துனிசியா - எகிப்து வெற்றியும் அதன் வரம்பும்

2010 திசம்பர் 17 தொடங்கி 2011 சனவரி 14 வரையிலான இரண்டு மாதக் காலத்திற்குள் மேற்கு ஆசியாவில் உள்ள இரண்டு அரபு நாடுகளில் மக்கள் புரட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. துனிசியாவில் 23 ஆண்டுகள் நீடித்து வந்த ஆபிதினு பென் அலியின் கொடுங்கோலாட்சி 29 நாள்களில் வீழ்த்தப் பட்டது. எகிப்தில் 32 ஆண்டுகள் சர்வாதிகாரியாக இருந்த ஓஸ்னி முபாரக் ஆட்சி 18 நாள்களில் தூக்கி எறியப்பட்டது. பென்அலி துனிசியாவிலிருந்தும், 82 அகவையினரான முபாரக் எகிப்திலிருந்தும் விரட்டிய டிக்கப்பட்டனர். இருவரும் சவூதி அரேபியாவில் அடைக் கலம் பெற்றுள்ளனர்.

அய்ந்து ஆண்டுகளுக்குமுன் தென்அமெரிக்காவில் வெனிசுலா, பொலிவியா நாடுகளில், வடஅமெரிக் காவின் கைப்பாவை சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சிகள் வெற்றி பெற்றன. இவற்றின் எதிரொலியாக சிலி, உருகுவே, பராகுவே போன்ற பிற தென்அமெரிக்க நாடுகளிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத் திற்கும் சுரண்டலுக்கும் எதிராக மக்களின் போராட் டங்கள் வீறுகொண்டு எழுந்தன.

இதைப்போலவே, துனிசியா, எகிப்து நாடுகளில் மக்கள் போராட்டங்கள் மூலம், அமெரிக்காவின் ஏவலர் களாக இருந்த பென்அலி, ஓஸ்னி முபாரக் ஆட்சிகள் வீழ்த்தப்பட்டமை, வடஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் உள்ள மொராக்கோ, ஏமன், ஜோர்டன், லிபியா, அல்ஜீரியா, சிரியா, வடக்குச் சூடான், பஹ்ரைன், சவூதி அரேபியா முதலான நாடுகளின் சர்வாதிகார ஆட்சியாளர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இந்நாடுகளில் சனநாயக உரிமைக்கான மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. தன் ஆதிக்கத்திற்குப் பாதுகாப்பு அரணாக விளங்கிய முபாரக்கின் வீழ்ச்சி இசுரேல் ஆட்சியாளர்களைப் பெருங் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அரபு நாடு களில் மக்கள் போராட் டங்கள் தொடர்ந்து வெற்றி பெறுமாயின், அந்நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள் மீதான தன் ஏகபோக மும், அரசியல், இராணுவ ஆதிக்கமும் குலைந்துவிடுமே என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டி ருக்கிறது அமெரிக்கா.

மேற்கு உலகிற்கும் கீழை நாடுகளுக்கும் இணைப் பாக எகிப்தின் சூயஸ் கால்வாய் விளங்குகிறது. இது எகிப்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 1954இல் சூயஸ் கால்வாய் மீதான ஆதிக்கத்தைப் பெற அய்ரோப்பிய நாடுகளின் படைகள் போர் தொடுத்தன. எகிப்தின் அதிபராக இருந்த நாசர் இப்படைகளை முறியடித்தார்.

அரபு நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் - அதாவது 8 கோடி மக்கள் எகிப்தில் வாழ் கின்றனர். எனவே எகிப்தும், அதன் ஆட்சி அதிகாரமும், அரபு நாடுகளுக்கு மட்டுமின்றி, உலக அளவில் நிலவியல் சார்ந்த அரசியல், இராணுவம், வணிகம் என எல்லா வகையிலும் முதன்மையான நிலையைப் பெற்றுள்ளது. எனவே எகிப்தில் 32 ஆண்டுக்கால முபாரக்கின் கொடுங்கோலாட்சியின் வீழ்ச்சி குறித்தும், அடுத்து எகிப்தில் எத்தகைய ஆட்சி முறை அமையும் என்பது குறித்தும், ஆதிக்க ஆற்றல்களும் சுதந்தரத் தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்ட விழை வோரும் கூர்ந்து நோக்கி வருகின்றனர்.

துனிசியாவின் தென்பகுதியில் உள்ள சிதி பவுசித் என்ற நகரில் 17.12.2010 அன்று மகமத் பவ்வா சிசி என்கிற 26 அகவை இளைஞன் அரசின் அடக்கு முறைக்கு எதிராக நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் தீயிட்டுக் கொண்டதில் படுகாயமடைந்தான். இந்நிகழ்ச்சியே மக்கள் பேரெதிர்ப்பின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. பட்டதாரியான இந்த இளைஞன் உரிய வேலை கிடைக்காததால் காய்கறிக் கடை நடத்தி வந்தான். இதற்கான உரிமத்தை நீக்கியதுடன் காவல் துறையினர் அவனைத் தாக்கினர். அதனால் சினங் கொண்ட அந்த இளைஞன் காவல்துறையினர் தொடர்ந்து மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் கொடுமைகளை, தன்னுடலில் பற்றி எரியும் தீயின் பிழம்புகள் மூலம் உலகிற்கு உணர்த்தினான்.

