சென்னை நகருக்கு அடுத்து உள்ள சோழிங்கநல்லுரில், பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து மேற்கில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்த முதியோர் இல்லம் அமைந்து இருந்தது. அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பெரிய கட்டடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அப்பகுதி வேகமான வளர்ச்சி பெற்று, இம்முதியோர் இல்லம் ஒரு அடையாளம் கூறும் இடமாக (Land mark) ஆகிவிட்டது. அதை ஆரம்பித்த வர்கள் தொண்டு நோக்கில் இல்லாமல் வணிக நோக்கத் திலேயே தொடங்குவதாக வெளிப்படையாகவே கூறினார்கள்.

குளுகுளு அறை, தொலைக்காட்சிப் பெட்டி, தனியறை என அனைத்து வசதிகளும் உள்ளன என்றும், முதியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மரக் கறி உணவு மட்டுமே அளிப்பதாகவும், புலால் உணவை விரும்புகிறவர்கள் அதற் கெனத் தனியாகப் பணம் செலுத்தினால் அதுவும் அளிக்கப் படும் என்றும், வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் பெற்றோர்களை விட்டுச் செல்ல மிகச் சிறந்த இடம் என்றும் விளம்பரப்படுத்தினார்கள்.

மிகக் குறுகிய காலத்தி லேயே இம்முதியோர் இல்லம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. அவ் இல்லம் அனைத்து மதத்தினருக்கும் பொது வானது என்று காட்டுவதற்காக இந்து, இசுலாமிய, கிருத்துவ முறையில் வணங்குவதற்கு ஏற்றபடி, சர்வ சமயக் கோயில் ஒன்று அவ்வளாகத்தில் கட்டப்பட்டு இருந்தது. முதியவர்கள் அங்குச் சென்று வழிபடுவது வழக்கமாக இருந்தது.

முதியோர் இல்லத்தை நடத்தியவர்கள் தங்களால் முடிந்த அளவு மிகுந்த அக்கறையுடன் முதியவர்களைக் கவனிக்கவே செய்தார்கள். அப்படி நடந்துகொண்டால்தான் தங்களுடைய தொழில் சிறக்கும் என்று நினைத்தார்கள். இதனால் அவ் இல்லம் பலரிடத்தில் (முக்கியமாகச் செல்வந்தர்களிடத்தில்) நல்ல பெயரைப் பெற்று இருந்தது. பத்து முதியவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அவ் இல்லம் இன்று பரந்து விரிந்து நூற்றுக் கணக்கான முதியவர்களைக் கொண்டு உள்ளது.

அம்முதியோர் இல்லத்தில் தங்கள் பெற்றோர்களை அடைக்கலமாக விட்ட அவர்களுடைய பிள்ளைகளும், தங்கள் பெற்றோர்கள் நன்றாக இருப்பதாக மன அமைதியுடன் இருந் தார்கள். ஆனால் அம்முதியவர்கள் மட்டும் இனம்புரியாத ஏதோ ஒரு மன நிறைவின்மையில் இருந்தார்கள். அவர்க ளால் தங்கள் பிள்ளைகளையும், பேரன் பேத்திகளையும் விட்டுவிட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் அவர்களுடைய பிள்ளைகளால் (வெளிநாடுகளில் இருப்பவர் களால் மட்டும் அல்ல; உள்ளூரில் இருப்பவர்களால் கூட) அவர்களை வீட்டில் வைத்துக் கொள்ள முடியவில்லை.

இப்படியாகப் போய்க்கொண்டு இருந்த காலத்தில் தான் கருப்பையா என்றொரு முதியவர் அவ்வில்லத்தில் சேர்க்கப் பட்டார். அவர் பெயருக்கு ஏற்ப, கருப்பாகவே இருந்தார். அவர் அழகானவர் அல்ல என்று சொல்ல முடியாவிட்டாலும், அழகானவர் என்றும் சொல்ல முடியாதபடி மிகவும் சாதார ணமாக இருந்தார். அவருடைய தோற்றம் யாரையும் கவரும்படியாக இல்லை. அவ்விடத்தில் உள்ள முதியவர்கள் அவ்வளாகத்தில் உள்ள சர்வ சமயச் சமரசக் கோயிலுக்குச் சென்று வழிபடும் போது, கருப்பையா அவ்வாறு கோயிலுக் குச் செல்லாமல் இருந்தது மற்றவர்களை வியப்புக்கு உள்ளாக்கியது. ஒருமுறை சங்கரன் என்ற முதியவர் இதைப் பற்றி வினவிய போது, அவர் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறினார். இதைக்கேட்ட மற்றவர்கள் வியப்பு டனும் ஒரு சிறிய அதிர்ச்சியுடனும் பார்த்தார்கள்.

