Periyar – Pioneer of Radical Feminism

பெண்ணியம் என்பது ஆண் - பெண் சமத்துவத்திற்காகக் கண்டறியப்பட்ட ஓர் தத்துவமாகும். ‘பாலின சமத்துவத்தை அடைவது எப்படி?’ என்ற கருத்தியலைப் பொறுத்து, மிதவாதப் பெண்ணியம் (Liberal Feminism), வீரமான (அ) புரட்சிகரப் பெண்ணியம்(Radical Feminism), மார்க்சிய (அ) சமதர்மப் பெண்ணியம்(Marxist or socialist Feminism), கலாச்சாரப் பெண்ணியம் (Cultural Feminism) என பெண்ணியத்தில் பல வகைகள் உண்டு. 

periyar 350சமூகத்தில் நிலவும் பல்வேறு வடிவிலான பாலினப் பாகுபாடுகளுக்கான ஆணிவேரைக் கண்டறிந்து, அதனை அடியோடு அழித்தொழிக்க, பல அதிரடிக் கருத்துகளை எடுத்துரைத்து, அதை பெண்கள் உணர்ந்தால் தான் சமத்துவம் சாத்தியப்படுமே ஒழிய, புதிய சட்டங்கள் மூலமாகவோ, அதில் திருத்தங்கள் செய்வதாலோ  ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியாது”

என்பது தான் ரேடிக்கல் ஃபெமினிசத்தின் கோட்பாடாகும். பல மேற்கத்திய பெண்ணிய வாதிகளின் கருத்துகளும், பெண்ணிய மேதை பெரியாரின் கருத்துகளும், செயல்பாடுகளும் ரேடிக்கல் ஃபெமினிசத்தின் வடிவம் தான் !

பாலினப் பாகுபாடுகள் மிகவும் ஆழமாக வேரூன்றி உள்ள இச்சமூகத்தில், 1925 லேயே பெண் விடுதலையை இலக்காகக் கொண்ட சுயமரியாதை இயக்கத்தைக் கண்டு, முக்கியமாக அதைப் பல பெண்களின் பங்களிப்போடு நடத்திய பெருமைக்குரிய தலைவர் பெரியார்.

உலகத்தின் பல்வேறு நாடுகளில், ஆணாதிக்கத்தை அதிர வைக்கும் பல புரட்சிகரமான கருத்துகளை எடுத்துரைத்து, வாழ்நாள் முழுவதும் பெண்ணுரிமைக்காக உழைத்த சில பெண்ணிய வாதிகளின் கருத்துகளையும் பெரியாரின் பெண்ணியக் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்…

அடுப்பங்கரை - பிள்ளை பெறும் தொல்லை:

‘இரண்டாம் பாலினம்’ (The Second Sex) என்ற புத்தகத்தை 1949-இல் எழுதிய பிரெஞ்சு பெண்ணியவாதி சீமோன் டி புவர் (Simone de Beauvoir) 1908 ம் ஆண்டு பிறந்தவர். அவர், “ஒரு பெண் பெண்ணாகப் பிறப்பதில்லை; அவள் பெண்ணாக உருவாக்கப்படுகிறாள்” என்று சொல்கிறார். நம் சமூகத்திற்கு இது மிகவும் பொருத்தமானதாகும்.

ஜாதி, கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் என்ற பெயரில் பெண்களுக்கு ஆயிரம் பாடங்களைக் கற்பித்து அவர்களைப் பெண்மையோடு இருக்க ஆணையிடுகிறது இச்சமூகம். ஆனால் ஆண்களுக்கு இப்பாடங்களில் ஒன்றைக் கூட இச்சமூகம் கற்பித்ததில்லை. எனவே அவன் எதையும் சுதந்தரமாகச் செய்யலாம்; ஆனால் அவளுக்கோ ஆயிரம் விதிமுறைகள் என்பது தான் ஒடுக்குமுறையின் அடிப்படைத் தத்துவம்.