துனிசியாவில் 20 ஆண்டுகளாக நெருக்கடி நிலை நடப்பில் உள்ளது. ஊடகங்கள் மீது கடுமையான தணிக்கை விதிக்கப்பட்டது. அதனால் இதற்கு முன் நடந்த தீக்குளிப்பு ஈகங்கள் செய்தி ஏடுகளில் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டன. அந்நகர மக்கள் இந்த இளைஞன் தீக்குளிப்பதற்குக் காரணமாக இருந்த காவல்துறையைக் கண்டித்துப் பேரணி நடத்தினர். இவர்களைக் காவல்துறையினர் கடுமையாகத் தாக் கினர். இணையதளம், கைப்பேசி வாயிலாக இந் நிகழ்ச்சி பற்றிய செய்தி மற்ற நகரங்களுக்கும் பரவியது. அரபு நாடுகளின் மக்களுக்கு விறுவிறுப்பான செய்தி களைத் தருவதில் முதன்மையான தொலைக்காட்சி யாக விளங்கும் அல்ஜசிரா, காவல்துறையினர் மக்கள் மீது நடத்திய தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியது.

தொடக்கத்தில் இளைஞர்களும், மாணவர்களும் வீதிகளில் திரண்டு போராடினார்கள். ‘ஒரு கையில் கல்லும், மற்றொரு கையில் கைப்பேசியும் வைத்துக் கொண்டு இளைஞர்கள் போராடினர்’ என்று நேரில் கண்ட இதழாளர் ஒருவர் எழுதியுள்ளார். துனிசியா ஏழை நாடாக உள்ள போதிலும் அரபு நாடுகளிலேயே படித்தவர் அதிகம் பேர் உள்ள நாடு. துனிசியாவின் மக்கள் தொகை 1.08 கோடி. இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் - 36 இலட்சம் பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். இளைஞர்கள் இந்த இணைய தளத்தை அரசுக்கு எதிரான போர் ஆய்தமாக்கி, அனைத்துப் பிரிவு மக்களையும் துனிசியாவின் கொடுங் கோலாட்சிக்கு எதிராக அணிதிரட்டினர். துனிசியாவில் வேலையில்லாதவர் 30 விழுக்காடு. இவர்களில் 50 விழுக்காட்டினர் இளைஞர்கள். மேலும் பென்அலி நடை முறைப்படுத்திய தாராளமய, தனியார்மயக் கொள்கை களால் வேலை இழந்த தொழிலாளர்கள் இப்போராட் டத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டனர்.

துனிசியா 1956இல் பிரான்சின் காலனிய ஆதிக்கத்திலிருந்து சுதந்தரமடைந்தது. அதுமுதல் 1987 வரை அபிப் போர்குய்பா என்பவர் சர்வாதி கார ஆட்சி நடத்தினார். 1987 நவம்பர் 7 முதல் பென்அலியின் கொடுங்கோலாட்சி நடந்தது. கடந்த 20 ஆண்டுகளில் அரசு துறையில் புதிய வேலை ஒன்றுகூட உருவாக்கப்படவில்லை. மாறாகப் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப் பட்டன. துனிசியாவில் ‘இசுலாமிய மறுமலர்ச்சி இயக்கம்’ என்கிற தீவிரவாத இயக்கத்தைத் தடைசெய்ததற்காகவும், தாராளமயச் சந்தைக்கு வழியமைத்ததற்காகவும் அமெரிக்காவும், அய் ரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளும் துனிசியா வுக்கு இராணுவ உதவிகளும் நிதி உதவிகளும் வழங்கி வந்தன.

அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரைக் கொடு மையாகத் துன்புறுத்தியது காவல்துறை. சனநாயக அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டங்கூடும் உரிமை முதலானவை பறிக்கப்பட்டன. எனவே ஒடுக்கப்பட்ட இளைஞர்களும், பல பிரிவு மக்களும், முன்திட்டமிடல் என ஏதுமின்றிக் கொடுங் கோலன் பென்அலி, ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று நாடு முழுவதும் போராடினர். 6.1.2011 அன்று பொது வேலை நிறுத்தத்தால் நாடே மக்கள் புரட்சியின் பக்கம் நின்றது. மக்கள் இதை மல்லிகைப்புரட்சி என்றனர். ஏனெனில் மல்லிகை துனிசியாவின் தேசிய மலர்.

