இந்தியாவில் அரசியல்: மேல்சாதியினரின் ஆதிக்க ஆட்சி நாடாக, எல்லோரும் ஆக்குகிறார்கள்
1980ஆம் ஆண்டை மூன்றாவது தொழிற்புரட்சித் தொடக்கக் காலம் என்று கொள்கிறார்கள். அப்போது கணினி இல்லை; ஒளிப்படக் கருவிஇல்லை கைப்பேசி இல்லை. இவையெல்லாம் வந்த கையோடு, உலகமே நெருங்கிவந்துவிட்டது; ஒவ்வொரு நாடும் - ஊரும் பக்கத்தில் பக்கத்தில் வந்துவிட்டது என்று பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள்.
இதன் இன்னொரு பெயர்தான் உலகமயம். இதனை அடையும்திறம்பட்ட வழிகள் தனியார் மயம், தாராளமயம் என்பவை.
இவற்றின் செயல் வடிவங்கள் யாவை?
மூலப் பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களும் நாடுகளிடையே தடையின்றிப் பரிமாற்றப்படுதல்; ஒரு நாட்டுக்கான பணிகளை மற்ற நாடுகளில் செய்து பெறல்; ஒரு நாட்டின் முதலீட்டை இன்னொரு நாட்டில் கொண்டு போய் தொழில் செய்தல்; ஒரு நாட்டிலிருந்து தொழில்நுட்ப அறிவு, புதிய கருத்துகள், செய்திகள் இவற்றை மற்றும் உள்ள நாடுகளுக்கு விற்றல் முதலானவை.
கடந்த இருபது ஆண்டுகளில், உலக வளர்ந்த நாடுகளிலிருந்து உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு 5000 கோடி டாலர் முதல் 8000 கோடி டாலர்கள் வரை அளிக்கப்பட்டன. அதே காலக்கட்டத்தில் வளரும் ஏழை நாடுகளிலிருந்து வளர்ந்த செல்வ நாடுகளுக்கு ஆண்டுதோறும் கணக்கில் வராத தொகையாக, 50,000 கோடி டாலர் முதல் 80,000 கோடி டாலர் வரை கிடைத்திருக்கிறது.
அதாவது வளர்ந்த செல்வநாடுகள் உதவியாக அளித்த ஒவ்வொரு டாலருக்கும். ஆண்டுதோறும், 10 டாலரைக் கணக்கில் வராத பணமாகக் கொள்ளையடித்திருக்கின்றன.
இதன்விளைவு என்ன? நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு, தனிமனித வருமானத்தில் உயர்வு. தாழ்வு, செல்வர்களின் - செல்வ நாடுகளின் வருமான உயர்வும் மூலதனக் குவிப்பும் நடைபெறுகின்றன. வளர்ந்த நாடுகளின் மூலதனம் நாடுதாண்டிப் போய் அந்தந்த ஏழைநாட்டின் தொழிலாளர்களைக் குத்தகைக் கூலிக்காரர்களாக - எந்த உரிமையும் அற்றவர்களாக ஆக்கி, அவர்கள் மூலம் அந்த நாட்டைச் சுரண்ட எத்தனித்தன.
உலகில் வளரும் ஏழை நாடுகள் 50க்குமேல் உள்ளன.
இங்கெல்லாம் உள்ள இயற்கை வளங்கள், கனிம வளங்களை, அந்தந்த நாட்டு அரசின் துணைகொண்டு - அரசியல்வாதிகளின் துணைகொண்டு - அரசு உயர்அதிகாரிகளின் துணைகொண்டு - செய்தி ஏடுகள், தொலைக்காட்சிகளின் துணைகொண்டு வளர்ந்த செல்வநாடுகள் இந்தியாவைக் கொள்ளையடிக்கின்றன.
மக்களை - மூளை உழைப்பாளிகளை - உடலுழைப்பாளிகளை வெறும் பண்டங்களைப் போல உருவாக்குவதை - அவர்களின் பாரம்பரிய இருப்பிட உரிமையை-மனித உரிமையை-இணைந்து சங்கம் வைத்துப் போராடுகிற உரிமையை மறுத்து, அந்தந்த நாட்டு அரசின் - அதிகாரவர்க்கத்தின் - காவல்துறையின் - நீதிமன்றத்தின் துணையை விலைக்கு வாங்கிக் கொண்டு அவர்களை வெறும் கூலிக்காரர்களாக ஆக்கிவிட்டன.
இந்தியாவில் 2001 மக்கள் தொகை 108.2 கோடி. இதில் 13 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 41 விழுக்காட்டினர்.
