ஆண்டுகள் இருந்தார். இந்த ஏட்டின் மூலம் போலிச் சாமியார்களை அம்பலப் படுத்தினார். பகுத்தறிவுத் தீயை மூட்டினார். மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கத்திற்கு மராட்டியம் முழு வதும் கிளைகள் ஏற்பட்டன. மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கில் நடத்தி மக்களிடம் அறிவார்ந்த விளக்கங்களை அளித்தார். சிற்றூர்களில் வீதி நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஊட்டினார். தலைசிறந்த பகுத்தறிவாளராக விளங்கிய ஆபிரகாம் கோவூரை அழைத்துக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பல கூட்டங்களை நடத்தினார்.

வழக்கம் போல, இந்துத்துவ வெறியர்கள், தபோல்கர் இந்து மதத்தை மட்டும் தாக்குகிறார். இசுலாமிய, கிறித்துவ மதங்களைச் சாடுவதில்லை. தபோல்கருக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது என்று குற்றஞ் சாட்டி எதிர்த்தனர். தபோல்கரின் கூட்டங்களில் கல வரம் செய்தனர். ஆயினும் அவருக்கு அரசே முன் வந்து அளித்த காவல்துறையின் பாதுகாப்பையும் வேண்டாம் என்று கூறிவிட்டார். ஒரு கிழமையில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மட்டும் புனேவில் இருப்பார். மற்ற அய்ந்து நாள்களிலும் வெளியூர்களில் பகுத்தறிவுப் பரப்புரை செய்தார். அவரை அழைத்த ஊர் களுக்கெல்லாம் சென்று கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர் பம்பரமாகச் சுழன்று அறிவு கொளுத்தும் பணியில் ஈடுபட்டார்.

மக்களின் மூடநம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு மக்களைச் சுரண்டி, வஞ்சித்து வாழும் போலிச் சாமியார்கள், மந்திரவாதிகள் ஆகியோரைப் பகுத்தறிவுப் பரப்புரை மூலம் மட்டுமே விரட்டிவிட முடியாது என்பதைத் தன் அனுபவத்தில் அறிந்தார். இவர்களைத் தண்டிப்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மகாராட்டிர அரசை வலியுறுத்தி னார். இதற்கான சட்டவரைவை தபோல்கரே உரு வாக்கி அரசுக்கு அனுப்பினார். பல துறைகளிலும் இருந்த முற்போக்குச் சிந்தனையாளர்கள் பலரும் மூடநம்பிக்கையின் பெயரால் மக்கள் துன்புறுத்தப் படுவதையும், சுரண்டப்படுவதையும் தடுத்திட சட்டம் தேவை என்ற கருத்தை ஆதரித்தனர்.

“அறிவியல் மனப்பான்மையை, மனிதநேயத் தை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தை சீர்திருத்தத்தை வளர்த்தெடுப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமையாகும்” என்று அரசியலமைப்புச் சட்டத்தில் விதி 51ஹ(h)இல் கூறப்பட்டுள்ளதைத் தபோல் கர் மூடநம்பிக்கைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டு மென்பதற்கு ஆதாரமாகக் காட்டினார். மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் மூன்று தடவை கொண்டுவரப்பட்டது. பாரதிய சனதா கட்சியும் சிவசேனையும் இது இந்துமதச் சுதந்தரத் துக்கு எதிரானது என்று கடுமையாக எதிர்த்தன. இச்சட்ட வரைவு 29 தடவைகள் திருத்தப்பட்டது. 20-8-2013 அன்று காலை நடைப்பயிற்சியின் போது தபோல்கர் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு அங்கேயே மாண்டார்.

