தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் பிணவறையில் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட உடல்கள் நீதியை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. அந்த உடல்களுக்கு, தங்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், விஷக் கிருமிகள், வன்முறையாளர்கள், பிரிவினைவாதிகள் இல்லை என்று நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உடற்கூராய்வு முடிந்து அவர்களை வெறும் சாதாரண மனிதர்கள்தான், அவர்களின் மூளையில் எந்த கம்யூனிச, பெரியாரிச, அம்பேத்கரிச கிருமிகளும் இல்லை என்று மருத்துவர்கள் அறிக்கை கொடுத்தால் மட்டுமே, அவர்களை இந்த நாட்டின் குடிமக்கள் என்று அங்கீகரிக்க ஆன்மீக அரசியல்வாதிகள் தயாராக இருக்கின்றார்கள். அவர்களுக்குப் போராட்டம் என்றாலே அடிவயிற்றில் இருந்து ஆன்மீக எரிச்சல் ஏற்படுகின்றது. இந்த மண்ணின் காற்றையும், நீரையும், கடலையும், மலையையும், ஆறுகளையும் காப்பாற்ற, அந்த மண்ணை தங்கள் உயிரைவிட மிக அதிகமாக நேசிக்கும் மனிதக் கூட்டம், தன் உயிரை துச்சமென மதித்து வீதியில் இறங்கிப் போராடினால், மக்களைக் கொள்ளையடித்து பல நூறுகோடிகள் சொத்து சேர்த்து வைத்துவிட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் தங்களது ஆன்மீக அரிப்பை தீர்த்துக் கொள்ள அம்மணச் சாமியார்களின் பாதாரவிந்தங்களில் சரணடையும் முட்டாள் கூட்டம், போராடும் மக்களின் கோரிக்கையில் இருக்கும் ரத்தமும், வியர்வையும் கலந்த நியாயத்தைப் பார்த்து முகம் சுளிக்கின்றது.
வேங்கை மகனின் கிழடு தட்டிய கபாலத்திற்குள் இருக்கும் மூளைக்குள் பாசிச மிருகம் ஒன்று உட்கார்ந்து கொண்டு, அவனை கடித்துக் குதறி சித்திரவதை செய்து கொண்டிருக்கின்றது. தனது கபாலத்துக்குள் பல அம்மணச் சாமியார்கள் பல ஆண்டுகளாக இறக்கி வைத்த ஆன்மீக கொழுப்புகள் எங்கே உருகி விடுமோ என்ற அச்சத்தினால்தான், இத்தனை நாளாய் வெய்யில் பக்கம் தலைகாட்டாமல் ஏசி அறைகளில் பாதுகாப்பாய் இருந்தான் அந்த வேங்கை மகன். ஆனால் இன்று அம்மணச் சாமியார்களின் கூட்டமைப்பின் ஆணைக்கிணங்க முதல் முறையாக வெய்யிலில் தனது கபாலத்தை காட்டியிருக்கின்றான். ஆனால் தூத்துக்குடி ஏற்கெனவே மக்களின் போபத்தாலும், தூப்பாக்கிகளில் இருந்து வெளியேறிய தோட்டாக்கள் ஏற்படுத்திய வெம்மையாலும் தகித்துக் கொண்டிருக்க, வேங்கை மகனின் கபாலத்தில் இருந்து தவிர்க்க முடியாமல் இன்று ஆன்மீகக் கொழுப்பு வெளியேறி தூத்துக்குடியைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்தையே நாறடித்துக் கொண்டு இருக்கின்றது.
இழவு வீட்டிற்குப் போன வேங்கை மகனை வழி நெடுக உற்சாகமாக வரவேற்று வாழ்த்துப்பா பாடி இருக்கின்றன வேங்கை மகனின் மலத்தில் இருந்து உருவான புழுக்கள். கண்ணீரும், கதறலும் இன்னும் அடங்காமல் மருத்துவமனை எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, அந்தப் புழுக்கள் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்து மகிழ்ந்திருக்கின்றன. மருத்துவமனை முழுவதும் விஷக்கிருமிகள் ஆக்கிரமித்து பிழைப்புவாதம், அற்பவாதம், அடிமைத்தனம் போன்ற தொற்று நோய்களை பரப்பு முயன்றிருக்கின்றன.
