ப.சிதம்பரம், நிதி அமைச்சர் என்ற நிலையில் தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை 1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இப் போது 68 அகவையினராக உள்ள ப. சிதம்பரம் எட்டாவது தடவையாக, 2013-14ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 28-2-13 அன்று நாடாளு மன்றத்தில் படித்தார்.

எந்தவொரு வளர்ந்த நாட்டிலோ, அல்லது வளர் முகநிலையில் உள்ள நாட்டிலோ, இந்தியாவில் இருப் பதுபோல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுவது என்பது பரபரப்பாகப் பேசப்படும் செய்தியாகவோ, பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்குவதாகவோ இருப்பதில்லை.

2014ஆம் ஆண்டு ஏப்பிரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2009ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், 2008-09ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 70,000 கோடி உருபாய்க்கு உழவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்தன்மையிலான அறிவிப்பு 2013-14ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. குறைந்தது வருமான வரிவிதிப்புக்குத் தற்போதுள்ள இரண்டு இலட்சம் உருபாய் வரம்பு என்பது கட்டாயம் உயர்த்தப்படும் என்று அரசு ஊழி யர்களும் ஆசிரியர்களும் ஆவலுடன் நம்பிக் கொண்டிருந்தனர். இத்தகைய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கை களையும் பொய்யாக்கிவிட்டார் செட்டிநாட்டுச் சிதம்பரம்.

இந்தியாவின் ‘அரச குடும்பத்தின்’ இளவரசர் இராகுல் காந்தியை விரைவில் மன்னராக்கி மணி மகுடம் சூட்ட வேண்டும் என்று ‘பேரரசி’ சோனியா முடிவு செய்துவிட்டார். அதனால் இராகுல் காந்தி, காங்கிரசுக் கட்சியின் துணைத் தலைவராக அண்மையில் அமர்த்தப்பட்டார். ஆனால் இராகுல் காந்தியோ, ‘இராஜ்ய பாரத்தை’ நேரடியாகச் சுமக்காமல், தற்போதைக்கு அம்மா சோனியாவின் வழிமுறையைப் பின்பற்றலாம் என்று நினைக்கிறாராம். தன் அம்மாவுக்கு “நல்ல தாடிமாமா மன்மோகன்” அமைந்தது போல், தன்னுடைய கோல் அசைவிற்கு ஏற்ப ஆடும் ஒரு குரங்கை வைத்து ஆட்சி செய்யலாம் என்று கருதுகிறாராம். மன்மோகனைப் போலவே மக்கள் செல்வாக்கு இல்லாத சிதம்பரத்தின் பெயர் இப்பட்டிய லில் முதலிடத்தில் இருக்கிறதாம். அடுத்த தலைமை யமைச்சர் நான்தான் என்று ஆர்ப்பரிக்கும் நரேந்திர மோடியைக் கண்டு இராகுல் அஞ்சுகிறாராம். தில்லி அரசியல் வட்டாரத்தில் இவ்வாறு பேசப்படுகிறது (‘அவுட்லுக்’, மார்ச்சு 11, 2013).

சிதம்பரம் அரசியலில் பழந்தின்று கொட்டை போட்டவர் அல்லவா! அதனால் ‘தலைமையமைச்சர்’ பதவி என்கிற அரசியல் கிசுகிசுப்புக்கு மசியவில்லை. தன் கட்சிக்காரர்களாலும், பிற கட்சியினராலும் ‘சிடு சிடுப்பு சிதம்பரம்’ என்று கூறப்படுபவர் இவர். ஆனால் நாடாளுமன்றத்திலும் பொது நிகழ்ச்சிகளிலும் அன்றலர்ந்த செந்தாமரை போல் முகத்தை வைத்துக் கொண்டு, புன்னகை தவழ, பசப்பு மொழி பேசுவதில் வல்லவராக விளங்குகிறார். நிதிநிலை அறிக்கையில் தவறாமல் திருக்குறளை மேற்கோள் காட்டுவார். ஆனால் தில்லியில் பார்ப்பன-பனியா ஆட்சியின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு முன்கை கொடுப்பார்.