தபோல்கரின் படுகொலையைக் கண்டித்து மகா ராட்டிரம் முழுவதும் கிளர்ச்சி வெடித்தது. மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை ஓர் அவசரச் சட்டமாகப் பிறப்பிக்க வேண்டும் என்று தபோல்கர் மாநில அரசை வலி யுறுத்தி வந்தார். அதனால் தபோல்கர் படுகொலை செய்யப்பட்ட அடுத்தநாளே மகாராட்டிர அமைச்சரவை அவசரச் சட்டம் கொண்டு வருவதாக முடிவு செய்தது. 24-8-13 அன்று, “மனிதர்களைப் பலியிடுதல், மனிதத் தன்மையற்ற செயல்களைச் செய்தல், கெட்ட ஆவி, பேய் ஓட்டுதல், பில்லி சூன்யம் வைத்தல் ஆகியவற் றைத் தடுப்பதற்கான - ஒழிப்பதற்கான அவசரச் சட்டம்” பிறப்பிக்கப்பட்டது.

இச்சட்டத்தின்படி, ஏவல், பில்லி சூன்யம், மாந்திரீகம் ஆகியவற்றைச் செய்தாலோ, விளம்பரப்படுத்தினாலோ, ஊக்குவித்தாலோ, இவற்றின் மூலம் பணம் ஈட்டி னாலோ ஏழு ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை வழங்கப்படும். பிணையில் வெளிவர முடியாதக் குற்ற மாகக் கருதப்படும்; தன்னை கடவுளின் அவதாரம் என்றோ முன்பு வாழ்ந்த துறவிகளின் மறுபிறப்பு என்றோ சொல்லிக் கொள்ளும் சாமியார்களுக்கும் இதே தண்டனை உண்டு என்று இச்சட்டத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. இத்தகைய சட்டம் இந்தியாவில் முதன் முறையாக மகாராட்டிர மாநிலத்தில் கொண்டு வரப் பட்டுள்ளது. இச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கு, தபோல் கரின் இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட கடும் உழைப் பும் பகுத்தறிவுப் பரப்புரையும் அவரின் இன்னுயிரும் அடிப்படையாகத் திகழ்கிறது. ஆனால் தபோல்கரின் படுகொலை குறித்து, இந்துத்துவ ‘சனாதன பாரத்’ என்ற மராத்தி ஏடு அதன் தலையங்கத்தில் ‘ஒரு வருக்கு எது உரியதோ அது கிடைத்திருக்கிறது’ என்று எழுதியது. ஏனோ இன்னும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை.

ஆனால் இந்த மூடநம்பிக்கை ஒழிப்பு அவசரச் சட்டத்தின்கீழ் மகாராட்டிரத்தில் நான்டிட் மாவட்டத்தில் 4-9-13 அன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சயங்கான் லியாகத்கான் (25) அமிருதின் அப்துல் லத்தீப் (40) இருவரும் எய்ட்ஸ், புற்றுநோயை மாந்திரீ கத்தால் குணப்படுத்துவதாகச் சிகிச்சை மய்யங்களை நடத்தி வந்தனர். ஒரு மாதத்திற்கு முன்தான் இம்மய் யத்தை தொடங்கினர். நாளேட்டில் இதற்கான விளம் பரத்தைக் கொடுத்திருந்தனர்.

இவ்விருவரும் கைது செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு கருத்துகளைக் குறிப்பிட வேண்டியுள்ளது. முதலாவது, பகுத்தறிவாளர்கள் இந்துமதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளுக்கு மட்டுமின்றி, இசுலாம், கிறித்து வம் முதலான மதங்களில் உள்ள மூடநம்பிக்கை களும் ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள். உண் மையில் கெட்ட ஆவி, சாத்தான், பில்லி சூன்யம் முத லானவை கிறித்துவ-இசுலாமிய மதங்களில் இந்து மதத்துக்கு எந்தவகையிலும் குறைவில்லாமல் இருக் கின்றன. அதிகமாக இருக்கின்றன என்றுகூட சொல்ல லாம். இரண்டாவதாக இச்சட்டத்தின்படி முதலாவதாக இரண்டு முசுலீம்களைக் கைது செய்திருப்பது தவறு என்று கூற முடியாது. ஆனால் கடந்த இருபது ஆண்டு களாக முசுலீம்கள் மட்டும் குறிவைத்துத் தாக்கப்படும் நிலை இந்தியாவில் தொடர்கிறது. அதனால் இந்த மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமும் முசுலீம்கள் மீது மட்டும் பாயுமோ என்று நினைக்கச் செய்கிறது. மேலும் ‘பிட்பாக்கெட்’ திருடனை மட்டும் பிடிப்பது, பெரிய கொள் ளைக்காரனைத் தப்பவிடுவது போன்றதாக இச்சட்டம் செயல்படுமோ என்றும் அஞ்ச வேண்டியுள்ளது.

