வறட்சியென்று கணக்கெடுத்தால் நாட்டில் எல்லா
 வகையினிலும் பலவறட்சி காணக் கூடும்
அறவறட்சி அதிகந்தான் எனினும் ஆய்ந்தால்
 அதைவிடவும் வறண்டதிங்கு கொள்கை ஆகும்
மிரட்டிடுவார் கொக்கரிப்பார் மேடை ஏறி
 மிடுக்கிடுவார் ஆர்ப்பரிப்பார் உரக்கப் பேசி
‘புரட்சி’யெனும் அடைமொழியைப் பெயரின் முன்னால்
 போட்டிங்கே பொல்லாத அழிம்பு செய்வார்!
புரட்சியாளர் அம்பேத்கர் பெரியார் மற்றும்
 புலித்தலைவர் பிரபாகர் போன்றோர் செய்த
திரட்சிமிகு வீரத்தை விவேகந் தன்னை
 “திரைப்படங்கள் காட்டியிங்கே நீர்க்க வைத்து
மறக்கடிக்கச் செய்ததுதான் மற்ற தென்று
 மாண்புமிகு நம்தலைவர் புரட்சி” என்பேன்.
கறந்துவிட்டார் நம்மடியில் வாக்குப் பாலை
 காம்பறுந்து நிற்கின்றோம் அடச்சீ! வெட்கம்.
கோட்டையிலே இருந்தகொடும் ஜாரை வீழ்த்தி
 கொடுத்தார்நல் லாட்சிலெனின் அது புரட்சி;
நாட்டைஉயி ராய்மதித்த தோழர் மாவோ
 நல்லபடி வளர்த்தாரே அது புரட்சி;
பாட்டாலே பழமைக்குப் பாடை கட்டி
 பாவேந்தன் செய்தானே அது புரட்சி;
கேட்டாலே “புரட்சி”யென்ற சொல்லை, இன்று
 கேலியாக்கி விட்டதுதான் நம் புரட்சி!
Pin It