பாவலர் வையவனுடைய அண்மைக் காலக் கவிதைகள் ஒரு தொகுதியாகச் “சதுரங்கக் காய்கள்” என்னும் பெயரில் வெளிவந்துள்ளது(2015). நெசவுக் குடில் வெளியீடு. நான்காவது நெசவு. பயிற்சியும் பட்டறிவும் பாங்குற வெளிப்பட்டுள்ளது.

வையவனுக்குத் தமிழன் தன் உடுக்கையை இழப்பது பற்றியும், அது பறிபோவது பற்றியும் தீராத கவலை. இடுக்கண் களைய எப்போதும் முன் நிற்பவர்.

படையலில், தன்னுடைய தாயும் தந்தையும் தன்னை எழுதி, வெளியிட்டு அழகு பார்த்துக்கொண்டி ருப்பவர்கள் என்னும் குறிப்புதான் எத்துணை அழகு! என் கவிதைக் காவலர் என எழுதி, எனக்குக் கலை வழங்கியுள்ளார். உண்மையில், நான் வையவன் கவிதைக்கு ஆர்வலர். வை என்றால் கூர்மை. வையவன் கூர்மையானவரும் கூட.

அய்யா வே.ஆனைமுத்து, கவிஞர் தமிழேந்தி அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.

முப்பத்தெட்டு கவிதைகள். அய்யா ஆனைமுத்து வைப் போலவே ஒரே மூச்சில் ஐந்து மணி நேரத்தில், நானும் படித்து முடித்தேன். பொறுப்புள்ள பாவலரைப் பொருட்படுத்தி அவர் பாக்களைப் படித்துப் பயன்பெற எத்தனை மணிகள் ஒதுக்கினாலும் தகும்.

வையவன் வரம், பேறு போன்ற சொற்களைக் கையாண்டுள்ளார். ஆனாலும் இவருடைய, இடி முழக்கத்தின் அடிமுழக்கம் எதையும் கேள்விக்கு உட்படுத்துவதே. சிறு தெய்வங்களையும், பெரு தெய்வங்களையும் பற்றிப் பேசும்போது, இறையன்பர் களை, அறையில் அடைந்து கிடக்கும் கல்லுச் சாமி களுக்கு அர்ச்சனை செய்யும் அய்யரின் மூஞ்சிகளைத் தவிர வேறென்ன தெரியப் போகிறது என்று கேட்கிறார். நன்றாகக் கேட்கிறார்!

பாவலருக்குப் போலிகளாய் வலம்வரும் பேச்சா ளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர் கள்......என்போர் மீது கோபம், கடுங்கோபம். அஃறிணை உயிர்கள் தவறு செய்யத் தெரியாதனவாய் இருக்கை யில், உயர்திணை உயிர்கள் ஊழலில் திளைக்கலாமா? என்பதே பாவலரின் கேள்வி.

பாவலர் வையவன், உலகம், உலகமயம் என வணிகமயமாகி வருவதை, நெருங்கி உணர்கிறார். நெஞ்சம் குலைகிறார்!

கல்வி, வேலைக்கா? வாழ்க்கைக்கா? தனியார் பல்கலைக் கழகங்களா? கடைகளா? வளாகத் தேர்வு என்னும் வசீகரம், ஒரு மாணவணை வாழ்க்கைக்கு ஆளாக்காமல் வாக்களிக்க மட்டுமா ஆளாக்குவது? இலவசங்களின் நோக்கும் போக்கும் வாக்கு வங்கியே ஒழிய...... வளமார் அரசியல் கேடர்களின் கூலிப் படையாயினர் வாக்காளப் பெருமக்கள்.

இந்தக் கொடுமைகளின் புழுக்கத்திலிருந்து வெளிவருவது என்பது, வாரிசுகளுக்காக வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்தவர்களைப் பற்றி சற்றுச் சிந்திப்பதாக இருக்கிறது. வையவன், தந்தை பெரியார், பச்சைத் தமிழர்  காமராசர், கருப்பினக் காவலர் மண்டேலா, பெரியார்தாசன் (அப்துல்லா) ஆகியோரை நினைவூட்டுகிறார்.

ஏர் என்பது நிலப்பெண்ணுக்குத் தலைவாரிவிடும் ஒற்றைப்பல் சீப்பு. காடுகளின் மொழி அடர்த்தியானது. எல்லாரையும் தவிக்கவிட்டுத் தலைமறிவாயிருக்கிறது தண்ணீர்.......இப்படி எல்லாம் நயமாகச் சொல்லத் தெரிந்தவர்தான் வையவன். ஆனால், அவருக்கு இவற்றுக்கு எல்லாம் நேரம் இல்லை.

வீட்டு விட்டத்தின் மூலைகளில் கூடுகட்டிக் குடியிருந்த சிட்டுக் குருவிகள் நினைவு வட்டத்தில் சிறகடிப்பனவாகி விட்டனவே! மொழிமானம் என்பதெல்லாம்  மொழி வெறியாம். மொழி என்பது வெறும் ஊடகமாம்

கற்பும், நட்பும், சான்றாண்மையும் விலைபொருள்கள் ஆயின. நண்பர்களாய்க் கூடித் தொழில் தொடங்கியவர் கள் பகைவர்களாய்ப் பிரிகிறார்கள். கடன் கேட்கும்போது இருந்த முகம், திருப்பிக் கொடுக்கும்போது இல்லை. பரவாயில்லை, பாவலருக்குத் திருப்பிக் கொடுத்திருக் கிறார்கள்!

மனிதமயமாக வேண்டிய நட்புறவு வணிக மயமாகிப் போனதால் உலகமயமானது வஞ்சமும் வயிற்றெரிச் சலும். அரசனைக் காப்பாற்றும் இந்த ஆட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவது குறித்த அக்கறையோ கவலையோ அறவே இல்லை. அவற்றுக்குத் (சதுரங்கக் காய்களுக்கு) தெரிந்ததெல்லாம் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்வதுதான்.

இத்தனைக்கும் இடையில் மண்ணில் புரட்சி செய்யும் மாமனிதர்கள் நமக்கு வேண்டும்.

அச்சுறுத்தும் வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள், வாசிப்பால் எவ்வளவோ வெளிச்சமடைகின்றன. பாவலர் வையவன், தன் எழுத்துகளைப் படிப்பவர்களை ஏமாற்றவில்லை. இந்தத் தொகுதியின் பக்கங்கள் இந்தப் பணியைத்தான் செய்கின்றன.

அவர்களே...! அவர்களே...! என்று ஒரு நீண்ட பா. விழுந்து விழுந்து சிரிக்கலாம்! விலா நோகச் சிரிக்கலாம்! வேதனையுடன் சிரிக்கலாம்!

Pin It