சனநாயக ஆட்சியா? சாமியார்களின் ஆட்சியா?

1980க்குப்பின் இந்தியாவில் பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது. அதற்கேற்ப, சாமியார்களின் - ஆசிரமங் களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே வரு கிறது. இவர்கள் கோவணம் கட்டிக் கொண்டு பொத்தல் குடிசையில் குந்தியிருக்கும் சாமியார்கள் அல்லர். இவர்கள் கார்ப்பரேட் சாமியார்கள். அதனால்தான் குடியரசுத்தலைவர், தலைமை அமைச்சர், முதலமைச் சர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பெருமுத லாளிகள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், திரைப்பட நட்சத் திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் முதலானோர் கார்ப்பரேட் சாமியார்களின் காலில் விழுந்து வணங்கி அருளாசிப் பெறுகின்றனர். மதநம்பிக்கையும் அரசியலும் கள்ளப் பணமும் ஒன்றோடொன்று இறுகப் பின்னிப் பிணைந் துள்ளன என்பதையே இது காட்டுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் தாராளமயம், தனியார் மயம் என்பதன் பேரால் மேல்தட்டில் உள்ள இருபது விழுக்காட்டின ரிடம் பெருஞ்செல்வம் குவிந்தது. இவர்களின் நோக் கம் உழைக்கும் வெகுமக்கள் இவர்களுக்கு எதிராக அணிதிரளாமல் தடுப்பதேயாகும். அதனால் பக்தியை, மூடத்தனங்களை புதிய புதிய சாமியார்கள் மூலமாக வும், ஊடகங்கள் மூலமாகவும் வளர்த்திட பெருந் தொகையைச் செலவிடுகின்றனர்.

உலகம் முழுவதும், நெடுங்காலம், மன்னர்கள் ஆண்ட காலத்தில், ஆட்சி அதிகாரத்தில் மதம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அய்ரோப்பிய நாடுகளில் மறுமலர்ச் சிக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் மதத்தின் ஆதிக்கம் படிப்படியாக ஒழிக்கப்பட்டது. இறுதியில் மதச்சார்பற்ற அரசுகள் உருவாயின. அதனால் மதம் அரசிலிருந்து அடியோடு பிரிக்கப்பட்டது. அதேபோன்று கல்வி, ஒழுக்க விழுமியங்கள் என்பவற்றிலிருந்தும் மதம் தனிமைப் படுத்தப்பட்டது. முந்நூறு ஆண்டுகள் காலத்தில் அய் ரோப்பிய நாடுகளில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் இந்தியாவிலோ இவ்வாறு நடக்கவில்லை என்பதுடன், சுதந்தரப் போராட்ட காலத்தில் திலகர், காந்தியார் போன்றவர்களால் இத்தகைய மாற்றங்கள் நிகழாதவாறு தடுக்கப்பட்டன. தேசியம், தேசபக்தி என்ற போர்வையில் பிற்போக்குத்தனமான பழைமை கள் போற்றப்பட்டு உயர்த்திப் பிடிக்கப்பட்டன. இதற்குப் போட்டியாக இசுலாமிய மதவாத அரசியல் தோன்றி யது. இந்தநிலை இன்றளவும் சமூக, அரசியல், பண் பாட்டுத் தளங்களில் தொடர்கிறது.