“நிதிநிலை அறிக்கையின் நோக்கம்-நிதி அமைச் சரின் வேலை என்பது நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்கான ஏற்ற சூழலை உருவாக்கி, அதற்கு வேண்டிய நிதி ஆதாரங்களைத் திரட்டி, மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காகச் செலவிடுவதேயாகும்” என்று சிதம்பரம் நிதிநிலை அறிக்கையின் தொடக்கத் திலேயே கூறியுள்ளார். ‘ஆம்ஆத்மி’ - வெகு மக்களின் நலன்களுக்கான நிதிநிலை அறிக்கை என்று காங்கிரசுக் கட்சி எப்போதும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும். 2013-14ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 30 விழுக்காடு அளவுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட் டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் பச்சையானதோர் பொய்யைச் சொல்லியிருக்கிறார் சிதம்பரம். ஆனால் உண்மை நிலை என்ன?

2012-13ஆம் ஆண்டு திட்டச் செலவினத்திற்கென (Plan Expenditure) ரூ.5,21,025 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதை ரூ.4,29,197 கோடி யாக, சிதம்பரம் குறைத்துவிட்டார். இது திருந்திய மதிப்பீடு (Revised Estimate .R.E.) எனப்படுகிறது. அதாவது 2012-13ஆம் ஆண்டிற்கு ஒதுக்கிய நிதியில் ரூ.91,838 கோடியைக் குறைத்துவிட்டார்.

2013-14 ஆம் ஆண்டிற்குத் திட்டச் செலவினமாக 5,55,332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருந்திய மதிப்பீட்டுத் தொகையான ரூ.4,29,187 கோடியுடன் இவ்வாண்டின் நிதி ஒதுக்கீட்டுத் தொகையை ஒப்பிட்டு, 30 விழுக்காடு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக சிதம்பரம் புளுகிருக்கிறார். கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையுடன் (Budget Estimate.B.E.) ஒப்பிட்டால் 2013-14ஆம் ஆண்டிற்கு ரூ.34,297 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கூடுதல் ஒதுக்கீடு என்பது 6.58 விழுக்காடு ஆகும். 2012-13ஆம் ஆண்டில் மொத்த கொள்முதல் விலையின் அடிப்படை யிலான பணவீக்கம் 7.6 விழுக்காடு ஆகும். இத்துடன் ஒப்பிட்டால் உண்மையில் (in real terms) கடந்த ஆண்டை விட இவ்வாண்டு குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ஆனால் திட்டம் அல்லாத செலவினத்திற்கு (Non-Plan Expenditure ) ரூ.31,738 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2012-14ஆம் ஆண்டிற்கு மொத்தச் செலவினம் ரூ.16,65,297 கோடி. இதில் திட்டச் செலவினத்திற்கு ரூ.5,55,332 கோடியும், திட்டம் அல்லாத செலவினத் திற்கு ரூ.11,09,975 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை (Fiscal Defict) ரூ.5,42,499 கோடி.

2012-13ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருள் களுக்கான மானியம் ரூ.96,980 கோடி ஒதுக்கப் பட்டது. ஆனால் 2013-14ஆம் ஆண்டிற்கு ரூ.65,000  கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெகுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான திட்டங்களின் - மானியத்தின் நிதி ஒதுக்கீட்டை நடுவண் அரசு ஏன் குறைக்கிறது?

நடுவண் அரசு அமைத்த விஜய் கெல்கர் குழு 2012 செப்டம்பரில் தன் அறிக்கையை அரசிடம் அளித்தது. நிதிப்பற்றாக்குறையை  2012-13ஆம் நிதி ஆண்டிற்குள் 5.3 விழுக்காடாகக் குறைக்க வேண்டும். 2013-14ஆம் ஆண்டில் இது 4.8 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று கெல்கர் குழு அறிக்கை வலியுறுத்தியது. மேலும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை  ரூ.4,12,000 கோடியாக (75 பில்லியன் டாலர்) உயர்ந்துவிட்டது. இக்காரணங்களைக் காட்டித்தான் நடுவண் அரசு மானியத் தொகையையும் திட்டச் செலவுக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்தது.

2012 செப்டம்பர் மாதம் நடுவண் அரசு டீசல் விலையைச் சில்லறையாக வாங்குவோருக்கு ஒரு லிட்டருக்கு அய்ந்து உருபாய் உயர்த்தியது. டீசலை மொத்தமாக வாங்கிப் பயன்படுத்தும் அரசுப் போக்கு வரத்துத்துறை, தொடர் வண்டித்துறை ஆகியவற்றுக் கான டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.11ஆக உயர்த்தியது. மானிய விலையில் எரிவளி உருளை வழங்குவதை ஓராண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ஆறு மட்டுமே எனக் குறைந்தது, கடந்த சனவரி மாதம் இது ஒன்பதாக உயர்த்தப்பட்டது.