தோற்றப் பொலிவு இல்லாததால் யாரையும் நேர்முகமாகக் கவர முடியாமலும், அதே நேரத்தில் தோற்றப் பொலிவு சகிக்க முடியாதபடியும் இல்லாதலால் எதிர்மறையாகக் கூடக் கவர முடியாமலும் இருந்த கருப்பையா, தான் ஒரு நாத்திகன் என்று வெளிப்படுத்திய பிறகு மற்றவர்கள் அவரிடம் இருந்து சற்று விலகி இருக்க முற்பட்டார்கள்.

ஒருநாள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்து இருந்த, சங்கரனின் ஒரே மகனும், மருமகளும் அவரைப் பார்க்க வந்தார்கள். சங்கரன் அவர்களிடம் அமெரிக்காவை விட்டு இந்தியாவிற்கு நிரந்தரமாகத் திரும்பி வரும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அவருடைய மகனோ இங்குள்ள வாழ்க் கைத் தரமும், சுகாதாரமற்ற சூழ்நிலையும் சிறிதும் பிடிக்க வில்லை என்று கூறி, இந்தியாவிற்குத் திரும்ப மறுப்புத் தெரிவித்தான். தான் அவன் மீது அளவு கடந்த பாசம் வைத்து இருப்பதாகக் கூறிய சங்கரன் அவனை விட்டுப் பிரிந்து இருப்பது நெருப்பில் அமர்ந்து இருப்பது போல உணர்வ தாகக் கூறினார். இதைக் கேட்டு அவன் கண்ணீர் சிந்தினானே ஒழிய, இந்தியாவிற்குத் திரும்பி வர ஒப்புக்கொள்ளவில்லை.

இதைப் பார்த்துக் கொண்டு இருந்த கருப்பையா, சங்கரனின் மகனிடம் “அப்பாவையும் உங்களோடக் கூட்டிப் போக வேண்டியது தானே?” என்று கேட்டார். அதற்கு அவன் “ஒருமுறை கூட்டிப் போனப்போ ஒரு மாசம் கூட தங்கலே. போரடிக்குதுன்னு சொல்லிட்டார். நானோ என் வொய்ஃபோ கூடவே இருக்கணும்னு சொல்றார். இதெல்லாம் முடியுமா? இங்கேன்னா பேச்சுத் துணைக்கு ஆள் கிடைக்கும். பணம்னா எவ்வளவுன்னாலும் அனுப்ப முடியும். கூடவே இருந்து கவனிச்சுக்க அங்கே முடியாது” என்று கூறினான். சிறிது நேரத்திற்குப் பிறகு மகனும் மருமகளும் சங்கரனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டனர்.

கருப்பையா நாத்திகர் என்று தெரிந்த பின் சற்றுத் தள்ளி நின்ற சங்கரன், தன் மகனிடம் உரையாடியதன் தொடர்ச்சி யாக இடைவெளியை மறந்து பேசினார். தன் மகன் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்தாகவும், அதைச் சிறிதும் கணக் கில் கொள்ளாமல் அவன் நடந்து கொள்வதாகவும் கூறிய சங்கரனின் கண்களில் கண்ணீர் பெருகியது. இதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்த கருப்பையா “உங்க பையன் அமெரிக்காவை விட்டு இங்கே வந்துட்டா உங்களுக்குச் சந்தோஷமா இருக்குமா?” என்று வினவினார்.

“நிச்சயமா” என்று கூறும் போது சங்கரனின் முகத்தில் ஒளி வீசியது.

“உங்க பையனுக்கு அது எப்படி இருக்கும்?”

“அது தான் பாத்தீங்களே! அவனுக்கு அதிலே இஷ்டமே இல்லை.”

“அவன் சந்தோஷப்படுவானா? அல்லது வருத்தப்படு வானா?”

“வருத்தப்படத்தான் செய்வான்.”

“உங்க பையன் அமெரிக்காவிலே இருந்தா அவன் சந்தோஷப்படுவான்; நீங்க வருத்தப்படுவீங்க. இல்லியா?”

“ஆமா.”

“நீங்க சந்தோஷமா இருக்கிறதுக்காக உங்க பையன் வருத்தப்படறது சரியா? அல்லது உங்க பையன் சந்தோஷமா இருக்கிறதுக்காக நீங்க கஷ்டத்தை தாங்கிக்கிறது சரியா?”

கருப்பையாவின் இந்த வினா சங்கரனை மின்னலைப் போலத் தாக்கியது. சிறிது நேரம் மறுமொழி அளிக்க முடியாமல் தவித்தார். பின் அவருடைய முகத்தில் ஒரு ஒளி தெரிந்தது.