ஆயினும் பென் அலி காவல்துறையினரை ஏவி மக்கள் போராட்டத்தை மேலும் கடுமையாக ஒடுக்க முயன்றார். இத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் கொல்லப்பட்டனர். எண்ணற்றோர் படுகாயமடைந் தனர். மக்கள் சினத்தைத் தணிக்கும் நோக்குடன், 13.1.2011 அன்று பென்அலி, அரசு தொலைக்காட்சி யில், சனநாயக உரிமைகளுக்கான சீர்திருத்தங்கள் செய்வதாகவும், 2016இல் அவருடைய பதவிக் காலம் முடிந்த பிறகு, மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை என்றும் அறிவித்தார். காவல்துறையினர் போராட்டக்காரர்களைத் தாக்குவதைத் தடுப்பதற்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. 

ஆனால் மக்கள் பென் அலியின் வாக்குறுதியைப் பொருட்படுத்தவில்லை. திசம்பர் 17 அன்று அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் தீயிட்டுக் கொண்டு படுகாய மடைந்திருந்த இளைஞன் பவ்வா சிசி சனவரி 14 அன்று வீரச் சாவெய்தினான். அதனால் மக்களின் சினத்தீ மேலும் கொழுந்துவிட்டெரிந்தது. துனிசியா முழுவதும் மக்கள் வீதிகளில் அணிதிரண்டு, ‘பென் அலியே உடனே பதவி விலகு!’ என விண்ணதிர வீர முழக்கமிட்டனர்.

இனிப் பதவியில் நீடிக்க முடியாது என்று அஞ்சிய பென்அலி சனவரி 14 நள்ளிரவில் தன் மனைவியை வானூர்தியில் அபுதாபிக்கு அனுப்பிவைத்தார். அவர் அரசின் கருவூலத்திலிருந்து பல டன் தங்கத்தைத் தன்னுடன் எடுத்துச் சென்றார். பென் அலிக்கு அடைக் கலம் தருவதாகக் கூறிவந்த பிரான்சு இறுதி நேரத்தில் இயலாது என்று கூறிவிட்டது. அதனால் பென்அலி சவூதி அரேபியாவுக்குத் தப்பியோடினார். பென்அலி குடும்பத்தினரும் அவரது மனைவி குடும்பத்தினரும் சேர்ந்து, துனிசிய நாட்டின் பொருளாதாரத்தில் பாதியைச் சொந்தமாகவோ அல்லது தங்கள் கட்டுப்பாட்டிலோ வைத்திருப்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியி ட்டுள்ளது. மனிதக்கறி தின்ற உகாண்டாவின் கொடுங் கோலன் இடி அமீன், தன் வாழ்வின் இறுதிக்காலத் தைக் கழித்த சவூதி அரேபியாவின் மாளிகையில்தான் இப்போது பென் அலி தங்கியுள்ளார்.

பென்அலி துனிசியாவை விட்டு ஓடுமுன், தன் கையாளாக விளங்கிய முகமத் கன்னோச்சி என்பவரை அதிபர் பொறுப்பில் அமர்த்தினார். இந்த ஆண்டு இறுதிக்குள் பல கட்சிகள் பங்கேற்கும்படியான சுதந்தர மான தேர்தல் நடத்தப்படும் என்று கன்னோச்சி கூறியிருக்கிறார்.

சனவரி 25 அன்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள “தக்கீர் (விடுதலை) சதுக்கத்தில்” சில ஆயிரம் இளைஞர்கள் திரண்டு, ‘ஓஸ்னி முபாரக் ஆட்சி ஒழிக!’ என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த இளைஞர்கள் இணையத்தளம் - வலைத்தளம் வாயிலாகச் சனவரி 25 அன்று அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்று தகவல் பரிமாறிக் கொண்டனர். 2008 ஏப்பிரல் 6 அன்று எகிப்தில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு இளைஞர்கள் இணையத் தளம் மூலம் தம் ஆதரவைப் பரப்பினர். அதுமுதல் நாட்டின் நடப்பு கள் - அரசின் அட்டூழியங்கள் - அடக்கு முறைகள் குறித்து இணையத்தளத்தின் (Facebook, Twitter) மூலம் தம் கருத்துகளைப் பரப்பியும் பரிமாறிக் கொண்டும் வருகின்றனர். இது ‘ஏப்பிரல் 6 இளைஞர் இயக்கம்’ எனப்படுகிறது. எகிப்தில் மக்கள் புரட்சியைத் தொடக்கி வைத்தது இணையத்தளமும் இளைஞர்களுமே ஆவர்.

எகிப்தில் அரசால் நீண்டகாலமாகக் கருத்துரிமை கடுமையாக ஒடுக்கப்பட்டு வந்தது. சாதாரண உடை யில் காவல்துறையினரும், உளவுத் துறையினரும் மக்களைக் கண்காணித்து வந்தனர். எகிப்தில் 10 இலட்சம் பேர் உளவுப் பிரிவில் இருப்பதாக விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர் கைது செய்யப்பட்டுக் கொடுமையான முறைகளில் துன்புறுத்தப்பட்டனர். உளவுப் பிரிவின் தலைவர் ஒமர் சுலைமான், முபாரக்கைவிடக் கொடிய வன்.

