பொதுவுடைமை இயக்கம் சந்தித்த நெருக்கடிகளும் பொதுவுடைமை வளர்ச்சியும் :

1929ஆம் ஆண்டிலிருந்து 1934ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இயந்திரமயமாக்குவதற்கு எதிராகவும் அரசு நடவடிக்கைகளை எதிர்த்தும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் வேகமாகப் பரவின. ஏகாதிபத்திய அரசு வெறிபிடித்துத் தாக்கியது.

தடியடிப் பிரயோகங்களும், துப்பாக்கிச்சூடுகளும் அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டன. தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின்றிக் காவலில் வைக்கப் பட்டனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக 1934 சூலை 23ஆம் நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  சட்டவிரோத மென அறிவிக்கப்பட்டு, அதனுடன் தொடர்பு கொண்டிருந்த வெகுஜன அமைப்புகளும் தடைசெய்யப்பட்டன.

இது வரை ‘சட்டபூர்வமற்ற’ வனவாசத்தை அனுபவித்த கம்யூனிஸ்ட் கட்சி, இப்பொழுது, ‘சட்டபூர்வ’ வனவாசத் தினை அனுபவிக்கத் தொடங்கியது.

1929-30  ஆம் ஆண்டுகளில் உலக முதலாளித்துவம் ஒரு ‘மாபெரும் பொருளாதார மந்தத்தில்’ சிக்கித் தவித் துக் கொண்டிருந்தது. ஆனால் 1929ஆம் ஆண்டில் தான் சோவியத் நாட்டில் முதல் அய்ந்தாண்டுத் திட்டம் துவக்கப்பட்டது.

முதல் அய்ந்தாண்டுத் திட்டத்திலேயே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்தார்கள்; வறுமையைப் போக்கினார்கள்; ஏழை எளிய மக்களின் வாட்டத்தை நீக்கினார்கள். அனைத்துக்கும் மேலாகத் ‘திட்டமிட்ட பொருளாதாரம்’ எனும் புதிய சிந்தனையை, செயல்முறையை உலகிற்கு வழங்கினார்கள்.

இவற்றையெல்லாம் பார்த்த காங்கிரசுக் கட்சியின் இளைஞர்கள் சோசலிச இலட்சியத்தின்பாலும், மார்க் சியச் சிந்தனையின் மீதும் மேலும் மேலும்  கவரப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் மார்க்சியவாதிகள் அல்லர். எனினும் அன்றைய தேசியத் தலைவர் களின் வழிகாட்டுதலில் ஏதோ ஓர் அடிப்படையான குறை இருக்கிறது என உணர்ந்திருந்ததுடன், விடுதலைப் போராட்டத்தை இன்னும் தீவிரமான இலட்சிய நோக்குடையதாய் மாற்ற வேண்டுமென்று துடித்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் 1934இல் பம்பாய் மாகாணத்தில் எம்.ஆர். மசானி போன்றோரின்,  ‘காங்கிரசு சோசலிஸ்ட் குழு’ உருவானது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில், ‘பீகார் சோசலிஸ்டு கட்சி’ உதயமானது. கேரளத்தில், குறிப்பாகக் கள்ளிக்கோட்டையில்   கிருஷ்ணப் பிள்ளை, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு  போன்றோர்  சோசலிச  சிந்தனைகளைத்  தாங்கி நின்றனர்.

காங்கிரஸ் -சோசலிஸ்டுக் கட்சி பிறந்த காலத்திலேயே அதில் சில கம்யூனிஸ்டுகளின் பங்கும் இருந்திருக்கிறது என்பது தெரியவரும். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வார்த்தைகளில், “காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சி என்பது எந்தவொரு வர்க்கத்தின் கட்சியல்ல. இது தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி மட்டுமல்ல. அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகளையும் தன்னுடைய மேடையிலே இணைக்கின்ற ஓர் அரசியல் கட்சிதான் இது” என்பதாகும்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது மாநாட்டினைத் தொடர்ந்து (1935 சூலை 25 முதல் ஆகஸ்ட் 21 வரை) இங்கிலாந்து கம்யூனிஸ்ட் தலைவர்களாகிய ரஜினிபாமி தத்தும், பென் பிராட்லேயும் இந்திய நிலைமைகள் குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.

இவ்வறிக்கையில்   ஒரு குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படை யில் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி கட்டப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் காங்கிரசு சோசலிஸ்ட்  கட்சி பற்றியும் புதிய பார்வை தரப்பட்டிருந்தது. காங்கிரஸ் சோசலிஸ்ட்  கட்சி பற்றிய தவறான அணுகுமுறையை - எதிர்மறைப் பார்வையை மாற்றக் கோரியது.

மேலும் அனைவருக்கும் வாக்குரிமை என்னும் அடிப்படையில் அரசியல்   நிர்ணயசபை என்ற முழக்கத்தை முன்னெடுக்குமாறு  இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு அது அறைகூவல் விடுத்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவும் இந்த ஆய்வறிக்கையை   விவாதித்து, அதன் ஆலோசனைகளை ஏற்றது.  காங்கிரசு  சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கிடையே   ஏற்பட்ட இந்த ஒற்றுமை இந்தியக் கம்யூனிச இயக்கத்திற்கும், இந்திய அரசியலுக்கும் ஒரு  புதிய பரிமாணத்தைக் கொடுத்தது.