“இல்லே! என் பையனுக்காக நான் தான் கஷ்டத்தை ஏத்துக்கணும்” என்று மெதுவாகக் கூறி, கருப்பையாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

அன்று இரவு முழுவதும் அவரால் சரியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் காலை எழும் போது தன் மகனின் மேல் இருந்த வருத்தம் எல்லாம் மறைந்து போய் மிகவும் மகிழ்வுடனும் சுறுசுறுப்புடனும் எழுந்தார். காலை உணவை உண்ணச் செல்லும் போது கருப்பையாவை அழைத்து அவருடன் சென்றார். அனைவரிடமும், தனக்கு வாழ்க்கை யின் அர்த்தத்தைப் புரிய வைத்தவர் என்று கருப்பையா வைப் பற்றிக் கூறினார். இதுவரையிலும் அவரை நாத்திகர் என்பதற்காகச் சற்றுத் தள்ளி நின்றே பழகியவர்கள் சங்கரன் விளக்கிக் கூறிய நிகழ்வைக் கேட்டனர். நாத்திகர் என்றாலே ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் என்ற அவர்களுடைய எண்ணம் சிறிது ஆட்டம் கண்டது. அந்நிகழ்வுக்குப் பின் அனைவரும் கருப்பையாவுடன் இயல்பாகப் பழக ஆரம்பித்த னர். அதன்பின் தாங்கள் கவனிப்பார் அற்றுக் கிடக்கிறோம் என்று வருந்திக் கொண்டு இருந்த முதியவர்கள், தங்கள் மனதை ஓரளவு தேற்றிக் கொண்டார்கள். ஏதாவது மனக் கவலை நெருடும் பொழுது கருப்பையாவிடம் பேசினால் மன அமைதி கிடைக்கும் என்று எண்ணும் அளவிற்கு அவர் அம்முதியவர்களின் மனதில் நிறைந்துவிட்டார்.

அனைவருடைய மனக்கவலையையும் தீர்க்கும் கருப்பை யாவிற்கு மனக் கவலை இருக்காதா? ஒரு முறை சங்கரன் கருப்பையாவிடம் அவரது பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் சேர்த்தது பற்றியும், அது அவருக்கு வருத்தமாக இல்லையா என்பது பற்றியும் விசாரித்தார். அதற்கு “நம்ம நிலமெ பரவாயில்லேங்க. நம்ம பிள்ளெங்க நல்ல ஓல்ட் ஏஜ் ஹோமைத் தேடி நம்மளெ அட்மிட் பண்றாங்க. நம்ம பிள்ளைங்களோட நெலமெ எப்படி இருக்கும்னு தெரியலே” என்று பொதுப்படை யாகவே விடை அளித்தார். சங்கரன் எதுவும் புரியாததுபோல் விழித்தார்.

கருப்பையா தொடர்ந்தார். “நம்ம பிள்ளைங்களுக்கு ஓல்ட் ஏஜ் ஹோமைத் தேடி அட்மிட் பண்ண நேரம் கெடைக்குது. அவங்க பிள்ளைங்களுக்கு அதுக்குக் கூட நேரம் கெடைக்காம போகலாம்” என்று கருப்பையா கூறிக்கொண்டு இருக்கும் போதே “அப்ப என்ன நடக்கும்?” என்று சங்கரன் பதற்றத்துடன் கேட்டார்.

“பெரிசா ஒண்ணும் நடந்துடாது. ‘வேண்டிய பணத் தைத் தந்துடறேன். நீங்களே நல்ல ஹோமாப் பார்த்து அட்மிட் ஆயிடுங்க’ன்னு சொல்லி, அதுக்கு மேலே பேசறதுக்கு நேரம் இல்லாமப் போயிக்கிட்டே இருப்பாங்க” என்று கருப்பையா கூறவும், “நெலமெ அப்படி ஆயிடுமா?” என்று கேட்டபடி சங்கரன் அதை நம்ப முடியாமலும், நம்பாமல் இருக்க முடியாமலும் குழப்பத்துடன் கருப்பை யாவைப் பார்த்தார்.

“இன்னைக்குப் போற நிலைமையைப் பார்த்தா அப்படித்தான் தோணுது. கேபிடலிஸ்ட் சிஸ்டத்திலே, போட்டியிலே ஜெயிக்கணுனா எல்லாத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும். நம்ம பிள்ளைங்க நம்மளெ கவனிக்கிறது இல்லேன்னு நாம எல்லோரும் நெனக்கிறோம். உண்மையில் அவங்க அவங்களையே பார்த்துக்க முடியற தில்லே. எவ்வளவு பேர் வீட்லே ஒழுங்கா சமைக்கிறாங்க? அவசரத்துக்கு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டு ஓடறாங்களே! அதனாலே ஒடம்பு கெடுதுன்னு தெரிஞ்சாலும் அதை அவாய்ட் பண்ண முடியாம, தேவையில்லாத வியாதிகளை எல்லாம் உருவாக்கிட்டு அலையறாங்களே! ஏன்? யாராச்சி லும் நின்னு, நிதானிச்சு, சரியான வழியிலே போகப் பார்த்தா, அவனெ மத்தவன் மிதிச்சுத் தாண்டிப் போயிடு வான். கேபிடலிஸ்ட் சிஸ்டத்திலே இதை எல்லாம் அவாய்ட் பண்ண முடியாது. இது நாளாக நாளாக மோசமாகத்தான் போகுமே ஒழிய, சீர்திருந்த வழியே இல்லை. அதனாலே தான் சொல்றேன், நம்ம பிள்ளைங்களோட நிலைமை நம்ம நிலைமையைவிட மோசமாத்தான் இருக்கும்” என்று கருப்பையா ஒரு நீண்ட உரையைக் கூறி முடித்தார்.

