இந்திய ஆளும்வர்க்கம்,‘இந்தியா உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு’என்று தன் ஆதிக்கத்தின் கீழ் உள்ள ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து உரத்து ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.ஆனால் உண்மையில் மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளை நசுக்கி விட்டு,முதலாளிகளின் நலன்களைக் காத்துப் பேணும் நாடு என்பதைத் தூத்துக்குடியில் உள்ள ஸ்டர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் உணர்த்துகிறது.

நாடகத்தில் அடுத்தடுத்துக் காட்சிகள் மாறுவது போல்,ஸ்டர்லைட் ஆலை தொடர்பான நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. 23.3.2013 அன்று விடியற் காலை ஆலையிலிருந்து கந்தக டை ஆக்சைடு வாயு வழக்கத்தைவிட அடர்வான நிலையில் அதிகமான அளவில் வெளியேறியது. இதனால் தூத்துக்குடியில் பல பேருக்குக் கடுமையான கண் எரிச்சலும், இடை விடாத இருமலும், மூச்சுத் தொல்லையும் ஏற்பட்டன. இதுகுறித்து, பலர் மாவட்ட ஆட்சியருக்கும் அரசுக்கும் தெரிவித்தனர்.இதன் அடிப்படையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 30.3.2013அன்று ஸ்டர்லைட் ஆலையை உடனடியாக மூடுமாறு ஆணையிட்டது. ஆலைக்கு மின்சாரம் வழங்குவதையும் உடனே நிறுத்து மாறு தமிழ்நாடு அரசு கட்டளையிட்டது.

ஆலையைத் திடீரென்று மூடவேண்டும் என்கிற அரசின் முடிவில் ‘அரசியல் உள்நோக்கம்’ என்பதும் செயல்பட்டிருக்குமோ என்று கருதப்படுகிறது.இந்த ஆலை தொடங்கப்பட்டது முதற்கொண்டே, இதை மூட வேண்டும் என்று வலியுறுத்தி முனைப்புடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ போராடி வருகிறார்.2014ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவைத் தன்னுடன் அணி சேர்ப்பதற்கான உத்தியாக இம்முடிவை முதலமைச்சர் செயலலிதா எடுத்திருப்பாரோ என்று நினைக்கவும் இடமுண்டு.
இங்கிலாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் கிளைதான் தூத்துக்குடியில் உள்ள ஸ்டர்லைட்.

இந்தியாவில் வேதாந்தா நிறுவனம் சுரங்கத் தொழில்,உலோகத் தொழில் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கிறது.1990ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலத்தில்,கொங்கணக் கடற்கரைப் பகுதியில்,சிரேகான் என்ற ஊருக்கு அருகில் தாமிர உருக்கு ஆலையை அமைக்க ஸ்டர்லைட் முயன்றது.மகாராட்டிர அரசு இதற்கு ஒப்புதலும் அளித்துவிட்டது. ஆலையால் கடற்கரையில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமும்,சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்று கூறி மக்கள் கடுமையாக எதிர்த்ததால் ஆலையை அங்கு நிறுவுவது தடுக்கப்பட்டது.இருக்கவே இருக்கிறது இளிச்சவாயர்கள் வாழும் தமிழகம் என்று வேதாந்தா நிறுவனம் நினைத்தது.

பிற மாநிலங்களில் மக்கள் எதிர்த்ததால் இறுதியில் கூடங்குளத்தில் அணுஉலைகளை அமைத்ததுபோல்,தூத்துக்குடியில் தாமிர உருக்கு ஆலை நிறுவப்பட்டது.1993இல் செயலலிதா முதலமைச்சராக இருந்த போது தான் ஸ்டர்லைட் ஆலையை அமைத்திட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.விளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவதுபோல், தூத்துக்குடிப் பகுதி தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருப்பதால்,அங்கே ஸ்டர்லைட் ஆலை அமைக்கப்படுவதாக விளக்கம் கூறப் பட்டது.இந்த ஆலையைக் குசராத்திலும்,மகாராட்டிரத் திலும் அமைய விடாமல் மக்கள் ஏன் விரட்டியடித் தார்கள் என்பது பற்றி தமிழ்நாட்டு அரசு ஏன் கவலைப் படவில்லை?