பெண்களை அடிமையாக்கும் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் சீமோன் டி புவர், தாய்மை என்பது பெண்ணடிமைத்தனம் என்பதை “மகப்பேறு என்பது சுயகாதல், பிறருக்கு உதவும் இயல்பு, கனவு, வாய்மை, தீய நம்பிக்கை, பக்தி மற்றும் வெறுப்பு மனப்பான்மையின் ஒரு விசித்திரமான சமரசம் ஆகும் (Maternity is a strange compromise of narcissism, altruism, dream, sincerity, bad faith, devotion and cynicism)” என்று தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் ( 1949 ம் ஆண்டு).

மேற்கிந்தியப் பெண்ணியச் செயற்பாட்டாளரான ஆண்ட்ரியா த்வார்கின்(Andrea Dworkin)  1946 ஆம் ஆண்டு பிறந்தார். அவரும், “Childbearing is glorified in part because women die from it”  “பிள்ளைப்பேறு கொண்டாடப்படுகிறது ஏனெனில் அதில் பெண்கள் இறக்கக் கூடும் என்பதாலும் தான்” என்கிறார்.

ஆனால் பெரியார் அதனை இன்னும் அழுத்தமாக, 1928 ம் ஆண்டிலேயே

உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்துப் புருசனை நியமித்துக் கொள்வதா யிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்” - 12.08.1928 குடிஅரசு

என்று எழுதியுள்ளார்.

                இதே போல், சமைப்பது போன்ற வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு முதலியன பெண்களுக் கென்றே ஒதுக்கப்பட்டிருப்பதையும், அதிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்பதையும் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் சீமோன் டி புவர். இதனை

ஆயுள் முழுவதும் அடுப்பங்கரையிலேயே கிடந்து மடிவதற்காகவே ஒரு தனி இனம் இருக்க வேண்டும் என்பது பச்சை வர்ணாசிரமத்திலும் பன்மடங்கு மோசமான கொள்கை” - குடிஅரசு 18.03.1947

என்று 1947-ஆம் ஆண்டிலேயே குறிப்பிடுகிறார் பெரியார் .

திருமணம் + குடும்பம் = பெண்களை அடிமைப்படுத்தும் நிறுவனங்கள்

திருமண அமைப்பு முறை பெண்களை எப்போதும் அடக்கி ஆள்கிறது. பெண் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஓரளவிற்கு சாத்தியப்பட்டுள்ள இக்காலக்கட்டத்திலும், பெண்கள் கல்வி அறிவுள்ள, பிள்ளை பெற்று வளர்க்கின்ற, சிலர் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவுகின்ற அடிமைகளாகவே திருமண அமைப்பு முறைக்குள் வாழ்கின்றனர். ஆகையால், திருமணம் மற்றும் குடும்ப முறையை எதிர்த்துப் பல பெண்ணியவாதிகள் குரல் கொடுத்துள்ளனர்.

அமெரிக்க பெண்ணியவாதியான கேட் மில்லெட்(Kate Millett) 1 1934 ல் பிறந்தவர்.  அவர் குடும்பமும், திருமணமும் ஆணாதிக்கத்தின் பெரும் கூறுகள் என்கிறார்.

1969 ல் அவர் எழுதிய ‘செக்ஷுவல் பாலிடிக்ஸ் (Sexual Politics) என்ற புத்தகத்தில்,

பாரம்பரியத் திருமண முறை மற்றும் தனிக்குடும்பத்தின் முழுமையான அழிவு தான் பெண்ணியத்தின் புரட்சிகரமான அல்லது கருத்தியல் ரீதியான இலக்கு ஆகும்”  (The complete destruction of traditional marriage and the nuclear family is the revolutionary or utopian goal of feminism) என்கிறார்.

அமெரிக்கப் பெண்ணியவாதியும், பத்திரிக்கையாளருமான க்ளோரியா ஸ்டெய்னம் (Gloria Steinem) அவர்களும் திருமணத்தைப் பெண் அடிமை சாசனம் என்றே கூறுகிறார். இவரும் 1934 ல் பிறந்தவர்.