சனவரி 25 அன்று போராட்டம் நடத்திய இளை ஞர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. அடுத்த சில நாட்களிலேயே, கெய்ரோ, அலெக்சாண்டிரியா, சயத் துறைமுகம், அஸ்வான், சூயஸ், இசுலாமியா, மன்சவ்ரா ஆகிய பெருநகரங்களில் இலட்சக்கணக்கில் இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், இதழாளர்கள், வழக் குரைஞர்கள், மருத்துவர்கள், பெண்கள், அரசு ஊழி யர்கள் ஒன்றுதிரண்டு ‘முபாரக் பதவி விலகு’ என்ற முழக்கத்தை முன்னிறுத்திப் போராடினர். இவர்களைக் காவல்துறை தாக்கியதில் போராட்டத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இக்கொடிய காட்சிகளை அல்ஜசிரா தொலைக்காட்சியிலும், இணையத்தளத்திலும் கண்ட மக்கள் மேலும் தீரமுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தாக்குதலை நிறுத்த முபாரக் இராணுவத்தை வீதிகளில் நிறுத்தினார். இராணுவத்தினர் போராட்டக்காரர்களைத் தாக்காமல் வேடிக்கை பார்த்தனர். நோபல் பரிசு பெற்ற எகிப்தியரும், பன் னாட்டு அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவரு மான எல் பராடி போன்றவர்கள் இராணுவம், மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறினர். நான்கு எதிர்க்கட்சிகள் எல் பராடியை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான பேராளராகத் தேர்வு செய்துள்ளன. எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்ததும் இராணுவத் தலைமைத் தளபதி அமெரிக்காவுக்குப் பறந்தார். இராணுவம் தற்போது மக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தலைமைத் தளபதியிடம் அமெரிக்கா கூறியது. அதனால் போராட்டக்காரர்கள் முன் இராணுவம் தன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றது.

சனவரி 28 அன்று தொலைக்காட்சியில் உரை யாற்றிய முபாரக் அமைச்சரவையைக் கலைப்பதாக அறிவித்தார். சனவரி 29 அன்று ஒமர் சுலைமானைத் துணை அதிபராக நியமித்தார். 76 அகவையினரான, உளவுப் பிரிவின் தலைவரான சுலைமான், முபாரக் கைவிடக் கெடுமனம் கொண்டவர் என்பதால், போராட் டக்காரர்கள் இதை எதிர்த்தனர்.

பிப்ரவரி 2 அன்று மீண்டும் தொலைக்காட்சியில் உரையாற்றிய முபாரக், “எகிப்தியர்களை அந்நிய ஆற்றல்களிடமிருந்து காப்பாற்றக் கூடிய ஒரே தலைவன் நான்தான். இத்தனை ஆண்டுகளாக உங்களுக்காகத் தான் பாடுபட்டேன். பதவி வகித்தேன். வரும் செப் டம்பர் மாதத்துடன் என்னுடைய பதவிக்காலம் முடிந்து விடும். பதவியைப் பாதுகாப்பாக மற்றவர்களிடம் மாற்றித் தருவேன். அதற்காக அரசியல் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய நான் பதவியில் இருந்தாக வேண்டும். உங்களுக்காகப் பாடுபட்ட என்னைப் பதவி யிலிருந்து அகற்ற வேண்டும் என்று எந்த அயலக ஆற்றலோ உங்களைத் தூண்டி விடுகிறது. உங்களில் சிலர் ஏதும் புரியாமல் அவர்களுக்கு அடிமைகளாகி, எகிப்தை உயிருக்கு உயிராக நேசிக்கும் என்னைப் பதவியிலிருந்து அகற்றத் துடிக்கிறீர்கள். இந்த எண் ணத்தைக் கைவிடுங்கள்” என வேண்டுகோள் விடுத் தார். (தினமணி 12.2.11).

எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்ததும் அமெரிக்காவின் அயலுறவு அமைச்சர் இலாரி கிளிண்டன், ‘முபாரக் ஆட்சி நிலையானதாக உள்ளது. எகிப்திய மக்களின் நியாயமான தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை முபாரக் அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது’ என்று கருத் துரைத்தார். எகிப்திற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் பிராங் வைஸ்னர், முபாரக்கின் தலைமை எகிப்துக்கு இந்த நெருக்கடியான வேளையில் இன்றி யமையாததாகத் தேவைப்படுகிறது என்றார். முபாரக் கின் குரலும், இலாரி - வைஸ்னர் குரல்களும் ஒரே மாதிரி ஒலிக்கின்றன அல்லவா!

பிப்பிரவரி 2 அன்று முபாரக் தொலைக்காட்சியில் உரையாற்றி முடித்ததும், முபாரக்கின் தேசிய சன நாயகக் கட்சியின் குண்டர்களும், சாதாரண உடை யில் இருந்த காவல்துறையினரும் சேர்ந்து கெய்ரோவில் “தக்கீர் (விடுதலை) சதுக்கத்தில்” திரண்டிருந்த இலட்சக் கணக்கான மக்கள் மீது குதிரைகள், ஒட்டகங்களில் அமர்ந்தவாறு தாக்கினர். போராட்டக்காரர்கள் “பிப்பிர வரி 4க்குள் முபாரக் வெளியேற வேண்டும் -!” என்று நாள் குறித்தனர்.