தூத்துக்குடியில் ஸ்டர்லைட் தாமிர உருக்கு ஆலை அமைவதற்குத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 1994ஆம் ஆண்டு, ‘தடையில்லாச் சான்று’ வழங்கியது. இதேபோன்று 1995ஆம் ஆண்டு நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகமும் இதற்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின் 1997ஆம் ஆண்டு, கலைஞர் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது இந்த ஆலை செயல்படத் தொடங்கியது.

ஆனால் தூத்துக்குடியில் இந்த ஆலை அமைக்கப்படக் கூடாது என்று அப்பகுதி மக்கள் தொடக்கம் முதலே எதிர்த்து வருகின்றனர்.இந்த ஆலையில் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பே, 1996ஆம் ஆண்டில், ‘தூய் மையான சுற்றுப்புறத்திற்கான தேசிய இயக்கம்’ எனும் அமைப்பு, ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 1997இல் வைகோவும், 1998இல் சி.அய்.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் அப்போது தூத்துக்குடி மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த கே. ரங்கராசனும் இந்த ஆலைக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.

1998ஆம் ஆண்டு தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்  (NEERI)வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசும், நடுவண் அரசும் ஸ்டர்லைட் தாமிர உருக்கு ஆலை செயல்படுவதற்காக ஒப்புதல் அளித்த போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் ஆலை நிர்வாகம் பின்பற்றவில்லை என்று கூறப்பட்டிருந்தது.இதே ஆராய்ச்சி நிறுவனம் 2005ஆம் ஆண்டு ஸ்டர்லைட் ஆலை அமைந்துள்ள சுற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்தது. °டர்லைட் ஆலையின் நச்சுக்கழிவுகளால், அப்பகுதியில் உள்ள நிலமும், நிலத்தடி நீரும் மாசு அடைந் துள்ளன என்று அறிவித்தது.

நிலத்தடி நீரில் தாமிரம், குரோமியம், ஈயம், காட்மியம், ஆர்சனிக், ஃபுளோ ரைடு போன்றவை அதிகமாக இருப்பதால்,அந்நீரைக் குடித்தால் பல நோய்கள் ஏற்படும் என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும் தூத்துக்குடியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்னார் வளைகுடாப் பகுதியில் 3600 வகையான கடல்வாழ் தாவரங்கள், விலங்குகள் உள்ளன. இந்த ஆலையால் இவைகளுக்கும்,பவளப் பாறைகளுக்கும்,அலையாத்திக் காடுகளுக்கும் பல தீங்குகள் விளையும். இந்த உண்மைகள் ஆதாரங் களுடன் உயர்நீதிமன்றத்தின்முன் வைக்கப்பட்டன. தூத்துக்குடிப் பகுதியில் உள்ள அமைப்புகளும், மக்களும், ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.வைகோ இதில் ஆற்றிய பணியும் பங்களிப் பும் போற்றுதலுக்குரியனவாகும்.

2010 செப்டம்பர் 28 அன்று சென்னை உயர்நீதி மன்றம், தூத்துக்குடி ஸ்டர்லைட் தாமிர உருக்கு ஆலையை உடனே மூடவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.ஆனால் ஸ்டர்லைட் ஆலை நிருவாகம் உச்சநீதிமன்றத்தில் மேலமுறையீடு செய்து,2008அக்டோபர் மாதம் இத்தீர்ப்புக்கு இடைக்காலத் தடை யாணை பெற்றது.அதனால் ஆலை தொடர்ந்து செயல் பட்டது. உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீதான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பை, 2.4.2013 அன்று நீதிபதி ஏ.கே. பட்நாயக், நீதிபதி எச்.எல். கோகலே ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழங்கியது.