டீசல் விலை மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தப்பட நடுவண் அரசு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. உலகச் சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாற்றியமைத்து வருவது போலவே விரைவில் டீசல் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது. இதனால் எல்லாப் பொருள்களின் விலையும் உயர்ந்தன. பணவீக்கம் அதிகமாயிற்று. 2012-13ஆம் ஆண்டில் தானியங்கள் விலை 17 விழுக்காடு உயர்ந்தது. காய் கறிகள், பழங்கள் விலை 28 விழுக்காடு உயர்ந்தது. அதனால் மக்கள் இவற்றைப் பயன்படுத்தும் அளவைக் குறைத்துக் கொண்டனர். ஆப்பிரிக்கக் கண்டத்திலுல்ல எத்தியோப்பியா போன்ற வறிய நாடுகளைவிட இந்திய நாட்டின் மக்களிடையே ஊட்டச்சத்துப் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது என்பதை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.

2012-13ஆம் ஆண்டில் தற்போதைய விலைகள் அடிப்படையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு  தொழில்துறையின் பங்கு 26 விழுக்காடு, வேளாண்மையின் பங்கு 14 விழுக்காடு ஆகும். ஆனால் வேளாண்மையைச் சார்ந்து 60 விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர் என்பதை ஒப்பிடும் போது அவர்களின் வாழ்நிலை எந்த அளவுக்கு வீழ்ச்சி யடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் கடந்த 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். 2012-13ஆம் ஆண்டில் சேவைத் துறையின் வளர்ச்சி 6.6 விழுக்காடு; வேளாண் துறையின் வளர்ச்சி 1.8 விழுக்காடு; தொழில்களின் உற்பத்திக் குறியீட்டு எண். 0.7 ஆகும். இது 2011-12இல் 2.9ஆக இருந்தது. தொழில்துறையிலும் பெரும் எண்ணிக்கை யில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதையே இது காட்டுகிறது.

நிதிப்பற்றாக்குறை  நடப்பு கணக்குப் பற்றாக்குறை ஆகியவற்றைக் குறைக்கவும், மக்கள் நலத்திட்டங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டவும் அரசின் வருவாயைப் பெருக்க வேண்டும். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்று சாதாரண பாமரனைக் கேட்டால்கூட, “பணக் காரர்கள்மீது அதிக வரிவிதிக்க வேண்டும்” என்று சொல்லுவான். ஆனால் ஹார்டுவேர்டு பல்கலைக் கழகத்தில் படித்த சிதம்பரத்துக்கும் கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தில் படித்த மன்மோகனுக்கும் இது தெரி யாதா? மிக நன்றாகத் தெரியும். ஆனால் இவர்கள் பன்னாட்டு - உள்நாட்டு முதலாளிகளின் ஊழியர்கள். அதனால் முதலாளிகளின் நலன்களைக் காப்பதையே தங்கள் கடமையாகக் கொண்டுள்ளனர்.

அதனால்தான் 2012-13ஆம் ஆண்டில் மக்களுக்குப் பயன்தரும் திட்டச் செலவினத்தில் ரூ.91,838 கோடி யைக் குறைத்தனர்; அதேசமயம் உற்பத்தி வரி, வருமான வரி, சுங்கவரி ஆகியவற்றில் வரிச்சலுகை கள் என்ற பெயரில் ரூ.5,28,163 கோடியைப் பெரு முதலாளிகளுக்கு நடுவண் அரசு வாரி வழங்கி யிருக்கிறது. 2012-13ஆம் ஆண்டில் நடுவண் அரசு நிதிப்பற்றாக்குறையை ஈடுசெய்ய ரூ.5,20,925 கோடி கடன் தொகையைவிட அதிகமான தொகையைப் பெரு முதலாளிகளுக்கு அளித்துள்ளது. பெரிய முதலாளி களிடம் இவ்வரிகளை வசூலித்திருந்தால் கடன் வாங்க வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காதே!