மொத்த மக்களில் 63.5 விழுக்காட்டினர் உழைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.
1983 முதல் 2000 வரை இந்தியாவில் சராசரியாக வேலை கிடைக்காதோர் விழுக்காடு 7.20 ஆக இருந்தது. 2010 நவம்பரில் இது 9.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வேளாண்மைக்கான பாசன வசதிகள், மின்வசதி, வேளாண் கடன் வசதிகள் பெருக்கப்படவில்லை. வேளாண் நிலங்கள் - கனிமவள நிலங்கள், டாட்டா, அம்பானி, ரிலையன்ஸ், வேதாந்தம் முதலான இந்தியத் தரகு முதலாளிகளுக்கும்; அமெரிக்க, இரஷ்ய, இங்கிலாந்து, பிரான்சு முதலாளிகளுக்கும் விற்கப்படுகின்றன. வேளாண் நில உரிமையாளர்களுக்குச் சந்தை விலை தரப்படவில்லை; அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கும் வேலை தரப்படவில்லை. இதன்விளைவாகக் கடன் சுமை தாளாத உழவர்கள் 17,368 பேர் 2009ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1997க்கும் 2009க்கும் இடையில் - 12 ஆண்டுக்காலத்தில் 2,16,500 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவை தேசியக் குற்றங்கள் ஆயம் (NCRB) தரும் புள்ளிவிவரம் ஆகும்.
இந்த அழகில், இந்திய அரசு செய்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது ஒரு கண்துடைப்புச் சட்டமே ஆகும். இந்தியாவில் இன்றைய வேளாண்மை உற்பத்தியின் சராசரி 2.4 விழுக்காடாகும். ஆனால் தமிழ்நாட்டில் இது 1.8 ஆக உள்ளது.
இந்தியாவில் வேளாண்மைக்குப் பயனில்லாத நிலப்பரப்பு 17 விழுக்காடாக உள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலம், தொழிற்சாலைகள் அமைத்தல் இவற்றை இந்திய அரசும் மாநில அரசுகளும் பொதுத்துறை நிறுவனங்களாக இந்நிலப்பரப்பிலேயே செய்ய வேண்டும்.
வேளாண்மை செய்யப்படும் நிலங்களை இப்பணிகளுக்குக் கையகப்படுத்தக் கூடாது.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்திடுவதற்கென்று தனி அமைச்சகம் செயல்படுகிறது.
கோல் இண்டியா (Coal India) என்னும் நிறுவனம் 154 திட்டங்களைத் தீட்டி அவற்றுக்குச் சூழலியல் ஒப்புதல் சான்று கோரியுள்ளது. இதற்காக ரூ.15,200 கோடி பங்குத் தொகையும் திரட்டியுள்ளது. இவற்றுக்குப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலும் அனுமதி கோரப்படுகிறது. நிலக்கரிப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, சுற்றுச்சூழல் தூய்மை கெடுவது அதிகரிக்கும். வாகன உற்பத்தி பெருகி வருகிறது; இவற்றில் பயன்பாடும் பெருகி வருகிறது. மும்பை நகரில் மட்டும் 19 இலட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றுள் 2 இலட்சம் மகிழுந்துகள் எப்போதும் சாலையில் நிற்கின்றன. கரிவளியை இவை அதிகமாக வெளியேற்றுகின்றன. காற்று மண்டலம் தூய்மை கெட்டு விடுகிறது.
இன்று அதிகமான கரிவளியை வெளிப்படுத்தும் நாடு சீனாதான். அதில் 45 விழுக்காடு அளவுக்குக் குறைத்துக் கொள்ள சீனா உறுதி கூறுகிறது. எண்ணெய், நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்து, அணுமின் மூலம் இதைச் செய்யப் போவதாகக் கதைக்கிறது. இது பொய்.
இதற்கு மாற்று என்ன? இன்றைய இந்திய அரசு அணு உலைகள் மூலம் மக்கள் பயன்பாட்டுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அமெரிக்கா, பிரான்சு, இரஷ்யா மற்றும் சின நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது.
இவ் ஒப்பந்தங்களில் கண்டுள்ள விதிகள் இந்தியாவுக்குக் கேடுவிளைவிப்பவை. எப்படி? அணு உலைகளில் விபத்துகள் நேரிட்டு அதனால் உற்பத்தி பாதிப்பு, முதலீடு இழப்பு, மனித உயிரிழப்பு இவை ஏற்பட்டால் அவற்றுக்கான பொறுப்பை யார் ஏற்பது என்பது பற்றிய விதிகள் இந்தியாவுக்கு - இந்திய மக்களுக்கு எதிரானவை. ஏன்?