இந்நீண்ட உரையைக் கேட்ட சங்கரன், இந்நிலைமை மாற வேண்டும் என்று மனதில் ஆசைப்பட்டார். அதற்கு வழி என்ன என்று மனதில் நினைத்தவர் ‘கேபிடலிசத்திற்கு மாற்று சோஷலிசம் தானே?’ என்று நினைத்தவராய் “சோஷலிசம் வந்தா உடனே எல்லாம் சரியாப் போயிடுமா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டார்.

“சோஷலிசம் வந்தால் உடனே எல்லாம் சரியாப் போகாது. மாறுதல் காலகட்டத்தில் பிரச்சினைகள் இருக்கவே செய்யும். ஆனா ஷார்ட் பீரியட்லேயே இம்ப்ரூவ்மெண்ட் தெரிய ஆரம்பிக்கும்” என்று கருப்பையா விடை அளித்த உடன், “அதுக்கு நாம என்ன செய்யணும்?” என்று சிறிதும் குறையாத அப்பாவித்தனத்துடன் ஆர்வம் பொங்கக் கேட்டார்.

சங்கரனின் அப்பாவித்தனம் கலந்த ஆர்வத்தைக் கண்ட கருப்பையா ஒரு நீண்ட பெருமூச்சைவிட்டார். “புரட்சி வரணும்னா அங்கே புரட்சிகரத் தத்துவம் உயிர்ப்போட இருக்கணும். இப்போ அந்த மாதிரி எதுவும் இல்லே. இன்னைக்கு எல்லாரும் பிரச்சினையெப் பத்தி நீட்டி முழக்கிப் பேசறாங்க. பிரச்சினையோட வேரைக் காட்டினா உடனே பேச்சை நிறுத்திட்டு மறைஞ்சிடறாங்க.

டாக்டருங்க எல்லாம் கொள்ளை அடிக்கிறாங்கன்னு சொல்றாங்க; மருத்துவம் இலவசமா மட்டும் இருந்தாத்தான் அது மருத்துவமா இருக்க முடியும்னு சொன்னா, அதுக்குப் பதில் சொல்ல அவங்க அங்கே இருக்கிறதில்லை.

என்விரான்மெண்ட் கெட்டுப் போகுதுன்னு கூப்பாடு போடறாங்க. ஆனா என்விரான்மெண்ட் கெடுற தொழில் களை அனுமதிக்கிறவன் தான் முதலீட்டை ஈர்க்கத் தெரிஞ்சவன்னு மீடியா எல்லாம் புகழுது. என்விரான்மெண்ட் கெடாம இருக்கிறதுக்கு நடவடிக்கை எடுத்தா மொதலாளிங்க இலாபம் குறையுமுன்னு சொல்லி மூலதனத்தை வேறே இடத்துக்குக் கொண்டு போயிடறாங்க. உடனே மீடியா எல்லாம் இன்வெஸ்ட்மெண்டை அட்ராக்ட் பண்ணத் தெரியாத மடையன்னு திட்டுது.

இப்படி சொஸைட்டியில புரட்சிக்கு எதிரான தத்துவமே இருந்தா எப்படிப் புரட்சி வரும்? புரட்சிகரக் கருத்து உள்ளவங்கன்னு சொல்லிக்கிறவங்களும் இதை எல்லாம் எடுத்துக்காட்டாம, கூலி உயர்வு பற்றி மட்டும் பேசிப் பொழுதைப் போக்குறாங்க” என்று கருப்பையா சொல்லிக் கொண்டு போனதை முழுமையாக உள்வாங்க முடியாமல் சங்கரன் திணறிக் கொண்டு இருந்தார்.

சங்கரன் திணறுவதைக் கண்ட கருப்பையா ‘ஜனங்க படற கஷ்டம் தாங்க முடியாம, தங்களோட கஷ்டம் தீரணும்னு பலமா யோசிக்கிற போது புரட்சிகரத் தத்துவம் புரியும்’ என்றும் ‘அப்பொழுதுதான் புரட்சி வரும்’ என்றும் கூறிமுடித்தார்.

Pin It