மக்கள் புரட்சியை இனி அடக்கி ஒடுக்க முடியாது என்பதை உணர்ந்த முபாரக், எகிப்தின் ஆட்சி அதி காரத்தைப் பாதுகாப்பு அமைச்சர் உசேன் தந்தாபி தலைமையிலான இராணுவ உயர்நிலைக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, சவூதி அரேபியாவுக்கு ஓடினார். இதையறிந்ததும் மக்கள் வீதிகளில் திரண்டு, ஒருவரை யொருவர் கட்டித்தழுவி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

துனிசியாவிலும் எகிப்திலும் நடந்த மக்கள் புரட்சிகள் குறித்து மேலும் பல செய்திகளை - உண்மைகளை நாம் கண்டறிய வேண்டி யுள்ளது. இசுலாமிய நாடுகளில் மதவெறியை அடிப்படையாகக் கொண்டே மக்களை அணி திரட்ட முடியும் என்று முதலாளிய அறிஞர்கள் கூறிவந்ததை இப்புரட்சிகள் பொய்யாக்கி உள் ளன. இசுலாமிய மதஉணர்வுக்கே இடமில்லாத தன்மையில் இப்போராட்டங்கள் நடந்தன. பேர ணிகளில் ‘அல்லாஹு அக்பர்’ என்ற முழக்கம் எழுப்பப்படவில்லை. ‘ஆட்சி மாற்றம் தேவை’ என்பதே மக்களின் அரசியல் முழக்கமாக இருந் தது. எகிப்தில் இசுலாமியரும் கிறித்துவர்களும் தோளோடுதோள் நின்று போராடினர்.

“சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்!” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி 1789இல் பிரான் சில் மாபெரும் மக்கள் புரட்சி நடந்தது. முதலாளிய உற்பத்தி முறை வளர வளரப் பல நாடுகளில் முதலாளிய ஆட்சிமுறைகள் ஏற்பட்டன. இவற்றின் விளைவாக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சுதந்தரமான செய்தி இதழ்கள், மனித உரிமைக்காகப் போராடும் அமைப்புகள் முதலானவை ஏற்பட்டன. இவற்றுள் பல, சனநாயகம், மக்கள் உரிமை முதலான வற்றிற்காகப் பாடுபட்டன - போராடின. வல்லாதிக்க அரசுகள் மக்களின் உரிமைக்காக - நாட்டின் சனநாயகத்திற்காகப் போராடுவோரை - போராடும் அமைப்புகளை ஒடுக்கின. குறிப்பாகத் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற கொள்கைகள் நடைமுறைக்கு வந்தபின், மரபுவழிப்பட்ட போராட்ட வடிவங்கள் முனைமழுங்கிப் போயின. தொழிலாளர் இயக்கங்கள் உலக அளவில் தம் வீறார்ந்த போர்க் குணத்தை இழந்துள்ளன. அரசின் அநீதிக்கும் அட்டூழியத்திற்கும் எதிராகத் தொழிலாளர்களை அணி திரட்டும் ஆற்றல் குன்றியது. அல்லது இவை ஆளும் வர்க்கத்துடன் ஒத்துப்போயின. செய்தி ஏடுகளில் பெரும் பாலானவை ஆளும்வர்க்கத்தின் ஊதுகுழல்களாக மாறிவிட்டன.

மன்னராட்சியும், சர்வாதிகார ஆட்சியும் கொண்டதான அரபு நாடுகளில் இத்தகைய மானுட உரிமைப் பறிப்பும், சனநாயக மறுப்பும் உச்சநிலையை எட்டின. அமெரிக்காவின், அதன் கூட்டாளிகளான மேற்கு அய்ரோப்பிய நாடுகளின் வேலைக்காரர்களாக விளங்கிய இந்த சர்வாதி காரிகள் மக்களைக் கொடுமையாக ஒடுக்கினர். எனவேதான் மார்க்சிய ஆய்வாளர் அஜாஸ் அகமத் இவர்களுக்கு ‘வேலைக்கார - சர்வாதி காரிகள்’ (Servant - Dictators) என்ற அடை மொழியை அளித்துள்ளார்.

எந்தத் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் முற்று ரிமை முதலாளியத்துக்குக் கொள்ளை இலாபம் வழங்கி வருகிறதோ, அதே தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தை (கைப்பேசி, மின் அஞ்சல், வலைத்தளம், இணையத்தளம்) கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான செய்தி பரப்புப் போராய்தமாக மக்கள் மாற்றினர். அசாங்கே என்ற தனிமனிதர் உருவாக்கிய விக்கி லீக்ஸ் இணையதளம் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகநாடுகள் அனைத்திலும் செய்துவரும் அழிம்பு களை அம்பலப்படுத்தி வருகிறது. ஒடுக்கும் அரசிடம் உள்ள போர்க்கருவிகளால், புரட்சியாளர்கள் தங்கள் கைகளிளேந்திய தகவல் தொடர்பு தொழில் நுட்ப ஆய்தத்தைத் தகர்க்க முடியவில்லை.