ஆனால் நிதிநிலை அறிக்கையில் ப.சிதம்பரம் பெருமுதலாளிகள் மீது அதிகமாக வரிவிதித்திருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கியிருக் கிறார். “நிதி ஆதாரங்களைப் பெருக்க வேண்டிய தேவை ஏற்படும் போதெல்லாம் சமூகத்தில் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்களைத் தவிர வேறு யாரிடம் நான் செல்ல முடியும்? ஓராண்டில், வரி விதிப்புக்குரிய  வருவாய் ஒரு கோடிக்குமேல் இருப்பவர்கள் இந்தியாவில் 42,800 பேர் இருக்கின்றனர். 42,800 பேர்கள் மட்டுமே இருக்கின்றனர் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். இவர்கள் செலுத்தும் வரித்தொகை யின்மீது 10 விழுக்காடு கூடுதல் வரி  விதிக்கப்படும். மேலும் வரிவிதிப்புக்குரிய வருவாய் ஆண்டிற்கு ரூபாய் பத்துக் கோடிக்கு மேல் வருவாய் உள்ள உள்நாட்டு நிறுவனங்கள் செலுத்தும் வரித் தொகையின் மீதான கூடுதல் வரி, 5 விழுக்காட்டி லிருந்து 10 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது. இக்கூடுதல் வரிவிதிப்பு ஓராண்டிற்கு மட்டுமே இருக்கும். பெருஞ்செல்வர்கள் இதை மனமுவந்து ஏற்பார்கள் என்று நம்புகிறேன்” என்று நிதிநிலை அறிக்கை உரையில் சிதம்பரம் கூறியிருக்கிறார்.

இதன்படிக் கணக்கிட்டால் பெருஞ்செல்வர்கள் மீதான வரி விதிப்பு தற்போது 30.90 விழுக்காடாக இருப்பது, 33.99 விழுக்காடாக உயரும். இது ஏட்டள விலான புள்ளிவிவரம். ஆனால் இவர்கள் இந்த அளவுக்கு உண்மையில் வரி செலுத்துகிறார்களா? இல்லை என்று நிதிநிலை அறிக்கையில் சிதம்பரமே சொல்லியிருக்கிறார். “2011-12ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்  நேரடி வரி வருவாயின் பங்கு 5.5 விழுக்காடாகவும், மறைமுக வரியின் பங்கு 4.4 விழுக்காடாகவும் இருந்தது (இரண்டும் சேர்த்து 9.9 விழுக்காடு. வளர்முக நிலையில் உள்ள பெரிய நாடுகளுள் மிகவும் குறைவான வரி விதிப்பு அளவாக இருக்கிறது. எல்லாத் தரப்பினரின் மேம்பாட்டுக்கும் நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கும் தேவையான நிதியைத் திரட்ட, இந்த வரிவிதிப்பு விகிதம் போதுமானதல்ல. 2007-08ஆம் ஆண்டில் வரிவிதிப்பு விகிதம் 11.9 விழுக்காடாக இருந்தது. மிக விரைவில் இந்த விழுக்காட்டளவை யேனும் நாம் எட்ட வேண்டும்” என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருமுதலாளியக் குழுமங்கள் செலுத்த வேண்டிய வரி 30.90 விழுக்காடாக இருந்தபோதிலும், 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே வரி செலுத்து கின்றன. இந்தியப் பெருமுதலாளிய நிறுவனங்களில் 98 விழுக்காட்டுக்குமேல் ஒரே குடும்பத்துக்குச் சொந்த மானவையாகவோ அல்லது அக்குடும்பத்தின் கட்டுப் பாட்டிலோ உள்ளன. பெருமுதலாளிய நிறுவனங்கள் - கார்ப்பரேட் வரி, அமெரிக்காவில் 40 விழுக்காடு, சப்பானில் 38 விழுக்காடு, பிரேசிலில் 34 விழுக்காடு செலுத்துகின்றன. இந்தியாவிலோ, 2010-11ஆம் ஆண் டில் பெருமுதலாளிகள் ரூ.100 வரி செலுத்தினால், அவர்கள் பெற்ற வரிச்சலுகை ரூ.132 ஆக இருந்தது. இவர்கள் செலுத்திய மொத்த வரி ரூ.2.75 இலட்சம் கோடி. ஆனால் முதலாளிகள் பெற்ற வரிச்சலுகை ரூ.3.65 கோடி ஆகும். 2011-12இல் ரூ.100 வரி செலுத்தி, ரூ.145-க்கு வரிச்சலுகை பெற்றனர்.

