இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்திய மண்ணில் அடித்தளமிட்டு வளர்த்த முதல் தலைமுறை மற்றும் இரண்டாம் தலைமுறைத் தலைவர்களில் பெரும்பான்மையோருக்கு மார்க்சியத் தத்துவப் பயிற்சி கொடுத்தார். ‘ஆர்.பி.டி’ என்று அனைத்து நாடுகளின் கம்யூனிஸ்டுகளால் அன்போடு அழைக்கப்பட்ட இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ரஜினி பாமி தத்.

ரஜினி பாமிதத்தின் தந்தை உபேந்திர கிருஷ்ண தத் இந்தியர். கொல்கத்தா நகரில் பிறந்து வளர்ந்தார். லண்டனில் மருத்துவ உயர் படிப்பில் சிறப்புப் பட்டம் பெற்று அங்கேயே தங்கிவிட்டார். ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி மோனிகா டேவிசைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் இரண்டு மகன்கள், கிளமன்ஸ் தத் மற்றும் ரஜினி பாமி தத். இருவரும் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க காலத்திலிருந்து முழுநேர ஊழியர்களாகச் செயல்பட்டு உலகப் புகழ்பெற்ற தலைவர்களாக உயர்ந்தனர்.

பாமி தத் 1914ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக மாணவராக இருந்தபோதே மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் படைப்புகளை ஆழமாகக் கற்றுத் தேர்ந்து உறுதிமிக்க கம்யூனிஸ்ட்டாக மாறினார். ‘சோசலிஸ்ட் மாணவர் கழகம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்து பல முன்னணி மாணவர்களை மார்க்சியத்தின்பால் ஈர்த்தார். ‘ரஜினி பாமி தத் - ஒரு அசாத்தியமான அறிவுக் கூர்மையுள்ள மாணவன். ஆனால் ஆபத்தானவன். தனது அறிவாற்றலால், பல மாணவர்களுக்கு மார்க்சியத் தத்துவத்தை அறிமுகப்படுத்தி  கலகம் விளைவித்துக் கொண்டி ருக்கிறான். இவனது அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசரமும் அவசியமுமான  கடமையாகும்’ என்று பல்கலைக்கழக அதிகாரிகளும், துணைவேந்தரும் உளவுத்துறை போலீசாருக்கு இரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பினர்.

1914ல் முதல் உலகப்போர் தொடங்கியது. 18 வயது முடிந்த அனைத்து மாணவர்களும் இங்கிலாந்து இராணுவத்தில் சேர்ந்து போர்க்களம் செல்ல வேண்டும் என்று ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பாமி தத் ராணுவத்தில் சேர மறுத்துவிட்டார். மற்ற மாணவர்களும் சேரக் கூடாது என்று பிரச்சாரம் செய்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவரை வெளியேற்றியது. அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. மாணவர் உலகம் கொந்தளித்தது, நாடு தழுவிய போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. பாமி தத் விடுதலை செய்யப்பட்டார்.

சிறை மீண்ட பாமி தத் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பண்டைய தத்துவம் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று முதுகலைப் பட்டம் பெற்றார். தத்துவப் பேராசிரியர் வேலை காத்துக்கொண்டு இருந்தது. ஆனால் அவர் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின்  நாளிதழ் ‘டெய்லி ஒர்க்கர்’ மற்றும் ‘லேபர் மந்த்லி’ இரண்டுக்கும் 1925ல் ஆசிரியராகப் பொறுப்பேற்று 40 ஆண்டுகாலம் சிறப்பாகச் செயல்பட்டார். உலகப் புகழ் பெற்ற பெர்னாட்ஷா, எச்.ஜி.வெல்ஸ், ரொமைன் ரோலாந்து, பால் ராப்சன்,  ஹோவர்டு பாஸ்ட், சிட்னி வெப் மற்றும் பல பொருளாதார மேதைகளையும் கலை இலக்கிய அறிஞர்களையும் அந்த இதழ்களில் எழுத வைத்தார்.