துனிசியாவிலும் எகிப்திலும் மக்கள் போராட்டங்கள் அமைதியாக நடந்தன. தங்கள் கைகளில் ஒரு தடி யைக் கூட வைத்திருக்கவில்லை. காவல்துறையினர் தாக்கியபோது அவர்களைத் திருப்பித் தாக்க முயல வில்லை. கெய்ரோவில் விடுதலைச் சதுக்கத்தில் முபாரக் பதவி விலகும்வரை இவ்விடத்தை விட்டு அகல மாட்டோம் என்று இரவு பகலாகப் பல்லாயிரம் மக்கள் அறப்போராட்டம் செய்தனர்.

கெய்ரோவில் முபாரக்கின் தேசிய சனநாயகக் கட்சியின் தலைமை அலவலகத்தைப் புரட்சியாளர்கள் தாக்கித் தீயிட்டு எரித்தனர். அரசு தொலைக்காட்சி அலுவலகம், அரசுக்கு ஆதரவான ஏடுகளின் அலுவல கங்கள் தாக்கப்பட்டன. இவை தவிர பேருந்துகளை எரிப்பது, அரசின் - தனியாரின் சொத்துக்களை அழிப் பது போன்ற நிகழ்வுகள் நடக்கவில்லை. கெய்ரோவில் சிறைகளை உடைத்து அரசியல் கைதிகளும் மற்ற வர்களும் வெளியேறினர். கெய்ரோவில் புகழ் பெற்ற அருங்காட்சியகம் தாக்கப்பட்டது. அதிலிருந்து அரிய கலைப்பொருள்கள் திருடிச் செல்லப்பட்டன என்று செய்தி வெளியாயிற்று. உண்மையில் இதைச் செய்தது சமூகப் பகை ஆற்றல்களே ஆவர். இதை அறிந்ததும் புரட்சியாளர்கள் அருங்காட்சியகத்தைச் சுற்றிலும் மனிதச் சங்கலி போல் கைக்கோத்து நின்று அதைக்காத்தனர். இது அல்ஜிசிரா தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

எகிப்தில் மக்கள் அமைதியான முறையில் நடத்திய போராட்டத்தை அமெரிக்காவின் குடியரசு தலைவர் பராக் ஒபாமா மிகவும் பாராட்டியுள்ளார். முபாரக் எகிப்தை விட்டு வெளியேறியதும் வெள்ளை மாளிகையில் ஒபாமா கருத்துரைத்தார். அப்போது, “எகிப்து மக்கள் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுடைய கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. எகிப்து இனி முன்பிருந்தது போல் இருக்காது. எகிப்தில் உள்ள அனைத்துப் பிரிவினரும் அமைதியான முறையில் சனநாயக ஆட்சி அமைய ஒத்துழைக்க வேண்டும். கடந்த மூன்று கிழமைகளில் எகிப்து இராணுவம் நடந்து கொண்ட முறை மிகவும் பாராட்டுக்குரியது.

நான் காந்தியையும் அவரது கொள்கைகளையும் மிகவும் நேசிப்பவன். எகிப்தில் மக்கள் காந்தியைப் பின்பற்றி அகிம்சை வழியில் போராடியதாகவே நான் கருதுகிறேன். எகிப்தியர்கள் நம் உள்ளங்களில் புதிய ஊக்கத்தை உண்டாக்கியுள்ளனர். வன்முறை மூலமே நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட முடியும் என்று பொதுவாக நம்பப்படும் கருத்தைப் பொய்யாக்கி உள்ளனர்” என்று எகிப்து மக்களைப் புகழ்ந்தார். இது வஞ்சப் புகழ்ச்சியே அல்லவா?

அறவழி, அன்புநெறி, அகிம்சை என்றெல் லாம் பராக் ஒபாமா கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றதேயாகும். துனிசியாவிலும் எகிப்திலும் தன்னெழுச்சியாக நடந்த மக்கள் புரட்சிகளின் முதன்மையான கோரிக்கை பென் அலியும், முபாரக்கும் பதவி விலக வேண்டும் என்பதேயாகும். அந்த அளவில் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இருபது, முப்பது ஆண்டுகளாக அந்நாடுகளில் நீடித்துவந்த கொடிய சர்வாதிகார ஆட்சி அமைப் பை, உண்மையான சனநாயக அமைப்பாக மாற்றுவதற்கான திட்டம் ஏதும் அவர்களிடம் இல்லை. ஏனெனில் அத்தகையதோர் திட்டத்தை உண்மையான புரட்சிக் கட்சியால் மட்டுமே வகுத்துப் போரிட முடியும். அத்தகைய போராட் டம் அமைதி வழியினதாக நீடிக்க முடியாது. ஏனெனில் ஆளும் ஆதிக்கவர்க்க அரசு தன் படையைக் கொண்டு அதை நசுக்கும். அந் நிலையில் போராளிகள் ஆய்தமேந்திப் போராடி னால் தவிர வெற்றி பெற முடியாது. வரலாறு நெடுகிலும் புரட்சிகள் இப்படித்தான் நடந்துள்ளன.

