தாதம்பட்டி!

சேலம் நகருக்குக் கிழக்கே, அயோத்தியாப் பட்டணத் துக்கு மேற்கே அமைந்துள்ள சிற்றூர், தாதம்பட்டி.

ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈ.வெ. இராமசாமி, ஈ.வெ. கண்ணம்மாள், ஈ.வெ. பொன்னுத்தாய் எனும் நான்கு மக்களைப் பெற்றெடுத்த த. வெங்கட்ட நாய்க்கரின் துணைவியார் சின்னத்தாயம்மாள் என்கிற முத்தம்மாள் பிறந்த ஊர் அது. ஈ.வெ. கிருஷ்ணசாமியின் மூத்த மனைவி பெரிய நாகம்மாள் பிறந்த ஊர் அது.1896-1897இல் ஈ.வெ.ரா.வுக்கு வாழ்க்கைப்பட்ட அன்னை நாகம்மாள் பிறந்த ஊரும் அதுவே.

அந்த உழைப்பாளிகள் குடும்பத்தில் ஊர் மணியக்காரராக விளங்கிய மல்ல நாய்க்கர் - மு.சின்னத்தாயம்மாள் மகனாக 25.5.1921இல் தோன்றியவரே தன்னலம் கருதாத் தறுகணாளராகத் திகழும் தாதம்பட்டி எம். இராசு.

25.5.2013 அன்று அவர் 93ஆம் அகவை யில் அடியெடுத்து வைக்கிறார்.

நல்ல காளைப்பருவத்தில் ஈரோட்டில் பாட்டி வீட்டுக்குப் போகும் போதெல்லாம் - “குடிஅரசு” அலு வலகத்தில் ஏடுகளை மடிப்பது, அஞ்சலகத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது முதலான பணிகளை ஆர்வத்துடன் செய்தவர்.

இரண்டாவது உலகப்போரின் போது கடற்படையில் சேர்ந்து பணியாற்றியவர். இந்தியாவை அடி மைப்படுத்தி ஆண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தின் இந்தியக் கடற்படையில்தான் - பட்டாளத்தில் இருந்த இந்திய வீரர்கள் முதன்முதலாக வெள்ளை அதிகாரி களை நோக்கித் துப்பாக்கியைத் தூக்கினார்கள்.அப்படித் துப்பாக்கி ஏந்திய கடற்படை வீரர்களுள் நம் தாதம்பட்டி எம்.இராசுவும் ஒருவர்.இவர் அஞ்சா நெஞ்சினர்;காலந் தவறாமல் செயல்படுபவர்; கூர்த்த மதியினர்; எவரெவரிடம் எப்படியெப்படிப் பேசுவது, பழகுவது என்பதை நன்கு புரிந்து பக்குவமாகப் பழகக் கூடியவர்.

கடற்படைப் புரட்சியில் ஈடுபட்டதால், வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் (Discharged).

தாதம்பட்டியிலேயே தங்கியிருந்த அவருக்கு,1946இல் செல்லா எனச் செல்லமாக அழைக்கப்படும் நாகம்மாளைத் திருமணம் செய்து வைத்தனர். இவரு டைய துணைவியார் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் இளைய மகள்.

இவர்கள் ஈன்றெடுத்த ஒரே செல்வன் குமார். அவரும் வானூர்திப் படையில் சேர்ந்து, உயர் பதவி களைக் கண்டு, ஓய்வுபெற்று அமைதியாக உள்ளார்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு அவர் பார்த்த மணியக்காரர் வேலையை எம்.இராசு மேற்கொண்டார்.

இந்நிலையில், தந்தை பெரியாருக்குத் தம் நிலையை அறிந்து, தன் சொந்தப் பணிகளுக்கும், இயக்கப் பணிகளுக்கும் துணைபுரிய எம். இராசு தேவைப்பட்டார். சென்னைக்கு வரச்சொல்லி, “விடுதலை” நாளேட்டின் மேலாளர் பொறுப்பில், சிறிய ஊதியம் பெறும் பொறுப்பில் எம். இராசுவை அமர்த்தினார்.

ஏதோ ஒரு வேலையாக, எம். இராசு சென்னையில் குடியிருந்த வீட்டுக்குப் போய்வரும்படி, 1963இல் பெரியார் எனக்குக் கட்டளையிட்டார். ஒரு மாடியில் எம். இராசு, செல்லாள், இவர்களின் செல்வன் குமார் மூவரைiயும் அன்றுதான் முதன்முதல் பார்த்தேன்.1965க்கும் 1973க்கும் இடையில் எங்களிடையே நல்ல அறிமுகம் ஏற்பட்டது. என்னை அவர் நன்கு புரிந்துகொண்டது, 1973 ஆகஸ்டில், திருச்சியில் பெரி யார் மாளிகையில் சந்தித்த போதுதான்.

சென்னையில் குடியிருந்தபோது பட்ட கடனை அடைப்பதற்காக வேண்டி, தாதம்பட்டியில், சேலம்-திருச்சி நெடுஞ்சாலைiக்கு வடக்கே,சேலம்-விருத்தாசலம் தொடர் வண்டிப் பாதைக்கும் தெற்கே தமக்குச் சொந்தமாக இருந்த 8ஏக்கர் நிலத்தை முழுவதையும் விலைக்கு விற்றார்.

தொடர்வண்டிப் பாதைக்கு வடபுறமும்,இப்போது குடியிருக்கும் வீட்டோரமும் உள்ள நிலங்களைக் குத்தகைக்கு விட்டு விட்டு, பெரியார் மறையும் வரை யில், அவர் கூப்பிடும் போதெல்லாம் சென்னைக்கு வந்து உதவினார்.

