சோவியத் ரஷ்யா, உலகின் கவனத்தை இழுக்கும் சக்தி பெற்றுவிட்டது. மலடோவின் புன்சிரிப்புக்குத் தவம் கிடக்க வேண்டிய நிலைமைக்கு வல்லரசுகள் இன்றுவந்துவிட்டன. அத்தகைய உச்சநிலை இந்த நாட்டுக்கு வந்துவிட்டது. முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை, அதே நாடு, வல்லரசுகளின் வலையில் சிக்கிக் கிடந்தது; மதவாதிகளின் மாயச்சேற்றிலே அமிழ்ந்து கிடந்தது, ஜாரின் பிடியிலே, ரஸ்புடீனின் கபடத்திலே, சீமான்களின் களியாட்டத்திலே சிக்கிச் சீரழிக்கப்பட்ட நாடாக இருந்தது. பஞ்சத்தையும் படுகொலையையும் கண்டது; கொடுங்கோலரையும் வறுமையையும் கொண்டு நெளிந்தது. அத்தகைய நாடு, இன்று, உலகில் வேறு எங்கும் காணமுடியாத சோபிதத்துடன் விளங்குகின்றது.

சோவியத் ரஷ்யாவின் இந்தப் புதுநிலையை மறுப்பார் இல்லை. புதிய சக்தி பெற்றுவிட்டது என்ப தற்கு விளக்கம் அதிகம் தேவையில்லை. வல்லரசுகள் பலவும் இன்று சோவியத்தின் பலத்தைக் கண்டு, பயம் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

நோய் கொண்டிருந்த நாடு, இன்று பலம் பெற்று விளங்குகிறது. காட்டுமிராண்டிக்காலநிலை மாறிவிட்டது - கணப்போதில்! ஆம்! முப்பதாண்டுகள், ஒரு நாட்டு வாழ்நாளிலே, ஒருகணம்தானே! இதற்குள் கொடுங் கோலர்கள் விரட்டப்பட்டனர், கபட சன்யாசிகள் ஒழிக் கப்பட்டனர், முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டது, புதிய ஆட்சிமுறை ஏற்பட்டுவிட்டது. புதியதோர் உலகே தோன்றிவிட்டது. இதனை மறுப்பார் இல்லை - ஆனால் இதன் முழு உண்மை - முழுச் சித்திரம் - மக்களுக்குத் தெரிய ஒட்டாதபடி, தப்புப்பிரசாரம் எனும் மூடுபனிப் படலத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டவர்கள் பலர். நாம்அந்த மூடுபனியை நமது சக்திக்கேற்ற அளவு அழிக்க முயற்சிக்கிறோம். இந்த இதழ் மூலம் சித்திரவதைக்கு ஆளான மக்கள், சீறி எழுந்து போரிட்டு, சீரும் சிறப்பும் பெற்றது மானிட வர்க்க வரலாற்றிலே, முக்கியமான பகுதி. அவர்கள் பட்ட கஷ்டத்தை அவனி அறியாவண்ணம், முதலா ளித்துவம் தப்புப்பிரசாரம் செய்துவந்தது; வருகிறது. சமீபகாலம் வரையில் சோவியத்தை அழிப்பதற்கே, வல்லரசுகள் பலவும் தமது பணபலத்தைப் பயன் படுத்தி வந்தன. எனினும் வெற்றி அவர்கட்கு இல்லை. ஒவ்வோர் நாடும் இன்று தத்தம் எல்லையைப் பாதுகாக்கின்றன. “எப்பக்கம் வந்து புகுந்திடுமோ? ரஷ்யா, எத்தனை பட்டாளம் கூட்டிவருமோ?” என்று வீண் பீதிகொண்டு, பட்டாளம் தேவையில்லை - வரவும் வராது - ஏழையின் கண்ணீரிலே, பாட்டா ளியின் பெருமூச்சிலே, விவசாயியின் விசாரத்திலே, தேவையான அளவு பட்டாளம் இருக்க, சோவியத் படையை இங்கு அனுப்புவானேன்!

சோவியத் படை எடுப்பு - ரஷிய ஆதிக்கம் என்பன போன்றவைகள் கடைசிக் கட்டத்திலே வந்து நிற்கும் முதலாளித்துவத்தின் குளறல்.

இந்தப் பீதியைக் கிளப்பி விடுவதன் மூலம், சோவியத்தின் மீது மக்களுக்கு அருவருப்பு வருமாறு செய்து, அதைத் துணைகொண்டு, சோவியத் முறை யான சமதர்மத்தின்மீது வெறுப்பு ஏற்படும்படிச் செய்து, முதலாளித்துவம் சிறிதுகாலம் பிழைத்திருக்கலாம் என்று ஆசைகொண்டிருக்கிறது. அந்த ஆசை நிறை வேறாது! ஏனெனில் நாம் முன்பு குறிப்பிட்டபடி ஏழை யின் விழியில் நீர் வழிகிறது! இது சமூகம் புது அமைப்புத் தேடுகிறது என்பதற்கான அறிகுறி.

இந்த நிலையிலேதான், தப்புப் பிரசாரத்துக்கு இலக்கான ரஷியாவைப் பற்றிய சில உண்மைகளை எடுத்துக்கூறும் கடமையை நாம் களிப்புடன் ஆற்ற முன்வந்தோம். இதனை நமது கடமை என்று நாம் கொள்வதற்குக் காரணமும், உரிமையும் இருக்கிறது. ஏனெனில், பெரியாரின் இயக்கத்தைச் சார்ந்தவ ராகிய நாம், சமதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வருகிறோம்.

“ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடு கிறது என்கின்றதன்மை இருக்கின்ற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில் லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் ஐந்து வேளை சாப்பிட்டுவிட்டுச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டி ருக்கிறதும் ஆகிய தன்மை இருக்கிறவரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேஷ்டியில்லாமல் தீண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேஷ்டி போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கின்ற வரையிலும், பணக்காரர்களெல்லாம் தங்கள் செல்வம் முழுமையும், தங்களுடைய சுயவாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கின்ற வரையிலும், சுயமரியாதை இயக்கம் இருந்தே தான் தீரும்.”

பெரியார், ஜாதிமத ஊழல்களை மட்டுமல்ல, மக்களிடை காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு களையும் இதுபோலப் பலமாகக் கண்டித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையைக் கூறவேண்டுமானால், சமூக சீர்திருத்தத்துக்காகப் பாடுபடும் அவரை, விஷமிகள், “நாத்திகர்” என்று பாமரரிடம் கூறி வந்தது போலவே, “பொது உடைமை வாதி இவர்” என்றும், சர்க்காரிடம் சாடி கூறினர். அவருடைய வேலைத் திட்டத்தை ஒரு காலத்தில், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி போன்றவர்கள், பொது உடைமைத் திட்டம் என்று கூறினதுண்டு.

பெரியார், இவைகளைக் குற்றச்சாட்டுகளாகக் கருதிச் சளைக்கவில்லை.

சமதர்மப் பிரசாரத்தைத் தமிழகத்தில் தளராது செய்து வந்தார். அதுவும் ஏட்டுப்படிப்பின் பயனாக அல்ல - அனுபவத்தின் துணைகொண்டு மட்டுமல்ல - நேரடியாகச் சோவியத் சென்று, அங்குப் புது உலகு பூத்திருக்கும் அழகினைக் கண்டு உண்மை நிலை யினைத் தெரிந்து கொண்டு அந்தப் பிரசாரத்தைத் துவக்கினார்.

அது மட்டுமல்ல உண்மை. அவருடைய சாதி ஒழிப்புப் பிரசாரமுங்கூட, வெறும் மதத்திருத்தமோ, மக்களிடை ஏற்பட வேண்டிய மனத்திருத்தமோ மாத் திரமல்ல, சாதிமுறையையே - வர்ணாசிரமத்தையே, அவர் முற்காலத்தில் தந்திரசாலிகள் அமைத்துக் கொண்ட பொருளாதாரச் சுரண்டல் முறை என்று நம்புகிறார் - தக்க காரணம் காட்டி இதனை நிரூபித் திருக்கிறார். ஆகையால், சாதி முறையை அவர் எதிர்க்கிறார் என்றால், பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும், நிலைத்திருக்கச் செய்வதும், இனி யும் வளரச் செய்யக் கூடியதுமான கொடிய ஏற் பாட்டைத் தாக்கித் தகர்க்கிறார் என்றே பொருள் - அதாவது சமதர்மத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்து கிறார்.

தமிழகத்தாரின் மனதிலே கிடக்கும் பழங்காலக் கொள்கைகளை, அவர், சாதிய முறையின் மூலம் வளர்ந்துள்ள முதலாளித்துவத்தின் முடிக்கயிறுகள் என்று எடுத்துக்காட்டியே கண்டிக்கிறார். அவருடைய பெரும்படையின் பணி, சமதர்மத்துக்கே பயன் படுகிறது - பிறர் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பினும் - மதிப்பிடக் கூசிடினும். இத்தகைய பணி, சோவியத் தில், தேவையான அளவுக்குமேல், புரட்சிக்கு முன்பு செய்யப்பட்ட காரணத்தாலே தான், புரட்சி, சாத்திய மாயிற்று. பாட்டு, கூத்து, கதை, காவியம், ஓவியம் முதலிய பல்வேறு துறைகளிலும், இதற்கான பிரச்சாரம் செய்யப்பட்டு, ஏழை ரஷியன் மனதிலே, தூவப்பட்டி ருந்த நெடுங்காலக் கருத்துக்களை அறவே ஒழித்த தால் தான், மாவீரன் லெனின், புரட்சி மார்க்கத்தைக் காட்டியவுடன் சிங்கக் கூட்டம் சீறி எழுந்தது, கிழித்து எறிந்தது பகைக் கூட்டத்தை.

இந்த மூலக்கருத்தை நன்கு தெரிந்ததாலேயே, இன்று பெரியார் நடத்திச் செல்லும் இயக்கம், நாட்டு மக்களிடை நல்லறிவுப் பிரச்சாரத்தை விடாமல் செய்து வருகின்றது; இலட்சியப் பாதையில் நடந்து சென்ற வண்ணம் இருக்கிறது. அதன் இறுதியில், சோவியத் சோபிதம் காண வேண்டும் என்ற உறுதியுடன்.

இதன் பயனாகவே, நாம், நவம்பர் புரட்சி சமயத் திலே, சோவியத் நாட்டுச் சோபிதத்தை விளக்கும் கட்டுரைகளையும், அதுபோன்ற புத்துலகம் காண வேண்டின், எதுபோன்ற சூழ்நிலை தேவை என்பதை விளக்கிடும் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறோம். நாடோடியின் நிலைமை, விபசாரம் பிறக்கும் வழி என்ற பல்வேறு சித்திரங்களும் இன்று நாட்டிலே காணக்கூடியன. தெருக்கோடியில், பாதை ஓரத்தில், பட்டினத்தில், பட்டியில் எங்கும் நீங்கள் இவர்களைச் சந்திக்கலாம். இவர்கள் சமூகத்திலே உள்ளதற்கான காரணம் என்ன, என்ற சிந்தனையைக் கிளறவே, இக்கட்டுரைகள். இதழ்பெற்றுப் பயன் பெறுவர் தமிழர் என்று நம்புகிறோம்.

“திராவிட நாடு”, தலையங்கம், 17-11-1946

Pin It