ஒபாமா, எகிப்து மக்கள் அகிம்சை வழியில் போராடியதைப் புகழ்வதன் நோக்கம், முபாரக் அதிபர் பதவியிலிருந்து விலகிவிட்டதால், இனி மக்கள் போராட்டத்திற்கு இடமில்லை - மக்கள் அவரவர் வயிற்றுப் பிழைப்புக்கான வேலையைப் பாருங்கள்; எகிப்தில் எத்தகைய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதை, அமெரிக்காவும், எகிப்தின் இராணுவ உயர்நிலைக் குழுவும் முடிவு செய்யும் என்று எகிப்து மக்களுக்கு உணர்த்துவதேயாகும்.

துனிசியாவில் பென் அலி நாட்டை விட்டு ஓடிவிட்ட போதிலும், ஆட்சி அதிகாரத்தைத் தன் கையாளான முகமத் கன்னோச்சியிடம் ஒப்படைத்துச் சென்றார். இதைப்போலவே எகிப்தில் பாதுகாப்பு அமைச்சர் முகம்மது உசேன் தந்தாவியின் தலைமையிலான இராணுவ உயர்நிலைக்குழுவிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எகிப்தில் உண்மையான ஆட்சி அதிகாரம் இராணுவத்திடம்தான் பல ஆண்டு களாக இருந்து வருகிறது. இன்னும் ஆறு மாத காலத் திற்குள் நாடாளுமன்றத்திற்கும், அதிபர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று இராணுவ உயர்நிலைக் குழு அறிவித்துள்ளது.

1967இல் எகிப்து, இசுரேல் படையிடம் தோற்றது. நாசர் ஆட்சியில் இராணுவத் தளபதியாக இருந்த அன்வர் சதத் அப்போது எகிப்தின் அதிபராக இருந்தார். அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் எகிப்து இசுரேலு டன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதைப் போல ஜோர்டனையும் செய்ய வைத்தது அமெரிக்கா. இசுரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டதற் காகவும் அரபு தேசிய இனக்கொள்கையைக் கைவிட்ட தற்காகவும் பரிசாக அமெரிக்கா எகிப்துக்கு 8000 கோடி டாலர் வழங்கியது. இதில் பெரும்பகுதி இராணுவத் துக்குச் சென்றது. அதன்பின் ஆண்டுதோறும் 200 கோடி டாலருக்கு ஆய்த உதவிகளைத் தொடர்ந்து அமெரிக்கா வழங்கி வருகிறது. இவ்வாறு அமெரிக்கா வழங்கிவந்த ஆயுதங்கள் ஆண்டுதோறும் துடைத்துப் பூசை போடுவதற்கா? 2011 சனவரியில் போராட்டக் காரர்கள் மீது வீசப்பட்ட கண்ணீர்புகைக் குண்டுகளும், துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட இரவைக் குண்டு களும் அமெரிக்கா அளித்தவையே!

உலகில் 192 நாடுகள் ஆண்டுதோறும் இராணு வத்துக்கு ஒதுக்கும் மொத்தத் தொகையில் 40 விழுக்காடு அமெரிக்கா செலவிடுகிறது. அய்ந்து கண்டங்களிலும் ஏழு கடல்களிலும் 200க்கும் மேற்பட்ட இராணுவத் தளங்களை அமைத்துள் ளது. 2001இல் ஆப்கானிஸ்தான் மீதும், 2003 இல் ஈராக் மீதும் படையெடுத்தது. அந்நாடுகளில் பல இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். அன்றாடம் மனிதக் குருதியில் குளித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா காந்தியின் கொல்லாமை வழியைப் பற்றிப் புரட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டுவது, புலி சைவத்தைப் போற்றுவது போன்றதே யாகும்.

துனிசியாவிலும், எகிப்திலும் நடந்த மக்கள் போராட்டங்கள் சர்வாதிகாரத்திற்கு எதிரான, சனநாயக மீட்பிற்கான போராட்டம் என்பதாக மட்டுமே முதலா ளிய ஊடகங்களால் சித்திரிக்கப்படுகிறது. துனிசியா விலும் எகிப்திலும் பிற அரபு நாடுகளிலும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் அரவணைப்பை, இராணுவ உதவிகளைச் சார்ந்திருந்ததால், கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் வகுத்தளித்த பொருளாதாரக் கொள் கைகளைக் கண்ணைமூடிக் கொண்டு பின்பற்றினர். இவையே இந்நாடுகளில் வேலையில்லாத் திண்டாட் டத்திற்கும், ஊழல் பெருக்கத்திற்கும், சனநாயக உரி மைகள் கடுமையாக ஒடுக்கப்படுவதற்கும் ஆணி வேராக விளங்குகின்றன. எனவே தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற மூலவேரை அடியோடு அறுத்தெறியாத வரையில், மக்களின் துன்ப துயரங்களும், ஏற்றத்தாழ்வுகளும், உரிமை மறுப்புகளும் தொடரும்.