இந்துமத நம்பிக்கையின் பெயரிலான அரசியல் 1980களில் வேகமாக வளர்க்கப்பட்டது. குடுவைக்குள் அடைக்கப்பட்டிருந்த பூதத்தைத் திறந்துவிட்டது போன்ற வேலையைச் செய்தவர் பிரதமராக இருந்த இராசிவ் காந்திதான். ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இராசிவ் காந்தி எடுத்த நடவடிக்கை இந்துப் பாசிசம் வெளிப்படையாகத் தன்னை அடை யாளப்படுத்திக் கொள்ள வழிகோலியது. 1949 திசம்பர் 22 அன்று நள்ளிரவில் அயோத்தியில் பாபர் மசூதியில் இந்துத்துவ வெறிக் கும்பல் திருட்டுத்தனமாக இராமன் சிலையை வைத்ததால் எழுந்த சிக்கலால் பூட்டப்பட்டி ருந்த வாயில் கதவுகளைத் திறக்குமாறு 1986 பிப்பிர வரியில் பிரதமர் இராசிவ் காந்தி, நீதிமன்றத்தின் மூலம் ஆணையிட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சங்பரிவாரங்கள் இந்தியா முழுவதும் இந்துமத வெறி யை - இசுலாமியர் மீதான பகையைத் திட்டமிட்டு வளர்த்தன. இதன்விளைவாக 1992 திசம்பர் 6 அன்று அத்வானியின் முன்னிலையில், சங்பரிவாரங்கள் அயோத் தியில் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கின.

அயோத்தியில் இராமனுக்குக் கோயில் கட்டுதல் என்ற குறிக்கோளை முன்வைத்தே, பா.ச.க. வடஇந்தி யாவில் பல மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்தது. தேசிய சனநாயகக் கூட்டணி என்ற பெயரில் வாஜ்பாய் தலைமையில் பா.ச.க. ஆறு ஆண்டுகள் நடுவண் அரசில் ஆட்சி செய்தது. “பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் இராமர் பிறந்தார்; இது இந்துக்களின் நம்பிக்கை; இந்த நம்பிக்கை குறித்து கேள்வி கேட்கும் அதிகாரம் நீதித்துறைக்குக் கிடையாது; ஏனெனில் இந்த நம்பிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கும் அப்பாற்பட்டது” என்று அத்வானி சவால் விட்டார். அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவது தொடர்பாக முடிவு செய்யும் அதி காரம் சாமியார்களிடம்தான் இருக்கிறது என்றும் கூறப் பட்டது. இந்தப் பின்னணியில்தான் இந்தியா முழு வதும் ஒட்டுண்ணிகள் போல் எண்ணற்ற போலிச் சாமியார்கள் உருவாயினர்.

இத்தகைய சாமியார்களில் ஒருவர்தான் 1-9-13 அன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டுள்ள அசாராம்பாபு. தற்போது பாக்கிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் 1941இல் பிறந்தவர். இவருடைய இயற் பெயர் ஹஸ்மல் ஹர்பலானி என்பதாகும். இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினையின் போது இவருடைய குடும்பம் குசராத் மாநிலத்தில் குடியேறியது. மூன்றாம் வகுப்புவரை படித்த அசாராம் தேநீர் கடை நடத்தினார். மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். 1970இல் அகமதாபாத் சபர்மதி ஆற்றின் அருகில் ஒரு ஆசிரமம் அமைத்தார். சிந்தி-மார்வாரி பணக்காரர்கள் ஏராளமான நன்கொடை அளித்து அசாராமின் ஆசிரமத் தின் செல்வாக்கை உயர்த்தினர். குசராத் அரசு ஏராள மான நிலங்களை இந்த ஆசிரமத்திற்காக அளித்தது. 1980களில் மத்தியப் பிரதேசத்திலும், இராஜஸ்தானிலும் ஆசிரமங்களைத் தொடங்கினார். குசராத்தில் காங்கிரசு ஆட்சியிலும் பா.ச.க. ஆட்சியிலும் அசாராம் ‘இராஜகுரு’ போல் மதிக்கப்பட்டார்.