வரிச்சலுகைகளால் ஏற்பட்ட வருவாய் இழப்பு  என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கையின் இணைப்புப் பகுதியில் இந்த விவரங் கள் தரப்பட்டுள்ளன. சோனியா காந்தியின் கட்டுப் பாட்டில் இயங்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடுவண் அரசில் ஆட்சியில் இருக்கிறது. 2005-06 முதல் 2012-13 வரையிலான காலத்தில், நிதிநிலை அறிக்கைகளில் அச்சிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பெருமுதலாளிகளுக்கு வருமான வரி, உற்பத்தி வரி, சுங்கவரி ஆகிய மூன்று இனங்களின் கீழ் அளித்த வரி விலக்குகளால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

வரி

2005-06 2006-07 2007-08 2008-09 2009-10 2010-11 2011-12 2012-13 அரசுக்கு மொத்த வருவாய் இழப்பு

கார்ப்பரேட்

வருமான வரி

34618 50075 62199 66901 72881 57912 61765 68008 4,74,359
உற்பத்தி வரி 66760 75475 87468 128293 169121 192227 195590 206188 1,21,122
சுங்கவரி 127730 137105 153593 225752 207949 172740 236852 253967 15,15,688
மொத்தம் 229108 262655 303260 420946 449951 422879 494207 528163 31,11,169

மேலே உள்ள பட்டியலின்படி, 2005-06ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகைகளால் நடுவண் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.26 லட்சத்து 29 ஆயிரம்  கோடி உருபாய். இது 2012-13இல் ரூ.5 இலட்சத்து 28 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் நிதிப்பற்றாக்குறைத் தொகையைவிட இது அதிகமாகும்.கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் இந்த வரிச்சலுகையைக் குறைக்க வேண்டும் என்று மன்மோகனும் சிதம்பரமும் பொது மேடைகளில் பேசியிருக்கிறார்கள். ஆனால் குறைத்திட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த எட்டு ஆண்டு களில் மொத்தம் ரூ.31 இலட்சத்து 11 ஆயிரம் கோடி வரிச்சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு மணித்துளிக்கும் (நிமிடம்) 70 இலட்சம் உருபாய் வரிச்சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது என்று பி. சாய்நாத் ‘தி இந்து’ நாளேட்டில் எழுதிய கட்டு ரையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பெருந்தொகையைப் பெருமுதலாளியக் குழுமங்களுக்கு நடுவண் அரசு ஏன் கொடுத்தது தெரியுமா? நாட்டின் வளர்ச்சிக்காக - உற்பத்தியைப் பெருக்குவதற்காக - புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக - இம்முதலாளிய நிறுவனங்கள் நாட்டில் மேலும் மேலும் மூலதனத்தை இடுவதை ஊக்குவிப்பதற்காகவே இவ்வளவு பெருந்தொகை வரிவிலக்காக அளிக்கப்படுகிறதாம். ஆனால் இதன் பயன்கள் மீண்டும் மீண்டும் முதலாளிய நிறுவனங் களின் கொள்ளை இலாபத்தைப் பெருக்கியுள்ளன. 1980களில் முதலாளிகள் உற்பத்தி செய்த பொருள் களின் மதிப்பில் அவர்கள் பெற்ற இலாபம் 3.5 விழுக்காடாக இருந்தது. ஆனால் 1990களில் 5.4 விழுக்காடாகவும், 2000களில் 7.7 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது என்று அரசின் பொருளாதார ஆய் வறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. இதைத்தான் ஏழைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusive Growth) என்று மன்மோகனும் சிதம்பரமும் பீற்றிக் கொள்கின்றனர்.

உலகப் பணக்காரர்களின் பட்டியலை ‘போர்ப்ஸ்’ (Forbes) வணிக ஏடு மார்ச்சு மாதம் வெளியிட்டது. 100 கோடி (ஒரு பில்லியன்) டாலருக்கும் (ரூ.5500 கோடி) அதிகமான நிகர சொத்துடையவர்கள் இப்பட்டிய லில் இடம்பெறத் தகுதியுடையவராவர். அதனால் இவர் கள் பில்லியனர்கள் எனப்படுகின்றனர். இதன்படி இந்தியா வில் 100 கோடி டாலருக்குமேல் நிகர சொத்துடைய வர்கள் 55 பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

(தொகை டாலரில் ($))

1 பில்லியன் முதல் 1.5 பில்லியன் வரைசொத்து உடையவர்கள் (100 கோடி)           17 பேர்