“உச்சநீதிமன்றத்தில் ஸ்டர்லைட் நிருவாகம் தொடுத்த வழக்கில் அளித்த ஆவணங்களில், அந்நிறுவனம் உண்மைகளை மறைத்திருக்கிறது; தவறான தகவல் களை அளித்திருக்கிறது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. ஆயினும் இதையும் மீறி அந்நிறுவனத் துக்கு, நாட்டின் பொது நலனைக் கருத்தில் கொண்டு, சலுகை காட்ட வேண்டியுள்ளது. ஏனெனில் பாதுகாப்புத் துறை, மின் உற்பத்தி, தானியங்கி, கட்டுமானம் முதலான பல துறைகளுக்கு ஸ்டர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் தாமிரம் தேவைப்படுகிறது.நாட்டின் வருமானத்துக்கு இது உதவுகிறது.அத்துடன் ஆலையை மூடிவிட்டால் தொழிலாளர்கள் தம் வேலையை இழக்க நேரிடும். ஆகவே சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆலையை மூடுமாறு அளித்த தீர்ப்பு மறுக்கப்படு கிறது. ஆலை தொடர்ந்து இயங்கலாம்.”

“ஸ்டர்லைட் ஆலை 1997 முதல் 2012 வரையி லான காலத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய தற்காக நூறு கோடி உருபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்”என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஸ்டர்லைட் ஆலையை மூடுமாறு 30.3.2013 அன்று ஆணையிட்டது. ஆனால் அடுத்த மூன்று நாள்களுக்குள் - 02.4.2013 அன்று உச்சநீதி மன்றம் ஆலையைத் தொடர்ந்து இயக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.ஆயினும் இதை ஸ்டர்லைட் நிருவாகம் மாபெரும் வெற்றியாகக் கொண்டாட முடியாத நிலை இருக்கிறது.

ஏனெனில் உச்சநீதிமன்றத் தீர்ப்பில், “மாசுக் கட்டுப் பாட்டு வாரியம், ஸ்டர்லைட் ஆலையால் சுற்றுச்சூழ லுக்கு மாசு ஏற்பட்டுள்ளது தொடர்பாக,சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை இத்தீர்ப்புக் கட்டுப்படுத்தாது” என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி 30.3.2013 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆலையை மூடுமாறு பிறப்பித்த ஆணை செல்லும் என்றாகிறது.

மேலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில்,1986ஆம் ஆண் டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி 5-இன்படி,நடுவண் அரசு இந்த ஆலையைத் தூத்துக்குடியில் தொழிற் பேட்டை பகுதியிலிருந்து (ளுiயீஉடிவ) வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டு தூத்துக்குடி மக்களும்,தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஒன்றுதிரண்டு ஸ்டர்லைட் ஆலையை நிலையாக மூடுவதற்குத் தொடர்ந்து போராட வேண்டும்.1997முதல் 2013 வரை இந்த ஆலையிலிருந்து நச்சுக்கழிவுகள் வெளியேறியதற்கும் சுற்றுச்சூழலும், மீனவர்களும், விவசாயிகளும் பலவகையிலும் பாதிக் கப்பட்டதற்கும் தமிழக அரசின்,நடுவண் அரசின் அதிகாரிகளும்,மாசுக் கட்டுப்பாட்டு அலுவலர்களும் இந்த ஆலையை மேற்பார்வை செய்து,உரிய நடவடிக்கை எடுக்காததே பெரிய காரணமாகும். இதற்கு அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருந்தனர்.

ஸ்டர்லைட் ஆலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி களை மீறியிருக்கிறது;அதனால் பலகேடுகள் விளைந் துள்ளன என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பே உறுதி செய்கிறது. 100 கோடி உருபா தரவேண்டும் என்பது ‘பாவமன்னிப்புப் பணமாகிவிடுமா?’

 சுற்றுச்சூழலுக்கும் மனிதர்கள் உள்ளிட்ட மற்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகளும் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறிட இனி தயங்குமா?

‘பாவமன்னிப்புப் பணம் தந்தால் பரலோகத்திற்குப் போவதற்கான’ வழியை உச்சநீதிமன்றமே காட்டுவது கொடுமையல்லவா?

எனவே கூடங்குளம் அணுமின் உலைகளையும்,தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையையும் மூடப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.தூத்துக்குடி இன்னொரு ‘போபாலாக’ ஆவதைத் தடுப்பது தமிழரின் கடமை!

Pin It