கார்ப்பரேட் சாமியார் அசாராம் நடத்தும் அறக்கட்ட ளையின் சொத்து மதிப்பு ரூ.5000 கோடி. இந்த அறக் கட்டளை 425 ஆசிரமங்கள், 1400 யோகா வேதாந்த சேவா சமிதிகள், 17,000 பால சன்ஸ்கர் கேந்திரங்கள், 50 குருகுலங்கள் ஆகியவற்றை நடத்துகிறது. இவை இந்துமதப் பாசிசத்தின் நாற்றங்கால்கள். இவருக்குக் கிட்டத்தட்ட பத்து கோடி பக்தர்கள் இருப்பதாக ஆசிரம அறிக்கை கூறுகிறது.

பா.ச.க.வின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, நிதின்கட்கரி, இராஜ்நாத்சிங் அசாராம் பாபு விடம் ஆசிபெற்றவர்களாவார்கள். அதேபோல் காங்கிரசுக் கட்சியின் தலைவர்களான திக்விஜய்சிங், கமல்நாத், மோதிலால் வோரா போன்றவர்கள் இவரின் சீடர்கள். தற்போது பா.ச.க. ஆளும் மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர் இராமன் சிங் ஆகியோர் அசாராமின் தொண்டரடிப் பொடிகள். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் வடஇந்தியாவில் பல பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பிலும் முது கலைப் படிப்பிலும் ‘வேதகால சோதிடம்’ என்பது பாட மாக வைக்கப்பட்டது. அது காங்கிரசு ஆட்சியிலும் இன்றளவும் தொடர்கிறது.

அசாராம் தன்னுடைய ஆசிரமங்களுக்குப் பெரு மளவில் நன்கொடை பெறுவதற்காகவே ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு தடவை ‘குரு பூர்ணிமா’ நிகழ்ச்சியை நடத்துவார். இச்சமயங்களில், அரசியல் வாதிகள், உயர் அதிகாரிகள், பெருமுதலாளிகளிடம் உள்ள கறுப்புப் பணத்தின் ஒரு பகுதி நன்கொடை யாகக் குவியும். வெளிநாடுகளில் வாழும் இந்திய முதலாளிகளும் இதில் அடக்கம். இதைப்போலவே கடந்த இருபது ஆண்டுகளாக ஆயுர் வேத மருந்து களைத் தயாரித்து விற்பதன் மூலம் பெருந்தொகை கொள்ளையடிக்கப்படுகிறது.

அசாராம் தன் சொற்பொழிவுகளில், ‘புலால் உண்பது புலனடக்கத்திற்கு எதிரானது. காம உணர்ச்சியைத் தூண்டும். ஆத்ம சுத்திக்குப் புலால் மறுப்பு முதன்மை. மனித இனப்பெருக்கத்திற்காக மட்டுமே ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டும். மேலை நாகரிகம் காம உணர்ச்சியைத் தூண்டுகிறது” என்று கூறுவது வழக்கம். காந்தியாரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். 2012 திசம்பரில் தில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கொடிய முறையில் பாலியல் வல்லுறவுக் கொடுமைகளுக்கு ஆளான போது, அசாராம், “சகோதரர்களே, என்னை எதுவும் செய்யா தீர்கள் என்று அப்பெண் இறைஞ்சி மன்றாடியிருந்தால் அவர்கள் விட்டுவிட்டிருப்பார்கள்” என்று கருத்துரைத்தார்.

இப்படியெல்லாம் ‘உபதேசித்த’ அசாராம், மத்தியப் பிரதேசத்தில் தன்னுடைய சிந்துவாரா குருகுலத்தில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த 16 அகவை சிறுமியை, அப்பெண்ணின் பெற்றோர் மூலம் - அப்பெண்ணைப் பிடித்துள்ள கெட்ட ஆவியை விரட்டுவதற்காக என்று வஞ்சகமாகக் கூறி - இராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் ஆசிரமத்துக்கு வரவழைத்தார். இந்தியாவின் சுதந்தர நாள் எனப்படும் ஆகத்து 15 அன்று, அசாராம் முழு நிர்வாண நிலையில் அச்சிறுமியின் முன் தோன்றி மூன்று மணிநேரம் பாலியல் வன்கொடுமைகள் செய் துள்ளார். காமக்கொடூரன் அசாராம் பாபுவின் ‘காம லீலை’ இந்தியா முழுவதும் அம்பலப்பட்டுவிட்டது. 1-9-13 அன்று இந்தக் கார்ப்பரேட் சாமியார் கைது செய்யப் பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசாராமின் மீது இதற்கு முன்பே கொலை, கற்பழிப்பு, நிலப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