1.5 பில்லியன் முதல் 2 பில்லியன் வரை ”                                                                                  12

2.0 பில்லியன் முதல் 5.5 பில்லியன் வரை ”                                                                               16

6 பில்லியனுக்குமேல் சொத்து உடையவர்கள்                                                                       10

                                மொத்தம்                                                                                                                   55

பெரும் கோடீசுவரர்களின் உலகப் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இரஷ்யா, செருமனிக்கு அடுத்து அய்ந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால் மார்ச்சு 14 அன்று அய்க்கிய நாடுகள் மன்றம் வெளி யிட்ட மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் 187 நாடுகளில் இந்தியா 136ஆவது இடத்தில் தாழ்ந்து - தலைகவிழ்ந்துகிடக்கிறது. இந்த 55 பெரும் கோடீசு வரர்களின் மொத்தச் சொத்து மதிப்பு 193 பில்லியன் டாலர் (ரூ.10,61,500 கோடி). இதில் முதல் நிலையில் உள்ள 10 (Top 10) பேரின் சொத்து மதிப்பு மட்டும் 102

பில்லியன் டாலர். கடந்த ஆண்டில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறையான ரூ.5,28,000 கோடியைவிட (96 பில்லியன் டாலர்) அதிகமானதாகும்.

மக்கள் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கான மானியத்தைக் குறைப்பதிலும், நீக்குவதிலும் குறியாக உள்ள நடுவண் அரசு தங்கம், வைரம் ஆகியவற்றின் மீதான சுங்கவரியில் 2012-13 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.61,035 கோடிக்குத் தள்ளு படி செய்துள்ளது. 2005-06 முதல் கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ.3,14,456 கோடி தள்ளுபடி செய் துள்ளது.

பெரும்பான்மையினராக உள்ள ஏழை எளிய குடும்பங்களின் வீட்டுப் பெண்கள் தங்கள் திருமணத்தின் போது மலிவான விலையில் தாலி செய்து கொள்வதற்காகவா தங்கத்தின் இறக்குமீதான வரியில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி உருபாய்க்கு விலக்கு அளிக்கப்படுகிறது. நாட்டில் 20 விழுக்காடாக உள்ள மேல்தட்டு வர்க்கத்தினரிடம், தாராளமய-தனியார்மயக் கொள்கைகளால் குவியும் பணத்தை என்னசெய்வதென்று புரியாமல், தங்கக் கட்டிகளாக வாங்கி, வங்கிகளில் உள்ள தங்கள் பாது காப்புப் பெட்டகங்களிலும், வீடுகளிலும் பதுக்கி வைத் துள்ளனர். தங்கத்தின் மீதான சுங்கவரிச் சலுகையால் அந்நியச் செலாவணி வீணாகச் செலவாகிறது. இதனால் நடப்பு கணக்குப் பற்றாக்குறை மேலும் அதிகமா கிறது. தங்கத்தின் தொடர்ந்த விலை ஏற்றத்தால், ஏழைக் குடும்பத்தினர் கடன்வாங்கி தாலி வாங்கும் நிலை இருக்கிறது.