அணு உலையை அமைத்திடுவதற்கான கருவிகளைத் தந்தவர்கள் - மூலப்பொருள்களைத் தந்தவர்கள் - உலைகளை இயக்கப் பணியாற்றியவர்கள்தான், 80 ஆண்டுக்காலத்துக்கு, இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். இதை பிரான்சு, இரஷ்யா, அமெரிக்க அரசுகள் ஏற்கவில்லை. என்றாலும் 2010 ஆகசுட்டில் இதுபற்றிய சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் போதிய விவாதம் இன்றி நிறைவேற்றிவிட்டது. இது கேடானது.
இவ்விதிகளில் (17b) என்பது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்பதை, அணு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அனில் கடோட்கர் 5.12.2010இல் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு சிக்கல்களுக்கு இடையேதான், 2010 நவம்பர் - திசம்பரில் 2-ஜி அலைக்கற்றை ஊழல், மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டட ஊழல், உலக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பொறுப்பேற்றிருந்த சுரேஷ் கல் மாடியின் ஊழல் இவற்றை மய்யமாக வைத்து 22 நாள்கள் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் முடிவுக்கு வந்தன. 2-ஜி அலைக்கற்றை ஊழலை முன்வைத்து அத்துறையின் அமைச்சர் ஆ. இராசா பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இவர்களுக்கு இதில் பொறுப்பு இல்லையா? இதுபற்றி எவரும் வாய்திறக்கவில்லை.
இன்றைய கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. இவருடைய தலைமையில் உள்ள காங்கிரசுக் கட்சிதான் கடந்த 64 ஆண்டுகளில் 52 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி செலுத்தியது.
காங்கிரசுக் கட்சிப் பிரதமர் இந்திரா காந்திதான் பண ஊழலை முதன்முதல் நடத்தியவர். ‘நகர்வாலா ஊழல்’ என்பது அதன் பெயர். நகர்வாலா, இந்திரா காந்திக்காக வங்கியில் பெருந்தொகையை வாங்கிவந்தார். அவர் உண்மையை வெளியே சொல்லிவிடுவார் என்று இந்திரா காந்தி அஞ்சினார். சில நாள்களில் நகர்வாலா சாலை விபத்தில் கொல்லப்பட்டார். யாரால் என்பது யாருக்கும் தெரியாது.
1987இல் சோனியா காந்தியின் கணவரும் இந்தியப் பிரதமரும் ஆன இராசீவ் காந்தியும் சோனியாவின் சொந்தஊர்க்காரரான குட்ரோச்சியும் ‘போபர்ஸ் பீரங்கி’ ஊழலில் ஒரு நல்ல தொகையாகக் கைக்கூலியாகப் பெற்றனர்; அயல்நாட்டு வங்கிகளில் அதைச் சேர்த்துவிட்டனர்.
இராசீவ் காந்தியையும் குட்ரோச்சியையும் காப்பாற்றிட, காங்கிரசுப் பிரதமர் பி.வி. நரசிம்மராவும், மாதவராவ் சோலங்கியும் படாதபாடுபட்டனர். இதுபற்றி ஆய்வு செய்திட அப்போதும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது; ஆய்வு நடந்தது; பயன் இல்லை. தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஐ-இலும், இப்போதும் குட்ரோச்சி காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
அடுத்துப் பிரதமர் பி.வி. நரசிம்மராவுக்கு ஒரு பெட்டி நிறையப் பணம் கொடுத்த மும்பை அர்ஷத் மேத்தாவின் பேரில் 1992இல் பங்குச் சந்தை ஊழல் வழக்கு வந்தது. இதுபற்றி அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிந்துரையின் பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவே 5 ஆண்டுகள் ஆயிற்று. கூட்டுக்குழுவின் பரிந்துரை எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
1999-2001இல் மும்பை கேதான் பரைக் என்பவர் பேரில் ஏற்பட்ட பங்குச் சந்தை ஊழல் வழக்கை ஆய்வு செய்திடக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு இந்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. சில பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. ஆனால் நடவடிக்கை இல்லை.
2003இல் கோகா கோலாவில் தீமை விளைக்கும் இரசாயனக் கலவை இருப்பதாக வந்த வழக்குப் பற்றி ஆய்வு செய்யக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்த இலட்சணத்தில், தில்லிக்கு அருகில் அண்மையில் நடைபெற்ற இந்தியத் தேசிய காங்கிரசின் 125 ஆண்டு விழாவில் உரையாற்றிய சோனியா காந்தியும் பிரதமர் அவர்களும், “அரசியல்வாதிகளின் ஊழலையும் கையூட்டையும் ஒழிப்போம்” என்று முழக்கமிட்டிருக்கிறார்கள்.
