தமிழகத்தில் உள்ளதுமின் தட்டுப் பாடு!
தடையின்றி மின்சாரம் வழங்கு தற்குத்
தமிழகத்து வல்லுநரால் முடியும்! செய்யத்
தக்கனவெல் லாம் செய்து தட்டுப் பாடே
தமிழகத்தில் இல்லையெனச் செய்வார்! செய்யத்
தக்காரை யினங்கண்டு செய்யச் சொன்னால்
தமிழ்நாடு மின்மிகைமா நிலமாய் ஆதல்
தலையாய கடமையெனச் செய்வார் கண்டீர்!
இதனையித னாலிவனே முடிப்பா னென்றால்
ஏனதனை யவனிடத்தில் விடத்த யக்கம்?
எதனையாம் சுட்டுகிறோம் என்று கேட்பீர்!
இன்றுள்ள மின்வெட்டுச் சிக்கல் தீர
முதன்மைபொறி யாளர்க்கே தருதல் வேண்டும்!
முடிவெடுக்கும் அதிகாரம் பொறியர்க் கீந்தால்
அதனையவர் எளிதாகத் தீர்த்து வைப்பார்!
அரசுணர்ந்து செயத்தக்க செய்தல் நன்று!
மின்சாரம் என்றாலே பொறிஞ ரேறாம்
வே.ப.அப் பாத்துரையார் நினைவே தோன்றும்!
தன்னலமில் லாஉழைப்பால் மின்சா ரத்தில்
தமிழ்நாட்டை முதலிடத்தில் கொண்டு வந்தார்!
இன்றுள்ள தட்டுப்பா டந்த நாளில்
யாம்கண்ட தில்லையொரு நாளும் கண்டீர்!
என்றுவரு மோதலைமை பொறியா ளர்க்கு?
யாரிதைப்போய் அரசுக்குச் சொல்ல வுள்ளார்?
எந்தவொரு கட்சியிவண் ஆண்டா லென்ன
இங்காள்வோர் உண்மையிலே அய்.ஏ.எஸ்.ஸே!
இந்தியத்தை அடிமைகொண்ட வெள்ளை யர்கள்
இவ்வமைப்பை நாடாள நிறுவி யுள்ளார்!
இந்தக்கண் காணிகளும் மேலாள் வோர்க்கே
எடுபிடிக ளாய்நடந்து கொள்வார்! நாளை
நந்தமிழர்க் கென்றுதனி நாடுண் டாகும்!
நம் மக்கள் ஆட்சியிலே இராதிக் கூட்டம்!