பெருமுதலாளியக் குழுமங்களுக்கும், பெருஞ்செல்வர்க்கும், அய்ந்து இலட்சம் கோடிக்குமேல் வரிவிலக்கு என்ற பெயரால் வாரிவழங்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் முன்னைய ஆண்டுகளைவிட மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியும், மானியமும் குறைக் கப்பட்டுள்ளன. இது உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் கொடுஞ்செயலாகும்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று காங்கிரசுக் கட்சி 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. சாரமற்ற - பெயரளவிலான ஓர் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஏற்ப உணவு மானி யத் தொகையை உயர்த்தவில்லை. கடந்த ஆண்டு உணவு மானியத் தொகை ரூ.85000 கோடியாக இருந்தது. இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.90000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களின் பணவீக்கம் 17 விழுக்காடாகக் கடந்த ஆண்டு இருந்ததைக் கணக்கில் கொண்டால், உண் மையில் (in real terms) சென்ற ஆண்டைவிட இவ் வாண்டு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டபின், ஓராண்டில் ஒருவர் சராசரியில் உண்ணும் தானியத்தின் அளவு குறைந்து கொண்டே வந்துள்ளது. இது 1992-96ஆம் ஆண்டு களில் 439 கிலோ தானியமாக இருந்தது. 2007-11 காலத்தில் இது 406 கிலோவாகக் குறைந்துள்ளது. மக்கள் சோறும் சப்பாத்தியும் சாப்பிடுவதைக் குறைத்து பாலும் பழமும் முட்டையும் இறைச்சியும் அதிகம் உண்கிறார்கள் என்று ஆளும்வர்க்க அறிவாளிகள் இதற்கு விளக்கம் கூறுகின்றனர். ஆனால் உலகின் கடுமையான பசிப்பிணிக் குறியீட்டு எண் வரிசையில் (Global Hunger Index - GHI) உள்ள 79 நாடுகளில் இந்தியா 65ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது. ஆப்பிரிக்காவில் கொடிய வறுமை தாண்டவமாடும் ருவாண்டா நாட்டுக்கும் கீழே எட்டாவது இடத்தில் இந்தியா இருக்கின்றது. ஆட்சியாளர்கள் கூறும் பாலும் பழமும், முட்டையும் இறைச்சியும் இந்தியாவில் 40 விழுக்காடு மக்கள் உண்கின்றனர். 60 விழுக்காடு மக்கள் வயிறார உண்ண உணவு கிடைக்காமல், பட்டினியுடன் இரவில் படுக்கின்றனர். இதைத்தான் வள்ளுவன் சொன்னான் :

"நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது"

நெருப்புப் படுக்கையில்கூடத் தூங்கமுடியும். வயிற்றில் பசித்தீ எரியும் போது ஒருநொடிகூடக் கண்மூடித் தூங்க முடியாது.

ஊழல் மலிந்த பாதுகாப்புத் துறைக்கு ரூ.2,03,672 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 60 விழுக்காடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைக்கு ரூ.27,049 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் கடன் தொகை கடந்த ஆண்டு ரூ.5.75 கோடியாக இருந்தது. இப்போது ரூ.7 இலட்சம் கோடியாக உயர்த்தப்பட் டுள்ளதாகப் பெருமையடித்துக் கொள்கிறார் சிதம்பரம். இதில் 80 விழுக்காடு தொகையை வேளாண் கருவி களை உற்பத்தி செய்யும் பெரிய முதலாளிகள்தான் பெறுகின்றனர். உழவர்களின் தற்கொலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

உரங்களுக்கான மானியத்திற்காகக் கடந்த ஆண்டு செலவிடப்பட்ட தொகை ரூ.65,974 கோடி. இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.65,971 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உரங்கள் விலை நிர்ண யத்தை உரத்தயாரிப்பு நிறுவனங்களின் கையில் கொடுத்துவிட்டதால், உரங்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

உலகிலேயே மாபெரும் முன்னோடித் திட்டம் என்று காங்கிரசுக் கட்சி பறைசாற்றிக் கொள்ளும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குக் கடந்த ஆண்டு ஒதுக்கிய ரூ.33,000 கோடியே இவ்வாண்டும் ஒதுக்ப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் இத்திட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

இதேபோன்று கல்விக்கும், மக்கள் நலவாழ்வுக் கும், ஊரக வளர்ச்சிக்கும் கடந்த ஆண்டில் ஒதுக்கப் பட்ட அளவுக்கோ அல்லது அதைவிடக் குறைவாகவோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

“நாட்டின் முதன்மையான வளம் அதன் மக்களே” என்று நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுநர் ஜோசப்  ஸ்டிக்லின் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார் சிதம்பரம். அதற்கு நேர்எதிராக முற்றிலும் பெருமுதலாளிகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் மேலும் வளம் சேர்க்கும் வகையிலும், வெகுமக்களின் வாழ்வாதாரங்களை மேலும் பறிக்கும் தன்மையிலும் இந்த நிதிநிலை அறிக்கையை உருவாக்கியிருக்கிறார். நிதிநிலை அறிக்கையின் இறுதியில்,

“கலங்காது கண்ட வினை துலங்காது

தூக்கங் கடிந்து செயல்”

என்ற திருக்குறளைக் கூறியிருக்கிறார். அதாவது முதலாளிகளையும், பணக்காரர்களையும் பேணுவதற் காக, இரவுபகல் பாராமல் கடுமையாக உழைப்பதே அரசின் குறிக்கோள் என்று இந்த நிதிநிலை அறிக்கை வாயிலாக உறுதிபட அறிவித்துள்ளார்.

 

 

 

 

Pin It