கேமராவுக்கு முன்னால் ஒத்தயில நிக்கும் வேங்கை மகன், தூத்துக்குடி மருத்துவமனைக்கு ஒத்தையில் வந்து கருத்து சொல்லியிருந்தால், வேங்கை மகனின் கபாலத்துக்குள் உட்கார்ந்துகொண்டு அவனை இயக்கிக் கொண்டிருக்கும் காவிப்பேய்களை மக்கள் ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வீதியில் வீசி இருப்பார்கள். வேங்கை மகனுக்கோ, இல்லை அவனின் சிந்தனையைத் தீர்மானிக்கும் அம்மணச் சாமியார்களுக்கோ காவல்துறையைப் பற்றியோ, நீதிமன்றத்தைப் பற்றியோ, பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக அரசு மேற்கொள்ளும் அரசு பயங்கரவாதத்தைப் பற்றியோ எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். சாமியார்கள் அனைவருமே பெரும் கோடீஸ்வர்களுக்கு கருப்புப் பணத்தை மாற்றித் தரும் தரகர்களாகவும், ஆன்மீக சேவை என்ற பெயரில் அரசியல்வாதிகளுக்குக் கூட்டிக் கொடுப்பவர்களாகவும் இருக்கும்போது, அவர்களிடம் ஆன்மீக அரசியலை கற்றுக்கொண்ட வேங்கை மகனுக்கு மண்டையில் புரட்சிகர சிந்தனையா இருக்கும் முடியும்?
வேங்கை மகன் பேட்டி கொடுக்கும் போது தனது நரைத்துப் போன தாடியையும், இன்னும் தலையில் விழாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் நாலு மயிரையும் தடவிக்கொண்டு ஒரு ஞானியைப்போல பேசும்போது, கிழித்துக்கொண்டு அலையும் ஒரு பையத்தியக்காரனைவிட, தான் படு பயங்கரமாக உளறுவதை அறிவதில்லை. தன்னை ஞானியாக நினைப்பவர்களுக்கு இருக்கும் பெரிய குறைபாடு இதுதான். அவர்களின் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் அச்சம், தானாகவே எதிரிகளை உருவாக்கி அவர்களுக்கு வடிவமும் கொடுத்துக் கொள்கின்றது. அவர்களை தனக்கு வேண்டியபடி தனது மனதில் உலாவவிட்டது போதாமல், தன் மனதில் இருக்கும் அந்தக் கற்பனை எதிரியை சமூகத்திலும் உலாவவிட, அச்சப்பட்ட கோழையின் மனம் விரும்புகின்றது. நிஜ எதிரிக்கு பெயரை வைத்து அவர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்ட முடியும். ஆனால் போலியாக தன் மூளையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் எதிரியை எப்படி சமூகத்திற்கு நிரூபிப்பது?
அதற்குத்தான் அவர்களுக்கு இரட்சகன், தேவதூதன், அவதாரம் போன்ற பட்டங்கள் தேவைப்படுகின்றன. குறைந்தபட்சம் தன்னை அப்படி கருதிக் கொள்ளவாவது அந்தக் கோழையின் மனம் விரும்புகின்றது. அப்படித்தான் அது தனது மனதில் தான் உருவாக்கி வைத்திருக்கும் அந்தத் தீவிரவாதியையும், பயங்கரவாதியையும், விஷக் கிருமிகளையும் மனதில் இருந்து இறக்கி பூமியில் உலாவவிடுகின்றது. ஆனால் நிஜ உலகம் எல்லா சமயங்களிலும் இரட்சகர்கள், தேவதூதுவர்கள், அவதாரங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. அவை கேட்கின்றன எங்கே தீவிரவாதிகள்? எங்கே பயங்கரவாதிகள்? எங்கே விஷக்கிருமிகள்? இதனால் கோழையின் கை, கால்கள் கோபத்தில் நடுங்குகின்றன, தன்னைக் கேள்வி கேட்ட சாமானிய மனிதனுக்கு கோழை சாபம் விடுகின்றான். இப்படி கேள்வி கேட்டால் இந்த உலகம் அழிந்து சீக்கிரம் சுடுகாடாக மாறிவிடும் என்று. ஆனாலும் கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, எங்கே தீவிரவாதிகள்? எங்கே பயங்கரவாதிகள்? எங்கே விஷக்கிருமிகள்?