ஊழல் என்பது தனிமனிதப் பேராசையின் விளைவு - மனித அறம் சார்ந்தது என்பதுபோல முதலாளிய ஊடகங்கள் படம் பிடித்துக் காட்ட முயல்கின்றன. தனியுடைமைக்கு எந்த அளவுக்கு உரிமைப் பட்டயம் வழங்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு அச்சமூகத்தில் சுரண்டலும், ஊழலும், ஒடுக்குமுறையும் அதிகரித்து இருக்கும். கடந்த முப்பது ஆண்டுகளில் அரசின் கட்டுப்பாடின்றி எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்ட லாம் என்கிற தாராளமயச் சந்தை நடப்புக்கு வந்தபின், ஊழலும் சுரண்டலும் பெருகிவிட்டன. எனவே உலக நாடுகளில் உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களைப் போக்குவதற்கான முதல் நடவ டிக்கையே உலகமயக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். ஆட்சியாளர்களை மாற்றுவது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும். பொருளாதாரக் கட்டமைப்பை அடியோடு மாற்றுவதே தீர்வாகும்.

“துனிசியாவிலும் எகிப்திலும் நடந்த மக்கள் புரட்சிக் கான காரணிகள் இந்தியாவிலும் நிலவுகின்றன. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து வறுமையில் வாடுகின்றனர். வேலை இல்லாத் திண்டாட்டம், பணவீக்கம், உணவுப் பொருள்களின் விலை உயர்வு, அர்ஷத்மேத்தா தொடங்கி அடுக் கடுக்காகப் பெருகிவரும் ஊழல்கள், கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம், எரிசக்தி, ஏழைகளுக்கு கிடைக் காமை முதலான காரணிகள் இருக்கின்றன. ஆனால் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முயலவில்லை. ஏனெனில் இந்தியாவில் தேர்தலின் பேரால் சன நாயகம் ஆழ வேரூன்றி உயிர்ப்புடன் இயங்குகிறது. எனவே தவறு செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்தல் மூலம் அகற்றும் வலிமையான சனநாயக முறை நிலவுகிறது” என்று பாஸ்கர் கோஷ் என்பவர் ஃபிரன்ட் லைன் பிப்பிரவரி 2011 இதழில் எழுதியிருக்கிறார்.

ஆனால் உண்மையில், லெனின் குறிப்பிட்டது போல, சனநயாக முகமூடி தரித்த சர்வாதிகாரமாகவே இந்திய சனநயாகம் இருக்கிறது. இந்திய அளவில் நேரு குடும்பமும், பல மாநிலங்களில் கட்சிகளின் பேரால் குடும்ப ஆட்சிகளும் தொடர்ந்து இருப்பதுதான் ஆரோக்கியமான சனநாயகமா? மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதற்குப் பெரும் தடையாக இருப்பது இந்திய அளவிலான - மாநில அளவிலான அனைத்துக் கட்சிகளுமே ஆகும். எல்லாக் கட்சிகளும் தாராளமய, தனியார்மயக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பதாகும். இதில் பொதுவுடைமைக் கட்சிகளும் விதி விலக்குகள் அல்ல என்பதை மேற்குவங்கமும் கேரளமும் மெய்ப்பித்துவிட்டன.

இந்தியா பல தேசிய இனங்களாக அமைந்திருப் பதும் மக்கள் பல சாதிகளாகப் பிரிந்திருப்பதும் இந்திய அளவில் மக்களிடையே ஒரே சமயத்தில் புரட்சிச் சிந்தனைகளை வளர்த்தெடுத்து, போராட்டத்தில் ஈடுப டுத்துவதற்குப் பெருந்தடைகளாக உள்ளன. எனவே அந்தந்தத் தேசிய இனங்கள் மதச்சார்பற்ற - சோசலிச அரசை அமைப்பதற்கான தன்னுரிமைப் போராட் டத்தை நடத்துவதன் மூலமே இந்திய ஏகாதிபத்திய ஒற்றை வல்லாதிக்க அரசமைப்பை வீழ்த்த முடியும். இளைஞர்களால் இதைச் செய்ய முடியும் என்பதற்குத் துனிசியாவும், எகிப்தும் வழிகாட்டியுள்ளன.

துனிசியாவிலும் எகிப்திலும் அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்கள், அமெரிக்கா இவற்றின் ஆதிக்கமும் அதிகாரமும் இல்லாத தன்மையில் சனநாயகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுப்போம். அதுவே உலக நாடுகளில் மக்கள் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு வழி அமைக்கும்.

Pin It