அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குப் பகவத்கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல மதங்களைச் சேர்ந்தவர்களும், கடவுள் மறுப்பாளர்களும் படிக்கும் கல்வி நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதனையைப் புகுத்துவது அநீதியாகும். மற்றும் இது அணு அளவுகூடத் தேவையற்றதாகும்.

anna university 600ஆனால் பகவத் கீதையையும், மற்ற ஆரிய இலக்கியங்களையும் புகுத்துவதை வெறுமனே மதச்சார்பின்மைக்கு எதிரானதாக மட்டும் பார்க்க முடியாது. மனிதனை மனிதன் பிறப்பால் தாழ்வுபடுத்தி, பெண்ணடிமைத்தனத்தை நிலைநிறுத்தி, பார்ப்பனர்களை மட்டும் உயர்த்தும் ஆதிக்கச் சித்தாந்தத்தைக் கருவாகக் கொண்டுள்ள ஒரு நூல் மதச்சார்பின்மைக்கு மட்டும் எதிரானது அன்று. இது மக்களுக்கு எதிரானது. மனிதநேயத்திற்கு எதிரானது.

அறிவியல் படிக்கும் மாணவர்களுக்குத் தத்துவவியல் என்ற பெயரில் அறிவியலுக்கு எதிரான தத்துவங்களான பிறப்பால் உயர்வு தாழ்வு, ஆன்மா, சரணாகதி, நாயக வழிபாடு, மறுபிறவி, எதையும் கேள்விக்குட்படுத்தக் கூடாது என்னும் மனநிலை போன்றவற்றைப் புகுத்துவதால் இது அறிவியலுக்கு எதிரானது.

“சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” என்று கீதையில் கிருஷ்ணன் மூலமாகச் சொல்லும் பார்ப்பனர்கள், வர்ணாசிரம தர்மத்தை இங்கு நிலைநிறுத்துவதில் காலந்தோறும் தொடர் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அறிவியலும் தொழில்நுட்பமும் அண்டத்தையே அளந்து மதங்களின் மடமைத்தனத்தை வெளிப்படுத்தி வரும் இந்தக் காலகட்டத்திலும் கூட வர்ணாசிரம தர்மம் நவீன முறையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உலகம் தொழில்நுட்ப யுகத்திற்கு மாறியது. தொழிலாளர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த வேலையைச் செய்கிறார்கள். அந்த அளவில்தான் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்னும் அனைத்து நிறுவனங்களிலும் நிர்வாகத் தலைமை, மேலாண்மை, நிதி மேலாண்மை, கொள்கை உருவாக்கம் என அனைத்து அதிகார மட்டங்களிலும் பார்ப்பனர்களே இருக்கிறார்கள். சூத்திரர்கள் அனைவரும் தொழில்நுட்பத்தில் வல்லுநர்கள் தான். ஆனால் சூத்திரக் கயிறு இன்னும் பார்ப்பனர்களிடம்தான் இருக்கிறது.

சமூக நீதிப் போராட்டங்களால் மக்கள் கல்வி கற்றார்கள். அரசு வேலைகளில் அவர்கள் உரிமை பெற்றார்கள். இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம்தான் என்றாலும் மக்களின் மனங்களில் இருக்கும் வர்ணாசிரம தர்மம் இன்னும் மாறவில்லை. ஒரு பார்ப்பன அதிகாரிக்குக் கொடுக்கும் மரியாதையை மற்ற சமூகத்தைச் சார்ந்த அதிகாரிகளுக்குக் கொடுப்பதில்லை. பெண்ணின் தலைமையை ஏற்க எந்த ஆணும் விரும்புவதில்லை. ஏன், பெண்களே விரும்புவதில்லை. அதுதான் ஆணாதிக்கம். நாம் தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்திருக்கிறோம். ஆனால் நாம் செய்யும் வேலைகள் எல்லாம் சூத்திரர்களுக்கு ஒதுக்கப்பட்டதுதான்.

இந்த நிலையை மாற்ற நாம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்து, பிறப்பால் அனைவரும் சமமே; ஆட்சி, அதிகாரம், அறிவு என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது அன்று, அது அனைவருக்கும் உரியது என்பதை மக்களுக்கு விளங்க வைக்கப் போராடிவருகிறோம். அவர்கள், தங்கள் இனத்தின் ஆதிக்கத்தை அப்படியே தக்க வைக்க பகவத் கீதையைப் புகுத்துகிறார்கள்.

மேலும் இது போன்ற மதம் சார்ந்த நூல்கள் அடிப்படையில் எந்த ஒன்றையும் ஆராயாமல் நம்பச் சொல்பவை. ஆனால் அறிவியலோ அத்தனையையும் ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் ஏற்றுக் கொள்ளும். எனவே பொறியியல் படிக்கும் மாணவர்கள் மத நூல்களைப் படித்தால் மந்த நிலையில் தான் இருப்பார்கள். அவர்களால் புதுமையைச் சிந்திக்க முடியாது.

இதனால் அவர்களுக்கும் பயனில்லை. சமூகத்திற்கும் பயனில்லை. ஏனெனில் இத்தனை நூற்றாண்டுகளில் அனைத்து அறிவியல் முன்னேற்றங்களும் மேற்கத்திய நாடுகளில் இருந்துதான் வந்திருக்கிறது. தங்களை மேல்சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் தந்ததில்லை. பகவத் கீதை படிப்பவர்கள் ஏன் எந்தப் பயனுள்ள அறிவியல் தொழில்நுட்பத்தையும் இவ்வுலகுக்கு வழங்கவில்லை?

பகவத் கீதையால் பயன் கிடைக்கவில்லை. ஆனால் பயங்கரவாதம் கிடைத்திருக்கிறது. “கொலை நூல்” என்று ஆன்மீகவாதிகளாலே கூட வர்ணிக்கப்படும் இந்நூல் மாணவர்களிடம் வன்முறையையே தூண்டும். அவர்கள் தொழில்நுட்பத்தை அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்த அவர்களைப் பழக்கும். உலக அமைதிக்குக் கேடு விளைவிக்கும். எனவே இது உலக அமைதிக்கு எதிரானது.

பொறியியல் படிக்கும் மாணவர்கப் அறிவியல் மனப்பான்மையோடு சிந்திக்க வேண்டியவர்கள். அவர்கள் மேல் அறியாமைச் சகதியைப் பூசாதீர்கள். அவர்களுக்குத் தத்துவமும் தேவைதான். ஆனால் அவை மதங்கள் சொல்லும் உளறல் தத்துவங்கள் அல்ல. “கடவுளை மற மனிதனை நினை” என்னும் பெரியாரின் உலகத் தத்துவமாகும்.

Pin It