சீமோன் டி புவர்(Simone de Beauvoir) அவர்களும்,

பெண்கள் எவ்வளவிற்குக் குடும்பத்தை விட்டுத் தப்பிக்கின்றனரோ, அவ்வளவிற்குச் சார்பு நிலையிலிருந்து தப்பிக்கலாம்”  (woman escapes complete dependency to the degree in which she escapes from the family) என்கிறார்.

திருமணம் பெண்களை அடிமைப்படுத்தும் நிறுவனம் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திய பெரியார், அதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்றார்.

இன்பத்திற்காகக் கல்யாணம் என்றால் அதற்கேற்ற முறையில் கல்யாணத் திட்டம் அமைக்கப்பட வேண்டுமே ஒழிய மற்றப்படி இன்பமும் காதலும் அல்லாமல் வெறும் உலகத்தை நடத்துவதற்கும், உலக விருத்திக்கு என்று புலபுலவென பிள்ளைகளைப் பெறுவதற்கும், ஆண் மக்களுக்கு அவனது வாழ்வுக்கும் கீர்த்திக்கும், திருப்திக்கும் நிபந்தனையற்ற நிரந்தர அடிமையாகப் பெண் இருப்பதற்கும் தான் கல்யாணம் என்பதனால், அம்மாதிரிக் கல்யாண வாழ்க்கையில் நமது பெண் மக்கள் ஈடுபடுவதை விடக் கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வதையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர் களாய் இருக்கிறோம்” - குடி அரசு 10.03.1929

என்று பெண்கள் திருமணமின்றித் தனித்து வாழ்வதை ஆதரித்து 1929 ம் ஆண்டிலேயே எழுதியுள்ளார் பெரியார்.

அழியட்டும் ஆண்மையும் பெண்மையும்!

வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும், ஆண்மை மற்றும் பெண்மையின் இலக்கணங்களைத் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறது இச்சமூகம். கேட்டால் இது தான் நம் கலாச்சாரம் என்று சொல்வார்கள் கலாச்சாரக் காவலர்கள். ஆண்மைக்கும், பெண்மைக்கும் இச்சமூகம் கற்பிக்கும் அவ்விலக்கணங்கள் தான் பெண்களை நல்ல அடிமைகளாகவும், ஆண்களை எஜமானர்களாகவும் வளர்த்தெடுக்கின்றன. இதனால் தான், பெண்கள் 21-ம் நூற்றாண்டிலும் சிறந்த அடிமைகளாகவே உள்ளனர். எனவே ஆண்மையும், பெண்மையும் அழிந்தால் தான் சமத்துவம் பிறக்கும் என்ற கருத்தை பெண்ணியவாதிகள் பலர் பேசியுள்ளனர்.

ஆண்ட்ரியா த்வார்கின்  (Andrea Dworkin), ஆண்மை அழிந்தால் தான் பெண்கள் விடுதலையடைய முடியும் என்கிறார்.(Only when manhood is dead - and it will perish when ravaged femininity no longer sustains it - only then will we know what it is to be free) ஆனால் 1928 லேயே,

ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. பெண்களால் ‘ஆண்மை’ என்ற  தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்மை விடுதலை இல்லை என்பது உறுதி. ஆண்மையால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்” - குடிஅரசு 12.8.1928  என்று கூறியுள்ளார்.

மேலும் ஆண்ட்ரியா த்வார்கின்

தாங்கள் பொருளாகப் பார்க்கப்படுவது  (Objectification) பற்றிய பெண்களின் அறிவானது மேலோட்டமான புரிதலோடு நின்றுவிடுகிறது. அழகு ஆராதிக்கப்படும் அதே வேளையில், அழகின்மை தண்டிக்கப்படுகிறது  (Female knowledge of objectification usually stops at a necessary but superficial understanding: beauty is rewarded and lack of beauty is punished)” என்கிறார்.

இதே போன்ற கருத்தை பெரியார்,

பெண்கள், ஆண்களைப் போல் தங்கள் வசதிக்கேற்றவாறு உடையணிய வேண்டும்; தலை முடியைக் கத்தரித்துவிட வேண்டும் என்றும் கூறிய பெரியார், பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதை நிறுத்திவிட வேண்டும்”

என்றார்.

பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.  அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை,துணிமணி, ஆபரணம் ஏன்? என்று எந்த பெண்ணாவது, பெற்றோராவது, கட்டினவராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக் கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தம் மீது திருப்புவது இழிவு என்றும் அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் போகப் பொருள்  என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.

(21.09.1946 அன்று திருப்பத்தூரில் நடைபெற்ற சுலோச்சனா - சம்பத் மணவிழாவில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

என்று அழகின் மீதான அக்கறையும், அலங்காரமும் பெண்களைப் போகப் பொருளாக்குகின்றன என்று பரிதாபப்படுகிறார் பெரியார்.

விபச்சாரமும் பாலியல் சுதந்திரமும்

செக்ஸ்.... இவ்வார்த்தையைக் கொண்டாடும் உரிமை ஆண்களுக்கே! இக்கருத்தியல் தான் ஒருபுறம் பெண்களைப், பாலியல் வன்முறைகளுக்கும், மறுபுறம் அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கும் ஆளாக்குகிறது. ஆண்கள் தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள ஒரு பெண் உடலைப் பணம் கொடுத்து வாங்கி அனுபவிக்க ‘விபச்சாரம்’ என்ற முறை, பல்வேறு பெயர்களில் எல்லா நாடுகளிலும் உள்ளது. அறிவியல்பூர்வமாகப் பார்த்தால் பெண்களுக்கும் பாலியல் ஆசைகள் உண்டு. ஆனால், அவர்கள் அதை வெளிப்படுத்த, அதைப் பற்றிப் பேச இச்சமூகம் அனுமதிப்பதில்லை. அதற்குக் காரணம் பெண்ணுடல் ஓர் ஆணின் ஆசைகளுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சமூகத்தின் சித்தாந்தமே! எனவே, விபச்சார முறைகளை எதிர்த்துப் பல பெண்ணியவாதிகள் போராடியுள்ளனர்.                    

அமெரிக்கப் பெண்ணியவாதியான கேத்ரின் மெக்கின்னான்  (Catharine MacKinnon 1946) அவர்களும் ஆண்ட்ரியா த்வார்கினும் இணைந்து ஆபாசப் படங்களுக்கும் விபச்சாரத்திற்கும் எதிராகப் போராடியுள்ளனர்.

ஆணாதிக்கச் சமூகத்தின் ஓர் கோர முகம் விபச்சாரம்!! அது சமூகத்திற்குக் கேடானது, ஏனெனில் அது பெண்களைப் பணம் இருப்பவர்கள் வாங்கி அனுபவிக்கும் பாலியல் பண்டங்களாக்குகின்றன. அது பாலியல் வன்முறைக்கு நிகரானது. ஏனென்றால் அதில் ஈடுபடும் பெண்ணின் விருப்பு வெறுப்புகள் கண்டு கொள்ளப்படாமல், பெண் உடல் மீதான் ஆண்களின் ஆட்சிக்குத் துணை போகிறது. இதனையே கேத்ரின்,

“The money thus acts as a form of force, not as a measure of consent. It acts like physical force does in rape”  என்கிறார்.

பெரியாரும் 1930 ம் ஆண்டிலேயே விபச்சாரத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

விபச்சாரம் என்னும் வார்த்தையின் அனுபவத் தத்துவத்தைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தை என்று தான் சொல்ல வேண்டுமே ஒழிய வேறல்ல. ஏனெனில், விபச்சார தோஷம் என்பதும் விபச்சாரம் செய்வதால் ஏற்படும் ஒழுக்கக் குறைவு என்பதும் இப்பொழுது வழக்கத்தில் பெண்களுக்கே தான் உண்டே ஒழிய ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையவே கிடையாது” - குடிஅரசு 26.10.1930

என்றும் பெண்கள் இதனை எதிர்த்துக் கேள்வி எழுப்ப வேண்டும் என்னும் வகையில்,

இன்றையப் பெண்களின் மனோநிலை பெரிதும் மாறுதல் அடைய வேண்டும். விபச்சாரம் பெண்களுக்குத்தானேயொழிய ஆண்களுக்கு ஏன் இல்லை என்று இவர்கள் சிந்திக்க வேண்டும். ஆணுக்கு மட்டும் ஏன் விபச்சார தோஷம் இல்லை?”  விடுதலை 11.10.1948

என்கிறார்.