வேங்கை மகனுக்கு முதல்வர் ஆவதற்கு மக்கள் துணை மட்டுமல்ல, அதிகார வர்க்கத்தின் துணையும், பெருமுதலாளிகளின் துணையும் நிச்சயம் தேவை என்பது நன்றாகத் தெரியும். அதனால்தான் அவன் வழியப் போய் காவல்துறையின் காலை நக்குகின்றான். தான் ஆட்சிக்கு வந்தால் பெருமுதலாளிகள் இங்கே வந்து நினைத்த மாதிரி கொட்டம் அடிக்கலாம் என மறைமுகமாக அல்ல, பட்டவர்த்தனமாகவே அறிவிக்கின்றான். அவனுக்கு கலெக்டர் அலுவலகத்தின் கண்ணாடிகளும் , காவல்துறை வாகனங்களும் மனித உயிர்களைவிட மதிப்பானவை. கல்லை வழிபடும் ஒரு தீவிர பக்தனுக்கு எப்படி மனிதர்களைவிட கல் மேலான உயிர்ப்பான பொருளாகத் தெரிகின்றதோ, அதே போல அரசை வழிபடும் வேங்கை மகனுக்கு கண்ணாடிகளும், வாகனங்களும் மதிக்கப்பட வேண்டிய உயிர்ப்பான பொருளாகத் தெரிகின்றது. அதைவிட காக்கிச் சட்டைக்குள் திணிக்கப்பட்ட உடல்களை இந்த உலகை காக்க வந்த கடவுளாக நினைத்து, மக்கள் எல்லோரும் காலில் விழுந்து வணங்க வேண்டும் என வேங்கை மகன் விரும்புகின்றான்.
போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை என்பது வேங்கை மகன்களுக்குத் தெரிவதில்லை. எதிர்மறைகளின் போராட்டம்தான் வளர்ச்சியை உந்தித் தள்ளுகின்றது என்ற உண்மை வேங்கை மகனின் ஆன்மீக மண்டைக்கு ஒருபோதும் உறைக்கப் போவதில்லை. தனக்குக் கிடைக்கும் சுத்தமான தண்ணீரும், ஆரோக்கியமான உணவும், இருக்க ஒரு சுகாதாரமான சொந்த வீடும், மலம் கழிக்க கழிப்பறையும், படிக்க நல்ல தரமான பள்ளியும், அணிந்து கொள்ள நல்ல ஆடையும், இங்கே எல்லோருக்கும் கிடைத்துவிட்டது என வேங்கை மகன் நினைத்துக் கொண்டிருக்கின்றான். நீதிமன்றம் போனால் நீதி கிடைத்துவிடும் என்று பால்வாடி படிக்கும் குழந்தையைப் போல பிதற்றுகின்றான். நீதியையும், நீதிபதிகளையும் காப்பாற்றவே இங்கே ஒரு பெரும் போராட்டம் நடந்து கொண்டிருப்பதை வேற்றுகிரகவாசியைப்போல அறியாமல் இருக்கின்றான்.
'உலகம் சுற்றும் வாலிபன்' துப்பாக்கிச்சூடு பற்றி வாய்திறந்து பேசாதது, தமிழக மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை உணர்ந்துதான், தன்னுடைய நண்பரான வேங்கை மகனை, தன்னுடைய மனசாட்சியாய் இருந்து பேசும்படி பணித்திருக்கின்றார். அதனால் வேங்கை மகனின் உளறல்களை நாம் உலகம் சுற்றும் வாலிபனின் உளறலாக எடுத்துக் கொள்வோம். பாலியல ஜல்சா கட்சியின் தமிழகக் கிளை, வேங்கை மகனின் உளறல்களை உச்சிமுகர்ந்து வரவேற்றிருப்பதே இதற்கு சாட்சி. வேங்கைமகன் முத்திப்போய் நிக்கிறான். தமிழக மக்களே! உங்களை கடிக்க வருவதற்கு முன், விரட்டுவதற்கான வேலையைப் பாருங்கள்!
- செ.கார்கி