இந்தியக் கம்யூனிச இயக்கத்திலும் கம்யூனிச அகிலத்திலும் இந்திய அரசியல் குறித்து இப்படிப் புதிய சிந்தனைகள் தோன்றிக் கொண்டிருந்த வேளையில், ஆங்கில ஏகாதிபத்தியம் கம்யூனிஸ்டுகளைத் தேடித் தேடி வேட்டையாடியது. அச்சமயத்தில் பம்பாயிலிருந்த கம்யூனிஸ்டுகளிடையே கடுமையான கருத்து வேறு பாடுகள் இருந்தன.

அவற்றைத் தீர்க்க ஒருபுறம் முயற்சிகள்   நடந்துகொண்டிருந்தன. கட்சியின் அகில இந்திய மய்யம் பம்பாயிலிருந்து லக்னோவுக்கு மாற்றப்பட்டது. இக்பால் சிங்கிற்குப்  பதிலாக பி.சி. ஜோஷி  பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

1936 ஏப்ரலில் லக்னோவில் கூடிய தேசியக் காங்கிரஸ் மாநாடு ஜவகர்லால் நேரு தலைமையில்  நடைபெற்றது. தனது தலைமை உரையில் பாசிச எதிர்ப்பு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அமைப்புகளைக் கூட்டாக இணைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நேரு கொண்டுவந்தார். ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது.

இந்த லக்னோ மாநாட்டின்போது தான் அகில இந்திய விவசாயிகள் சங்கம் (All India Kisan Sabha ) உருவானது. அங்கே நடைபெற்ற அதன் முதல் மாநாடு ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிக்குத் தனது ஆதரவைத்  தெரிவித்தது.

தேசிய விடுதலை இயக்கத்தில் பங்குகொண்டிருந்த சுவாமி சகஜானந்த சரஸ்வதி  1929இல் பீகாரில் விசாயிகள் சங்கத்தை உருவாக்கியிருந்தார். வங்கா ளத்தில் முசாபர்  அகமதுவும் பங்கிம் முகர்ஜியும் விவ சாயிகள் சங்கத்தை ஏற்படுத்தினர். அய்க்கிய மாகா ணத்தில் நரேந்திர தேவாவும், குசராத்தில் இந்துலால் யாக்னிக்கும் இப்பணியினை  ஆற்றியிருந்தனர்.

என்.ஜி. ரங்கா ஆந்திரத்தில் விவசாய இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களுள் ஒருவராயிருந்தார். இவர் களின் முன்முயற்சியால் உருவானதுதான் அகில இந்திய விவசாயிகள் சங்கம். இந்த அமைப்பு மாநாட்டில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடும்  கலந்து கொண்டார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடும் நடைபெற்றது. மேலும் அகில இந்திய மாணவர் சங்கம் உருவானதும் அப்போதுதான். இந்தியக் கம்யூனிஸ்ட்கள் பல துறை களிலும் இறங்கிப் பணியாற்றத் தொடங்கிவிட்டதை இந்நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.

தத்-பிராட்லா ஆய்வு அறிக்கை தீவிரமாக ஆராயப் பட்டு, கம்யூனிஸ்டுகள் தேசியக் காங்கிரசில் சேருவது என்று முடிவு எடுக்கப்பட்டது. காங்கிரசு சோசலிஸ்ட்  கட்சி  பற்றியும்  மறுமதிப்பீடு செய்யப்பட்டது.

பெரும்பாலான கம்யூனிஸ்டுகள் தனிப்பட்ட முறையில் காங்கிரசில் இணைந்தனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது; இயங்கியது; கலைக்கப்படவில்லை. கட்சி தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், மக்களை அணுகவும், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளையும், சோசலிசச் சிந்தனையாளர் களையும் ஒன்றுதிரட்டவும் இவ்வாறு காங்கிரசு - சோசலிஸ்ட் கட்சியில்  இணைந்து பணியாற்றியது கம்யூனிஸ்டுகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

அன்றைய சென்னை மாகாணத்தில் கட்சிக்குப் புதிய நபர்களைக் கொண்டு வந்ததில் அமீர் ஹைதர் கானுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. சுந்தரய்யா வோடு தொடர்ந்து தென்னகத்தில் கட்சியை  வளர்த்ததில் எஸ்.வி. காட்டேவுக்குப் பெரும்பங்கு உண்டு. பி. ராம மூர்த்தி, பி. சீனிவாசராவ், ப. ஜீவானந்தம் ஆகியோ ரோடு சுந்தரய்யாவும், காட்டேயும் தொடர்பு கொண்டனர்.

இதற்கிடையில், சுயமரியாதைச் சமதர்மக் கட்சியை ஜீவானந்தம், திருச்சியில் 1936 நவம்பரில்  நடந்த மாநாட்டில், காங்கிரசு-சோசலிஸ்ட் கட்சியுடன் இணைத்து விட்டார். சோசலிஸ்டுகளாக விளங்கிய பி. ராமமூர்த்தி, சீனிவாசராவ், ஜீவானந்தம் ஆகியோர் இக்காலத்தில் தான் கம்யூனிஸ்டுகளாகப் பரிணமித்தனர்.

1936 இல் இவர்களோடு கே.முருகேசன், அச்சகத் தொழிலாளி மாணிக்கம் ஆகியோர் சேர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை ஒன்றைச் சென்னையில் உருவாக்கினர்.

- தொடரும்...

Pin It