அதே போல் கற்பு பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கற்பிக்கும் சமூகம் ஆண்களுக்கு அப்படி ஒன்று இருப்பதாகவே சொல்வதில்லை என்று ஆஸ்திரேலிய பெண்ணியவாதியும் பத்திரிக்கையாளருமான எமிலி மேகிர்(Emily Maguire) கேள்வி எழுப்புகிறார்.

பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு மறுக்கப்படுவதையும், பெண் உடல் மீது பெண்ணுக்கே அதிகாரம் இல்லாத தன்மை குறித்தும், கற்பு என்பதில் நிலவும் சமத்துவமற்ற தன்மை குறித்தும் பல மேற்கத்திய பெண்ணியவாதிகள் பேசியுள்ளனர். 

இது போன்ற புரட்சிகரமான கருத்துகளை 1928 லேயே பெரியார் தனது குடிஅரசு ஏட்டில் எழுதியுள்ளார்.

பெண்கள் விடுதலை வேண்டுமானால் ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும்” - குடி அரசு 08.01.1928. என்கிறார்.

இந்தியாவிலுள்ள பல பெண்ணுரிமை இயக்கங்களே (பார்ப்பனப் பெண்களால் நடத்தப் படுபவை) பெரியாரின் பெண்ணியக் கருத்துகளை இருட்டடிப்பு செய்கின்றன. ஆனால், உலகில் பல புரட்சிகரப் பெண்ணியவாதிகள் 20 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேசிய, எழுதிய கருத்துகளை ஆணாதிக்கம் புரையோடிய இந்நாட்டில், 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எடுத்துரைத்து, அதில் பலவற்றை செயல்படுத்தியும் காட்டியவர் பெரியார் என்பது ஆணித்தரமான உண்மையாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட ஒப்பீடுகளை வைத்துப் பார்த்தோமானால், இந்தியாவில் அல்ல.. உலகத்திலேயே தீவிரமான பெண்ணியத்தின் முன்னோடி‘Pioneer of Radical Feminism’  பெரியார் தான் என்று கூறுவது மிகையாகாது!!

பெண்கள் சுதந்திரத்துக்கும், பெண்கள் விடுதலைக்கும் அவர்கள் மனப்பான்மை சற்று மாறியேயாக வேண்டும். நான் அடிமையாய்த் தான் இருப்பேன். நீ மாத்திரம் எனக்கு எஜமானாய் இருக்கக் கூடாது என்பதில் அர்த்தமேயில்லை” - குடிஅரசு 21.06.1931

என்கிறார் பெரியார் . எனவே, தங்களை அடிமைப்படுத்தும் ஒவ்வொன்றையும் உணர்ந்து, அதனைத் தகர்த்தெறிய பெண்கள் தாங்களாகவே முன்வந்தால் தான் பாலின சமத்துவம் இந் நூற்றாண்டிலாவது சாத்தியப்படும்… 

References:

1. பெரியார் களஞ்சியம் (பெண்ணுரிமை தொகுதிகள்) - தொகுப்பாசிரியர் – கி.வீரமணி

2. English Translation of “The Second Sex” book written by Simone de Beauvoir

3. “Sexual Politics” book written by Kate Millett

4. “Intercourse” book and other writings of Andrea Dworkin

5. http://www.newyorker.com/magazine/2015/10/19/road-warrior-profiles-jane-kramer

6. https://www.themonthly.com.au/issue/2010/march/1348115559/emily-maguire/virgin

7. http://www.spectacle.org/1195/mack.html