பெரியார் சமஉரிமைக் கழகம்,பெரியார் மறைவுக் குப்பின் 8.8.1976இல் தோற்றுவிக்கப்பட்டது. அதன் சார்பில்,முதலாவது வேலைத் திட்டமாக,இந்திய நடுவண் அரசுப் பணிகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை வென்றெடுத்திட, கட்சி முடிவெடுத்தது.

இதுபற்றி 1978இல் சேலத்துக்குச் சென்று, மறைந்த மூத்த தலைவர் அ. சித்தய்யனும் நானும் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய வாழப்பாடி கூ. இராமமூர்த்தியைக் கண்டு பேசினோம்;அதைத் தொடர்ந்து தாதம்பட்டி எம். இராசுவையும் சந்தித் தோம். கூ. இராமமூர்த்தி 6.3.1967 வரை தி.க.வில் இருந்தவர். “பெரியார் இங்கே பணிசெய்தார்; நீங்கள் வடக்கே போய், அவர் விட்ட பணியைச் செய்யுங்கள்” எனக் கூறி, என்னை உசுப்பினார் எம். இராசு.

நானும் மறைந்த சீர்காழி மா.முத்துச்சாமியும் இடஒதுக்கீடு பற்றிய ஆங்கிலம்,இந்தி அறிக்கை மூட்டைகளுடன், 26.4.1978 காலை தாதம்பட்டியை அடைந்தோம். எங்களுடன் தில்லிக்கு வரும்படி,எம்.இராசுவையும் அழைத்தோம்.அவர் 27.4.1978இல் புறப்பட்டு, 29.4.1978இல் தில்லிக்கு வந்து எங் களோடு சேர்ந்து கொண்டார்.

29.4.1978 முதல் 2002 முடிய தில்லி மாநிலம், பீகார் மாநிலம், உ.பி., இராசஸ்தான், அரியானா மாநி லங்களில் நாங்கள் மேற்கொண்ட எல்லாப் பணிகளுக்கும் பேரார்வத்துடன் உடனிருந்தும் நெறிப்படுத்தியும் இவர் உதவினார்.

என்னை நெறிப்படுத்துதலில் ஒரு நிகழ்ச்சி : 1978இல் காங்கிரசுக்காரரான பி. இராமச்சந்திரன் (தெலுங்கு கம்ம நாயுடு) அப்போது நடுவண் அரசு அமைச்சராக இருந்தார். அவரிடம் எங்கள் கோரிக்கை மடலைக் கொடுத்தோம்.படித்த அவர் சீறினார்.“இராமசாமி நாய்க்கர் தமிழ்நாட்டைக் கெடுத்தாரு; நீங்க வடஇந்தி யாவைக் கெடுக்க வந்துட்டிங்களா?” என்று ‘வள்’ என இரைந்தார்.

நான் முரட்டுத்தனமாக மறுமொழி கூற முயன் றேன்;என்னைச் சீண்டி அமைதிப்படுத்தினார், எம். இராசு. இல்லாவிட்டால் தகராறே நடந்திருக்கும். 2002 வரையில் இப்படி எங்கள் பணிக்கு வடமாநிலங்களுக்கு உடன் வந்து பணியாற்றிய அவர், 2010 மார்ச்சு வரை யில் தமிழகத்தில் நாங்கள் எங்கெல்லாம் நிகழ்ச்சிகளை நடத்துகிறோமோ அங்கெல்லாம் வந்து பங்கேற்றார்.

இப்போதும் உணவுக் கட்டுப்பாடு,மன அமைதி,ஓய்வு ஆகிய நல்ல பழக்கங்களால் 93 அகவை இளைஞராகவே எம். இராசு திகழ்கிறார். எனக்கும் எங்கள் தோழர்களுக்கும் நேரான வழியைக் கூறி நெறிப்படுத்தும் உற்ற தோழராக விளங்குகிறார். அவரைக் கண்காணித்துக் காக்கும் அவர் தம் துணை வியார்,ஊரார்க்கெல்லாம் எடுத்துக்காட்டான இல்லத் தலைவியாக விளங்குகிறார்.

கணவருக்குக் கண்பார்வை கொஞ்சம்மங்கல்;துணைவியாருக்குத் தீராத மூட்டு வலி. ஆயினும் இருவரும் எப்போதும் இணைபிரிதல் அறியாத அன்றில் பறவைகளாக விளங்குகின்றனர்.

எங்களைப் பற்றியும், ஊராரைப் பற்றியும் மன மார இவர்கள் கவலைப்படுகின்றனர்.

21.2.2013 பிற்பகல் முழுவதும் நானும், சேலம் செ. ஆனையப்பன், தாதம்பட்டி பொறிஞர் கு. வெங்கடேசன் ஆகிய மூவரும் இவ்விணையர்களோடு உரையாடினோம்;ஊக்கம் பெற்றோம்.

நான் 2014 முடிய வாழவிரும்புகிறேன். பெரியார் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு, இவ்விரு அன்றில்களும் பறந்து வரவேண்டும் என விழைகிறேன்.

என்னின் மூத்தார் தாதம்பட்டி எம்.இராசு நெடிது வாழ்கவென,என் சார்பிலும் எங்கள் இயக்கத்தின் சார்பிலும், என் குடும்பத்தார் சார்பிலும் இனிய வாழ்த்துகளைப் படைக்கிறேன்.

Pin It