காந்தியடிகள், வீரேந்திரநாத் சட்டோ பாத்தியாயா, வி.கே.கிருஷ்ணமேனன், ஷேக் அப்துல்லா நேரு, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய தலைவர்கள் மற்றும் டாக்டர் அதிகாரி, எஸ்.ஏ.டாங்கே., பி.சி. ஜோஷி, எஸ்.ஜி.சர் தேசாய் ஆகிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் கட்டுரைகளையும் மேற்படி இதழ்களில் வெளிவரச் செய்தார். இலண்டனுக்குப் படிக்க வந்த இந்திய மாணவர்களை ஒன்றிணைக்க ‘இந்திய மாணவர் கழகம்’ (இந்தியன் மஜ்லீஸ்) என்ற அமைப்பை பாமிதத் தோற்றுவித்தார். அதன் முதல் செயலாளராகப்  பணியாற்றியவர் தோழர் ஜோதிபாசு. இந்தக் கழகத்தின் மூலம் அறிவாற்றல் மிக்க பல இந்திய மாணவர்களைக் கவர்ந்து அவர்களுக்கு மார்க்சிய தத்துவத்தில் பயிற்சி கொடுத்து உறுதி மிக்க கம்யூனிஸ்டுகளாக மாற்றினார்.

ஜோதிபாசு, பூபேஷ் குப்தா, இந்திரஜித் குப்தா, மோகன் குமாரமங்கலம், என்.கே.கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன், மொகித் சென், ரொமேஷ் சந்திரா, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, டாக்டர் இஸட்.ஏ. அகமது, கே.எம்.அஸ்ரப், நிகில் சக்கரவர்த்தி என்று பாமி தத்தின் அன்புக்குரிய மாணவர்களின் பட்டியல் நீள்கிறது. ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுதலை பெற வேண்டும் என்பதை  வலியுறுத்தி “லேபர் மந்த்லியிலும்,” “டெய்லி ஒர்க்கர்” நாளிதழிலும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி இந்திய அறிவு ஜீவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்தியா பற்றி காரல் மார்க்ஸ் எழுதிய இரண்டு கட்டுரைகளை அச்சிட்டு 1926ல் முதன் முதலாக  இந்தியாவில் வெளியிட்டார். இந்தியாவின் அளப்பரிய செல்வ வளங்களை ஆங்கில ஆட்சியாளர்கள் எப்படி யெல்லாம் சுரண்டிக் கொள்ளையடித்து கொழுத்து வருகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தி ‘இன்றைய இந்தியா’ என்ற புத்தகத்தை 1926ல் வெளியிட்டார்.

இந்தப் புத்தகமும், அவரது “கம்யூனிஸம் என்றால் என்ன?” என்ற புத்தகமும்  லேபர் மந்த்லி, டெய்லி ஒர்க்கர் இதழ்களும் டாக்டர் அதிகாரி, டாங்கே மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் கைப்பற்றப்பட்டதாகக் கூறி, மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு விசாரணையில் பிரிட்டிஷ் உளவுத்துறை போலிசார் தாக்கல் செய்தனர். 1936ல் நேருவும், 1938ல் சுபாஷ் சந்திரபோசும் இலண்டனுக்குச் சென்றிருந்தபோது அவர்கள் பல பொதுக் கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் பேசுவதற்கு பாமி தத் முன்னணியில் இருந்து செயல்பட்டார். சிறப்பாக  நடைபெற்ற அந்தக் கூட்டங்களின்  மூலம் இங்கிலாந்து மக்களிடையே இந்திய விடுதலைக்கு ஆதரவான கருத்தை உருவாக்கினார்.

1946ல் ஏப்ரல் மாதத்தில் பாமி தத் இந்தியா வந்து செல்ல ஒரே ஒரு முறை அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தா மாநகரில் இலட்சக் கணக்கான உழைக்கும் மக்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மே தினப் பேரணியை நடத்தி பாமிதத்திற்குச் சிறப்பான வரவேற்பை அளித்தார்கள். ‘எனது தந்தை பிறந்து வளர்ந்த மாநகரத்தில் எனக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பும் பேரணியும், வங்கமக்கள் என்னிடம் காட்டிய பேரன்பும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி’ என்று பத்திரிகைகளில்  எழுதினார்.                                      

Pin It