பெருமகன் காந்தி கண்களிலிருந்து

சத்தியம் அழுகிறது

தந்தை பெரியார் கண்களிலிருந்து

சமத்துவம் அழுகிறது

அண்ணல் அம்பேத்கர் கண்களிலிருந்து

அரசியல் சட்டம் அழுகிறது

உயரங்கள் வெட்கப்பட்டுப் பள்ளத்தாக்கில் விழ

மணிப்புரியின் மலைகள், மனக்கண்ணில்

வெட்டப்பட்ட சதைத் துண்டுகளாகச்

சிவந்து கிடக்கின்றன

இம்பாலில்,

ஆயுதப்படைகளின் மானுடம் மரித்துப்போன

தலைமையகத்தின் முன்

எங்களையும் கற்பழியுங்கள் என்று

பதைபதைக்கும் பதாகைகளுடன்

நிருவாணப் பெண்கள்.

லிமொரான் அருவித்தறியிலிருந்து

புடைவைகளாய்ப்

பொங்கிக்கொட்டுகிறது புனல்

என்ன பயன்?

ஆலைகள் இல்லாத ஆகாயம்

அரூபச்சேலைகளைத் தயார் செய்கிறது

என்ன பயன்?

தங்கசம்மனோரமா தேவியை

அங்குலம் அங்குலமாய் அவமானப்படுத்தி

ஆயுதப் படையினர் மேய்ந்து தீர்த்தனர்

அந்தப்

பச்சை வனங்களின் புத்திரி

செத்த பிறகும்

ஆயுதப் படையினர் பத்துப்பேர்

காமச்சுமைக்குக் கீழே

கிடந்தாள் நிருவாணமாக.

மணிப்புரியின் மாபெரும்

பளிங்குத் திரவப் பதக்கமான

லோக்டாக் ஏரியின்

அகலத்தையும் ஆழத்தையும்கூட

ஆயுதப் படைகள் அவமானப்படுத்தலாம்

மணிப்புரியின் பாரக் நதியின்

பால்சுரக்கும் மார்புகளைக் கடித்துக்

குதறலாம்.

மணிப்புரிப் பெண்களை

மற்றவர் தொடாமல் பார்த்துக் கொள்ளப்

படை

அந்தப் படை தொடாமல் பார்த்துக் கொள்ள

யார்?

சட்டத்திலிருந்து விதிவிலக்கு

விதிவிலக்கின் கண்களிலிருந்து

தங்கசம்மனோரமா தேவிப் பிணங்கள்

அங்குள்ள பெண்கள் கபாலத்தில் கண்களில்

நிரப்பின நெருப்புத் துண்டங்களை

படைத் தலைமையக வாசலில்

போராடும் நிருவாணப் பெண்களை

மறைத்து முன்வரிசையில்

இந்திய மொழிகளிலெல்லாம் எழுதப்படாத

கவிதைகள்.

அச்சம் நாணம் மடம் பயிர்ப்புகளை

அவிழ்த்தெறிந்துவிட்ட சீதை

சந்தேக இராமர்கள் சங்கக் கட்டடத்திற்கு

தீ வைத்த கையோடு

மணிப்புரிவாசலில் வந்துநின்றாள்

காலத்தின் கண்இமைகள் கருகி உதிர்ந்தன.

எங்கள் சிலப்பதிகாரக் கண்ணகி

எரிப்பதை எங்கிருந்து தொடங்குவதென்று

தனக்குத்தானே கேட்டுக் கொண்டு

தன் மற்றொரு மார்பைத் திருகியவளாக

இம்பாலில் நுழைந்தாள்

இந்தியாவின் சுவிட்சர்லாந்துக்குள்

ஏகப்பட்ட பெண் எரிமலைகள்!

எந்தச் சிறகிலிருந்தும்

இந்தியப் பெண்களுக்குச் சமாதானத்தை

அமைதிப் புறாக்களால் எழுத முடியவில்லை

காமுகக் காட்டுப்புலிகளின்

எந்த வரியிலிருந்தும் இவர்களுக்கு

வன்புணர்ச்சியும் மரணத் தூதும் புறப்பட்டு

வராமலில்லை.

செத்தவாக்குச் சீட்டுகளை மடித்து

வெற்றிலை பாக்குப்போடும் சனநாயகம்

ஏன் என்று இதுவரை அவர்களைக் கேட்டதில்லை

மணிப்புரிச் சரிவுகளில், காடுகளில்

மூங்கில்கள் கூட்டம் கூட்டடமாய்

ஒன்றைஒன்று கட்டிப்பிடித்துக் தீக்குளிக்கின்றன.

இந்தக் கொடுமைகளை எதிர்த்துக் கொடிபிடித்த

இரோம்சர்மிளா

பட்டினி கிடக்கிறாள் பதினான்கு ஆண்டுகளாக

ஒருநாள் சாவின் செய்தி

மறுநாள் வாழ்வின் செய்தி

சர்மிளா

மணிப்புரியின் ஒட்டுமொத்த உடலாகிவிட்டாள்

ஆனால்

தேசத்தின் கண்களுக்குத் தெரியவில்லையே!

சட்டத்தின் பார்வையில் படவில்லையே!

தொண்டையில்

புற்றுநோய் கண்ட நீதிநியாயங்களால்

முணகக்கூட முடியவில்லையே!

- ஈரோடு தமிழன்பன்

Pin It