பா.ச.க. தலைவர் இராஜ்நாத் சிங், “சாமியார் களையும் துறவிகளையும் மதிப்பதும் அவர்களிடம் வாழ்த்து பெறுவதும் இந்துமத மரபு. அத்தன்மையில் தான் அசாராமிடம் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பா.ச.க. தலைவர்கள் சென்றனர். இவ்வாறு நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? வெட்கக் கேடான இதை மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியுள்ளார். கேரளத்தில் சய்தன்யா என்ற இளம் சாமியாருக்கு இரண்டு சிறுமிகளைக் கற்பழித்த குற்றத்திற்காக 2009ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் இருக்கிறார். தமிழ்நாட்டில் பிரேமானந்தா சாமியாருக்கு பல பெண்களிடம் பாலியல் வல்லுறவு கொண்டதற்காகவும், கொலைகள் செய்ததற்காகவும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சிறை யிலேயே செத்தும் போனார். கார்ப்பரேட் சாமியார் அசாராம் பாபுவுக்கு இதுபோன்ற தண்டனை விதிக்கப் படுமா? தனக்குள்ள செல்வாக்கின் காரணமாக தப்பித்துக் கொள்வாரா?

இந்தக் கார்ப்பரேட் சாமியார்களுக்கெல்லாம் முன் னோடியாக - வழிகாட்டியாக விளங்கியவர் புட்டபர்த்தி சாயிபாபா. அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதச் செயல்கள் பொய்யானவை என்று பலராலும் எண்ணிப்பிக்கப் பட்டது. அவர் மீதும், ஆசிரமத்தின் மீதும் கொலை, பாலி யல் கொடுமை போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரதமர்களே அவருடைய காலடியில் கிடந்ததால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் செத்த பிறகு அந்த ஆசிரமத்தின் தில்லுமுல்லுகள் மேலும் அப்பட்டடமாக அம்பலமாகி பிணவாடை வீசுகின்றன. கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் கள்வர் குகைகளாக இந்த ஆசிரமங்கள் இருக்கின்றன. மேல்தட்டில் இருப்போரின் கொள்ளைகளை - கொடுஞ் செயல்களை மூடி மறைப்பதில் தரகுவேலை செய்கின்ற இடமாகவும் இந்த ஆசிரமங்கள் திகழ்கின்றன. மக் களுக்குச் சேவை செய்தல் என்ற பெயரால் பள்ளிகள், கல்லூரிகள், பெரிய மருத்துவமனைகளை நடத்தித் தங்கள் மோசடிகளை மூடி மறைக்கின்றனர்.

ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர் இந்தியா முழுவதும் சுற்றிவரும் ஒரு கார்ப்பரேட் சாமியார். இவருடைய ‘வாழுங்கலை ஆசிரமத்திற்காக’ கர்நாடக அரசு 99 ஆண்டுகள் குத்த கைக்கு ஏராளமான நிலத்தை வழங்கியுள்ளது. பன் னாட்டு நிறுவனமான இன்போசிஸ் இதன் முதன்மை யான புரவலர். ஒடிசா அரசு 200 ஏக்கர் நிலத்தை வாழுங்கலை ஆசிரமம் அமைக்க ஒரு சல்லிக்காசும் பெறாமல் கொடுத்துள்ளது. அங்கு ‘பண்டைய விழுமி யங்களை நவீன முறையில் கற்பிப்பதற்கான’ பல் கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேச அரசு, மகரிஷி மகேஷ் யோகி என்பவருக்கு இதேபோன்றதொரு பல்கலைக்கழகம் அமைக்க நிலம் வழங்கியுள்ளது.