காங்கிரசு ஆட்சியின் ஊழலை வெளிப்படுத்த விரும்பும் பாரதிய சனதா இன்னொரு ஊழல் கட்சியாகும்.
பாரதிய சனதா ஆட்சியில் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பேய் காலத்தில், பனி முகடான கார்கிலில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. அப்போரில் மாண்ட இந்திய மறவர்களின் உடல்களை எடுத்து வருவதற்கான பிணப் பெட்டிகளும் பைகளும் வாங்கியதில் பெரிய பண ஊழல் நடந்தது. இது பற்றிய ஆய்வு மொட்டைப் பார்ப்பனத்தி பெற்ற பிள்ளையாகிவிட்டது.
தெஹல்கா செய்தி நிறுவனத்தினர், நேருக்கு நேர், பாரதிய சனதாக் கட்சியின் தலைவர் பங்காரு இலட்சுமணனுக்கு ஒரு சிறு தொகையைக் கைக்கூலியாகத் தந்து அதைப் படம் எடுத்துவிட்டனர். இன்னொரு பாரதிய சனதாத் தலைவருக்கும் தெஹல்கா கையூட்டுத் தந்தது. ஆனால் அவர் பேரில் எந்த நடவடிக்கையும் இல்லை. பங்காரு இலட்சுமணன் உடனே கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார். ஒரு வேளை அவர் பட்டியல் வகுப்பினர் என்பதால் நீக்கப்பட்டிருக்கலாம்.
இவர்கள், வசமாக நேர்ந்த 2-ஜி அலைக்கற்றை ஊழலை அம்பலப்படுத்திட முயலுவது - அவர்கள் அடுத்துவரும் தேர்தலுக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
இப்போது பாரதிய சனதாக் கட்சி இரண்டு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது; ஏழு மாநிலங்களில் தனித்து ஆட்சி நடத்துகிறது. மக்களவையில் 116 உறுப்பினர்களையும், மாநிலங்கள் அவையில் 49 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
பாரதிய சனதாக் கட்சியினர்
1. பதவிக்கு வந்தவுடன் இராமர் கோயிலை, அயோத்தியில் 67 ஏக்கரிலும் கட்டுவோம்.
2. இந்திய அரசமைப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீருக்குத் தனி உரிமை அளிக்கும் விதி 370 என்பதை நீக்குவோம்.
3. எல்லோரும் இராமாயணப் பண்பாட்டை இந்திய தேசியப் பண்பாடாக ஏற்கச் செய்வோம்.
என்கிற தெளிவான கொள்கைளில் உறுதிப்பாடாக இருக்கிறார்கள். காங்கிரசுக்கு எந்தக் கொள்கையும் இல்லை.
இந்த இரண்டு தேசியக் கட்சிகளும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்பதை மனமார ஏற்கின்றன. இந்தியத் தேசியத்தை ஏற்கின்றன. வளர்ந்த நாடுகளின் வேட்டைக் காடாக - மேல்சாதியினரின் ஆதிக்க நாடாக இந்தியாவை ஆக்குவதில் இவ்விரண்டு கட்சிகளும் குறியாக உள்ளன.
பொதுவுடைமைக் கட்சிகள், தேர்தலில், 2009க்குப் பிறகு பழைய வலிமையை இழந்திருக்கிறார்கள். மேலேகண்டவற்றுள் இந்தியத் தேசியம் தவிர்த்த மற்றவற்றை இக்கட்சிகள் எதிர்க்கின்றன.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 1200 உள்ளன. இவற்றுள் இயங்கும் கட்சிகள் 150.
இன்றுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 162 பேர் குற்றவியல் வழக்குகளில் தொடர்பு உள்ளவர்கள்.
தமிழ்நாட்டில் 105 கட்சிகள் உள்ளன. இவற்றுள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., பா.ம.க. மட்டுமே தேர்தல் ஆணையத்தால் ஏற்பளிக்கப்பட்ட கட்சிகள்; மற்றுள்ள 102 அங்கீகரிக்கப்படாதவை.
அதனால்தான் இங்கே கூட்டணி உருவாவதைப் பொறுத்தும், பணம் தருவதை வைத்துமே தேர்தலில் வெற்றி அமையும் என்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
கொள்கை - மக்கள் நலன் - உழைப்பாளர் விடுதலை முதலானவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
எந்த அணியும் மக்களாட்சியின் மாண்பைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்கவில்லை.
மக்களை அரசியல் படுத்துவோர் இவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வே.ஆனைமுத்து