அண்மையில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யவர் கார்ப்பரேட் சாமியார் பாப ராம்தேவ். ஊழலுக்கு எதிராக அன்னா அசாரே நடத்திய போராட்டத்திற்குப் பெரும் ஆதரவு குவிவதைக் கண்டார். அதைத் தனக் கான வணிகமாக்கிக் கொள்ள, தில்லியில் இராம்லீலா திடலில் பெரிய ஆரவாரத்துடன், தன்பரிவாரத்துடன் சாகும்வரை உண்ணா நோன்பு மேற்கொண்டார். காவல்துறையினர் அடித்து விரட்டியபோது, சுடிதார் அணிந்து பெண் வேடமிட்டு, ஓடிஒளிந்தார். இவர் நடத்துகின்ற பதஞ்சலி ஆசிரமம் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அரித்துவாரிலும், உத்தர்கண்டிலும் ஏராளமான நிலம் அரசுகளால் ஒதுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில், யோகாசனம் செய்து காட்டியதன் மூலம் பெரிய சாமியாராகிவிட்டார். பினாமி பெயரில் ‘அஸ்தா’ என்ற தொலைக்காட்சி நடத்துகிறார். இவர் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் போலியானவை என்பது அம்பலமாகியுள்ளது. வரிஏய்ப்பு, நிலப்பறி தொடர்பான வழக்குகள் இவர்மீது உள்ளன.

புட்டபர்த்தி சாயிபாபாவைப் போலவே தலைமுடியை வளர்த்துக் கொண்டு உடையணிந்து ஆந்திரத்தில் சின்ன சாயிபாபா என்ற பெயரில் ஓர் இளம் சாமியார் மோசடிகளைச் செய்து வருகிறார். கேரளத்தைச் சேர்ந்த அறுபது அகவையை எட்டும் அமிர்தானந்த மயி உலகம் முழுவதும் சுற்றுகிறார். கல்வி வணிகக் கொள்ளை, ஆன்மீகக் கொள்ளை இரண்டையும் திறம் பட நடத்துகிறார். தமிழ்நாட்டில் மேல்மருவத்தூர் ‘ஆதிபராசக்தி அம்மா’ வேலூரில் தங்கக்கோயில் கட்டி யுள்ள நாராயணி பீடம் ‘அம்மா’ போன்றவர்கள் இந்தியா முழுவதும் பெருகிக் கொண்டே போகிறார்கள்.

எனவே ஏவல், செய்வினை, மாந்திரீகம், பில்லி சூன்யம் முதலியவற்றைச் செய்து ரூபா, நூறு, ஆயிரம் என்று பணம் பறிக்கும் ஆட்களைவிட கார்ப்பரேட் சாமியார்கள்தான் முதன்மையான சமூக விரோதிகள். ஆட்சி அதிகாரத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்றவர்கள். இவர்கள்தாம் இந்துமதப் பழைமை களை, சாதியமைப்பைக் கட்டிக் காப்பதற்கு ஆளும்வர்க் கத்திற்குத் துணை நிற்பவர்கள்.

எனவே தற்போது தபோல்கர் படுகொலைக்குப் பின் மகாராட்டிரத்தில் இயற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் போல் மற்ற மாநிலங்களிலும், நடுவண் அரசிலும் இயற்றப்பட்டால் மட்டும் போதாது. மதஉணர்வுகள் புண்படும்படியாகப் பேசுவதும், எழுது வதும் குற்றம் என்றுள்ள இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 295A, 298 ஆகியவை அடியோடு நீக்கப்பட வேண்டும். மதப் பிரச்சாரத்திற்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிமை இருப்பது போல் நாத்திகப் பிரச்சாரத்திற்கும் சட்டப்படியான உரிமை வேண்டும். பழக்கச் சட்டம் வழக்கச் சட்டம் என்ற பெயரில் அரச மைப்புச் சட்டத்தில் உள்ள பாதுகாப்பு விதிகள் நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் மதத்தின் - சாதியின் பெய ரால் நடப்பில் உள்ள மூடநம்பிக்கைகளும், ஒடுக்கு முறைகளும் ஒழிந்த, பகுத்தறிவு - அறிவியல் சமூகம் மலரும்.

Pin It